Monday, May 4, 2020



அபிராமியந்தாதி
(தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி
முதல்வர் – முத்து. சு. மாணிக்கவாசக அடிகள்)

[†     வளர் இலைத் தருப்பை நுனியெனக் கூர்த்த
மதியினர் தொன்று தொட் டுடைய
பளகறு கேள்விப் பயிற்சியர் மேற்கோள்
முதற்பகர் மூன்றினும் தெருட்டி
இளையருக் குணர்த்தும் இலக்கண நெறியோர்
ஈரிரு புலமையர் தம்முட்
களவிகல் இகந்து நிகழ்த்துறும் கலைதேர்
கருத்துப்போர்' இன்பமே பயக்கும்''

என்னும் கருத்துப் பற்றியே, இக்கட்டுரை ஈண்டு வெளியிடப் பெறு கின்றது.
- முருகவேள்.]

தருமையாதீனத்திலிருந்து திருக்கடவூர்த் திருக்கோயில் வெளியீடாய்க் கார்த்திகைத் திங்கட் கடைச் சோமவாரத்தில் வந்த அபிராமியந்தாதி புத்துரையில், அதன் முதற் செய்யுளிலும் நூற்பயன் கூறும் பாடலிலும் ஒவ்வொரு சொல்லைப் பற்றித் திரு. மு. அருணாசலம், M. A. அவர்கள் சித்தாந்தம் மலர் 33; இதழ் 3 இல் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். அதைக் கண்டோர் முன்னுரையாசிரியர் எவர்க்கும் தோன்றாத பொருளைத் திரு. மு. அருணாசலம், M. A. அவர்கள் எழுதியுள்ளார் எனவும், இப்பொருள் அப்பெரும்புலவர்க்குத் தோன்றாதது ஏனோ எனவும் நினைக்கலாம். அவ்வாறு ஒரு புகழ் எமக்கும் கிடைத்தல்வேண்டும் என யாம் விரும்புவது தவறன்று. அப்புகழைக் தலைமேற் சுமக்கப் பேராவல் கொண்டே இதனை எழுதுகின்றேம்.

யாம் எழுதியவுரை திரு. ம. க. வேற்பிள்ளையும் ஸ்ரீமான் கி. வா. ஜகந்நாதையர், M. A. அவர்களும் எழுதிய உரைகளை ஓட்டியதாகும். அதற்குக் காரணம் பலஉள. யாமே ஆய்ந்து எழுதியிருப்பேம் ஆயின், அது சிறப்பும் அஃதின்மையும் உடைய பொருள் கொண்டதாயிருக்கலாம். அதனை அறிவார் ஆர்? அந்தாதியின் முதற்பாடலில் 'திலகம்' என்பதற்கு மஞ்சாடி மலர்' என்றார் திரு. ம. க. வேற்பிள்ளை. நெற்றியில் அணியும் சிந்தூரத் திலகம்' என்றார். திரு. கி. வா. ஜ.

'திலகம்' என்றது ஆகுபெயராய் மலரையுணர்த்திற்று என்றது முன்னுரை. எம்முறையில் 'கதிரோனுச்சியிலிருக்கும் திலகம் எனலும் ஆம்' என்று எழுதியதன் கருத்து எல்லார்க்கும் விளங்குதல் அரிது. பண்டைத் தமிழ் நூற் பயிற்சியுடையார்க்கே எளிது. யாம் அப்பொருள் கூறியதற்கு அப்பாடலின் சொல்வகை (அந்நுவயம்) நின்றவாறே யாகும். திரு. ம. க. வே. உரை 'மலர்க்கமலை துதிக்கின்ற' என்னுந் தொடரை அபிராமி என்பதோடு இயைத்துளது. திரு. கி. வா. ஜ. உரை மின்கொடிக்கே அத் தொடரை அடையாக்கியுளது. இவ்வுரை இரண்டும் இத் திறத்தில் வேறுபடுதலை அறிக. இங்கே திரு. கி. வா. ஜ. உரையே பொருத்தம் உடையது. முன்னுரை 'தூராந் நுவயம்' உடையது. இதைக் குறிக்க விரும்பியும் சில காரணங்களால் இது குறித்து ஒன்றும் எம் உரையில் எழுதிலேம். அதுபற்றிய எம் கருத்தைக் கதிரோனுச்சியிலிருக்கும் திலகம்' என்ற தால் ஒருவாறு குறித்தேம். அக் குறிப்பை இதில் வெளிப் படுத்துகின்றேம்.

உதிக்கின்ற செங்கதிருச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனியபிராமி என்றன் விழுத்துணையே

1.     அபிராமி உதிக்கின்ற செங்கதிருச்சித் திலகம்; ஆதித் தன்... போற்றுவர் தையலையே' (அபிராமியந்தாதி - 97)
2.     அபிராமி உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்.
3.     அபிராமி மாதுளம் போதும், மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடியும், மென்கடிக் குங்கும தோயமும் என்ன விதிக்கின்ற மேனியினையுடையவள்.
4.     அத்தகைய அபிராமி என் விழுத்துணை.

இப் பொருளில், அபிராமியின் திருமேனிக்கு ஒப்பாக மாதுளம் போதும் மின்கொடியும் குங்கும தோயமும் ஆகிய மூன்றே அமைவன. திலகமும் மாணிக்கமும் ஆக அபிராமி தேவியை உருவகித்தவாறாம். முன்னுரைகளிலோ இவ்விரண்டும் மேனிக்கே உவமம் ஆயின. இனித் 'திலகம்' என்னும் சொல்லின் பொருளை ஆய்வாம்.

திலகம் என்பதற்கு ம. க. வே., கி. வா. ஜ. இருவரும் முறையே மஞ்சாடி மலர் என்றும், சிந்தூரத் திலகம் என்றும் பொருள் உரைத்தனர். அவை அவ்வாற்றாலும் பொருத்தம் உடையனவே. மு. அ. 'உச்சிநேரத்தில் மலர்கின்ற பூவுடைய மஞ்சாடி மரத்தின் பிரகாசமான செந்நிறமான விதை' என்றுரைத்தல் சிறப்பு என்று எழுதினார். தங்கத்தை நிறுக்க உபயோகிக்கும் குன்றிமணியைக் குறித்தார் அவர். அதைப் பெரிய காட்டுமரங்களுள் ஒன்று என்றும், கெட்டியானது என்றும், மஞ்சாடி வைரத்தைக் கல்லில் உரைத்து நெற்றிக் திலகம் இடுதல் மலையாளப் பிராமணர் வழக்கம் என்று கேள்வியுற்றிருக்கிறேன் என்றும் எழுதியுள்ளார். அவற்றின் பொருத்தம் அறிஞர் ஆராய்ச்சிக்குரியது. தங்கம் நிறுக்கப் பயன்படுத்தும் குன்றி மணியை மேனிக்குவமிப் பார் 'புறங் குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்ற திருவள்ளுவர்க்குத் துணையாக விரும்பினார் அது செய்வர். திலகமும் குன்றியும் வெவ்வேறு ஆதலைச் சிலப்பதிகாரத்து (அடியார்க்கு நல்லார் உரை + அரும் பத) உரையும், கல்லாடமும் பிறவும் குறிக்கின்றன. சிலம் பினது இது:

1திலகம் 2உலோத்திரம் 3செம்பருத் திப்பூக்
4கவிரமலர் 5குன்றி 6முயலுதி ரம்மே
7சிந்தூரம் 8குக்கிற் கண்என எட்டும்
எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே."

திலகம் என்பது மஞ்சாடியையும் அஃது அதன் விதையையும் குறித்ததாகக் கொள்ளின், அது முதற் பாட்டில் அவ்வாறு பொருள் கொள்ள வைத்த அபிராமி பட்டர்க்கு ஒரு குறையேற்படுத்துவதாகும்.

'திலகம்' என்பது பல பொருள் உணர்த்துவது. 'திலக முக்குடை'' திலகவெண்குடை' (183) 'திலக நீண்முடித் தேவர்'(246) 'திலகம் - மேலாதல்.'' முடிகளுக்கு மேலாய முடி'(நச்சினார்க்கினியம்) 'திலகஞ் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள்'(305) திலகம் எனும் தகைத்து - மண்ட பங்களுக்குத் திலகம் என்னும் தகைத்து.'(595) எனச் சிந்தாமணியும்; " மறந்தும் மழைம்றா மகத நன்னாட்டுக்கு ஒரு பெருந்திலகம் என்று ரவோர் உரைக்குங் காவரும் பெருமைக் கயிலையம்பதி'' என மணிமேகலையும்;'மகதம் உலகிற்கெல்லாம் திலகம் போன்றது'எனப் பெருங்கதையும் அச்சொல்லை ஆண்ட பொருளை ஈண்டறிக.

'பவள வாணுதல் திலகம் இழப்ப' என்றதற்கு அடியார்க்கு நல்லார் 'நுதல் தன்னை அணியும் சிறப்பைத் திலகம் பெறாமல் இழப்ப' என்றெழுதியிருப்பதும், ஈண்டு அறியத் தக்கது. இத்திலகம் நெற்றியில் அணிவது. நெற்றியிலோ உச்சி யிலோ அணியும் திலகத்தை மேனிக்கு ஒப்பாக்குவது மரபன்று. பாவலர் பித்துற்ற காலத்தும் அதை ஒப்பாக்கிப்பாடார். அதனால் தான் ம. க. வே.'உச்சி' என்ற தற்குத் தலையுச்சி என்று கொள்ளாது உயர்பு என்று கொண்டார். எம் உரையில், இரண்டாவது பொருளில், கதிரோன் உச்சியில் உள்ள திலகம் (ஓர் அணி) ஆகக் குறித்தோம். அதனை,

அழல் கதிர் பரப்பி யுழல்சேர் வட்டமொடு
நிழலவிர் கதிர்மதி நிரந்து நின்றாங்குத்
திலகத் திருமுகம் செவ்வன் திருத்தி'

என்றதில் அது தரும் பொருள் யாது!

பைம்பொற் றிலகமொடு பட்டம் அணிந்த
ஒண்கதிர் மதிமுகம் ஒளியொடு சுடரச்
செம்பொன் ஓலை சேடுபடச் சுருக்கி
என்றது மஞ்சாடி விதையையோ குறிக்கின்றது? மஞ்சாடிக் கொடிப்பூவைப் போங்கம்'என்றும், மஞ்சாடி மரத்தின் பூவைத் 'திலகம்' என்றும் குறிஞ்சிப்பாட்டு அறிந்து வைத்துளது. 'திகலப்பூ' என்று மலைபடுகடாத்திலும் உளது.

'காசறைத் திலகக் கருங்கறை கிடந்த மாசில் வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலுங் கோதையும் கோல மும் காண்மார்' என்றது எப்பொருள் பயக்கும் 'உயர் திலகக் கண்ணித் திவிட்டன்' என்றது தலையில் அணியும் கண்ணி எனப் பொருள் தருதல் காண்க,'செஞ்சுடர்த் திலகக் கண்ணித் தேவர்' என்றும், 'விலக்கிய கதிரவாகி விடு சுடர் வயிரக்கோலத் திலகம் வீற்றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான்'என்றும்,'செழுமலர்த் திலகக் கண்ணித் திங்கள் மா வண்ணன்'என்றும் சூளாமணியில் வருந் தொடர் களையும் நோக்கின், திலகம் திலதம் இரண்டும் ஒன்றே எனல் புலப்படும். உலக வழக்கிலும் 'திலகவதி' தில தவதி' இரண்டும் உண்டு .'கதிரோனுச்சித் திலகம்' என்று யாம் எழுதிய பொருள் இதனாலும் உறுதிப்படும்

'உச்சி நோத்தில் மலர்கின்ற மஞ்சாடிப்பூ'எனப் பரம் பரையாக அந்தாதி பயின்ற பக்தர் பலர்' கூறிய பொருளை உடன்பட்டுத் தம்முரையில் எழுதிய மு. அ. அம்மரத்தின் விதையே சிறப்புடைய பொருள் என்றெழுதுவது என்னோ?

"திலக மென்பது நெற்றியிலணியும் ஓர் அணிகலமும் ஆம்; 'இதனை...... முத்தஞ்சேர்ந்த திலகம்...... அவிர்குழை ஆய்காது வாங்க' (கலி. 92: 35 - 6) என்பதனாலும் உதயனன் வாசவதத்தையின் அணிகளைக் கண்டு புலம்புமிடத்து, " அந்தி யுள் முளைத்த வெண்பிறை போலச் செந்தீச் சிறுநுதல் மூழ்கத் தீந்து நிலமிசை மருங்கின் வீழ்ந்தனையோ எனத் திலகம் நோக்கிப் பல பாராட்டியும்'என்று கூறுதலாலும் அறியலாகும்.'சிந்தூரத் திலக நுதற்சிந் துரத்தின்'' தாரா சோடைத் திலக நுதற்சயிலம்'(பாரதம்) என்புழி யானை நெற்றியிலும் திலகம் கூறப்படுகின்றது. " (கலித்கொகை, அனந்த, பதிப்பு, பக். 595 - 6) என்றதும் ஈண்டறியற்பாலது.

குங்கும தோயம்: - குங்கும வருணம்'-'சிவந்த தொய்யிற் குழம்பு'. (மணிமேகலை 19 - 87) 'குங்குமம் விரவிய தண்புனல்' (திருவானைக் காப் புராணம், 964) என்னுமிடத் துள்ளதே இவ்வந்தாதியின் கண் தோயம் என்றதாகும். 'குங்குமச் சாந்து வேய்ந்து'' குங்குமக் கதிர்க் குழவியஞ் செல்வன்'-'குங்குமம் போலுங் கதிரையுடைய இள ஞாயிறு.'' கடியன கச்சினாற் கட்டப்பட்டன கொடியன குங்குமம் கொட்டப்பட்டன' என்பவற்றிலும் குங்கும தோயமே உணர்த்தப்பட்டது. 'குங்குமம் குளா சந்தனம கோழகில் பிறவும் செங்கண் வெற்பர்கள் சிதைத்தெரி மடுத் திடப்படுவ' என்றதில் மரம் குறிக்கப்பட்டது.

இவ்வாறு குங்கும தோயம் திலகத்தின் வேமுதலை அறியக் கிடத்தலின், ஒரே பாடலில் குங்குமத்தை இரண்டு முறை உதாரணமாக ஆசிரியர் காட்டினார் என்ன இடமில்லை. திலகம் வேறு; குங்கும தோயம் வேறு. 'உச்சி நேரத்தில் மலர்கின்ற மஞ்சாடிப்பூ'வும்,'மங்கல மகளிர் உச்சியி லணியும் குங்குமப் பொட்டு'ம் அபிராமியின் திருமேனிக்கு ஒப்பு எனல் பொருந்தாது. 'மஞ்சாடி மலர்' ஒப்பாதல் கருத்தாமிடத்து, அதன் மலர் விரியும் உச்சி நேரம் இங்கு இன்றியமையாத தன்று. அலர்ந்த செந்தாமரையினை வென்றது, அவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது இராமன் திருமுகச் செவ்வி' என்றுணரமாட்டாதார், அப்பொழுதலர்ந்த தாமரை என்று கொண்டுரைப்பார். அதுபோலும் இதுவும். மஞ்சாடி விதை எனலே போதும். ('உச்சி நேரத்தில் மலர்கின்ற பூவுடைய மஞ்சாடி' எனல் என்னையோ?

2
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை யைங்கணை பாசாங் குசமுங் கரும்புமங்கை
சேர்த்தாளை முக்கண் ணியைத்தொழு வார்க்கொரு தீங்கில்லையே

என்ற இந்நூலின் பயன் கூறும் பாட்டில், 'கரும்புமங்கை'' என்றே எல்லாப் பதிப்பிலும் உளது. ஒருவரே 'கருப்புவில்லும்' எனப் பதிப்பித்தார். மு. அ. வும் 'கருப்பும் அங்கை' என்றே 'சித்தாந்தம்' இதழில் எழுதினார். இதனால், அங்கை' என்பதில் அவ்வொருவர்க்கன்றி ஏனையோர்க்குச் சங்கையே இல்லை. மூன்றாவது அடியில் இரண்டாவது சீரில் மட்டும் நேரில்லை.

ம. க. வே. உரையில் 'அங்குச பாசாங்குசம்' என்ற பாடக்ைகொண்டே தாமரையைக் கூறிற்று. 'அம்குசம் - அழகிய தாமரைபு குசம் - தாமரை' என்பது அவர் உரையில் இன்றும் உளது. கி. வா. ஜ. உரை 'அங்குச பாசாங்குசம்' என்றதில் இருமுறை அங்குசம் பாய்தல் கொடிதென்று இரங்கி, ஒருமுறையைக் குறைக்க முயன்று, வரம்பு கெடாது காக்க, ஒரு காலை வெட்டிப் பாசாங்குசுமம் என்னும் இரண் டும் அம்பிகையின் திருக்கையில் விளங்கும் உண்மையைத் தம் புலமையின் திண்மையால் அறிவித்தார். தவற்றைத் திருத்தும் போதும் மாபு கெடாது காத்தல் அவரன்ன புலவரேற்றுக்குக் கடனாகும். அதன்பின் உரை யெழுதியவர்'அங்குச'என்ற பாடத்தையும் நீக்கி'அங்கையில்'என்ற பாடத்தை இடைப்படுத்தி, வில்லும் சொல்லும் (வில்லம்பு சொல்லம்பு) இணையாமாறு இணையாதொழிந்தும், தாமரை'யைத் திருக்கரத்தில் வைத்துக் கண்டு களிப்பதும் அன்றி,'ஊகபாடங் கொண்டிடர்ப்படுவாரும் உண்டு'எனக் கூக பாடஞ் செய்தார். தாம்'தாமரை'என்று பொருள் உரைத்த தற்கு மூலம் தம் பதிப்பில் ஓலம் இட்டு ஓடிப்போய் விட்டமை தமக்கே தெரியாது இடர்ப்பட்ட அனுபவம், இடர்ப்படுவாரைக்கண்டு இரங்குவித்தது போலும். ம. க. வே. உரையை உற்றுணராதும் தாம் கொண்ட பாடத்துக்குத் தாமரை வேண்டாமையை எண்ணாதும் எழுதியது அது. 'யான் ஒருவர் போன வழியுஞ் செல்லேன்' என்று அந்நூலிற்கற்று அநபவத்திற் காட்டுவதே அறிவிற்கழகு. எம் உரையில் 'ஐங்கணை' என்று கொண்டதன் காரணத்தை மு. அ. கட்டுரையில் (பக்கம் 67 - 68) எழுதியிருக்கிறார்.

ம. க. வே. இருமுறை அங்குசம் பாய்ந்தாலும் முன்னோர் கருத்திற்கு முரண்படும் துணிவு தமக்கு ஆகாது என்று அஞ்சி, உள்ளதற்குத் தம் புலமைக்குத் தகப் பொருளுரைத்தார். (அம்குசம் = அழகிய தாமரை). இளைஞர்க்கு அங்குஜம் என்றும் ஆயிடும்.

யாம் கொண்டதன் காரணத்தை இதைக் கற்பவர் கருத் தூன்றி நின்றுணாக்கடவர். 'ஐங்கணை' என்று யாம் பதிதாகப் படைத்தேம் அல்லேம், ஆதாரம் இன்றி எதையும் எப்பொழுதும் வெளியிடும் பழக்கம் எம்பால் (யாம் அறிய) இல்லை. முக்குண வசத்தால் நேர்ந்திருப்பின், அதைக் காட்டித் திருத்துவோர்க்குப் பெரிதும் நன்றி செலுத்துங் கடப்பாடுளேம்.

அபிராமியந்தாதியில் (பாடல், 2) பனிமலர்ப் பூங்கணை யும் கருப்புச் சிலையும், மென்பாசாங்குசமும் கையில் அணை யுந்திரிபுர சுந்தரி'' கைக்கே அணிவது கன்னலும் பூவும்'(37)'செங்கைக் கரும்பு மலரும்'(62)'கருப்பு வில் லும்... வேரியம் பாணமும்'(100) என மலர்க்கணை ஆங்காங்கு இணைந்துள்ளமை புலனாகும். அம் மலர்க்கணை'ஐங்கணை'ஆதலைப்'பஞ்ச சாயகி'(50) படை பஞ்சபாணம் தனுக் கரும்பு'(73)'பஞ்சபாண பயிரவியே'(76) பாசாங்குச பஞ்சபாணி'(43; 77)'பார்க்குந் திசை தொறும் பாசாங்குச மும் பனிச்சிறை வண்டார்க்கும் புது மலர் ஐந்தும் கரும் பும்'(85)'ஒற்றை நீள் சிலையும் அஞ்சம்பும் இக்கு அலர் ஆக நின்றாய்'(59) என்றவற்றால் இனிது அறியலாம். அறிவார்க்கு எம் உரையில்'ஐங்கணை'என்ற பாடத்தின் முழுப்பொருத்தம் மழுப்பவேண்டாமலே நன்கு விளங்கும்.

இதுவரை எழுதியவற்றால் திரு. மு. அருணாசம், M. A. எழுதியவற்றின் உண்மையைப் புலமையுடையோர் இனி துணர்வர் என்று கருதுகின்றேம். 'யங்குச' என்றிருப்பது 'யம்புச' என்று கொள்வதற்கு எவ்வாற்றானும் இடந்தாராது. 'யைங்கணை' என்பதிலும் 'பங்குச' என்பதிலும் முதல் மூன்றொற்றும் ஒற்றுமையுற்றிருத்தலும், நூலாசிரியர் திரு வாக்கில் பயிலரின்றதே யாம் கொண்ட பாடம் ஆதலும் தெளிவுறும்,

சித்தாந்தம் – 1960 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment