Monday, May 4, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
அருளுடைமை.

அதாவது அருளுடையதாந்தன்மை. இனி அருள் என்பது யாதென ஆராய்ந்து பின்னர் அதை உடையதாந்தன்மையை உய்த் துணர்வோம்.

"அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் செல்வச் செவிலியா லுண்டு'' என்னும் பெருநாவலர் வாக்கின் வண்ணம், அரு ளாவது அன்பென்னும் நற்றாயால் பெற்றெடுத்த ஓர்குழந்தையாகும். அன்பென்னும் தாயைப்பற்றி அறிந்தாலன்றி அருள் என்னும் குழவி யைப்பற்றி அறிவதற்கில்லை யாதலால், முதலில் அன்பென்னும் விஷ யத்தைச் சிறிது பேசிப்பின்னர் அருளைப்பற்றிப் பேசுவாம். அன் பாவது, ஒருவன் தான் வேண்டப்பட்ட பொருளின் கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி. இது; தொடர்புடையார் மாட்டுச்செல்வ தொன்றாகும். தொடர்புடையார் எவரோ வெனின், மனைவி, தாய், தந்தை மக்கள், மற்றுள சுற்றம் என்பார். ஆயின் இவ்வன்பு, குடத்தினுள் ஏற்றிய விளக்கும், உரையினுள் உள்ளவாளும் போல் கட்புலனுக்குக் காணப்படாததாகும். இவ்வகை கட்புலனுக்குக் காணப்படாததை உண்டென எவ்வாறு அறிவதெனின், அன்புடையான் குணங்கண்ட விடத்து அன்புடையான் என அறிந்துகொள்ள வேண்டுவதேயன்றி வேறில்லை. அன்புடையராய் நின்றவர்குணங்கள் எவையோவெனின், தம்மால் அன்பு செலுத்தப்பட்டவர் இறக்கின் அவரோடு இறத்தலும், அவர் வருந்துகின்ற காலத்தே உடன் வருந்தலும், அவர் வறுமையடைந்த காலத்து ஒண்பொருள் கொடுத்துதவுதலும், அவர் சோர்வுகண்டகாலத்தே அவர்க்கு நற்பதம் வழங்கி அவரைத்தேற்றுதலும், அவரோடு கூடிவாழும் வாழ்க்கையை நனிவிரும்புதலும், அவரை விட்டுப்பிரியுங்காலத்தே மிகஇரங்குதலுமாம்.

இவ்வித அன்பினைத் தொடர்புடையராய் மனைவி முதலியேரிடத்துச் செலுத்தி உலகத்து இம்மையிலடையவேண்டிய இன்பத்தையும் புகழையும் அடைபவன் இல்லறத்தானே யாவன். இதுகருதியே இவ்வன்பினை இல்லறவியலில் ஆசிரியரமைத்தனர். ஏன்எனில் இவ்வித அன்பினைத் தனக்குத் தொடர்புடையாரிடத்துச் செலுத்தானாயின், தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்கின்ற ஐந்து புலங்களை ஓம்பி, ஆறாவது கடமையை அரசனுக்குக் கொடுக்க உள்ள இல்லறமாகிய சகடத்தை இவன் இழுத்துச்செல்லுதல் ஆகாது, எவ்வாறு எனின் முதலில் இருமுது குரவராய தாய் தந்தையரிடத்து அன்பைச் செலுத்தி அவரைப் பேணான் எனின், முன்னறிதெய்வங்களாய இருவரையுங்காவாத குற்றத்தினுள்பட்டு உலகப்பழிப்பிற்கு ஆளாகி இம்மையிற் புகழ்கேடும் மறுமையில் நரகத்துன்பத்திற்கும் ஆட்படுகின்றான். இரண்டாவது, தனது உற்ற துணைவியாகிய மனைவியினிடத்து அன்பினைச் செலுத்தாது பிறர்மனை நயத்தலும், பரத்தையர் விரும்புதலையும் மேற்கொள்வான், ஆயின் தான் செய்யவேண்டிய ஆறுகடமைகளையும் செய்ய இயலாது நீராடச்சென்ற ஒருவன் தானும் நீராடாது தன்னுடன் நின்முறையும் நீராடச்செய்யாது நீர் நிலையைக் கலக்கிப் பங்க மேற்கொண்டு பங்கமுற்றானாகி இம்மையிற்றுன்பமும் மறுமையில் மீளாநரகமும் பெறமுயல் பவனாகின்றான். மூன்றாவது பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்தமக்கட் பேறல்ல பிற" என்னும் வேதவாக்கின்படி பெறுதற்கருமையாய், பொருள்கள் எவற்றினும் மேலாய தன் மக்களிடத்து அன்பினைச்செலுத்தானாயின் "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்என்னும் மேலாய புத்தி போதிப்பை இழந்து தன் கடன் செய்யாத தந்தையாய்ப் புத் என்னும் நரகத்தினின்றும் நீக்குகின்றபுத்திரரால் அடைய வேண்டிய நன்மையை அடையாது போகின்றான். பின்னர் நான்கா வதாகிய சுற்றத்தவரிடத்துத்தன் அன்பைச் செலுத்தாவிடின், இரை கண்டவிடத்துத்தானே உண்ணாது தன்னினத்தவரோடு உண்டுகளிக்க எண்ணிக்கேட்போர் செவிடுபடும்படிக் கரைந்துண்ணும் காக்கையினும் இழிந்தவனாகித் தனக்கோர் இடையூறுவந்தகாலத்துச் சுற்றத்தவரிடம் ஓர் உதவியும் பெறாது போகின்றான்.

ஆதலால் அன்பென்பது இல்லறத்தானுக்கே யுரியதாகும். இவ்வித அன்பினை இல்லறத்தான் ஒருவன் செய்து "வையத்துள் வாழ்வாயாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்''  என்றபடி உலகத்தில் வாழவேண்டிய விதம் வாழ்ந்து, தனக்குரிய வருணத்திற்கும், நிலைக்கும் தக்கவாறு ஒழுக்கங்களில் வழுவா தொழுகி நிற்பானாயின், இவனுக்கு அறம் வளரும், அறம் வளா அதற்கு எதிராய பாவம் தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும். அறியாமை நீங்குதலால் இதுநித்தம், இது அநித்தம் என்னும் உணர்ச்சி தோன்றும். அம்மேலாய உணர்வு தோன்றியவழி இம்மை மறுமைகளில் உண்டாம் இன்பங்கள் அழிந்து போவனவாய், இரும்பு விலங்கும் பொன்விலங்கும் போன்று பிறவித் துன்பங்களுக்கு ஏதுவாவன வென்று தோன்றும். பின்னர் வீட்டின்கண் ஆசையுண்டாம். அவ்வாசையுண்டாய வழி பிறவிக்குக் காரணமாகிய பயனிலாமுயற்சிகளை யெல்லாம் நீத்து வீட்டிற்குரிய பயன்பெறு முயற்சிகளை யெல்லாம் செய்வான். பயன்படுமுயற்சிகள் பல செய்தலும் இவனுக்கு மெய்யுணர்வு தோன்றும். மெய்யுணர்வு தோன்றுதலும், யான் எனது என்னும் அகப்பற்றும், புறப்பற்றும் தன்னை விட்டகலப் பெறுவன். எவ்வமயத்து இவன் யான் எனது என்னும் அகப்பற்றும் புறப்பற்றி னின்றும் நீங்குகின்றானோ அப்போது எல்லா உயிர்களையும் தன்னு யிர்போல் பார்க்கும் அந்தணனாகின்றான், முன்னர்த்தொடர்புடையா ராய் மனைவி முதலியோரிடத்துச் செலுத்திய அன்பே பின்னர் யாவ ரிடத்தும் பேதமறவிரைந்து செல்கின்றதாகின்றது.

இவ்விதம் செல்கின்ற ஆசையே, அன்பென்னும் நற்றாயால் பெறப்பட்டுப் பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படுகின்ற அருளாகின்றது. இப்போது அருள் என்பது ஈதென அறிந்தோம். இனி இதை உடையதாந் தன்மையை ஆராய்வோம். முன்னர் "இல்லறமல்லாது நல்லறமன்று” என்னும் முதுமொழியின்படி இல்லறத்தானாக இருந்த இவன் வீட்டின் கண் ஆசை உண்டாயவழி ''மனைவி தாய்தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும், வினையுளே விழுந்தழுந்தி, வேதனைக்கிடமாகாதே'', "தந்தை தாய் தமர் தாரம் மகவெனும் இவை யெலாம் சந்தையிற் கூட்டம்" என்பனவாய புத்திபோதிப்புகளை யுணர்ந்து, பிறப்பினையஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறக்கின்றான். துறவுநிலையடைந்தானாய இவன் வினைமாசு தீர்ந்து அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு விரதங்களைக் காக்கின்றான். விரதங்களாவன, இன்னவறஞ்செய்வன் எனவும், இன்னபாவம் ஒழிவன் எனவும் ஒருவன் தன்னாற்றலுக்குத் தக்கவாறு வரைந்து கொள்வன. அவையோர் வரம்பற்றுப் பெருகுவ என்றஞ்சி அவைதம்முள் பலவற்றையும் உள்ளடக்கி நிற்கும் சிறப்புடையனவாய அருளுடைமை முதல் கொல்லாமையீறாகிய ஒன்பதனையும் என்பர்.

ஆதலால் தொடர்புபற்றாது எல்லாவுயிர்களின் மேலும் செல் லுங்கருணையே அருள் என்றும், அவ்வருள்வழி நின்றவனே விரதங்கள் யாவையும் காக்க வல்லவனென்றும், அருளுடமைக்கு உரியவன் என்றும் அறிந்தாம். ஆயின் சிறப்புடைமை நோக்கி இவ்வருளுடமை யைத்துறவிக்கே வகுக்கினும் இல்லறத்திருந்தும் இறைஞானம் கூடும் அடியவர்க்கும் இது பொதுவாக உரியதாம். இதனைத் தன்கன்றிழந்த பசுவின் முறைப்பாடுகண்டு தன்மகனைத்தேரின் காலிட்டுப் பழிதீர்த்துப் பின்னர் கன்றும் மகனும் பிழைக்கக்கண்ட வழிப் பசுவோடுதானும் மகிழ்ந்து பேரின்பம் எய்திய மனுநீதிகண்டசோழச் சக்கிரவர்த்தியிடமும், ஓர்புறவின் பொருட்டுத் துலையேறியசிபிச்சக்கிரவர்த் தியினிடத்தும், இவர்போன்ற மற்றையரிடமும் காணுதல் கூடும்.

துறவிகள் யாவரும் அருளுடையராயினும் அத்துறவிகளின் சிரோமணியாகிய ததீசியே அருளுடைமை ஈதென அறிவித்த முனிபுங்கவராகும். ஆதலால் இவ்வாறு அருளுடைமையை யடைந்து ஞானங்கைவந்து அருளாளனாகிய அறவாழியந்தணன் தாள் சேர்வதற்கு அவன் திருவடியே தஞ்சமென்றடைந்த சமயகுரவராகிய நால்வர் பொற்றாள்களைத் தஞ்சமென்றடைந்து அவர் அருளிய தேவார திருவாசகங்களை யோதி, தேவப்பிராமண்னாய சிவபெருமான் உறை யும் திருக்கோயில் சென்று வலம் வந்து, தலையாரக்கும்பிட்டுக் கூத்துமாடி, சங்கராஜெயபோற்றி யென்று புகழ்ந்து பாடிப், பொய்ம்மாயப் பெருங்கடலைத்தாண்டிச் செல்வோமாக – சுபம்.

இங்ஙனம் :
கி. குப்புச்சாமி, (களந்தைகிழான்.)

சித்தாந்தம் – 1915 ௵ - மே ௴


No comments:

Post a Comment