Monday, May 4, 2020



சிவமயம்,
திருச்சிற்றம்பலம்.
அர்ச்சுனனும் பாண்டிய மரபும்.

செந்தமிழ் தொகுதி 3 - பகுதி 7 - ல் ஸ்ரீமத் - மு - இராகவையங்கார் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:

கி. மு. 4 - ம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கிய நத்தச் சக்கிரவர்த்தி காலத்தவரும், பாணினிக்கு "வார்த்திகை'' எழுதினவருமாகிய காத்தியாயனர் பாண்டிய சோழர்களை எடுத்து ஓதுவதோடு 'பாண்டுவமிசத்தவன் ஒருவனிடமிருந்து தோன்றியவர் யாவர் அவர் பாண்டியா” எனச்சொன் முடிவுகாட்டிப் பாண்டியர் வரலாற்றைக் குறிப்பிக்கின்றார்” என்பர். இன்னும்

“இப்பாண்டியர் பாண்டுவின் வழியினராய் தென்னாடாண்டவராதல் வேண்டுமென்பதற்கு,

(1) அவர் வமிசம் சந்திரகுலம் எனப்படுவதையும்,

(2) வடநாட்டுச் சந்திரகுலத்தினரின் தலை நகருள் ஒன்றாகிய மதுரை போல, இவர் தலை நகரும் மதுரை என வழங்கப்படுவதையும்,

(3) பாண்டுவின் புத்திரர்களுடைய வழியினரென்பது தோன்றப் ‘பஞ்சவன்' எனப்பாண்டிய அரசர் பெயர் பெறுவதையும்,

சிறந்த பிரமாணங்களாகவும் எடுத்துக்காட்டுவர்” என்பர்.

இதனால் காத்தியாயனர் கூற்று ஐயங்காரவர்களுக்குச் சம்மதமே என்று கொள்ளக் கிடக்கின்றது.

இவருடைய கருத்தும் காத்தியாயனர் கருத்தும் பாண்டு பவமிசத் தொருவனிடமிருந்து தோன்றியவர் பாண்டியர்'' என்பதே.

ஆனால் ஐயங்காரவர்கள் "பாண்டவன்" என்னும் வார்த்தையும், "பாண்டியன்" என்னும் வார்த்தையும் ஒரே மூலத்தைத் (தாதுவை = Root கொண்டவைகளென்றும், ஒரே பொருளைப் பயக்கும் வார்த்தைக ளென்றும், "பாண்டியர்" என்னும் பெயர் சித்திராங்கதையின் மூதாதைகளுக்கு வழங்கிவரலில்லை யென்னும் சித்தாந்தமாய்க் காட்டாமற்போனது மிகவும் கவனிக்கத்தக்கது. நிற்க,

மேற்கூறியவாறு “வேளிர் வரலாற்றில்” ஜயங்கார் அவர்கள் கூறிப் போன பின்னர், காலஞ்சென்ற ஸ்ரீமத். கார்த்திகேய முதலியார் அவர்கள் செந்தமிழ் தொகுதி 4 - பகுதி 5 - ல் ஐயங்கார் அவர்கள் கூறியது தவறு என்பதாக வரைந்திருக்கின்றார். அது வருமாறு:

“பாண்டுவமிசத் தொருவனிடமிருந்து தோன்றியவர் யாவர் அவர் பாண்டியர் எனில், அவ்வொருவன் யாவன்?

விதந்துகூறாது பொதுப்படவொருவன் என்றமையின் அதன் உண்மை பெறப்படவில்லை.

பாண்டவர் சம்பந்தம் பெறலால் பாண்டியரெனலும், பஞ்சவர் சம்பந்தம் பெறலால் பஞ்சவர் எனவும் ஓர்சார் பொருந்தும். அது கூடா வொழுக்க மென்பர், பொருந்தாது. சம்பந்தமாவது சித்திராங்கதையை மணந்தது.

பாண்டவர் வமிசத்திற் பிறந்தது உண்மையாயின் பாண்டவன் என்றாகாது பாண்டியன் என்றாகுவதென்னை?  

பாண்டவர் பஞ்சவர் என்பதற்கு உண்மைப்பொருள் அதுவேயோ?

மூவேந்தருள் தமிழையே வளர்த்துத் தமிழிசையே செவியாரவுண்டு தமிழ்நாடன் எனப்பட்டோன் யாவன்?

அவன் பாண்டியன் எனல் சாலவும் பொருத்த முடைத்து,

பாண்டி = இசை
பாண்டி + அன் = பாண்டியன்

அன்னோர் குமரிச்சேர்ப்பன் ஆகலின் குமரிப்பாங்கவன் பஞ்சவன் எனல் பொருந்தும்.

ககரம் சகரம் ஆதல் இலக்கணமுறை'' என்று வேளிர் வரலாற்று "மறுப்பில் தெளிவாக வரைந்திருக்கின்றார். ,

மேலும் வார்த்தைகளுக்கு மூல அர்த்தம் (= Root Meaning) தெரியாதவர்கள் விபரீத அர்த்தம் செய்வது சகசமே. நந்தமிழ் நாட்டில் வார்த்தைகளுக்கு மூலஅர்த்தம் தெரிந்த தமிழ்ப்பண்டிதர்கள் பெரும் பாலும் இல்லையென்றே சொல்லலாம்.

"இடுகுறிகாரணப் பெயர்ப்பொதுச் சிறப்பின'' என்று பாணினீ யத்தை ஒட்டியும், “மொழிப்பொருட்கிளவி விழிப்பத்தோன்றா" என்ற தொல்காப்பியம் முதலிய ஆன்றோர் இலக்கணங்கட்கு நேர்விரோதமாகவும் சூத்திரம் செய்த பவணந்தியைப் பின் பற்றும் மாணவர்களுக்கு அறிவு கொளுத்தும் பொருட்டுத் தமிப்பாழையில் எல்லாம் காரணப்பெயர்களே என்று ஸ்ரீமத் கார்த்திகேய முதலியார் தமது மொழி நூலில் பசுமரத் தாணிபோல் நாட்டியிருக்கின்றார்.

பாண்டு = வெண்மை, ஓர் நோய் = வெண்மையான குட்டநோயை உடையவன் ஆனதால் குந்தியின் இரண்டாவது புத்திரனுக்குப் “பாண்டு” என்று பெயர். பாண்டுவின் புத்திரர் பாண்டவர் இது தத்திதாந்த நாமம். தசரதன் புத்திரன் தாசரதி என்பதுபோல

பாண்டவர் புத்திரர் பாண்டியர் என்று ஆனதற்கு என்ன இலக்கணமோ? அறிகிலேம்.

தாசரதியின் புத்திரருக்கு என்னபேர் வந்ததோ? எப்படி வருமோ? அதுவும் தெரிகிலேம்.
பாண்டி = இசை
பாண்டு = வெண்மை, ஓர் நோய்

இவ்விரண்டு மூல வார்த்தைகளுக்கும் ஏதாவது சம்மந்த முண்டா வென்று தமிழர்காள்! சற்று யோசித்துப்பாருங்கள்.

இது எதுபோல இருக்கிறதென்றால் வெள்ளாளன், வேளாளன் என்னும் பதப்பிரயோகங்கள் போல இருக்கிறது. நம்நாட்டில் அர்த்தத்தைக் கவனித்துப் பேசுவார் ஒருவரும் இல்லை. நம் நாட்டில் ஒருவன் தான் உயர்குடி வேளாளனாயிருந்தும் அறிவில் மிஞ்சின வனாயிருந்த போதி ஆம், வெள்ளாளன் (வெள்ளாழன்) என்று தன்னைச் சொல்லிக்கொள்ளுகிறான். சிறந்த தமிழ் வித்வான்களும் கவனியாமல் அப்படியே சொல்லுகிறார்கள். கவனித்துச்சீர் திருந்துவாரும் இல்லை..

வெள்ளாளன் என்னும் பதமானது வெண்மை (= அறீவின்மை) என்னும் பகுதியடியாகப் பிறந்தது.

வேளாளன் என்னும் பதமானது வேள் (= கொடை, ஈகை, மெய், மண், யாகம் செய்) என்னும் பகுதி அடியாகப் பிறந்தது.

ஆகையால், நண்பர்களே! வெள்ளாளன் என்னும் பதத்திற்கும் வேளாளன் என்னும் பதத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதைக் கவனியுங்கள். வெள்ளாளன் அல்லது வெள்ளாழன் என்னும் வார்த்தை இழி வானது.

வேளாளன் என்னும் வார்த்தை மேலான அர்த்தம் உடையது,

ஆரியர் இராஜரீகம் செய்யும் காலத்து ஆரிய 'ஜாதிப்பிரிவினைகளாகிய' பிராமண க்ஷத்திரிய வைசியச் சூத்திரப்பெயர்களைத் தமிழில் மொழிபெயர் க்கும்போது முறையே அந்தணர், அரசர், வணிகர், வெள்ளாளர்' என்று மொழிபெயர்த்தார்கள்.

ஆரிய ஸ்மிருதிகள் கூறும் வண்ணம் சூத்திரர் என்போர் அறிவில் மழுங்கினவர்களாய் முதன் மூன்று வருணத்தாருக்கும் ஏவல் செய்வோராயுள்ளோர். ஆகையால் அந்தவார்த்தையைத் தமிழ் செய்யும் பொழுது வெள்ளாளன் (= அறிவின்றி ஏவல் கேட்போன்) என்று மொழிபெயர்த் தார்கள். அது தகுதியான மொழிபெயர்ப்பே.

வேளாளர் என்போர் எந்தக்காலத்திலாவது, அறிவில்லாதவர்களாய் ஆரிய முதன் 'மூன்று வருணத்தாருக்கு ஏவற்றொழில் புரிந்தார்களா? கதைகளிலாவது வாசித்ததுண்டா? அல்லதுவாய் மொழியாகவாவது கேட்டதுண்டா?

தமிழ் நூல்களையும் ஆரிய நூல்களையும் ஆராய்ந்தால் வேளாளர் என்னும் வகுப்பார் மிகுந்த ஞானவான்களாயும், அநேக ஆரியருக்கு உபதேச குருக்களாயும், ஞான சாத்திரங் கட்குக் கர்த்தாக்களாயும் இரத்தற் றொழிலை அறுதொழிலிலொன்றாகவுடைய ஆரிய பிராமணருக்குக் கொடுக்கும் தாதாக்களாயும் உள்ளவர்களாய் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்று அறிகிறோம்.

ஆகையால், வெள்ளாளன், வேளாளன் என்னும் வார்த்தைகள் பொருளால் மிகுந்த வேறுபாட்டையுடையனவாயிருந்தாலும் தெரியாதவர்கள் ஒரு பொருளன என்று மயங்கி வழங்குதல் போல, பாண்டவன், பாண்டியன், என்னும் பதங்கள் பொருளால் தவறாயிருந்தும் ஒரு பொருளன என்று சிலர் மருண்டு நினைக்கிறார்கள். நிற்க.

வேளிர் வரலாற்று மறுப்பில் முதலியார். அவர்கள் ஐயங்கார் அவர்கள் கூற்றை மறுத்து உரைக்கவே, ஐயங்கார் அவர்கள் தாம் கொண்ட கருத்துக்கும் காத்தியாயனர் எழுதிய எழுத்துக்கும் ஆதாரம் தேடுவாராயினர். ஐந்து ஆண்டுகளாய்த் தேடியதின் பலனாகச் செந்தமிழ் தொகுதி 8 - பகுதி 10 - ல் ஐயங்காரவர்கள் தாம் முதலில் கொண்ட கருத்தையே நிலைநிறுத்தித் தமக்குத் தோன்றிய பல நியாயங்களால் எடுத்துச் சொல்வாராயினர்.

அவர் கொண்ட கருத்துச் சரிதானா? அவர் எடுத்துக்காட்டும் நியாயங்கள் வலியுடவைகள் தானா? என்று ஈண்டு ஆராயத்தக்கது.

நாம் இங்கு அர்ச்சுனன் சித்திராங்கதையை (= அல்லியை) மணந்தது உண்மை தானா? என்று ஆராயவரவில்லை. பார்த்தன் சித்திராங்கதையை (= அல்லியை) மணந்த சங்கதியை ஒப்புக்கொள்ளுவோம்.

சித்திராங்கதைக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்த பப்புருவாகனனுக்குப் பின்னிட்டா “பாண்டியன்'' என்னும் பெயர்வழக்கு ஏற்பட்டது என்பதே ஈண்டு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டது.

மேலே, வார்த்தை யொற்றுமையும் பொருள் ஒற்றுமையும் இல்லை யென்று தெளிவாக மொழி நூல் (Philology) பலத்தைக்கொண்டு நாட்டினாம். இனிமேல், சரித்திர ஆராய்ச்சியைக்கொண்டு பாண்டவன் என்பது பாண்டியன் ஆகாது என்று நாட்டுவாம்.'

ஸ்ரீமத். வி. இராமானுஜாசாரியார் அவர்கள் பதிப்பித்த ஸ்ரீ வியாசபாரதம் ஆதிபர்வத்தே “சித்திரவாகன் என்னும் மணலூர் அரசன் மகளை அர்ச்சுனன் தீர்த்தயாத்திரையினிடையில் மணம் புரிந்து பப்புருவாகன் என்னும் புத்திரனைப் பெற்றுத் தன்மாமனுக்கே அம்மகனைப் புத்ரிகா புத்திரனாக அளித்துச் சென்றான்" என்பது விளங்குமே யொழிய வேறில்லை.

மேலும், "அவன் ஒருவருஷமுழுதும் மேலே ஒருமாதமும் வனத்தில் வசித்துத் தீர்த்தயாத்திரையுஞ் செய்து நாககன்னியையும், பாண்டியன் பெண்ணையும் அடைந்து அவர்களுடன் அங்கே வாசஞ் செய்தான்.'' என்று ஐயங்காரவர்கள் காட்டிய மேற்கோளாலேயே பார்த்தனுடைய விவாகத்திற்கு முந்தியே சித்திரவாகனுக்குப் பாண்டியன் என்னும் பெயர் இருந்ததாகப் பாண்டியன் பெண் என்றதால் வெளியாகிறது.

அர்ச்சுனனாகிய பாண்டவனுக்குப் பின் பாண்டியப் பெயர் ஏற்பட்டிருந்தால் பப்புருவாகனுக்கும் அவன் பின்னோர்களுக்கும் அப்பெயர் வழக்குண்மையும், சித்திரவாகனனுக்கும் அவன் முன்னோர்களுக்கும் அவ்வழக்கின்மையும் வேண்டும். அப்படி யிருந்ததாக ஒன்றும் தெரியவில்லை.

சித்திரவாகனனுக்கே “பாண்டியன்” என்னும் பெயர் இருந்ததாகப் பாரதம் வெளியாகிறது.

மேலும், ஹெர்க்கியூலிஸ் போன்ற பெரிய வீரனாகிய அரசனொருவன் பாண்டியை என்று சொல்லப்பட்ட ஒரே புத்திரியைப் பெற்றான்.'' என்று 2300 வருடங்கட்கு முன்வந்த மெகஸ்தனிஸ் என்பவர் கூற்றாக ஐயங்கார் அவர்கள் காட்டியிருக்கின்றார்கள்.

மெகந்தனில் என்பவர் கூறும் வண்ணம் பாண்டியை என்பவள் ஐயங்கார் கருத்துப்படி சித்திராங்கதை என்றே ஒப்புக்கொள்ளுவோம். எப்பொழுது சித்திராங்கதைக்குப் பாண்டியை என்று பெயர் வக்ததோ அப்பொழுதே அவன் தகப்பனுக்கு அதாவது சித்திரவாகனனுக்குப் பாண்டியன் என்னும் பெயர் வழக்கு இருந்ததென்று கொள்ளலாம் அல்லவோ? ஏனென்றால் பாண்டியன் மகள் தான் பாண்டியை ஆவாளே யொழிய வேறில்லை என்னும் கொள்கையால்.
ஆகையால், ஐயங்கார் அவர்கள் எடுத்துக்கொண்ட மேற்கோள்கள் இரண்டும் அவர்கள் கருத்துக்கே முற்றும் விரோதமானவை கண்டு தெளிக.

இனி, வீரசோழியம் பதிப்புரை17 - வது பக்கத்தில் ஸ்ரீலஸ்ரீ வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் அடியில் வருமாறு கூறுகின்றார்.

மேலும், பிள்ளை அவர்கள் பாண்டியர்களுடைய வமிசாவளிப்பட்டி கிரமமாகத்தம் கைக்குக் கிடைத்திருந்த ஒரு பலத்தினால் கூறுவதாகவும் எழுதுகின்றார். அதுவருமாறு:

'ஸ்ரீராமர் இலங்கைக்கு வந்தது அனந்த குண பாண்டியன் காலம். அவன் கூன்பாண்டியனுக்கு 63 - வது பாண்டியன் ஆதலாலும், இத் தொகை அதிகமல்லவென்று காண்க. மேலும், இற்றைக்கு மூவாயிரத் தைஞ்நூறு வருடத்தின் முன் இருந்த வியாசர் காலத்தவனாகிய அர்ச்சுனனுக்குத் தன் மகளைக்கொடுத்த சித்திரவாகன் மதுரைக்குச் சமீபமான பூழி என்னும் மணலிபுரத்தில் அனந்த குணபாண்டியனாகிய சித்திரதவிக்கிரம பாண்டியன் காலத்தில் சிற்றரசு புரிந்தான்” என்று கூறுகின்றார்.

ஆகையால், பார தகாலத்துக்கு (பாண்டுவின் காலத்துக்கு) முந்தின இராமாயண காலத்திலே பாண்டியர்கள் என்னும் பெயரோடு மதுரையில் அரசர்கள் அரசாண்டார்கள் என்றும், மதுரையில் அர்ச்சுனன் காலத்தில் அரசாண்டது சித்திரவிக்ரம பாண்டியனே யொழிய சித்திரவாகன் அல்லவென்றும், சித்திரவாகன் பூழி என்னும் மணலூர் புரத்தில் சித்திர விக்கிரமபாண்டியன் கீழ் சிற்றரசு புரிந்து கொண்டிருந்தானென்றும், அர்ச்சுனனுக்குத் தன் மகளைக் கொடுத்தவன் பூழியில் அரசாண்ட சித்திரவாகனே யொழிய மதுரையில் அரசாண்ட சித்திரவிக்கிரம பாண்யன் அல்ல வென்றும் அறிகிறோம்.

மேலும், வால்மீகி இராமாயணத்தில் பாண்டிய அரசர்களுடைய இராஜதானியாகிய கபாடபுரத்தையும் பொற்கதவங்களையும் பற்றிக் கூறப் பட்டிருக்கின்றது. வால்மீகி பாண்டியன் என்ற பெயரையே உபயோகப் படுத்தியிருப்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள்.

மேலும், இராமருடைய மூதாதையான இரகு என்பவர் திக்கு விஜயம் செய்த போது ஒரு பாண்டியன் சமுத்திரத்தினின்றும் எடுத்த இரத்.தினங்களைக் கப்பமாகக் கொடுத்ததாகக் காளிதாசர் இரகுவம்சம் என்னும் நூலில் வரைந்திக்கிறார். *

* Kalidasa's Raghuvamsa has a description of a tour of conquest made by Raghu, the great grand - father of Rama, to whom the Pandiyan King rendered homage by sons collected from the Ocean - bed where the Tamparaparni rolled its waves. ("Dravidian Kingdoms'' P P2 by Dewan Bahadur T, Rangachariar B, A., and Dewan Bahadur T. Desikachariar B. A., B. L.,


திருவிளையாடற் புராணப்படி (ஆலஸ்யமகாத்மியப் படிக்கும்) முதன் முதல் இப்பொழுது இருக்கும் மதுரையைக் குலசேகர பாண்டியன் என்பவர் கண்டார் என்றும் அது முதல் ஒன்பது பாண்டியர்கள் அரசுபுரிந்தார்கள் என்றும் ஏற்படுகிறது.
ஒன்பதாவதான குலோத்துங்க பாண்டியனுக்கு அப்புரம் அனந்த குண பாண்டியன் பெயர்தான் தெரிகிறது. இவர்கள் இருவருக்கும் மத்தியில் யார் அரசு புரிந்தார் என்பதும் எவ்வளவு காலம் என்பதும் தெரிய வில்லை.

10 - வது ஆன அனந்த குணபாண்டியனிலிருந்து (= இராமர்காலம்) 26 - வது ஆன சித்திரசேன பாண்டியனுக்கு அப்புரம் 27 - வது ஆக சித்திர விக்கிரம பாண்டியன் அரசாட்சிக்கு வந்தான். இவன் காலம் தான் பாரத காலம். இவன் காலத்தில் தான் சித்திரவாகன் பூழியில் சிற்றரசு செய்தது.

சித்திரவிக்கிரம பாண்டியனுக்கு அப்புரம் அவன் மகன் இராஜமார்த் தாண்ட பாண்டியன் அரசுக்கு வந்தான்.

ஆகையால், புராணத்தில் தெரிந்து கொண்டது என்னவென்றால் சித்திரவாகன் என்பவன் மதுரையில் ஒரு காலத்திலும் பேரரசு புரிய வில்லை. என்றும் பாண்டிய வம்சாவளிப்பட்டியில் (புராணப்படி) சித்திர வாகன் பெயர் இல்லையென்றும் அறிகிறோம்.

ஆகையால், இராமாயண காலத்திலும் அதற்கு முந்தின இரகு என் பவர்காலத்திலும் வழங்கின பாண்டியப்பெயர்களுக்கு ஐயங்கார் அவர்கள் எந்தப் பாண்டுவின் புத்திரனால் பெயருண்டாயிற்று என்பாரோ தெரிய வில்லை.

காத்தியாயனர் வால்மீகியின் வாக்கை மறந்தது தான் என்னோ? அது தான் இல்லாவிட்டாலும். வரப்பிரசாதியாய் விளங்கின மகாகவி காளிதாச ரின் கூற்றையாவது கவனித்து எழுதாமற் போனது தான் என்னோ?

இவையெல்லாம் கால வித்தியாசம்.

மணலூர் புரம், மணலிபுரம், மணலூர், மணிபுரம் என்பன ஒரே ஊரைக்குறிப்பதாக ஐயங்கார் அவர்களே கூறியிருக்கின்றார்கள். நாமும் அதனை ஒப்புக்கொள்ளுவோம்.

ஆனால் மணலூர் என்பது மதுரையாகாது என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்.

ஸ்ரீலஸ்ரீ - சி - வை - தாமேதரம் பிள்ளை அவர்கள் எழுதின வீரசோழியப் பதிப்புரையாலும், ஸ்ரீமத் - இராமானுஜாசாரியர் பதிப்பித்த வியாசபாரதத்தாலும் சித்திரவாகன் என்பான் மணலூரில் அரசாண்டதாக ஏற்படுகிறது.
ஆகையால், அர்ச்சுனன் மதுரைக்குப் போய்ப் பேரரசனாகிய சித்திர விக்கிரமபாண்டியன் மகளை மணம் புரிய வில்லை யென்று சித்தாந்தமாய்க் கூறலாம்.

ஆரியாவர்த்தத்தில் ஏகச்சக்கிராதி பதியாய் அரசாண்ட துரியோதனன் முதலிய நூற்றுவர்களையும் துரோணாசாரி பீஷ்மாசாரி முதலிய தனுர் வேதத்தில் வல்ல அநேகர்களையும் புறங்காட்டி அடிக்கும் வல்லமை வாய்ந்தவர்களாயும், மிகுந்த பலவானாயும் விண்டு வின் அவதாரமே என்று சொல்லும்படியாயும் உள்ள துவாரகை நாதனுடைய உப்பலத்தைப் பெற்றவர்களாயும் உள்ள பாண்டவர்களில் நடுவன் பிறந்த காண்டீபன். தனக்கு முன்னதாகவே பாஞ்சாலி என்பவள் மனைவியாயிருக்க, மணலிபுரத்தில் ஒரு கிற்றரசு புரிந்துகொண்டிருந்த சித்திரவாகனுடைய பெண் சித்திராங் கதையை மணந்ததை யோசிக்கில் அக்காலத்து நிலை செவ்வனே விளங்கு கின்றது. தமிழர்களே! சற்றுக் கவனித்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.

உலகத்தில் ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் வகுப்பு அல்லாதவர்களை வேறு பெயரிட்டு அழைப்பது வழக்கம். இது சரிதக்காரர் துணிபு. உதாரணமாக: -

(a) கிறிஸ்தவர் தங்களை ஞானிகள் என்றும் ஏனையோரை அஞ்ஞானிகள் என்றும்

(b) மகமதியர் தங்களை இஸ்லாம் மதத்தினர் என்றும் பிறரை கர்ப்பிரிகள் என்றும்

(c) சீனர்கள் தங்களை வானவர் என்றும் மற்றவர்களை நரகர்கள் என்றும்

(d) கிரீக்ஸ் தங்களை க்ரீக்ஸ் என்றும் அன்னியர்களை எரிடிக்ஸ் என்றும்

(e) தமிழர் தங்களை தமிழர் என்றும் இதரர்களை மிலேச்சர் என்றும் அழைப்பது வழக்கு.

இவ்வழக்கை நூல்களினால் அறியலாம். ஆரியர்கள் முதன் முதல் இந்நாட்டிற்கு வந்து சிந்து நதி தீரத்தில் குடியேறின பிற்பாடு கங்கைக் கும் சரஸ்வதிக்கும் இடைப்பட்ட நாட்டையும் கைப்பற்றிக்கொண்டார் கள். பின்னால் ஆரியாவர்த்தம் (இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடைப் பட்ட நாடு) பூராவையும் கைப்பற்றிக் கொண்டார்கள். அக்காலத்தில் தமிழர்கள் ஆரியர்களை “ மிலேச்சர்'' எனக்கூறி அழைத்தார்கள். (vide பிங்கலந்தை நிகண்டு “மிலேச்சர் ஆரியர்''). அவர்கள் பேசும் ஆரிய பாஷையை மிலேச்ச பாஷையெனக் கூறினார்கள். அவர்கள் குடியேறிய நாட்டிற்கு 'மிலேச்சர் நாடு'' என்று கூறினார்கள்.

(1) ஆரியர்கள் நரபலி மிருகபலி, இவைகளைச் செய்து மாமிசம் புசித்தார்கள்.

(2) சோமபானம் என்ற ஒருவிதக் கள்ளை அருந்தினார்கள்.

(3) தமிழத் தாபதர்களுக்கும் பெண்களுக்கும் கெடுதியைச் செய்தார்கள்.  

(4) தமிழர்களைக் கண்டால் கருவறுக்கும் தொழிலையுடையவர்களா யிருந்தார்கள்.

(5) இரக்கம் என்பது சிறிது இல்லாதவர்களா யிருந்தார்கள்.

(6) தமிழர்களில் இழிந்த சாதியர்களாகிய பறையர், சக்கிலியர், செம்படவர், வண்ணார் முதலிய சாதிகளுடன் உறவாடிக் கலந்தார்கள்.

இன்னும் விரிக்கிற் பெருகும் இவற்றின் விரிவெல்லாம் “தமிழுலகம்” என்னும் நூலிற்காணலாம்.

தற்காலம் இந்நாட்டிற்கு வந்த ஆங்கிலேயர்களுடன் முதன் முதலிற் கலந்தவர்கள் தமிழரில் இழிந்த ஜாதியாரான பறையர் முதலானவர்களே. இது யாவருக்கும் தெரிந்த விஷயமே. அதுபோலவே, அக்காலத்து வந்த ஆரியர்களாகிய * வெள்ளையர்களுடன் கலந்தது இழிந்த சாதியார்களே. இதற்கு அக்காலத்து இருந்த ஆரியர்களுடைய கீர்த்திபெற்றவர்களின் சம் பந்தத்தைக் கவனித்தால் தெரியவரும்.

* வெள்ளையர் - வெண்மை நிறத்தையுடையவர் அதாவது திவ்விய தேகத்தையுடையவர் அதாவது தேவர் குளிர் நாட்டிலிருந்து வந்ததால் வெள்ளை நிறத்தையுடையவர்களா யிருந்தார்கள்.

சுரர் = சுரா என்னும் சோமபானத்தைச் செய்யக்கூடியவர்களானதால் ஆரியருக்குச் சுரர் என்று ஏரு நாமம்.

அசுரர் = சோமபானம் செய்யாதவர்கள் அதாவது தமிழர்.

"பிரமற்குக் கூத்தி வயிற்றிற் பிறந்த வசிட்டரும்
வசிட்டர்க்குச் சண்டாளி வயிற்றிற் பிறந்த சத்தியரும்
சத்தியர்க்குப் புலைச்சிதோள் சேர்ந்து பிறந்த பராசரும்
பராசருக்கு மீன்வாணிச்சி வயிற்றிற் பிறந்த வியாசரும்

என்ற கபிலர கவலால் நன்கு தெளியலாம்.

பிறகு இருக்க இருக்க ஆரியர்கள் தங்களுடைய மதத்தில் அநேகர்ச் சேர்த்துக்கொண்டார்கள். தமிழர்களுள் பலசாதியாரும் ஆரியமதத்தில் சேர்ந்தார்கள். இப்போது கிறிஸ்துவ மதத்தில் சேர்வதுபோல ஆரியர் தேகவலிமையோடு கூடின வர்களா யிருந்ததால் ஆரியர் வர்த்தத்தை ஸ்தாபித்துக்கொண்டு தங்களுடைய குருக்கள்மார்களாகிய (Missonaries) பிராமணர்களைக்கொண்டு ஆரியமதத்தை (Conversion) விருத்திசெய்ய ஆரம்பித்தார்கள். பலவித உபாயங்களையும் செய்து மதத்தை விருத்தி செய்தார்கள்.

ஆனால், விந்தியமலைக்குத் தென்பாகமாகிய தமிழர் நாட்டில் ஆரியர் களுடைய காரியம் பலிக்கவில்லை, தமிழர் ஆரியர்களுடைய கோட்பாட்டிற்கு இணங்கினார் இல்லை.

பிற்பட்டு ஆரியர்கள் தென்னாட்டிலும் குடியேறத்தலைப்பட்டார்கள். அக்காலத்தில் தான் தமிழர்கள் ஆரியர்களை ஊருக்குள் விடாமல் பார்ப்பனச்சேரி " என்று ஊருக்கு வெளியில் ஊரைச் சேர்ந்தாப்போல் சேரி கட்டி வசிக்கும்படி செய்தார்கள். 'பார்ப்பனச்சேரி' என்னும் வழக்கு சங்கநூல் இருக்கிறதை ஒவ்வொருவரும் அறிவார், இக்காலத்திலும் பழய நத்தங்களில் ஊரைச் சேராமல் தனிப்பட அக்கிராரம் இருப்பதைக் கவனித்தால் இது அக்காலத்து வழக்கம் என்று பூர்வீக சரித்திரத்தை நினைப்பூட்டும்.

இப்படித் தமிழர்கள் ஆரியர்களை அதிக இழிவாக நடத்தி வருவதை பாரதகாலத்தில் இருந்த பதினெண்பாடை வல்லுநராகிய வியாசர் தமக்கு அக்காலத்து இருந்த பதவியையும் பலத்தையும் கொண்டு ஆரியர்களை உயர்த்தி அநேக நூல்கள் எழுதினார். ஆரியரில் முதல் சாதியாராகிய பிராமணர்களை மிகவும் உயர்த்தி பூலோக தெய்வங்கள் என்றும், அவர்கள் இல்லாவிட்டால் உலகம் நடவாது என்றும் ஏனையோர் அவர்களுடைய பாதங்களில் விழுந்து பொருள்களை யெல்லாம் காணிக்கையாக ஈந்து அவர் களிடும் குற்றேவல்களை மனமுவந்து செய்ய வேணும் என்றும் பிராமணர் எல்லாருடைய பெண்களையும் கட்டிக்கொள்ளலாம் என்றும் ஏனையோர் பிராமணப் பெண்களைக் கட்டிக்கொள்ளக் கூடாதென்றும் ஆரிய சாதி விருத்தி யடைவதற்கும் மேன்மை யடைவதற்கும் என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவு வழிகளையும் கற்பித்து அதற்குத்தக்க கதைகளை உண்மைச் சரிதமென நம்புமாறு புனைந்துரைத்துப் பதினெண் புராணங்களையும் இன்னும் அநேக நூல்களையும் இதிகாசங்களையும் எழுதினார். அவர் நூல்களுக்கு ஆதாரமாயிருந்த தமிழ் நூல்களை நெருப்புக்கிரை கொடுத்துவிட்டார். இப்போது அவ்வியாசர் எழுதிய புராணங்களே நிலவுகின்றன. அவர் செய்தது எல்லாம் கற்பனையே என்பதை “வியாசர் கட்டு" என்னும் பழமொழியே சான்று பகரும்,

அவ்வியாசரானவர் எழுதினதுடன் நிற்காமல் தென்னாட்டரசருடன் உறவாடிக்கலக்க நினைந்து ஆரிய அரசரில் கண்மணிபோன்று சிறப்பினை யுடைய அர்ச்சுனனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தமிழ் நாடுகள் மேற் சென்றார்.

அல்லி அரசாணிமாலை, பவளக்கொடிமாலை, பாரதம் முதலிய நூல்களால் அர்ச்சுனன் அல்லியையும், நாககன்னியையும், பவளக்கொடியையும் இன்னும் அநேக தமிழ்நாட்டுப் பெண்களையும் மணந்ததாக ஏற்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் தனக்குக் கலியாணம் ஆகவில்லை யென்று சொல்லி விவாகம் செய்திருக்கிறான் பார்த்தன் இது வியாசருடைய சூழ்ச்சிபோலும்.

இப்பொழுது, நாம் பேசுங்காலம் பாரதகாலம். அதாவது ஆரியர்கள் வந்து அப்போது தான் ஏறக்குறைய மூவாயிரம் வருடங்கள் ஆகின்றன. அவ்வளவு ஆண்டுகள் கழிந்த பிற்பாடுதான் ஆரியர்கள் இழிந்த சாதியாரைவிட்டுக் கொஞ்சம் மேலான சாதியாரிடத்தில் உறவாடிக்கலக்க நேர்ந்தது.

இப்போழுது ஆங்கிலேயப் பெண்களைத் தமிழர்கள் மணந்திருப்பதையொப்ப ஆரியப் பெண்களையும் (தேவப் பெண்களையும்) தமிழர்கள் மணக்க ஆரம்பித்தார்கள்.

இக்காலத்தில் தான் ஆரிய அரசன் ஒருவன் வேளாளர் வமிசத்தில் பெண்கேட்க, வேளாளர்கள் ஆரிய அரசனாகிய மாப்பிள்ளையை அழைத்து வீட்டுப் பெண்ணாயைப் பந்தலிலே கட்டிவிட்டு ஓடியது.

"பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண்ணாயைப் பந்தலிலே கட்டிவிட்ட" எனவரும் ஆத்திசூடி வெண்பாவினால் அறியலாம்.

இதுகாறும் கூறிய வாற்றால் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வும் சம்பந்தாசம்பந்தங்களும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த மனவுணர்ச்சியும் நன்கு ஏற்படும்.

தமிழர்களால் வெறுக்கப்பட்ட ஆரியச்சாதியைச் சேர்த்த அர்ச்சுனனுக்கு மணலூர் அரசனாகிய சித்திரவாகன் பெண் கொடுத்தான் என்றால் சித்திரவாகன் ஆரியமதத்தைத் தழுவினவனாயாவது இருக்கவேண்டும் அல்லது அல்லி என்னும் பாண்டியை அவனுக்கு வேறு விதமாய் (அதாவது பட்டமகிஷி வயிற்றுப்பெண்) அல்லது பிறந்தவளாகவாவது இருக்கவேண்டும் அல்லது சித்திரவாகனே சரியாய்ப் பாண்டிய மரபில் உதியாதவனாகவாவது இருக்கவேண்டும், இராஜாவா யிருந்தாலும் சாதி விட்டுச் சாதி பெண் கொடுக்கச் சரியான தமிழன் ஒருவனும் சம்மதிக்க மாட்டான். அதைக்குறித்தே "பாத்திரமறிந்து பிச்சையிடு கோத்திர மறிந்து பெண் ணைக்கொடு” என்ற பழமொழியும் எழுந்தது. ஆகையால் அல்லி அர்ச்சுனா விவாகத்தைப் பற்றி யோசிக்கவேண்டியது தமிழ்ப் பண்டிதர்களுடைய கடமை. சும்மா ''வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று கூறி விட்டால் கட்டமாய் முடியும்.

ஐயங்கார் அவர்கள் பாண்டிதேசத்து வேளாளர்களை அதாவது பாண்டியன் மரபினர்களைக் கோளக் குண்டக அநுலோம பிரதிலோம சங்கர சாதிகளில் சேர்க்கவல்லவோ பார்க்கிறார் இது நியாயமாகுமா?

நூல் எழுதும் புலவர்கள் எந்தக் காலத்துச் சங்கதியை எழுதினாலும் அக்காலத்து நிலையைக் கவனித்து வழுதவேண்டும்.

சித்திரவாகன் தன் மகளைப் பார்த்தனுக்குக் கொடுத்த காரணத்தால் ஆரியமதத்தை அனுசரித்தவனாகிறான். அவன் ஒருகுடும்பம் ஆரிய மதத்தை அனுசரித்ததினாலேயே தென்னாட்டிலுள்ளவர்கள் எல்லாம் ஆரிய சம்பந்தம் பெற்றவர்கள் ஆய்விடுவார்களா?

சித்திரவாகன் தான் ஆரிய மதத்திற்குச் சென்றகாலையில் "பாண்டு" வின் பெயரை கோத்திரப்பெயராக வகித்துக்கொண் டிருக்கலாம். தற்காலம் கிறிஸ்து மதத்தைத் தழுவுகிறவர்கள் பீடர் துரைசாமி, பயல் (Paul) கண்ணப்பன், மேரி முனியம்மாள் என்னு ஆங்கிலேயே கோத்திரங்களை வகித்துக் கொள்ளுவது போல. அதனாலேயே சித்திரவாகனாவது மற்றத் தமிழர்களாவது பாண்டுவின் வமிசத்தவர்கள் ஆய்விடுவார்களா? அப்படி வகித்துக்கொள்ளுவதானது போலிப்பெயரே யொழிய உண்மையல்ளவே.

பிற்காலம், சங்கரர், இராமானுஜர், மாத்வர் முதலிய தமிழ் ஆரிய ஆசாரியர்கள் காலத்தினும் அநேக தமிழர்கள் ஆரிய மதத்தைத் தழுவினார் கள் என்பதும் அப்போது ஆரிய கோத்திரப்பெயர்களை அநேகர் வகித்துக் கொண்டார்கள் என்பதும் வெள்ளிடைமலையே. அதனாலேயே தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஆரியர்கள் உண்மையான ஆரிய மகரிஷிகளின் வமிசத் தவர்கள் ஆய்விடுவார்களா?

இவற்றை யெல்லாம் கூர்ந்து நோக்காது பாண்டு வமிசத்தவன் ஒருவனிடமிருந்து தோன்றியவர் யாவர் அவர் பாண்டியர் என்று கூறிவிட்டால் அது எப்படிப் பொருந்தும்.

அர்ச்சுனனுக்கும் அல்லிக்கும் பிறந்தவன் பப்புருவாகன். சித்திரவாகன். பாரதயுத்தத்தில் மடிந்த பிற்பாடு புராணத்திலாவது சரித நூல்களிலாவது பப்புருவாகன் பெயர் காணோம். அவனுக்குச் சந்ததியார் ஏற்பட்டார் என்பதும் தெரியவில்லை.

ஆகையால், பாண்டியர்கள் என்று பப்புருவாகன் வமிசத்தவர்கள் என்று நினைத்து ஒரு நூல் கற்பித்து எழுதியது எவ்வளவு தவறு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். - -

அர்ச்சுனன் நாகநாட்டுப் பெண்ணாகிய (Nagas = சர்ப்பக் கொடி யுடையவர்கள். நாகபட்டின முதலிய இடங்களில் இருந்தவர்கள்) நாககன்னியை மணந்ததால் நாகர்களுக்கும் பாண்டியப் பெயர் வந்திருக்க வேண்குமே. அப்படி வந்ததாக ஏற்படவில்லையே.

மலையாளதேசத்துப் பெண்ணாகிய பவளக்கொடியைப் பார்த்தன் மணந்திருக்கிறானே, மலையாளத்தாருக்கும் பாண்டியப் பெயர் வந்திருக்க வேண்டுமே, அப்படி வந்ததாக ஏற்படவில்லையே.

ஆகையால், ஐயங்காரவர்கள் எடுத்துக்கொண்ட “பாண்டு வமிசத்த வன் ஒருவனிடமிருந்து தோன்றியவர் யாவர் அவர் பாண்டியர்'' என்னும் மேற்கோளானது வலியற்ற வெற்றுரையாயிற்று என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதே.

ஆனால் காத்தியாயனர் அப்படிக் கூறுவானேன் என்றால் அக்காலத்து ஆரியக்கவிகளின் தொழில் அது. தாழ்ந்திருந்த ஆரியர்களை உயர்த்தவேண் டியது அவசியமாய் விட்டது. அதை யுத்தேசித்தே ஆரியர்கள் தங்களுடைய கோத்திரப்பெயர் வகித்த ரிஷிகளின் மூலத்தைச் சொல்லக்கூடா தென்றும் சொல்லித் தமிழர்களாயிருந்து ஆரியமதத்தை அனுசரித்தவர்களுக்கும் அந்தக்கோத்திரப் பெயரை வைத்துப் பிறர் தங்களைப் பற்றிப் பேசாவண்ணம் கற்பனை செய்து வந்தார்கள். ஆகையால், காத்தியாயனர் கூற்றுவேரற்று வீழ்ந்தது.

இனி ஐயங்காரவர்கள் மூன்று வேறுகாரணங்காட்டுகிறார். அவைகளை ஒவ்வொன்றாய் ஆராயலாம்.

1. பாண்டுவமிசமும் சந்திரகுலம், பாண்டியர்வமிசமும் சந்திரகுலம் இவ்வொற்றுமைபற்றி ஐயங்கார் அவர்கள் ஸ்தாபிக்கிறார் உடுக்கள், கிரகங்கள் இவைகனின் பெயரை வகிப்பது தமிழர்களுடைய வழக்கம்... சூரியச்சோழன், சந்திரபாண்டியன், சுக்கிரகவுண்டன்; ஞாயிறு கிழவன் முதலிய பெயர் வழக்கால் அறியலாம். ஆகையால் பாண்டிய வமிசத்தை முதல் முதல் ஸ்தாபித்தவனாகிய சந்திரபாண்டியன் பெயரால் ஏற்பட்டதே யொழிய வேறின்று.

தமிழர்களில் கோத்திரப் பெயர்கள் எல்லாம் அவ்வமிசத்தில் கியாதி பெற்ற ஒருவனுடைய பெயரே யொழிய வேறின்று. உதாரணமாக: -

1. சேர்க்கிழார், கோத்திரம்.
2. செய்யர்த்து வென்றான் கோத்திரம்.
3. ஏகம்பவாணன் கோத்திரம்,
4. சிவபூத இராயர் கோத்திரம்.
5. கரிசைகிழார் கோத்திரம்.

இப்படிப் பன்னீராயிரம் கோத்திரங்களும் அவைகளுக்கு மேலும் உள. ஆகையால் சந்திரகுலம் அக்குலத்து மூலபுருஷனான சந்திரபாண்டியனிலிருந்து ஏற்பட்டதே யொழிய வேறின்று.

2. வடநாட்டுச் சந்திரகுலத்தினரின் தலைநகருள் ஒன்றாகிய மதுரை என வழங்கப்படுவதால் என்று பிரமாணங்காட்டுகிறார்...

இது முற்றுந் தப்பு என்பதைக் காட்டுவாம்.

இராமயண காலத்தில் தான் ஆரியர்கள் தமிழ் நாட்டைக் கைப்பற்ற முயன்றது. அக்காலத்தில் பாண்டிய அரசர்களின் இராஜதானி கபாடபுரம் இலங்கை நாட்டில் இருந்தது. கபாடபுரம் அழிந்தது கடைசிப் பிரளயத்தில், அங்கே தான் இரண்டாம் சங்கம் இருந்தது. கடைசியாக ஏற்பட்ட பிரளயத்தின் பின் தான் கபாடபுரம் கடல் கொண்டொழிந்தது. இதற்கு முந்தின பிரளயத்திற்கு முந்தித்தான் முதற்சங்கம் இருந்தது. அது தென்மதுரையில் நிறுவப்பட்டது. தென் மதுரை பாண்டியர்களுடைய இராஜதானி. தென்மதுரையில் பாண்டியர்கள் அரசுபுரியுங் காலத்தில் ஆரியர் இந்த நாட்டிற்கு வரவேயில்லை யென்பது சரிதக்காரர் துணிபு, ஆகையால் இவ்வளவு பூர்வீககாலத்தில் “தென்மதுரை' என்னும் பெயர் எப்படி வந்தது. அப்போது வடநாட்டில் ஆரிய அரசாங்கம் இல்லையோ, இவை யிற்றினை யெல்லாம் ஐயங்காரவர்கள் அறியாதவரு மல்லர்.

ஐரோப்பிய பண்டிதராகிய மிஸ்டர் எலியட் என்பவர் கூறும் வண்ணம் 5 பிரளயங்கள் இவ்வுலகந்தோன்றின நாள் முதல் உண்டாயிருக்கின்றன. ஒவ்வொரு பிரளயத்துக்குப் பின்னிட்டும் தமிழர்கள் தெற்கே குமரி நாட்டிலிருந்து வடக்கே இமயமலை வரை குடியேற ஆரம்பித்தார்கள். அப் போது தங்களுடைய முக்கியபட்டணத்தின் பெயரை அங்கங்கே பட்டணங்கள் புதிதாக ஸ்தாபித்துப் பெயரிட்டுக் கொண்டார்கள் இதனாலேயே வடக்கே இமயமலை வரைக்கும் பாண்டியர்கள் அரசாண்டார்கள் என்பது தேற்றம். மேலும் புராணப்படி பாண்டியர்கள் இமயமலை வரையில் அரசாண்டதாக ஏற்படுகிறது. ஆகையால் தென் மதுரையிலிருந்து வடமதுரை என்னும் பேர் உண்டாயிற்றே யொழிய வடமதுரையிலிருந்து மத்திய மதுரைப் பேர் (குலசேகர பாண்டியன் காலத்து ஏற்பட்ட தற்கால ஆலவாய் என்னும் மதுரை) உண்டாகவில்லை.

3. இனி மூன்றாவதாகிய ஆதாரத்தைச் சற்று ஆராயலாம்.

பாண்டுவின் புத்திரர்களுடைய வழியினர் என்பது தோன்றப் ‘பருசவன்' எனப் பாண்டிய அரசர் பெயர் பெறுவதால் எனப் பிரமாணம் காட்டுகிறார்.

இது தவறான கொள்கையென்று முன்னமேயே கூறி யிருக்கின்றாம். ஆகையால் பருசவன் என்னும் பெயர்க்காரணம் அறியலாம்.

பாண்டியர்கள் இமயமலைவரைக்கும் அரசாண்டார்கள் என்பதை முன்னமே கூறினாம். ஆகையால் பாண்டியர்கள் பஞ்சந்தி தீரமாகிய (பஞ்சாப், Punjob) மாகாணத்தையும் அரசாண்டவராதலால் அந்நதிகளின் பெயரால் 'பஞ்சவன்' என்னும் பெயராயிற்று,
சேரனுக்குப் பொருநைத்துறைவன் என்றும் சோழனுக்குப் பொன்னித்துறைவன் என்றும் நதியால் பெயர் ஏற்பட்டதுபோல பாண்டியனுக்கும் வையையந்துறைவன், பொருநைத்துறைவன், குமரிச்சேர்ப்பன்; பஞ்சவன் என்னும் பெயர்கள் உண்டாயின.

இதுபோல மற்றப் பெயர்களையும் அடியில் வரும் அட்டவணையால் அறியலாம்: -

#

சேரன்
சோழன்
பாண்டியன்
1
மலையால்
கொல்லிவேந்தன்
பொறையன்
மலையமான்
மலையன்
குட்டுவன்,
வானவன்
நேரிவெற்பன்
நேரியன்
மலையவெற்பன்
பொதியவெற்பன்
2
நதியால்
பொருநைத்
துறைவன்
பொன்னித் துறைவன்
வையையந் துறைவன்
பொருநைத் துறைவன்
குமரிச்சேர்ப்பன்
பஞ்சவன்
3
நாட்டால்
கொங்கன்
குடகன்
குடக்கோன்
பூழியன்
புன்னாடன்
தமிழ்நாடன்
தென்னவன்
கன்னிநாடன்
4
நகரத்தால்
வஞ்சிவேந்தன்
கோழிவேந்தன்
கூடற்கோமான்
கொற்கையாளி
பூழியர்கோன்
5
கொடியால்
வில்லவன்
புலிக்கொடியோன்
மீனவன்
6
மாலையால்
போந்தின்றாரோன்
பனந்தாரான்
ஆரங்கண்ணியோன்
வேம்பின்றாரோன்
7
வளப்பத்தால்
பனந்தாரான்
வளவன்
செழியன்.
8
இசையால்


வழுதி
பாண்டியன்
9
கடவுளால்

சூரியன்
கௌரியன்

கௌரியன் என்னும் பெயர் பாண்டியர்களுக்குச் கௌரவ குலத்தார் சம்பந்தத்தால் வந்ததென ஐயங்கார் அவர்கள் சூசிப்பிக்கின்றார். அப்படி அவர் கூறுவதற்கு ஆதாரம் ஒன்றும் காட்டிலர். கௌரவர் நூற்றுவர்களில் எவனும் அர்ச்சுனனைப் போலத் தமிழ்ப் பெண்களை மணந்ததாக பாரதமாவது மற்றய நூல்களாவது கூறவில்லை. ஆகையால் ஆரியாசாரப்படி பெயரைக்கொண்டு கதைகட்டினதாக ஏற்படுகிறது. பாண்டியர்களுக்கு எல்லாம் மீனாட்சியம்மன் குலதெய்வம் என்பதை திருவிளையாடற் புராணம் வாசித்த ஒவ்வொருவரும் அறிவர். ஆகையால், மீனாட்சி பெயராகிய 'கௌரி என்னும் பெயரை பாண்டியர்கள் சூடிக்கொண்டார்களே யொழிய வேறின்று. 

இனிப் பண்டிதர் சவரிராயர் Tamilian Antiquary Vol I No. 8 - ல் என்ன கூறுகின்றார் என்பதைச் சற்றே கவனிப்பாம்,

1. குலசேகரன் மதுரையில் அரசாள வில்லை மணலூரில் அரசாண்டான் என்றும், ஆனால் அவன் கடம்பவனத்தில் சிவபெருமானுக்குக் கோவில் உண்டுபண்ணினான் என்றும் உக்கிரபாண்டியன் தான் தற்கால மதுரையை உண்டாக்கி அரசாண்டதாகவும் கூறுகின்றார்.:

இது ஆலசிய மகாத்மியத்திற்கும் திருவிளையாடற் புராணத்திற்கும் முற்றும் விரோதம். இவ்விரண்டு புராணங்களையும் நிராகரித்து வேறு கூறினதற்கு ஆதாரங்காட்டிலர். ஆகையால் அவர்கூற்றை அறிஞர்கள் ஒவ்வார் என்பது தேற்றம்.

இரண்டாவது குலசேகர பாண்டியனுடைய மகனாகிய மலையத்துவச் பாண்டியன்தான் சித்திரவாகன் என்றும், மலையத்துவசன் மகளாகிய தடாதகைப் பிராட்டிதான் சித்திராங்கதையாகிய அல்லி யென்றும், சோமசுந்தரக் கடவுள் தான் அர்ச்சுனன் என்றும், தடாதகைப் பிராட்டியின் திருக்குமாரனாகிய உக்கிரபாண்டியனே பப்புருவாகன் என்றும் வாய் கூசாது வரைந்துள்ளார். ஆனால் ஆதாரங்காட்டிலர். இவருக்கு இருந்த தைரியந்தான் என்னேயோ அறிகிலேன். பண்டிதர் என்று பெயர்படைத் தவர்கள் வாய்க்கு வந்தவாறு கூறலாம் என்றசட்டம் எங்கே இருக்கிறதோ அதுவும் அறிகிலேன்.

மலையத்துவச பாண்டியன் இறந்த பிற்பாடு தடாதகைப்பிராட்டியார் பட்டத்திற்கு வந்து திக்கு விஜயம் செய்தகாலத்தில் சோமசுந்தர பாண்டியரை மணந்ததாக ஏற்படுகிறது.

மேலும் தடாதகைப் பிராட்டியார் காலம் இராமாயண காலத்தவ னாகிய அனந்தகுண பாண்டியனுக்கு ஏழுதலை முறைகளுக்கு முந்தி சித்திர வாகனுடைய காலம் பாரதகாலம். அப்படியிருக்க தடாதகைப் பிராட்டியார் சித்திரவாகன் மகள் என்பது எவ்வளவு பொருத்தம் என்பதை அறிஞர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்,

மேலும் வில்லிபாரதம் கர்ன பருவம் 17 - ம் போர்ச் சருக்கம் 196 - ம் பாடலில்

போன வப்புரவித்தாமா புரிந்து போர் தொடங்குங்காலை
சேனைகள் நான் கினோடும் சித்திரவாக னென்னும்
மீனவன் வழுதி மாரன் வெண்மதி மரபில் வந்தோன்.''

சித்திரவாகன் பாரத புத்தத்தில் பார்த்தனுக்கு சகாயமாக யுத்தஞ் செய்ததாக ஏற்படுகிறது. மலையத்துவசன் மருமகனைக் கண்ணாலேயே பார்க்கவில்லையே. இறந்துபோன மலையத்துவசனா சித்திரவாகன் என்னும் பெயரோடு பாரதயுத்தத்தில் சண்டை செய்தது. இது நன்றாயிருக்கிறது!  இது நகுதற்கிடமே யொழிய வேறின்று.

இராமாயண காலத்திற்கு முந்தின மலையத்துவச பாண்டியனையும் இராமாயண காலத்துக்கு 3000 வருடங்கள் பின்னிட்ட பாரதகாலத்தவ னாகிய சித்திரவாகனையும் ஒன்று என்பது காலத்தால் தவறு.

தடாதகைப்பிராட்டியார் கல்லியாணத்திற்கு முன்னமேயே இறந்து போன மலையத்துவசனைப் பாரதகாலத்தில் அர்ச்சுனனுடன் சண்டைசெய்த சித்திரவாகன் என்று கூறுவது பொருளால் தவறு.

ஆகையால், காத்தியாயனரும், ஸ்ரீமத் இராகவ ஐயங்கார் அவர்களும் ஸ்ரீமான் பண்டிதர் சவரிராயரும் கூறும் மாற்றம் வலியற்றது என்பதை இதனால் அறிவிக்கலானேன்..

முற்றும்.

துடிசைகிழார். அ. சிதம்பரனார்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஆகஸ்டு, செப்டம்பர், நவம்பர், டிசம்பர், ௴


No comments:

Post a Comment