Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சிவவழிபாடு.

ஐயினான் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே யகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடு
மையனார்க் காளாகி யன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி யடிகள் பாதங்
கையினாற் றொழுமடியார் நெசினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

சிவவழிபாடு - சிவனுக்குச் செய்யும் வழிபாடு என விரியும். சிவம் - நிரதிசய இன்பமாகிய மங்கலம். வழிபாடு - வணக்கம். அந்த நிரதிசய இன்பமாகிய மங்கலத்தைக் கொடுப்பவனே சிவன் என்னும் பதிப்பொருள். நிரதிசய இன்ப மென்பதுவே மோக்ஷமாதலின் சிவன் எனற்கு மோக்ஷதாதா எனப்பொருள் கூறுவது மொன்று.

இனி இத்தகைய சிவனது தன்மைகள் யாவை? வழிபடற்பாலர் யாவர்? அவனுக்குச் செய்யும் வழிபாடுகள் யாவை? வழிபாட்டால் அடையும் பலன் யாது? என ஆராய்வாம்.

சிவனது தன்மைகள்: - 

(1) ஏனைத்தேவராதியர் யாரும் பிறந்திறக்கு மியல்பினராதல் போல் சிவபிரான் பிறத்தலும் இறத்தலுமில்லாத அநாதி நித்தியப் பொருளாதல்.

(2) எல்லாத்தேவருந் தன்னை வணங்கி வேண்டிய வேண்டியாங் கெய்தத் திருவருள் செய்து தான் வேறொருவரை வணங்கி நில்லாமை.

(3) எல்லாத்தேவர் வலிமையும் தன்னுளடங்குமாறு தான் வரம்பிவாற்றல் கொண்டமை.

(4) தானே மோக்ஷதர் தாவாதல்.

(5) பஞ்சகிருத்திய சுதந்தரமுடைமை என இவை முதற்பலவாம்.

(1) வேதாகம புராணே திகாச வாயிலாக ஆராயுமிடத்துச் சகல தேவர்களும் பிறரும் யோனிவாய்ப்பட்டுப் பிறத்தலும் இறத்தலும் கேட்கப்படுகின்றன. சிவபிரான் அங்ஙனம் பிறந்ததாகவேனும் இறந்ததாக வேனும் யாண்டுங் கேட்கப்படவில்லை. இதனை

"எல்லார் பிறப்பு மிறப்புமியற் பாவலர் தஞ் சொல்லாற் றெளிர் தோநஞ் சோமேசர் - இல்லிற் பிறந்தகதை யுங்கேளோம் பேருலகில் வாழ்ந்துண், டிறந்தகதை யுங்கேட்டிலோம்''  என்பதனாலுமறிக.

(2) சகல தேவர்களும் ஒவ்வொரு வரங்களை வேண்டிக் காலம் தோறும் சிவபிரானைப் பூஜித்து அருள் பெற்றதாகக் கூறுஞ் சரிதங்கள் பலவுள்ளன. யாண்டாவது எக்காலத்தேனும் சிவபிரான் வெறொருவரைப் பூஜித்ததாக எந்த நூலுங்கூறக் கேட்டிலம். இக்கருத்தை

“இன்னுமுயர் பரசிவனை யிருதிணையி னுயிரனைத்து, மன்னும் வழி பாடியற்றி வயங்கியவைக் கறிகுறியாயின்னு பலதலம் பொலியுமன்றி மிளிரனையபிரா, னுன்னியொருவரைப் பூசையு ஞற்றியது முண்டுகொலோ'' என்பதாற்காண்க.

(3) சிவபிரான் சர்வவியாபகம் சக்தியுறுதலும், ஏனையதேவர்கள் வலிமையெல்லாம் சிவபிரானுக்கு உரியனவாகக் கூறும் வேதங்கள், சிவன் என்னும் திருநாமத்தை சிவபிரான் ஒருவருக்கேயன்றி வேறு எத்தேவர்க்கேனும் கூறாமல் விட்டது இக்கருத்தை விளக்கியே

சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனியெம்மான், அவனெனை யாட்கொண்டளித்திடு மாகிலவன்றனை யான், பவனெனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னாளழைத்தா, லிவனெனைப் பன்னா'ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே"

எனத் தமிழ்வேதங் கூறுதனுணர்க். அன்றியும், வேதங்களின் மத்தியில் உயிர் நிலையாக விளங்குவதும் சிவ நாமமே யாம்.. அதாவது: - இருக்கு யசுர் சாமம் என வேதங்கள் மூன்று, அவற்றுள் நடுவாயது யசுர்வேதம். அது ஏழு காண்டங்களை யுடையது. அவற்றுள் நடுவில் சிவபிரான் திருநாமம் விளங்குவதாக அடியில் வரும் செய்யுளானறியலாம்.

மும்மறையி னடுமறையின் முனிவிலெழு காண்டத்திற், செம் மைதரு நடுக்காண்டஞ் சேர்ந்தவெழு சங்கிதையில், அம்மநடுச் சங்கிதையினா தியீ றொழித்துக்டுப் பொம்மலுற வமர் மலுவின் பொருளா வானெவன் மைந்த.

வேதம் பலவிடங்களில் சிவபிரானைப்பிரமம் எனக்கூறுகின்றது. பிரமசப்தத்தை எல்லாச் சமயத்தாரும் தத்தம் கடவுளுக்கேற்றிக் கூறா நிற்பர். அங்ஙனம் கூறினும் பிரமசப்தம் சிவபிரானுக்கே யுரித்தாதல் விளக்குதும். கேனோபநிடதத்தில் இந்திரன் அக்கினி வாயு முதலியோர் அசுரர்களைப் போரில் வெற்றி கொண்ட ஜயசீலர் யாம் யாம் என்று செருக்குற அதனையறிந்த பரமசிவன், அவர்கள் முன்னிலையில், ஒரு இயக்க வேடந்தாங்கிச்சென்று, ஒரு துரும்பை யெடுத்துக் கீழே நட்டு, இதனிடத்து உங்கள் வலிமையைக் காட்டுங்களென்று கூறினரெனவும், அக்கினியும் வாயுவும் தம் ஆற்றல் சிறிதுஞ் செல்லாமைகண்டு நாணமுற்று நிற்க, பின் இந்திரன் வந்தவுடன் இயக்க வேடந் தாங்கிவந்து நின்ற சிவபிரான் மறைந்தருளி னர் எனவும், அப்பொழுது இமோற்பர்வத புத்திரியாகிய உமா தேவியார் விசும்பிற் றோன் றினாரெனவும், அவ்வம்மையாரை நோக்கி அம்மே! இவ்வியக்கன் யாவன்? என்று இந்திரன் கேட்ப இவன் பிரமம்” என்று அம்மையார் கூறியருளினாரெனவும், கேட்கப்படுதல் பிரத்தியக்ஷமாம்.

இவ்வுபநிடதக்கூற்றால் இயக்க வுருவமாக வந்தது. “பிரமம்" எனக் காணப்படினும், அவ்வுருவம் சிவபிரானென்பது எதனாற் பெறப்படு மெனில் ''தாயுடன் சென்று பின்றாதையைக் கூடி'' என்ற முறைப்படி உமாதேவியாராகிய சிவசத்தியாற் காட்டப்பட்டமையால் அந்தப் பிரமம் பரமசிவனே யென்பது பசுமரத்தாணிபோல் நாட்டப் பெறும். வாயு சங்கிதை இக்கதையை நன்கு விரித்துக் கூறும். அன்றியும்,

தோலாவவை நாப்ப ணடைந்து துரும்புநட்டு 
மாலாதி விண்ணோர் வலிமுற்றவு மாற்றவல்லோ
னாலால முண்டோ னவனேயகி லங்களுக்கு
மேலாய வேது வெனவிண்டது சாமவேதம்.

என்னும் காஞ்சிப் புராணத்திருப்பாசுரத்தானு முணர்க.

(4) அல்லதூஉம், யஜுர்வேத சமக மந்திரங்கள் அரி அயன் இந்திரன் முதலியோரை அன்னாதிகளுடன் சேர்த்து ஈயப்படும் பொருளாகக் கூறுகின்றமையும், சிவபிரான் ஈயுந்தா தாவாதலின் அப்பெருமானை அங்ஙனங் கூறாமையும், (ஒரு பிரபுவினிடம் யாசிப்பவர் அப்பிரபுவின் உடைமைப் பொருள்களில் எதையும் இரத்தல் போல அப்பிரபுவை நோக்கி உன்னைக் கொடு எனக்கேட்டலின்மை ஊகிக்கத் தக்கது) “பிறராற் சாதிக்க முடியாத முப்புரங்களையும் நீறாக்கி யுலகங்களைக் காத்தமையால் பசுபதி நீயே, யாமெல்லாம் பசுக்கள் என்று அங்கீகரித்தனர் தேவர்கள்” என்பது முதலிய சுருதிகளுண் மையும் சிவபிரானே மோக்ஷதாதா என்பதை வலியுறுத்து வன வாகும்.

(5) ஆன்மாக்களுக்கு அறிவு இச்சை தொழில்கள் விளங்க முதற்கா ரணமான மாயையினின்றுந் ததுவாதிகளைத் தோற்றுவித்தலாகிய சிருட்டியும், நிலைபெறச் செய்தலாகிய திதியும், இளைப்பொழித் தற்பொருட்டு மீட்டும் மாயையில் ஒடுக்குதலாகிய சங்காரமும், இருவினை யொப்பு வருவித்து மலங்களை முதிர்வித்தலாகிய திரோபவமும், பந்தம் விடுவித்தலாகிய அநுக்கிரகமும் என்று கூறப்பட்ட பஞ்சகிருத்தியங்கட்கும் சிவபிரான் தலைவராவர். பிரம விட்டுணுக் களுக்கன்றோ படைத்தல் காத்தல் உரியன வென்னின், அவர்கள் அவற்றைச் செய்தலில் அரசனது ஆணைப்படி நடத்தும் மந்திரி * முதலியோரைப் போன்று சிவபிரானது ஆணைப்படி நடத்தப்பட்ட வர்களே யல்லது சுதந்தரத்துவம் பெற்றவரல்லர். மன்மதனை நீறாக் கிய காலத்து அவன் றந்தையாகிய திருமால் தானே காத்தற்றொழி லின் முழுச்சுதந்தரம் பெற்றிருப்பின் தன் மகன் நீறுபடாது காத்தி ருக்கலாம். பிரமன் படைத்தற் றொழுலின் முழுசு தந்தா முடைய னாயின் சிவபிரானாற் கொய்யப்பட்ட தனது தலையை மீளப்படைத் திருக்கலாம். அங்ஙனஞ் செய்யாமையானே அவர்க்கு அத்தொழில் மன சிவவழிபாடுகள் சுதந்திரமுடையன வல்லவாதல் பெறப்படுதலுடன் சிவபிரானே - பஞ்சகிருத்தியத் தலைவராதலும் பெறப்படும். இதனை,

உலகமளித்தல் சுதந்திரமன் றுவண முயர் த்தோற் கெனவவன்சே யிலகு முருவம் பொடித்தவன்பா லெழுந்துபடைப்புஞ் சுதந்திரமன் றலர்மெல் லணையாற் கெனவவனை யரங்கத் திசைமா முகனாக்கிப் பலரும் வெருவப்பொழி நெய்த்தோர் பயிக்கம் புகுந்தோன் பதம்பணி வாம்” என்னும் திருவானைக்காப்புராணச் செய்யுளாலறிக.

இங்ஙனமாகச் சிவ பிரானது முழுமுதற்றன்மைகள் பலவாம். ஆதலின் “ ஆட்பாலவர்க்கருளும் வண்ணமு மாதிமாண்பும், கேட் பான்புகினளவில்லை'' என்றார் பெரியார். ஆயினும் இத்தகைய இரு பத்து மூன்று காரணங்களைக் காட்டிச்சிவபிரானே பரம் பொருளென விளக்கி மாதவச் சிவஞான யோகிகள் கட்டளை யிட்டருளிய சுலோக பஞ்சக மொழி பெயர்ப்பி லோரகவலை மட்டும் கூறிமேற் செல்வாம்.

உயர் காயத்திரிக்குரிப் பொருளாகலிற்
றசரதன் மதலை தாபித் தேத்தவிற்
கண்ணகன் கயிலையி ன்ண்ணிநின் றிரப்பப்
புகழ்ச்சியி னமைந்த மகப்பே றுதவலிற்
றனாது விழியுட னொராயிரங் கமலப்
புதுமலர் கொண்டரி பூசனை யாற்றலி
னாங்கவற் கிரங்கி யாழியீந் தருடலி
னைங்கணைக் கிழவனை யழல்விருந் தாக்கலி
னமைப்பருங் கடல்விட மமுதுசெய் திடுதலிற்
றென்றிசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகலி
னவுணர் முப்புர மழியவில் வாங்கலிற்
றக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலிற்
றனஞ்செயன் றனக்குத் தன்படை வழங்கலின்
மா நுட மடங்கலை வலிதபக் கோறலின்
மாயோன் மகடூஉ வாகிய காலைத்
தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருகலி
னாழ்கடல் வரைப்பி னான்றோ ஏநேக
ரன்புமீ தூர வருச்சனை யாற்றலி 
னான்கிரு செல்வமு மாங்கவர்க் கருடலி
னையிரு பிறப்பினு மரியருச் சித்தலி எ பயவா வா
னிருவரு மன்னமு மேனமு மாகி
யடிமுடி தேட வழற்பிழம் பாகலிற்
பிறப்பிறப் பாதி யுயிர்க்குண மின்மையிற்
கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற்
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்
முப்புர மிறுப்புழி முகுந்தப் புத்தேண்
மால்விடை யாகி ஞா லமொடு தாங்கலி
னயன்சிர மாலை யளவில வணிதலின்
ஞானமும் வீடும் பேணினர்க் குதவலிற்
பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவு
ளும்பர்க ளெவர்க்கு முயர்ந்தோ
னென்பது தெளிக வியல்புணர்ந் தோரே.

இனி வழிபடற் பாலர் யாவர்? என ஆராய்வாம்.

எல்லா ஆன்ம கோடிகளுக்கும் வழிபடற் குரியனவே. அவற்றுள் ஐயறிவும் நிறையப்பெற்று நல்வினை தீவினை சுவர்க்க நரகமாதிகளை நூலறிவாற் பகுத்தறியும் விசேட வறிவையும் பெற்றுள்ள தேவர் முநிவர் முதலியவர்களும் மனிதரும் வழிபாடியற்ற வேண் டியவர்களேயாம். ஆயினும் மனிதவர்க்கத்தாரே இவ்வழிபாட்டிற்குப் பெரிதும் பாத்தியமுடையவராவர். தேவர்களும் தமது நல்வினைக்கீடாகச் சுவர்க்கபோகம் புசித்துத் தீர்ந்தபின்னர் பூமியில் மானிடராகப் பிறந்து சிவவழிபாடியற்றியே உயர்பதமுறுவர். ஆதலால் பெறுதற்கரியது மானுடப்பிறவியேயாகும்.

"மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காய
மானிடத் தைந்து மாடு மரன்பணிக் காகவன்றோ
மானிடத் தவரு மண்மேல் வந்தான் றளையர்ச்சிப்ப
ரீனெடுத் துழலு மூம ரொன்றையு முணரா சந்தோ''
என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தம் ஈண்டுக்கவனித்தற் குரிய தாம். அன்றியும்,.  

"கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள்
கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள்
பெண்ணொருபா கனைப் பணியுந் தலைகளே தலைகள்
பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள்
பண்ணவன் றன் சீர்பாடு நன்னாவே நன்னாப்
பரன்சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிகள்
அண்ணல்பொலங் கழனினைக்கு நெஞ்சமே நெஞ்சம்
அவனடிக்கீ முடிமைபுகு மடிமையே யடிமை''
என்னும் பிரமோத்தரகாண்டச் செய்யுளால் மனிதர்க்குக் கண், கால், தலை, கை, நா, செவி, நெஞ்சு முதலாய வுறுப்புகள் யாவும் சிவவழி பாட்டிற்காகவே அமைக்கப்பட்டன வென்பதும், அவனுக்குச் செய்யும் அடிமையே அடிமைப்பயன் நாத்தக்கதென்பதும் தெள்ளிது புலனாம்,  வாழ்த்தவாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென் னியுந் தந்த தலைவன்'', “கோளில் பொறியிற் குணமிலவே யெண் குணத்தான், றாளை வணங்காத் தலை" என்பன முதலாகப் பெரியார் பணித்தருளுவன பலவுள, ஆதலால் நன்மை தீமைகளைப் பகுத்தறியும் தன்மை வாய்ந்த நாம் அனைவரும் சிவ வழிபாட்டிற்கு உரிமை உடையோம். பன்னாள் வழிபட்டும் சிவபிரான் வெளிப்பட் டருளவில்லையே யென்று மலையாது நமது கடமை வழிபடுதல் ஒன்றே யென்பதைத் திடமாகக் கொள்வோமாயின், நமக்கு அருள் செய்து உய்யக்கொள்வது அவன் கடமையே யாகும்.

நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பத் திருத்துறைக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன் பணி செய்து கிடப்பதே'' என்பது சுருதி.

இனி அவனுக்குச்செய்யும் வழிபாடுகள்யாவை? என்பதையா ராய்வாம்.

சிவவழிபாடு விதிமார்க்கம் பத்திமார்க்கம் என இருவகைப் படும். விதிமார்க்கமாவது: - பல நூல்களைக் கற்று அறிவு முதிரப் பெற்று எல்லாப் பொருள்களின் நிலையாமையையும் இறைவனது நித்தியத்துவத்தையும் உள்ளவா றுணர்ந்து உலகப் பொருள்களிடத்தே உவர்ப்புக்கொண்டு தத்தம் ஜாதிமுறைகடவாது நின்று நல்லாசிரி யனை யடைந்து சமய முதலிய தீக்ஷைகளைப் பெற்றுச்சரியையாகிய சிவபணிவிடைகளையும் கிரியையாகிய சிவபூசைகளையும் மனத்தைப் புறம்போகவிடாது சாஸ்திர விதிப்படி செய்துவருதல். இவற்றுள் சரியையாவது ஆலயங்களிலே உருவத் திருமேனியை நோக்கிச் செய்யப்படும் புறத்தொழிலாகிய திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், மலர்மாலைசாத்தல், தீபமேற்றல் முதலியனவாம். இது தாசமார்க்க மெனவும் பெயர் பெறும். கிரியையாவது புறத்தொழில் அகத் தொழில் என்னுமிரண்டானும் அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்வதாகிய வழிபாடு. இது புது மலர் முதலிய பூஜோபகரணங் சளைத் தொகுத்து ஐவகைச் சுத்திசெய்து சிவாசன மூர்த்தி மூலங் களாலே முறையே ஆசனமிட்டு மூர்த்தியை யெழுந்தருளச் செய்து மூர்த்திமானாகிய பரஞ்சோதியைப் பாவனை செய்து ஆவாகித்து மெய்யன்பினால் அருச்சித்துத் துதித்து வழிபடுதலாம். இது புத்திர மார்க்கமெனவும் பெயர் பெறும். இன்னும் இவற்றின் விரிமுறையை ஆசாரியர் உபதேசத்தாலறிக.

அகத்தொழில் மாத்திரையானே அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு இயமமுதல் சமாதி யீறாகச் சொல்லப்பட்ட எட்டு வகைப்பட்டு விரிந்துள்ள யோகமாம். இது சகமார்க்கமெனவும் பெயர் பெறும். இந்த மூவகை வழிபாடுகளும் ஞானத்தை யுதிப்பித்தற்கு ஏதுக்களாம். இவற்றானே தான் ஞானம் பிறக்கு மென்பர். இது சன்மார்க்க மெனப் பெறும். இனி இவற்றுள் ஒவ் வொன்றும் நன்னான் காய்ச் சரியையிற் சரியை முதல் ஞானத்தில் ஞானம் ஈறாகப் பதினாறு வகையென்று சொல்லப் பெறும், சிவஞான சித்தியார் முதலிய நூல்களில் இவற்றின் விரிவைக் காண்க : ஞானத் தைப்பற்றி வேறு தனியாக விரித்துக் கூறுதும், சிவவழிபாடு செய்யும் போதும் ஜாதிமுறைகடவாது நடத்தல் வேண்டுமோ எனில் கூறுதும். திருநாளைப்போவார் நாயனார் முற்பிறப்பிற் செய்த புண்ணிய மிகுதியினாலே சிவபிரானிடத்து மெய்யன்புடையராகி யிருந்தும் தாம்புலையர் குலத்திற் பிறந்திருத்தலால் தம் ஜாதிமுறை கடவாது நின்றே பத்தி செய்யவேண்டு மென்பது கருதிச் சிவாலயங்கள் தோறும் சென்று பேரிகை மிருதங்கம் யாழ் முதலிய கருவிகட்குத் தோலும் வாரும் நரம்புங் கொடுத்தும், கோரோசனை கொடுத்தும், ஆலயங்களின் திருவாயிற் புறத்தே நின்று ஆடிப்பாடிக் கும்பிட்டு வணங்கி வந்தனர், சிதம்பரத்துக்குச் சென்றபோது நாயனார் தம் இழிகுலப் பிறப்பால் உள்ளே செல்லக்கூடாமைக்கு விசனித்து நகர்ப்புறத்தே வலஞ்செய்து கவலையுடன் துயில்போது சிவபிரானெழுந்தருளி நாளை அக்கினியில் மூழ்கிப் புனிதனாகி உள்ளே வந்து நம்மைத் தரிசிப்பாயாக வெனக்கட்டளையிட்டருள அவ்வாறே செய்து தரிசனை பெற்றுய்ந்தாரென்று பெரிய புராணங் கூறுமாற்றாற்காண்க.

எத்துணைப் பெரிதான சிவவழிபாட்டைச் செய்யினும் மனம் வேறொன்றிற் செல்லாவாறு அழுந்திய நிலையிலிருந்து செய்தாலன்றிப் பயனில்லை. சிந்தை வேறுபட்ட செயல் தீங்கே பயக்கும். இதனை,

சொந்தலர் கொய்யும் போது கூர் விழிமையலாலே
பைந்தொடி மடவார் தம்மைப் பார்த்தலாற் கைலைவெற்பிற்
சுந்தரன் பட்ட காதை யறிதிரோ துணர்மென் போதால்
அந்தணர்க் கீழ்க ளாவார் கீழ்களந் தணர்க ளாவார்.

என்னும் புட்பவிதிச் செய்யுளாலும், நக்கீரதேவர் சரவணப் பொய்கைக் கரையிலிருந்து சிவபூசை செய்துகொண்டிருக்கும்போது காற்றால் விழுந்த ஓர் ஆலிலையானது பாதிநீரிலும் பாதிகரையிலு மாகப் பட்டு நீரில் பட்டபாதி மீன் வடிவாகிப் புனற்குள்ளிழுப்பக் கரையிற்பட்ட பாதி புவடிவாகி மேலேயிழுப்பக்கிடப்ப, சிவபூசை செய்துகொண்டிருந்த நக்கீரதேவர் அந்த ஆச்சரியத்திலே மனஞ் செலுத்தினர்.

சிவ பூஜாகாலத்து வேறொன்றில் மனஞ்செலுத்தியதனால் உடனே அவண் ஒருபூதம் வந்து அவரைத் தூக்கிச் சென்று மலைக்குகையுள் முன்னமே தன்னாலிங்ஙனம் வைக்கப்பட்ட தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்பதின் மருடன் சேர்த்து வைத்ததும், தேவர் முருகக்கடவுள் மீது திருமுருகாற்றுப் படைபாடி அப்பூதத்தை வென்று மீண்டதுமாகிய பிரசித்த சரித்திரத்தாலும் நன்குதெளிக. கைலாசவாசியாகிய ஆலாலசுந்தரரும் மெய்யடியாராகிய நக்கீரதேவருமே சிவவழிபாடு செய்யுங்கால் சிந்தனை சற்றே புறம்பான குற்றத்திற்காக இப்பாடுபடுவார்களாயின் ஏனையர் விஷயத்தில் சொல்ல வேண்டுவதின்றே! இங்ஙனம் வேதாகமாதிகளில் கூறப்பட்ட விதி வழுவாது சிவபணிசெய்வது விதிமார்க்கம் எனக்கொள்க.

பக்திமார்க்கமாவது: - முற்பிறவிகளிலே விதிமார்க்கந் தவறாது சிவ வழிபாடு செய்து சிவனிடத்தே செலுத்தி வந்த மெய்ப்பத்தி முதிர்ச்சியாலே செய்யத் தகுவதின்னது செய்யத் தகாததின்னது என்ற பாகுபாடு கருதாது பரவசப்பட்டுச் சிவபிரானுக்குப் பணிச்செய்தலாம். கண்ணப்ப நாயனார் இந்தப் பக்திமார்க்கத்தே செல்லப்பெற்றவராதலின் விதிநிஷேத மாக இவர் செய்த மாமிசநிவே தனாதி எல்லாச்செயல்களும் சிவபிரானுக்கு இனியவாயின. மனமானது தன்னை மறந்து தலைவன் வசப்பட்டு நிற்கும் பொழுது செயல்கள் தான் பத்திமார்க்க மெனப்படுமாதலின் இந்நிலையில் நின்மோர்செயலை ஏனையர் பின்பற்றி யொழுகல் கூடாது.

வெள்ளமிகுத் தேரி நடு வுடைத்தோடி ன துகலிங்கா விடுகிலாரப்
பள்ளமடைத் திருபுறத்துங் கடைவிடுவ ருலகோரப் பரிசு போல.
வுள்ளமிகுத் தறிவெழலாற் பத்திமிகுத் தமையானொன் றொருவர் செய்யிற்
றெள்ளுணர்வோ ரதனைவிதி யென்றுபின்னும் புரிகுவரோ தெளிவிலோயே

என்னும் செய்யுளும் இக்கருத்தையே வலியுறுத்துமாறுணர்க. இங்ஙனமாக இருவகை மார்க்கத்துள் எந்த மார்க்கத்தைப்பற்றி நின்று வழிபாடு செய்யினும் அது நமது கடமை யென்பது மட்டுங் கருதிச் செய்ய வேண்டுமேயன்றி யாதொரு பலனையும் இச்சித்துச்செய்தல் கூடாது. அதுதான் உத்தம சிவவழிபாட்டின் முக்கிய இலக்கணம். இறைவன் "ஆண்டான், நாம் அடிமை, ஆதலால் அவனுக்கு நாம் எக்காலத்தும் வழிபாடு செய்யும் கடமையுடையோம் என்ற எண்ணத்துடனே பணிசெய்ய வேண்டும். இங்ஙனமே வழிபாடு செய்யவேண்டு மென்பதை

கேடு மார்க்கமுங் கெட்ட திருவினார்
ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குலார்
கூடுமன் பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்."

என்னும் பெரியபுராணத் திருப்பாசுரத்தானுங் காண்க.

இனி வழிபாட்டால் அடையும் பயன் என்ன? என்பதை யாராய்வாம்..

அவரவர் செய்த வழிபாட்டின் தகுதிக்கேற்ப இம்மையில் அரசனாத லும், மறுமையில் இந்திரபதவி, பிரமபதவி, விட்டுணுபதவி முதலியவை களை யெய்தலும் சிவவழிபாட்டினாலேயாம். “வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்" எனலால் எவ்வெவர் எதனை விரும்பினார்களோ அவ்வவர்க்கு அதனைக் கொடுத்தருளுவர்.

வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரை மகனாச் செய்தனையே.

"வண்டுளருந் தண்டுளாய் மாயோ னிறுமாப்பும்
புண்டரிகப் போ துறையும் புத்தே ளிறுமாப்பும்
அண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்''

என்பன வாதிய திருப்பாசுரங்களால் பூதலவரசனாகவும், இந்திரனாகவும், பிரமனாகவும், விட்டுணுவாகவும் செய்விப்பது சிவவழிபாடா மென்பது காண்க. தேவ தேவனாகிய சிவபிரானை வணங்கிய பின்பு அச்சிவபிரான் யாது செய்வரெனில் தன்னைத்தொழுத தொண்டர்களை, முன்னர் அவராற் றொழப்பெற்ற மற்றத் தேவர்களெல்லாம் வணங்கத்தக்க உயர்பதவியி லிருத்தியருளுவர்.

முழுத்தழன் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பரஞ் சோதியை யெங்கள் பிரானை யிகழ்திர் கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னைத்
தொழப்படுந் தேவர் தம் மாற்றொழு விக்குந்தந் தொண்டரையே.''

என்ற தமிழ்வேதவாக்கு மிகப்பாராட்டற் குரியதாம். இவைகளெல்லாம் காலாந்தரத்தில் மாறத்தக்க பதமுத்திகளே யாதலின் இவற்றிற்குமேலாயதும், இரும்புண்ட நீரும், சமுத்திரத்தையடுத்த நீரும் திரும்ப வராதது - போல மீளாவண்ணம் அப்பு அணைந்த உப்புப்போல ஆன்மா இறைவனைச் சார்ந்து கால் தலை - காறலை, தாள், தலை - தாடலை என்றபோது றகர டக ரங்கள் ஓரெழுத்தென்றும் ஈரெழுத்தென்றும் சொல்லமுடியாமல் இருப்பது போல் அத்துவிதமாகின்ற முத்தியின்பமும் தரவல்லது இச்சிவ வழிபாடேயாம். சரியைத்தொண்டருக்குச் சிவசாலோகமும், கிரியைத்தொண்டருக்குச் சிவசாமீபமும், யோகருக்குச் சிவசாரூபமும், ஞானத்தவர்க்குச் சிவசாயுச்சியமும் முறையேயென்பர்.

சிவபிரான் தன்னடியார்களது உடல் பொருளாவிகளை ஏன்றுகொண்டு அவர்களைத் தன்மயமாக்கி யருளுவதை

"அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாங்
குன்றே யனையா யென்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோரிடையூ றெனக்குண்டோ வெண்டோண் முக்கணெம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ வதற்கு நாயகமே.”

என்னும் மணிவாசகப்பெருமான் றிருவாக்காலறிக. இங்ஙனம் உடல் பொருளாவிகளை இறைவன் என்று கொள்ளினும் அவற்றால் இறைவற்கோர் பயனுமில்லை யெனவும், இறைவனைப்பெற்ற நான் அளவற்ற நிரதிசய இன்பமெய்துகின்றேன் எனவும் அந்த மணிவாசகப் பெருமானே வியந்து பாராட்டிக்கூறும் அருமையை

''தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா வார்கொலோ சதுரர், அந்தமொன்றில்லா வாநந்தம் பெற்றேன் யாது நீ பெற்ற தொன்றென்பாற், சிந்தையே கோயில் கொண்ட வெம்பெருமான் றிருப்பெருந் துறையுறை சிவனே, யெந்தையே யீசாவுடலிடங் கொண்டாயானிதற் கிலனொர்கைம்மாறே."

என்னுந் திருப்பாசுரமே யினிது விளங்கும்.

வியாசத்திரட்டு.

சித்தாந்தம் – 1916 ௵ - பிப்ரவரி / ஏப்ரல் / மே ௴


No comments:

Post a Comment