Saturday, May 9, 2020



சீவக சிந்தாமணியும் சைவமும்*
[திரு. ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை]

* திரிசிராப்பள்ளியில் சமாஜ 36 - ம் ஆண்டு விழாவில் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் தலைமையில் நிகழ்த்திய சொற்பொழிவு.

தமிழ் நாட்டின் தவப்பயனாய், சைவத்தின் பெருங்கரு ஆலமாய் எம்போல்வார் நாளும் பரவும் குருபரம்பரனாய், இன்று தலைமை தாங்கும் அடிகள் திருவடிகளை மனத்தால் பரவி, கையால் தொழுகின்றேன். சைவநலம் கெழுமிய சான்றோர்களே, தாய்மார்களே!

இன்று இங்கே நடைபெறும் சைவசித்தாந்த மகா சமா சத்தின் கூ கூ - வது ஆண்டு விழாவில் நம் சமாசக் காரியதரிசி யாரும், இதன் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உடல் பொருள் உயிர் என்ற மூன்றையும் ஒருங்கே உரிமை செய்து சலியாது உழைத்து வருபவரும், சென்ற பல ஆண்டுகளாக என்போன்றாரை இத் துறையில் இயக்கிப் பணிகொள்பவரு மாகிய சைவத்திருவாளர் - ம. பாலசுப்பிரமணிய முதலியார், B. A., B. L., அவர்கள், " சீவக சிந்தாமணியும் சைவமும் " என்ற பொருள் பற்றியே பேசுதல் வேண்டும் என்று பணித் தார்கள். பணித்தவர்கள், அந்தமட்டில் நில்லாது அப்பேச் சினை முதற்கண் எழுதிப் போந்து, முக்கால்மணி நேரத்திற் குள் படித்து முடித்தலும் வேண்டும்;'இறந்தநாள் யாவர் மீட்பார்” (2616) எனத் திருத்தக்க தேவர் கூறியுள்ள சீரிய கருத்தை மேற்கொண்டு காலவளவில் கருத்தூன்றி நிற் றல் வேண்டும் என்று கழறிக் கூறினார்கள். அவர் கூறியவை அனைத்தும் பொன்போற் போற்றத்தக்கன வாதலின், அவற்றை மேற்கொண்டு என் கடமையினை ஆற்றத் தொடங்குகின்றேன். கருத்து வேற்றுமை, குற்றம் குறை
முதலியவற்றைப் பொறுத்தருளுமாறு உங்கள் திருவுள்ளப். பேரருளைப் பெரிதும் வேண்டிக்கொள்ளுகின்றேன்.

"சீவக சிந்தாமணியும் சைவமும்" என்ற தலைப்பைக் கண்டதும் சில நண்பர்கள் வியப்புற்றனர். அதனைக் கண்டதும், இவ்யாண்டில் நம் சைவ சித்தாந்த சமாசத்தில் சீவக சிந்தாமணி மூலம் மட்டில் வெளியிடப் பெறுகிறது என்று யான் சொன்னேன்; அது கேட்டதும் அவர்கட்கு வியப்பு மிகுதியாயிற்று. "சீவக சிந்தாமணி யென்பது சமண் சமயக் காவியம்; அதற்கும் சைவத்துக்கும் என்ன தொடர் புண்டு" என்றனர். அவர்கள் நம் சைவத்தின்பால் உள்ள ஆர்வமிகுதியால் அவ்வாறு கேட்கின்றனர் என்பதனை யான் நன்கு தெரிந்துகொண்டேன். புறச்சமய நெறிநின்று அகச் சமயம் புகுதலும் பிறவும் சைவத்துக்கு உடன்பாடாகும். புறச்சமய நூல்களைப் பயின்று சைவத்தின் மாண்பு காண்பதும் ஒருவகை அறிவுநெறியே என்று நாவரசர் வரலாறு நமக்குக் காட்டுகின்றது. இதனால், சைவர் அனைவரும் புறச் சமயநூல் பலவும் வரைவின்றிக் கற்றல் வேண்டுமென்று வற்புறுத்துகின்றேனென்று துணிதல் கூடாது. புறச்சமய நூல்களுள்ளும் சீரிய நலமுடையவையுளவாயின், அவற்றைக் கற்றல் குற்றமின்று; அக்கற்றறிவால் நம் சைவத்தின் தனிப் பெருமாண்பினை நன்கு தெளிய உணர்தல் கூடுமென்பதே பேறிஞர் பலர் கருத்து. சீவகன், கந்துக்கடன் என்பானால் எடுத்து வளர்க்கப் பெற்று, அச்சணந்தி என்னும் சமண முனிவன்பால் பலகலை களையும் கற்பிக்கப்பெற்றான். பின்பு இவன், தன் பிறப்பு வரலாறு ஆசிரியனால் உணர்ந்து, அவனே தேற்றத் தேறியிருக்கையில், அந்நகரத்து ஆயரது ஆனிரையைக் கவர்ந்த வேட்டு வரை ஆளற்றம் நேராத வகையில் வென்று வீறுபெற்றான். பின்னர், இச்சீவகன் காந்தருவதத்தை யென்பவளை இசையால் வென்றும், குணமாலை யென்பவளை அசனிவேகம் என்னும் யானையினின்று காத்துக் காதலுற்றும் மணந்து கொண்டான். இவ்வாறே பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்ற ஆறு மகளிரை மணம் செய்து கொண்டு சிறப்புற்றான். இலக்கணையை மணப்பதற்கு முன், தன் தாயைக் கண்டு, அவள் பணித்தவாறே, தாய்மாமனான கோவிந்தராசன் என்பவனைத் துணைகொண்டு கட்டியங்காரனை வென்று தன் அரசுரிமை எய்தினான். முடிவில், இச்சீவகன், நன்மக்கள் பலரைப் பயந்து, அவர்பால் தன் அரசினை வைத்துத் தான் துறவு பூண்டு, இறுதியாக, பரிநிருவாணம் பெற்றான். இதுவே, சீவக சிந்தாமணியில் அடங்கிய கதை.

இதனை, இனிய அழகிய தமிழ்ப் பாக்களால் நமக்கு உணர்த்தருளிய சான்றோர் திருத்தக்க தேவர் என்ற சமண முனிவராவார். இவர் சோழர் குலத்தவர் என்று சைனர் கூறுகின்றனர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தவர் என ஆராய்ச்சியாளர் முடிவுகண்டுள்ளனர். இவர் வடமொழி, தமிழ் மொழி என்ற இரண்டினும் சிறந்த புலமையும், தமிழில் அரிய புரவன்மையும் உடையவர்.

இவர் காலத்தே, திருஞானசம்பந்தர் முதலிய சைவத் திருவருட் செல்வர்களால் சீர்செய்யப் பெற்ற சைவ சமயம் சிறப்புற்றிருந்தது. சமண் சமயம் தலைமையிழந்திருந்தது. திருஞானசம்பந்தர் முதலியோரால் நிலைநாட்டப் பெற்ற வைதிக சைவம், வேதநெறி பற்றிய புராணங்களையே அடிப் படையாகக் கொண்டி. ருந்தது. “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க'' என்றும்,“ வேதப் பயனாம் சைவமும்போல்'' என்றும், தேவர்க்குச் சுமார் இருநூறு ஆண்டுகட்குப் பிற்போந்த சேக்கிழார் பெருமான் எடுத்தோதுதலால் இவ்வுண்மை புலனாகின்றது, ஆகவே, தேவர் இச்சிந்தாமணியைப் பாடிய காலத்தில், நம் தமிழ் நாட்டில் நிலவிய சைவநெறி வைதிக சைவப் புராணங்களைக் கொண்டிருந்தமை இனிது விளங்கும்; அன்றியும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என வகுத்துக் காணப்பெறும் சங்க இலக்கியங்களும் தமிழர் கற்கும் தமிழ்க் கல்விக்குப் பெரு நூல்களாகத் திகழ்ந்தன. தேவரும், இவ்வைதிகச் சைவ நூல்களையும், செந்தமிழ்ச் சங்க இலக்கியங்களையும், திருஞானசம்பந்தர் முதலியோர் பாடியருளிய திருமுறைகளையும் நன்கு கற்று மிக்க சொல்வளம் படைத்த தமிழ்ப் பாவலரால் விளக்கமுற்றிருந்தார். இவர் பாடிய இப்பெருங் காவியத்தில், வைதிக சைவப்புராணக் கருத்துக்கள் பல ஆங்காங்கு நின்று மிளிர்கின்றன. இதனால், இவர் இயற்றிய சிந்தாமணி நந்தாவளம் பெற்று, சமய வேற்றுமையின்றித் தமிழர்களால் போற்றிப் படிக்கப்பெறுவதாயிற்று; இன்றும் அவ்வண்ணமே வந்துகொண்டிருக்கிறது. இந்நூலுக்கு ஓர் அரிய உரையும் நச்சினார்க்கினியார் என்னும் வைதிக சைவர் ஒருவரால் எழுதப்பெற்றுள்ளது.

சமயப்போர் என்னும் சூறாவளியால் நிலைகலக்குண்ட சமயமொன்றைச் சார்ந்த பாவலர் ஒருவர், ஒரு காவியம்செய் வரேல், அவரது அக்காவியத்தின்கண் காவிய நலம் ஒன்றே சிறந்துநிற்கும் என்பது சிறப்பன்று; அவர் உள்ளத்தே தம் சமயத்தைப் பண்டை நிலையில் நிறுத்த வேண்டு மென்னும் ஆர்வமும், அது வாய்ப்பது குறித்து ஒல்லும் வாயெல்லாம் தம் சமயக் கருத்துக்களை நாட்டு மக்களிடையே பரப்ப வேண்டுமென்ற வேட்கையும் உள்ளுறக்கிடந்து தன் கடமையினைச் செய்யுமென்பது இயற்கையாகும். இதனை ஆராய்ச்சியறிவுடையவர் எவரும் உடன் படுவர். தேவர் வாழ்ந்த காலமும், அக்காலத்தே அவரது சமயமிருந்த நிலையும் நோக்குமிடத்து, அவர் பாடிய காவியத்தில், காவிய நலமும் சமண சமயக் கருத்தும் ஒருங்கே விரவிவரப் பாடியிருப்பர் என்பது இனிது உணரப்படும். இவர் மேற் கொண்ட நெறியே இவர்க்குப் பின்வந்த சமண முனிவர்களின் தமிழ் நூல்களில் அமைந்து கிடக்கின்றது.

அன்றியும், இச்சிந்தாமணிக்கண் ஏறக்குறைய 3100 செய்யுட்கள் உள்ளன. இவற்றுள் சில கந்தியார் பாடியன என்பர்; ஆனால் அவை இன்னவென அறியக்கூட வில்லை; ஆகவே, இப்போது காணப் பெறுவன 3100 செய்யுட்கள் என்றே கொள்வோம். இவற்றுள், கடவுள் வாழ்த்து, பதிகம் என்ற இரண்டினையும் ஒரு பகுதியாகக் கொள்ளின், இக்காவியம் பதினான்கு பகுதியதாகும். இவைகளுள், இறுதியில் உள்ள முத்தியிலம்பகம் நீங்கலாக, ஏனைய பதின்மூன்றுக்கும் சராசரி 200 செய்யுட்கள் உள்ளன; முத்தியிலம்பகத்தில் மாத்திரம் 500 செய்யுட்கள் இருக்கின்றன. இம் முத்தியிலம்பகம் மட்டில் ஐந்நூறு செய்யுட்கள் கொண்டிருப்பதற்குக் காரணம், இப்பகுதி முற்றும் சமண் சமயக் கருத்துக்களைத் தமிழ் நாட்டவர்க்கு எடுத்து உரைப்பதேயாகும். மேலும், இச்சீவக சிந்தாமணி சைனரிடையே ஒரு சமயப் பெரு நூலாகவே போற்றப் பட்டு வருகின்றது. முத்தியிலம்பகத்தை மட்டில் தனியே பிரதிசெய்து கொண்டு ஓதியும் வழிபட்டும் வரும் வழக்கம் சைனர்பால் இன்றும் உண்டு. இவ்வாறு வழிபட்டுவந்த முத்தியிலம்பக ஏட்டுப்பிரதிகள் அடியேன் பால் இரண்டு உண்டு; அவற்றுள் ஒன்று ஆம்பூர் ''தமிமணங்கு' ஆசிரியர், உயர்திரு. ஆ. ம. சிவஞானம் அவர்கள் வழங்கியது. தென்னார்க்காடு சில்லாவைச் சேர்ந்த வீடூர், ஆலக்கிராமம், பெருமண்டூர், விழுக்கம், சிற்றாமூர் முதலிய இடங்களில், பல சைனர் வீடுகளில் இம்முத்தியிலம்பகப் பகுதி மட்டில் தனியே இருக்கக் கண்டிருக்கின்றேன். இக்கூறியவாற்றால், திருத்தக்கதேவர், தாம்பாடிய இச்சிந்தாமணிக் காவியத்தில், காவிய நலமும், சமண் சமயப் பொருள் நலமும் சிறக்க அமைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டிருந்தனரென்பது துணிபாம்.

இவ்வாறு இவர் சமண சமயப் பொருளைத் தமிழ் உலகிற்கு வழங்கும் கருத்தினராதலைப் பண்டையறிஞர் அறியாமல் இல்லை. எனினும், இக்காவியத்தின் தமிழ்நலத்தைத் தேர்ந்து இன்புற்ற சிறப்பால், இதனை அவர்கள் புறக் கணிக்கவில்லை. பின்வந்த யாப்பருங்கலம், நேமிநாதம், நன் னூல் முதலாயினவும் இவ்வாறே தமிழறிஞர்களால் இன்று காறும் போற்றப்பட்டு வருகின்றன. ஆறுமுக நாவலர் முதலிய சைவவொழுக்கம் தலைசிறந்த சான்றோர் உரைவகுத்தும் அச்சிட்டும் வெளியிட்டுமுள்ளார். வைத்தியநாத தேசிகர் என்னும் சீரிய சைவச் சான்றோர் எழுதிய இலக்கண விளக்கத்தை மறுத்து, சமண முனிவரான பவணந்தியார் எழுதிய நன்னூலை வலியுறுத்தியவர் யாம் செய்த தவப்பய னாய்த் தோன்றி, அருமைச் சிவஞான போதத்துக்குப் பேருரை விரித்த பெருந்தகை மாதவச் சிவஞான யோக்களாவர். ''எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற மெயம் மறையின் துணி தோய்ந்த உள்ளத்தராதலின், அவாபால் சமயக் காழ்ப்பு அக்காலத்தே இலதாயிற்று.

அன்றியும், வெள்ளறிவுடைய மக்கள் உள்ளத்தை எளிதிற் பற்றி யீர்க்கும் எளிய நூல்கள் அக்காலத்தே சைவவுலகில் அருமையாய் இருந்திருத்தல் வேண்டும். சங்க இலக்கியம், தேவாரத் திருமுறை, திருமந்திரம் முதலியன அக்காலத்தே இருந்தனவாயினும், நுண்மாண் புலமை யுடையார்க்கன்றி ஏனையோர்க்கு - அவருள்ளும் இறைவன் திருவருள் நலம் வாயாதார்க்கு - எளிதிற் பொருள் விளங்காவாய் இருந்தன. இவ்விடர்ப்பாடு நம் திருநாவுக்கரசர் காலத்தேயே இருந்திருக்கின்றதென்று அவர் வரலாறு கூறுகின்றது. அவர் காலத்தே திருமந்திரம் முதலிய சமய நூல்கள் இல்லாமல் இல்லை. நாவரசர்க்குத் திருவருள் நன்கு வாய்ப்பதற்கு முன்பு, அவர் சமண் சமய நூல்களையே மிகக்கற்றனரென்று அவர் வரலாறு கூறுகின்றது:

''நில்லாத உலகியல்புகண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்றறத் துணிந்து சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர்ந்தும் நம்பர் அருளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகினார்''

என்று சேக்கிழார் பெருமான் கூறுதல் காண்க. இதனை நோக்கின், தொடக்கத்தில் மருள் நீக்கியாய் இருந்தவரைத் தன்பால்கொண்டு, தருமசேனராக்கி, முடிவில், நாவுக்கரசாய், அப்பமூர்த்தியாய், தாண்டக வேந்தராய், சைவ சமயாசிரியராய் நமக்கு வழங்கியது. திருவருள் என்பது ஒருபுறமிருக்க, இச்சமண் சமயப்பெருநூல் தொகுதியுமாம் என்பது பொருந்தா உரையன்றாம். எனவே, இச்சீவக சிந்தாமணியென்னும் செந்தமிழ்ப் பெருநூல் சமண் சமயப் பெருநூலாயினும், சைவர்களாகிய நாம் மேற்கொண்டு போற்றுதற்கும், நம்மைப்போல் பிறரும் போற்றுமாறு அச்சிட்டு வெளியிடுதற்கும் மிக்க உரிமையுடையோம் என்பது தெள்ளிதாம்.

இனி, "ஒள்ளிய சீர்த்தொண்டர் புராணம்” என்றும், “பொருவரிய திருத்தொண்டர் புராணம்”,  "சங்கரன் தாள் தமது சிரங்கொள் திருத்தொண்டர் புராணம்'', சேண்தகைய திருத்தொண்டர் புராணம்” என்றும் நாம் பரவிப் படித்து ஓதி இன்புறும் பெரிய புராணம் பிறந்ததற்கும் இச்சீவக சிந்தாமணி ஒரு காரணமாம் என்பதனைத் திருத்தொண்டர் புராண வரலாறு உரைத்தருளிய உமாபதி சிவனார் விளம்புகின்றார்கள். சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் பாடிய காலத்தில் இருந்த சோழன் கி. பி. 1132 முதல் 1146 வரை ஆட்சி செலுத்திய இரண்டாங் குலோத்துங்கன் என்பர். இவ்வேந்தன் பரந்த மனப்பண்புடையவன் என்றும், சிறந்த சிவத்தொண்டன் என்றும் ஏனைச் சமயத்தவரையும் இனிது ஆதரிக்கும் விரிந்த நோக்குடையவன் என்றும் ஆராய்ச்சியாளர் வீதி தோதுகின்றனர். இவன் இச்சீவக சிந்தாமணியின் நந்தாத் தமிழ் நலங்கண்டு அதனையே பெரிதும் விரும்பி எப்போது. ஓதியும் உரைப்பக் கேட்டும் இன்பற்றிருந்தான். இச் சிந்தாமணிக்கண் இடையிடையே கொளுத்தப்பெறு சமண்சமயக் கருத்துக்களை அரசன் ஏற்றுச் சமணனா விடுவனோ என்று சேக்கிழார் பெருமான் முதலியறோர் அறிந்து அஞ்சி, அவன் கருத்துச் சிவநெறியிலே ஊன்றி நிற்றல் வேண்டித் திருத்தொண்டர் புராணதல் செய்தருளினர் என்று உமாபதிசிவனரும், மகாவித்தும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் பிறரும் பலவகைய எடுத்தோதியுள்ளார்கள்,

சிந்தாமணியின் காவிய நலத்திலே சோழ  வேந்தன் கருத்துத் தோய்த்து நின்றதை, "வளவனும்.... கதையை மெய்யென்று வரிசை கூற உள மகிழ்ந்து பலபட பாராட்டி கேட்க உபயகுல மணிவிளக்காம் சேக்கிழார்  கண்டு, இளவரசன் தனைநோக்கிச் சமணர் பொய்ந்நூல் இது, மறுமைக்காகாது இம்மைக்கும் அற்றே; வளம் மறுவுகின்ற சிவகதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி என வரும் திருத்தொண்டர் புராண வரலாற்றுச் செul அறியலாம். இதனைத் “திருட்டுச் சிந்தாமணி கதை  என உமாபதி சிவனார் கூறுவர் : இக் காவிய வடிவிற்  போந்து சமண சமயக் கருத்துக்களை நாட்டு மக்கட்கு கொளுத்தும் குறிப்புடையதாய் இருத்தல் பற்றி, சிவனார் இச்சீவக சிந்தாமணியை நன்கு ஓதியுள்ளார் என்பது அவர் பாட்டுக்களால் இனிது உணரப்படுகின்றது ஒன்று காட்டுதும் : சீவகன் தன் மனைவியருடன்  நீர் விளையாட்டயர்ந்தபோது, அம்மகளிர் அலைந்த திறத்தைக் கூறப்போந்த திருத்தக்க தேவர், “கூந்தலை ஒருகை யேந்திக் குங்குமத் தாரைபாயப், பூந்துகி லொருகை யேந்திப் புகுமிடம் காண்டல் செல்லார்'' (சீவக. 2660) என்றனர்; இதனையே நம் உமாபதி சிவனார், கோயிற்புராணப் பதஞ்சலிச் சருக்கத்தில், ஆண்டவன் திருவடிவம் கண்டு தாருவனத்து முனிமகளிர் பெண்மைப் பண்பிழந்து அலமந்த செய்தி கூறுமிடத்து, "சாயவார் குழலொருகை கலையொரு கையுறத் தாங்கி, பாய வாள்விழி யருவிப் பரவசராய் எதிர் பயில்வார்'' (பதஞ்சலி 19) என்ற செய்யுளின்கண் அமைத்து ஓதுகின்றார். இவ்வாறு வருவன பல.

இனி, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் வாயிலாக, "பயனிலதாகும் சிந்தாமணிவழிப் படர்தல் எனப் போதித், துத்திச் சுமையொரு தோள்வைத் தடுபுலி யுயர்த் தோன் மனம் அடியார் உ.றுசெயல் நாடப்புரி மதி வலவ'' என்றதனால், சேக்கிழார் பெருமான், சிந்தா மணி வழியே படர்ந்த வேந்தன் உள்ளத்தை மாற்றற் கெனத் திருத்தொண்டர் புராணம் பாடியருளினர் என்ற செய்தியைத் திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறுவதை யறிகின்றோம். திரு. பிள்ளையவர்களும் இச்சிவக சிந்தாமணியின் காவிய நலத்தை யறியாதவரல்லர். ஆனால், டாக்டர் - திரு. உ. வே. சாமிநாதையரவர்கள் தம் ஆசிரிய ரான திரு. பிள்ளையவர்கள் சீவக சிந்தாமணியைப் படித்தி லர் எனத் தாம் எழுதிவரும் தம் வரலாற்றிற் குறித்திருக் கின்றார்கள். சிவக சிந்தாமணியை அச்சிடுதற்குத் தாம் பெற்ற ஏட்டுப் பிரதிகளுள் முதற் பிரதி, " திருவாவடு துறையா தீனத்து மகாவித்வான் ம -ா - II - ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரதி - க'' என்று குறித்துள்ளார்கள். மேலும், திரு. பிள்ளையவர்கள் பாடியுள்ள தல புராணங்களிலும் கோவை, உலா, பிள்ளைத் தமிழ் முதலிய பலவற்றிலும் இச்சீவக சிந்தாமணியின் சொற்களும் சொற்றொடர்களும் கருத்துக்களும் எண்ணிறந்தன உள்ளன. இவற்றை நோக்குங்கால், திரு. பிள்ளையவர்கள் இச்சிந்தாமணியின் காவிய நலத்தை நன்கு பயின்று தேர்ந்தவர் என்பது விளங்கத் தெரிகின்றது. திரு. பிள்ளையவர்களின் மாணாக்கரான திரு. அய்யரவர்கள் கூறுவதோ, திரு. பிள்ளையவர்களின் பாக்கள் விளக்குவதோ, இன்னது தான் உண்மை என்பதை அறிஞர்கள் ஆராய்ச்சிக்கு விட்டு விட்டு, இதனை விகடப் பத்திரிகையில் வரும் ஒருவகை விகடம் என அடியேன் கருதி ஒதுக்கிவிட்டு மேற்செல்ல விரும்புகின்றேன்.

இதுகாறும் கூறியவாற்றால், மண்ணாளும் வேந்தனொருவன் மனக்கண்ணையும் கருத்தையும் கவ்வி மிக்க இன்பூட்டிய மாண்புடையது இச்சிந்தாமணி யென்றும், இதனுடைய இப்பண்பே, சேக்கிழார் பெருமான், திருவருள் துணைபெற்று, தெய்வத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளுதற்குக் காரணமாயிருந்த தென்றும் நாம் தெளிய அறிகின்றோம்.

சமயக் கருத்துக்களை யுணர்த்தும் அறிவு நூல்கள், பிற சமயக் கருத்துக்களையும் எடுத்தோதி ஆராய்ந்து உண்மை துணியும் கடப்பாடுடையவையாகும். பிற சமயக் கருத்துக்களை நிரல்பட எடுத்தோதாது, பருந்தின் வீழ்ச்சி போல், ஆங்காங்கு ஒன்றிரண்டை எடுத்தோதி மறுத்துத் துணிபு காண்பதால், கற்பார்க்குப் பொருளுணர்ச்சி இனிது நிகழாதாம். ஆதலால், தம் சமயக்கருத்துக்களை வற்புறுத்தும் பகுதியைச் சுபக்கம் எனவும், பிற சமயக் கருத்துக்களைத் தொகுத்தெடுத்து ஓதும் பகுதியைப் பரபக்கம் எனவும் வகுத்துரைப்பது சமய அறிவு நூல்கள் மரபாகும். நம் சைவத்திலும், ஆசிரியர் அருணந்தி சிவனார், சிவஞான போதத்துக்கு நல்லுரையாக அருளிய சிவஞான சித்தியாரைப் பரபக்கமெனவும் சுபக்கமெனவும் வகுத்து, பரபக்கத்தில், உலகாயதம் முதலிய பலவேறு சமயக் கருத்துக் சமயகளை விரியக்கூறி மறுத்தலைக் காண்கின்றோம்; சுபக்கத்தில், சித்தாந்த சைவத்தின் உயிர் நிலையாக விளங்கும் சிவஞானபோதத்தின் உரையினை விரித்தோதுவதையும் காண்கின்றோம். சங்கற்ப நிராகரணமும் இப்பெற்றியதேயாகும். சைவசமய அறிவு நூல்களைச் சைவர் அனைவரும் தவறாது கற்றுத் தெளிதற்குரியராதலால், அவர்கள். பரபக்கம் சுபக்கம் இரண்டும் கற்றுத் தெளியும் கடன்மை யுடையரா கின்றனர். பரபக்கத்தில் காணப்படும் பல்வேறு சமயங் களுள் சமண் சமயமும் ஒன்று. ஆகவே, சமண் சமய நூல்களையும் படித்தலும், படிப்போர் எளிதிற் பெற்றுப் படிக்குமாறு அச்சிட்டு வழங்கலும் சமயப்பணியாகின்றன. ஆதலாற்றான், நம் சைவ சித்தாந்த சமாசம், இன்று, சீவக சிந்தாமணியை அச்சிட்டு எளிய விலைக்கு வழங்குகின்றது. இங்கே கூடியிருக்கும் சைவ நன்மக்களாகிய உங்களை, நம் சமாசம் புரியும் இச்சமயப் பணியை ஊக்குமாறு, சமாசத்தின் சார்பாக வேண்டுகின்றேன்.

தேவர் சிந்தாமணியைப் பாடிய காலத்தே நம் தமிழ் நாட்டில் வைதிக சைவம் உயர்நிலையில் இருந்ததென்றும், அவ்வைதிக நெறிபற்றிய புராணவரலாறுகள் பல்கிப் பயிலப்பெற்று வந்தனவென்றும் அடியேன் முன்பே கூறியுள்ளேன். அவர் காலத்துக் கல்வெட்டுக்களில் வைதிக சைவப் பாண வரலாற்றுக் குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. எனவே, கற்றறிந்தார் கூட்டத்தில் வைதிக சைவ வரலாறுகள் மிகுதியும் பயின்றிருந்தமையின், அவர் கூட்டத்துக்கு அறிவுவிருந்து நல்கும் உரவோர் இவ்வரலாறுகளைப் பெரிதும் பயன் கொண்டனர். தேவரும் தம் சமணசமயநெறி பற்றியே இவ்வினிய காவியத்தைச் செய்தாராயினும், எந்தை சிவபரம் பொருளை விதந்து பலவிடங்களில் பாராட்டி உவமப் பொருளாகக் காட்டி நம்மை மகிழ்விக்கின்றார்.

சிவபெருமானைக் குறித்து ஓதலுற்ற தேவர்,
முக்கண் சினந்திகழ் விடையான்' (சீவக. 188),
கொய்ம்மலர்க் கொன்றைமாலைக் குளிர்மதிக் கண்ணியான்” (சீவ. 208),
போகமீன்ற புண்ணியன்'(சீவ. 362),
வார்சடைய வள்ள ல்” (சீவ. 598), " காரியுண்டிக் கடவுள்'' (சீவ. 670),
கனையெரி அழலம்பெய்த கண்ணுதல் மூர்த்தி'' (சீவ. 2249),
பிறையணி கொண்ட அண்ணல்” (சீவ. 2537)
என்பன முதலிய இனிய சொற்றொடர்களால் பாராட்டி யுரைக்கின்றார். இறைவன் பங்குறையும் தேவியாரை,
"செல்வி” (188) என்றும்,
கணிமலை யரையன் மங்கை மைம் மலர்க்கோதை'' (208)
என்றும் அழகுறுத்துகின்றார்.

இவ்வாறே, முருகவேளையும் உரியவிடங்களில்,
குன்ற மார்பரிந்து வெள்வேல் குடுமிமா மஞ்சையூர்ந்து நின்ற பால்'' (சீவக. 286),
''கொழுங்கயற் கண்வள்ளி நலன் நுகர்ந்தான் அன்றே நறுந்தார் முருகன்'' (சீவக. 482),
"காமரை, அமரர் மேவரத் தோன்றிய அண்ண ல்'' (சிவ. 991),
''கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவுள்'' (சீவக. 1971),
முருகவேள்'(சீவ. 1: 9 - 13),
வள்ளல் மாத்தடிந்தான்” (சீவ. 102!)),
"பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்”
என்றெல்லாம் பாராட்டியிருக்கின்றார். இவ்வாறே திருமாலையும் ஏற்றவிடத்துச் சிறப்பியாது தேவர் ஒழிந்தாரில்லை.

மேலே கூறிய வண்ணம் சிவபெருமான் முதலிய இறைவர்களை எடுத்தோதிய திருத்தக்க தேவர், சிவபெருமான் இறைவியோடு ''நல்ல போகத்தனாய் விளங்கும் செய்தியை, சீவகன் தந்தையான சச்சந்தன் தன் மனைவி விசயையை மணந்து இன்புற்றிருந்த செய்திக்கு உவமமாக வைத்து,  "இனம் தமக்கு எங்குமில்லார் இயைந்தனரென்ப, முக்கண் சினந்திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்த தொத்தே"  என்றும், சீவகன் கந்துக்கடன் மனையில் வளர்ந்த காலையில், அவன் வளர்ச்சிக்கு உவமமாகத் திருமால் கண்ணனாய் இடையர் மனையில் மறைவாக வளர்ந்த செய்தியைக் கூறுவார், அத்திருமால் இறைவன் முப்புறம் எரித்தபோது அவர் வில்லிற்குக் கணையாகிய வரலாற்றை விதந்து, “போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையேபோல், மாகம் ஈன்ற மாமதியன்னான் வளர்கின்றான்' என்றும் கூறுகின்றார். இறைவன் தேவியொடுகூடி உயிர்கட்குப் போகமும் இன்பமும் நல்கும் அருள்வள்ளல் எனத் திருத்தக்க தேவர் கூறும் இச்செய்தி, நம் ஞான சம்பந்தப் பெருந்தகையார் அருளிய,

போகமும் இன்பமு மாகிப் போற்றி யென்பாரவர் தங்கள்
ஆகமும் உறைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமும் திங்களும் சூடி நன்னுதல் மங்கை தன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடியாரே''
என்றும்,
சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடும் கூடி;
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன் உறைவி டம் திரு வல்லமே''

என்றும் வரும் திருப்பாட்டுக்களை நினைவுறுத்துகின்றன.

மேலும், "போகம் ஈன்ற புண்ணியன்” - தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக்கெல்லாம் போகத்தை உண்டாக்கின புண்ணியன்; புண்ணியன் என்றார். திரிபுரத்தையறித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின் என ஆசிரியர் நச்சினார்க்கினியார் உரை கூறுகின்றார். இதனை எழுதுங்கால், நச்சினார்க்கினியார் உள்ளத்தில், நாவரசர் வழங்கியருளிய,

சீரார் முடிபத் துடையான் தன்னைத்
தேசழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்
பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் தன்னைப்
போரார் புரங்கள் புரள நூறும்
புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
ஆரானை ஆருரில் அம்மான் தன்னை
அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே''

என்ற திருத்தாண்டகத்துள், "போரார் புரங்கள் புரள நூறும் புண்ணியனை என்ற தொடர் நின்று உரிய பொருளை வழங்கியிருப்பது புலனாகின்றது.

சீவகன் கட்டியங்காரனை வென்று, இலக்கணையை மணந்து இன்புற்றவன், நகரின்கண் உலாவருங்கால், அவனைக்கண்ட மகளிருள் வேட்கை பிறந்த மகளிர் சிலர் செயல் கூறலுற்ற தேவர், சிலர் சீவகன் நகருலா வரலைக் காண்டற்குத் தம்மைக் கைபுனைந்து கொள்ளலுற்று, ஒருபாதி முடிந்ததும், சிலர் சீவகன் வந்தான் என்று கூறிவிடவே, அவ்வளவில் அவனைக் காண்டற்கு ஓடிவர, ஒருபாதி கைபுனையாமையின் நாணி அதனை மறைத்துக்கொண்டு நின்றனர்; அவர் நின்ற தோற்றம், உமையமர்ந்து விளங்கும் இறைவன் போல்கின்ற தென்பார்,

"குறையணி கொண்டவாறே கோதைகால் தொடராடிச்
சிறையழி செம்பொன் உந்தித் தேன்பொழிந் தொழுக ஏந்தி,
பறையிசை வண்டுபாடப் பாகமே மறையநின்றார்,
பறையணி கொண்ட அண்ணல் பெண்ணொர்பால் கொண் தொத்தார்

என்று கூறியுள்ளார். இதன்கட் காட்டிய பிறையணியும் பெண்ணொரு பாகமும், நாவரசர், திருவையாற்றில் கண்டு ஓதியருளிய திருப்பாட்டாகிய,

"மாதர் பிறைக் கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடி, போதொடு
நீர்சுமந்தேத் திப் புகுவா ரவர்பின் புகுவேன்

என்பதனை நினைவுக்குக் கொணர்கின்றன. இவ்வாறு நால்வர் வழங்கிய திரு முறைத் திருப்பாட்டுக்கள் பல இச்சிந்தாமணியைப் படிப்பவர் மனத்தே ஆங்காங்கே தோன்றி இன்புறுத்துகின்றன. இவ்வாறே, வீரச்சுவை நிகழுமிடத்தும், அஃதாவது, கட்டியங்காரன் சீவகன் பால் தீராச் செற்றங்கொண்டுள்ளான் என்ற செய்தியை நாகமாலை யென்பாள் கந்துகடனுக்கு ஓலையெழுதித் தெரிவித்த விடத்தே, "வெம்பினான் காரி யுண்டிக் கடவுளினிற் கனன்று வேந்தன்'' என்று எழுதியுள்ளாள்; இத்தொடர், * மலைபடுகடாத்து, “பேரிசை நவிரம் மேஎ யுறையும், காரியுண்டிக் கடவுள தியற்கையும்' (84 - 5) என்ற அடிகளை நினைப்பிக்கின்றது. மதனன், மன்மதன் என்ற இருவரும் விசயன் என்பவனுடன் பொருது பட்டழிந்தபின், சீவகன் தோழனான புத்திசேனன் தன்னை எதிர்த்த வேந்தரொடு போர் செய்தான் என்பார், “வளை கலத் திகிரித் தேர்மேல் மன்னரைக் குடுமி கொண்டான்'' என்றவர், அவன் வெகுண்டு நின்ற நிலையை விதந்து, “கனையெரி அழலம் பெய்த கண்ணுதல் மூர்த்தி யொத்தான்” (2249) என்கின்றார். "அழலம்பு ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே''  எனவரும் திருநெறித் தமிழை இவ்வடி நினைப்பித்தல் காண்க.

* இம்மலைபடுகடாம், ''நல்லிசைக்கடாம் புனைநன்னன் வெற் பில்” பல்லவ வேந்தர் தம்'வாகையும் குரங்கும் விசையமும்'' தீட்டினர் எனவரும் திருவண்ணாமலைக் கல்வெட்டொன் (A. R. No. 430 of 1902. No. 69 of கா றால், குறிக்கப் பெறுகின்றது.

இவ்வண்ணம் சைவத் திருமுறைப் பாட்டுக்களை இச்சிந்தாமணிச் செய்யுட்கள் ஆங்காங்குப் படிப்போர் உள்ளத்தே நினைவு கூர்வித்தலால், நாம் ஓர் உண்மையினை உணர வேண்டியவர்களாகின்றோம். தேவர் காலத்தே, சிவபரம் பொருளின் வரலாறு கூறும் சைவப் புராணங்கள் தமிழ் மொழியில் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம்; தேவாரத் திருமுறைகளே அவ்வரலாற்றினை மக்கட்குச் சுருக்கமாகக் குறிப்பிக்கும் நிலையில் இருந்தன. அவையே, தேவர் தோன்றுதற்குச் சிறிது ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகட்குமுன் மழுங்கியிருந்த சிவநெறியை மேம்படுத்தி நிலை நாட்டியதோடு, உயர்ந்தோங்கியிருந்த சமண் சமய நெறியை வீழ்ந்தாழ்ந்துபடச் செய்தன. தம் சமயத்தின் சீரைக் குலைத்துச் சைவத்தை உயர்த்தி நிறுவிய இத் திருமுறைகளை, விரிந்த மனப்பண்பு சான்ற தேவர், பன்முறையும் ஒதிப்பயின்றிருத்தல் வேண்டும். அத்திருமுறை கட்குரிய வன்மை காண்டற்காகவேனும் உண்மையாக அவர் ஊன்றிப் பயின்றிருத்தல் வேண்டும். வீழ்ந்த சமயத்தை நன்னிலைக்குக் கொணர முயல்வோர், அதன் வீழ்ச்சிக்கு ஏதுவாகிய அகக்காரணம், புறக்காரணம் இரண்டினையும் ஆராய்தல் வினைத்தூய்மையாகும். சைவத் திருமுறை புறக்காரணமாதலின், இதனை அவர் நன்கு பயின்றிருப்பர் என்பதில் ஐயமில்லை.

இதனை உண்மையென நிலை நாட்டற்கு வேறு கருவி வேண்டா; தேவர் பாடிய சிந்தாமணியே போதிய சான்று பகருகின்றது. 'பூவார் கொன்றை” யென்று தொடங்கும் சீகாழித் திருப்பதிகத்தில், ஞானசம்பந்தப் பெருந்தகையார், "மாடே ஓதம் எறிய வயற் செந்நெற் காடேறிச் சங்கீனும் காழியார்'என்ற விடத்துச் செந் நெல் வயலைச் செந்நெற் காடு என்று அருளினாகள்; இதனைத் தேவர் கண்டு வியந்தெடுத்து, "தேய் பிறை இரும்புதம் வலக்கை சேர்த்தினார், ஆய்செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே'' (சீவக. 55) என்றனர். பிள்ளையார் திருப்புறம்பயத்துத் திருப்பதிகத்துள், “குருந்தொசி பெருந்தகையும் நீயும் பிரிந்தனை புணர்ந் தனை” என்றாராக. தேவர், அதன்கண் உள்ள வினைத் தொகையை விரித்து, "விரிபுனல் தொழுநையாற்றுள், கோல்நிற வனையினார்க்குக் குருந்தவன் ஒசித்த தென் றான்” (சீவ்க். 209.) என்றார். தேவர், சீவகன், நிரை கவர்ந்த வேட்டுவரை வெருட்டி யோட்டிய செய்தி சாறு மிடத்தே, “விளியும் சங்கும் வீணையும் பறையும் கோடும் கடத்திடை முழங்கக் காருங்கடலு மொத்தெழுந்த வன்றே. (சீவ. 447) என்றது, ஞானசம்பந்தப் பிள்ளையார், “வேத மோதி, யென்று தொடங்கும் திருப்பழனப் பதிகத்து, “வீளைக் குரலும் விளிசங்கொளியும் விழவின் ஒலியோவா, மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிள் எய்தார்' என்ற திருப்பாசுரத்தைக் காட்டுகின்றது. "கொட்டமே கமழுங் குழலாளொடு கூடினாய்” (திருஞான. கோயில். ஆடினாய்) எனப் பிள்ளையார் அருளினாராக. தேவர், "கொட்டமே கமழும் குளிர் தாமரை (சீவக. 2575) என்றனர்.

நாவரசர் வழங்கியவற்றுள், “நீறேறு" எனத் தொடங்கும் திருமழபாடித் திருத்தாண்டகத்துள், ''விரிசுட ராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய், விழவொலியும் வேள் வொலியு மானான் கண்டாய்” (10) என்றவிடத்து வரும் விழவொலியும் வேள்வொலியும், தேவர் பாடிய சிந்தா மணிக்கண், “விழவும் வேள்வும் விடுத்த லொன்றின் மையால், புகழலாம் படித்தன்றிது பொன்நகர்'" (138) என வருகின்றன. "விளங்குதோள் நலார்முள்கு மாய ரும் மொய்ம்பொ டேகினார்" (சீவ. 420) எனவரும் இதன் கண் முள்குதல் என்ற அரியசொல், "முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்" (9) எனவரும் நாவரசர் அருளிய திருவொற்றியூர், 'வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன், என்று தொடங்கும் திருநேரிசையில் விளங்கி நிற்கின்றது. “சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தி னானை” (நாகை. தாண். பாரார் 4) என நாவரசர் நவின்றருளினாராக. தேவர், “சின்ன மாமலர்க் கோதைத் தீஞ்சொலார் போற்றிசைப்பத் திருமால் போந்தான் (2369) என்றார். “வேனலானை யுரித்துமை யஞ்சவே, கானலானைக் கண்டீர் கடவூரரே” (கடவூர். குறுந். மலைகொள். 3) என நாவரசர் வழங்கியது,'வேனல் மல்கி வெண்தேர் சென்ற வெந்நிலம், பானல் மல்கி வெண்பா லன்னம் பாய்ந்தவே " (2578) எனச் சிந்தாமணிக்கண் இடம் பெறுகிறது.

சீவகன் கனகமாலை யென்பாளை மணந்து இனிதிருக்குங்கால், காந்தருவ தத்தையின் விஞ்சையால் அவளை யடைந்த நந்தட்டனை அவன் அவட்குக் காட்ட, கண்டு மகிழ்ந்த கனகமாலை, "எழுமையும் பெறுக இன்ன இளங் கிளைச் சுற்ற மென்றாள்.. (1730) என வரும் இச்சிந்தாமணி, சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்குருகாவூர்த் திருப் பதிகத்தில், "இளங்கிளை யாரூரன்' என்ற திருவாக்கில் அமைந்திருக்கின்றது. இவ்வாறே பதினொராந் திருமுறை யில் பல பாசுரங்கள் இச்சிந்தாமணியின் ஆக்கத்திற்குத் தேவர்க்கு உதவி செய்துள்ளன.

தேவாரத் திருமுறைகளிற் காணப்படும் அரிய சொற் பொருள்கள் பல, தேவரது சீவக சிந்தாமணிக்கண், உள்ளவாறே வந்துள்ளன. ஞானசம்பந்தப் பெருந்தகையார் தீர்த்தம் என்ற சொல்லை ஆகமம் என்ற பொருளில் வழங் கியதோடு, அது சமணர் கூட்டத்தில் வழங்குவது என்ற குறிப்பும் தோன்ற, திருக்கருகாவூர், "முத்திலங்கு" என்று தொடங்கும் திருப்பதிகத்தில், "போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள் சொல், தீர்த்தமென்று தெளிவீர் தெளி யேன்மின்'' என்று அருளுகின்றார்கள். அஃது இச்சிந்தா மணியில், "தீராவினை தீர்த்துத் தீர்த்தம் தெரிந்துய்த்து, வாராக் கதியுரைத்த வாமன் தான் யாரே” (1247) என்று வருகின்றது. திரிச்சிராப்பள்ளி ''நன்றுடையானை'' என்று தொடங்கும் திருப்பதிகத்தில்,

"கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரைநாளும் தலைவரல் லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும் வெள்ளை நிறமாமே''

எனவரும் திருப்பாசுரத்தின் ஈற்றடி, சீவகன் சுரமஞ்சரி கொண்ட கொள்கையைச் சிதைத்து மணந்து வருவதாகச் சூள் செய்யும் பாட்டின் சிந்தாமணியில்,

"வண்டுதேன் சிலைகொள் நாணா மாந்தளிர் மலர்க ளம்பாக்
கொண்டவன் கோட்டந் தன்னுள் கொடியினைக் கொணர்ந்து நீலம்
உண்டது காற்றி ஆண்பேர் ஊட்டுவல், உருவக் காமன்
கண்டபொன் படிவம் சார்ந்து கரந்திரு நாளை என்றான்''

எனவருகின்றது. மேலும், ஞானசம்பந்தர். “நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே” என்ற தொடர், நிலவரை நீலம் உண்டது வெள்ளை நிறமுமாமே என இயைந்து உம் மையை இசை நிறையாக்குகின்றது; அவ்வியைபு, சிந்தா மணியில், "நுண் துகில் வேதலஞ்சி நெருப்பகம் பொதிந்து நோக்கிக் கொண்டுபோய் மறையவைத்தால் கொந்தழல் சுடாதுமாமே" (1434) என்ற பாட்டில் அமைந்து கிடக்கின்றது. “வல்லோர் செதுமொழி சீத்தசெவி'' (கலி. 68) என்றுவரும் சொல், “செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தை கூர் மனத்தை யாகி," (சீவக. 1124) எனச் சிந்தா மணியிலும், "செதுமதித் தக்கன் வேள்வி செற்ற மறத்தினர், என ஞானசம்பந்தர் திருவாக்கிலும், “செதுமதிச் சமணர்' எனத் திருவிசைப்பாவிலும் வரக்காண்கின்றேம். செதுமொழி என்ற கலித்தொகை வழக்கினை மாற்றி வேறு சொற்களோடு இயைத்து வழங்குந்திறத்தை முதன் முதவாகப் பிற்காலத்தார்க்கு வழங்கிக் காட்டிய பெருந்தகை யாதலின், அதனை மேற்கொண்டே தேவரும் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறே, பிள்ளையார், ''எயில் மூன்றும் எரியுண்ணக் கணையல் செய்தான்” (கழுக்குன்றம் - 4) என்றும், “ஒருங்களி நீ இறைவா என்று உம்பர்கள் ஒலமிடக்கண்டு, இருங்களமார விடத்தை இன்னமுது உண்ணிய ஈசர்'  (கற்குடி - 4) என்றும் வருமிடங்களில் கணை விடுக்கான் என்பதைக் 'கணையல் செய்தான்'' எனவும். உண்ட என வரற்குரிய பெயரெச்சத்தை " உண்ணிய, எனவும் வழங்கிக் காட்டும் தலைமை, பிள்ளையார் அருளிய திருநெறித் தமிழில் சிறந்து நிற்றலை நாம் நன்கு காணலாம்.

இவ்வாறே, நம் நாவரசர் வழங்கிய சில அருஞ்சொற களைத் தேவர் தாமும் எடுத்தாண்டு நமக்கு அவற்றின் பொருளை உணர்த்துகின்றார். திருவாரூர், “குழல்வலம் என்று தொடங்கும் திருநேரிசையில் வரும், "தொழுதகம் குழைய மேவித் தொட்டிமையுடைய தொண்டர் அழுதகம் புகுந்து நின்றார்'  (3) என்பதில், தொட்டிமையென்ற சொற்குப் பொருள் விளக்குவாராய்த் தேவர், "காமன் தந்த தொட்டிமையுடைய வீணைச்செவிச் சுவையமிர்தம் என்றான்' (சீவக. 2047) என்று பாடுகின்றார். தொட்டிமை - ஒற்றுமை. துளங்குதல் என்ற சொல்லுக்கு நடுங்குதல், அசைதல் என்ற பொருளிருக்கக் கண்டிருக்கின்றோமே யன்றி, வணங்குதல் என்ற பொருண்மை பிற்காலத் தமிழ் நூல்களிற் கண்டதில்லை. வணங்குதல் என்ற பொருளில், முதலாவதாக, நம் சொல் வேந்தர், ''தொண்டா தொழுதேத்தும் சோதியேற்றார், துளங்கா மணிமுடியா தூய நீற்றார்'' (பந்தணை. தாண். நோ தங்கம். 5) என்று வழங்கியருளினர்; தேவர், “முனைவற்றொழுது முடி துளக்கி, முகந்து செம்பொன் கொளவீசி'' (2: 357) என்ற அவ்வணங்குதற் பொருளே வர அமைத்தோதினர். அரித்தல், 'சூட்டுதல்' என்ற பொருளில் நமைத்தல் என்றெம் தமிழ்ச்சொல் உண்டு. அதனை மக்கள் வழக்காற்றல் காண்டல் கூடுமேயன்றி, நூல் வழக்கில் காண்டலாம் இச்சொல்லை நம் நாவேந்தர், திருவாரூர் பொய்ம்மாயனும் திருத்தாண்டகத்து மூன்றாம் பாசுரத்தில், “நலம் விற் சிவனடியே யடைவேன் நம்மால் நமைப்புண்ணே கமைத்துநீர் நடமின்களே'  எனப் புண்ணியபா முதலியவற்றை விளித்துக்கூறி யருளுகின்றார்கள்.. சொல்லையே தேவர் சிந்தாமணியில், ''குஞ்சி நமைத்த பூந்தாமம் தோய நகைமுக விருந்து பெற்றான்'  (2839) என்று அமைத்துப் பாடுகின்றார். இனி,

வம்படுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்படுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்படுத்த தோர்கோல விடைமிசைக் கூர்மையோடு
அம்படுத்த கண்ணாளோடு மேவல் அழகிதே''

எனவரும் ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருப்பாசுரத்தையும்,

வம்புகொண்டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சேர்
கொம்பு கொண் டன்ன நல்லார் கொழுங்கயல் தடங்கண் போலும்,
அம்பு கொண் டரசர் மீண்டார் ஆக்கொண்டு மறவர் போனார்,
செம்பு கொண் டன்ன வில்சித் திருநகர்ச் செல்வ! என்றார். - சீவ. 439

என்ற சிந்தாமணிச் செய்யுளையும் எதுகையொன்றே பற்றி ஒப்பு நோக்குக; திருநாவுக்கரசர் பாடியருளிய திருமருகல் குறுந்தொகைக்கண் வரும்,

நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஒடும் மாலினோ டொண்கொடி மாதராள்
மாட நீன் மரு கற்பெரு மான்வரின்
கூடு நீஎன்று கூட லிழைக்குமே''

என்ற திருப்பாசுரப் பொருளையும், சிந்தாமணிக்கண், தேவர் குணமாலை யென்பாள் வாயில் வைத்து வழங்கும்,

"சென்றார் வரைய கருமம்; செருவேலான்
பொன் தாங் எணியகலம் புல்லப் பொருந்துமேல்
குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணல்மேல்
அன்றாங் கணியிழையாள் ஆழி யிழைத்தாளே''

என்ற செய்யுட் பொருளையும் வைத்து ஒப்பு நோக்குக. இவ்விருவகை ஒப்பு நோக்காலும், திருத்தக்கதேவர், சைவத்திருமுறை நூல்களை நன்கு ஓதிப் பயின்ற நற்பயிற்சி யுடையர் என்பது இனிது விளங்கும்.

இனி, திருவாசகம் திருவாய்மலர்ந்தருளிய மணிவாசகப் பெருந்தகை, ஞானசம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் முற்பட்டவர் என்பவரும், பிற்பட்டவர் என்பவரும் என ஆராய்ச்சியாளர் இருதிறத்தார் உளர். அவருள் முற்பட்டவர் என்போர் பெரும்பான்மையோர். அவரது திருவாசகம் தேவர்க்கு எவ்வளவில் உதவி செய்துளது என்பதைச் சிறிது காண்பாம். எந்தை சிவபரம்பொருளின் திருவடி ஞானத்தால் பெருகும் சிவபோகத்தை நுகர்ந்து இன்புறும் மணிவாசகப் பெருந்தகையார், அந்நிலையைத் தாமே வியந்து, ''நானார் அடியணைவான் ஒருநாய்க்குத் தவிசிட் டிங்கு, ஊனார் உடல்புகுந்தான் உயிர்கலந்தான் உளம் பிரியான்'' என்று கூறுமிடத்து "ஒருநாய்க்குத் தவிசு இட்டு'' என்ற கருத்தினையே தேவர் கட்டியங்காரன் கூற்றில் வைத்து, தன் அரசியலை ஏற்குமாறு சச்சந்தன் பணித்ததற்கு "வண்ணப் பூந்தவிசு தன்னை ஞமலிமேல் இட்டதொக்கும், கண்ணகன் ஞாலங் காத்தல் எனக்கு" (202) என்று கட்டியங்காரன் கூறுவதாக அமைக்கின்றார். வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதி கண்டாய்'' என்ற திருவாசகம். சீவக சிந்தாமணியில், நிரையிழந்த ஆயர் மகளிர் அழுத நிலையை யுரைக்கும் பாட்டில், ''வலைப்படு மானென மஞ் ஞையென.. அலைத்த வயிற்றினராய் அமுதிட்டார்'' (424) எனக் காணப்படுகின்றது. ''எங்கெழிலென் ஞாயிறு, என்னுமோர் அழகிய தொடர், “எங்கெழில் என் ஞாயிறு * எமக்கேலோர் எம்பாவாய்'' எனத் திருவாசகத்துள் வருவது நாமெல்லாம் நன்கறிந்த செய்தி; இதன் அழகினை யுணர்ந்து கொண்ட திருத்தக்க தேவர், தண்டாரணியத்துத் தவப்பள்ளியில் விசயையைக் கண்ட சீவகன் தோழர் அவட்கு அவன் வரலாறு கூறும் கூற்றில் வைத்து, "எங்கள் தமர் நம்பிக் கிவர்தோழர் என ஈந்தார்; எங்கெழில் என் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம்'' என்று மொழி கின்றார். நீத்தல் விண்ணப்பப் பகுதியில், நம் மணிவாசகப் பெருந்தகை.

* எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம்'' என நாவரசப் பெருந்தகையும் (அப்பனீ - தனித்தாண் - 2) வழங்கினர்.

மறுத்தனன் யான் உன் அருளறி யாமையின் என்மணியே
வெறுத்தெனை நீ விட்டிடுதி கண்டாய்; வினையின் தொகுதி
ஒறுத்தெனை யாண்டுகொள் உத்தரகோச மங்கைக்கரசே
பொறுப்ப ரன்றேபெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே"

என்றருளிய திருவாசகம் யாவரும் இனிது அறிந்த தொன்று; இதனைத் தேவரும் நன்கு பயின்றிருந்தார் என்பதற்குத் தக்க சான்றொன்று, சுரமஞ்சரி இலம்பகத்தில் வரும் பாட்டொன்றில் காணப்படுகிறது. ஊடலுற்ற சுர மஞ்சரியின் ஊடல் தீர்க்கும் சீவகன், ''சிலம்பின் மேல் சென்னி சேர்த்திச் சிறியவர் செய்த தீமை, புலம்பலர் பொறுப்பரன்றே பெரியவர் என்று கூறி, இலங்குவேற் கண்ணியூடல் இளையவன் நீக்கினானே'' (சீவக. 2088) என்ற விடத்து, “சிறியவர் செய்த தீமை புலம்பலர் பொறுப்ப ரன்றே பெரியவர்' என்ற தொடரும், “பொறுப்ப ரன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே'' என்ற மணிவாசகமும் சொல்லும் பொருளும் ஒத்து நிற்றலைக் காணலாம். பாண் பேசுதல், பாண் செய்தல் - என்றொரு செந்தமிழ்த்தொடர், பணிவு தோன்றப் பேசுதல் என்ற பொருளில் திருவாசகத்துள் வருகின்றது. ''காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும், பாணே பேசி யன்றென்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி” என்பது திருச்சதகம். உன்னை அடியேன் காணுமாற்றால் கண்டேனில்லை; கண்ட அந்நாளும், பேணு மாற்றால் பேணாது பிணங்கினேன்; எனினும், என்பால் நீ பாணேபேசி நின்பால் என்னைப்படுத்தாய்; இஃதென்னை? என்பது இதன் கருத்து. இனி, தேவர் சிந்தாமணிக்கண் டாண் செய்தலின் கருத்தை இவ்வகையினாலேயே பிணங்கி அகன்ற பெண்ணன்னத்தின் ஊடல் தீர்க்கும் சேவலன்னத் தின் செயலில் வைத்து,
செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலின் அகலச் சேவல், அயிர்ப்பதென்? நின்னையல்லால் அறியலேன் அன்றி மூக்கின், உயிர்ப்பதுன் பனியினாலே ஊடல் நீ என்று பல்கால், பயிர்ப்பறச் சிறகாற் புல்லிய பணிந்துபாண் செய்ததன்றே''
என்று கூறுகின்றார்.

இனி, இவ்வண்ணமே, தேவர் இச்சிந்தாமணியைச் செய்தற்குத் திருச்சிற்றம்பலக் கோவையாரைத் துணை கொண்டிருக்கும் பல பாக்களையும் எடுத்தோதிக் காட்டலுறின், காலம் மிக நீட்டிக்குமாதலின் ஒன்று காட்டி மேற் செல்லுகின்றேன். சீவகனுக்கு மக்கட்பிறப்பின் அருமை யுரைக்கத் துணிந்த மணிவண்ணன் என்னும் சாரணன்,  "பரவை வெண்டிரை வடகடல் படுநுகத் துளையுள், திரை செய் தென்கடல் இட்டதோர் நோன்கழி சிவணி, அரச, அத்துளை யகவயிற் செறிந்தென அரிதால், பெரிய யோனி கள் பிழைத்திவண் மானிடம் பெறலே''   (சீவக. 2749) என்ற சிந்தாமணிச் செய்யுளும், “வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான் நுகத்தின், துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத் தொல்லோன் கயிலைக், கிளைவயின் நீக்கி இக்கெண்டையங் கண்ணியைக் கொண்டு தந்த, விளைவை யல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக் கனவே’ (6) எனவரும் திருப்பாட்டையும் ஒப்ப நோக்கின் இவ்வுண்மை இனிது புலனாகும்.

சிந்தாமணியின் நந்தா நலத்தில் சோழவேந்தன் கருத்து ஈடுபட்டு அதனையே பெரிதென மயங்கிக் கிடப்ப, அவன் கருத்தை மாற்றிச் சீர்செய்வது குறித்துத் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் பெருமான் பாடியருளினார் என்றொரு வரலாறு உண்டென்பதனை அடியேன் முன்பே கூறினேன். சிந்தாமணி பாடிய தேவர் இடையிடையே தம் சமயக் கருத்தையும் நம் நாட்டவர் உள்ளத்தே விதைக்கின்றார் என்பதை யறிந்தே சேக்கிழார் முதலிய சான்றோர் அவனை விலக்கினரேயன்றி, அச்சிந்தாமணியின் தமிழ் நலத்தை ஒருபோதும் புறக்கணித்திலர். சேக்கிழார் பெருமான் பாடியருளிய பெரிய புராணத்தின்கண், சிந்தாமணியின் இனிய சொற்றொடர்களும் பிறவும் காணப்படுவதே இவ்வுண்மைக்கு ஏற்ற சான்றாகிறது. ''காய்த்த செந்நெலின் தாழ்கதிர் நெற்றிமேல், பூத்த முல்லையின் போது பொழிந்துக" (சீவக. 1777) என்ற சிந்தாமணி, திருநீல நக்க நாயனார் புராணத்தில், ''பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகய லுகளும், காய்த்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாட்டுச் சாத்த மங்கை'' (1) என வருகின்றது. “மழலைமென் கிளிமருதமர் சேக்கைய மருதம்'' (திருக் குறிப்பு - 10) என்றும், “விளங்கு நீள் விசும்பிடையூர் கோள், வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு' (குறிப்பு - 26) என்றும் வரும் பெரிய புராணக் கருத்துக்கள், சிந்தாமணிக்கண், ''கிளிவளர் பூமரு தணிந்து கேடிலா, வளவயல் வைகலும் இன்ன தென்ப" (சிந்தா. 64) எனவும், "ஏமாயிரத் திரட்டி மள்ளர், கட்டழற் கதிரையூர்கோள், வளைத்தவா வளைத்துக் கொண்டார்'' (1136) எனவம் வருகின்றன. இவ்வாறு ஒத்துவரும் பகுதிகளை நோக்கின் விரியுமென்று இம்மட்டில் நிறுத்துகின்றேன்.

சேக்கிழார் பெருமான் முதலிய சைவப் பெருமக்கள் புறச் சமயத்துச் சான்றோர் ஒருவரால் பாடப் பெற்ற தாயினும் இச்சீவக சிந்தாமணி, செந்தமிழ் வளமும் நலமும் சிறந்திருக்கும் சீர்மையறிந்து, இதனை அத்தமிழ் நலமே கருதிப் பயின்றதனே டமையாது, தேவர் மொழிந்த பொருளும், சொல்லும் ஏற்பன கொண்டு பொன்போல் போற்றி வந்த சிறப்பு, பின்வந்த சான்றோர் தாமும் விரும்பிப் பயின்று மேற்கொள்வதற்கும் ஏதுவாயிற்று. தமிழ்ப் புராணமும் சிற்றிலக்கியங்களும் செய்தற்கண், அவர்கள் இச்சிந்தாமணியை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். செந்தமிழ்ச் சைவப் பெருநூலாகிய சிவஞானபோதத்துக்குப் பேருரை வகுத்தருளிய ஸ்ரீமாதவச் சிவஞான முனிவரும் சிவஞானபோதப் பேருரையின்கண் இச்சீவகசிந்தாமணியை வேண்டுமிடத்து மேற்கோளாகக் காட்டியிருக்கின்றனரெனின், யாம் வேறு கூறுதற்கில்லை.

''ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு, அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே'''
என்பது சிவஞான போத எட்டாம் சூத்திரம். இதற்கு முன்னே செய்து கொண்ட தவத்தின் பயனாக, தனக்கு உண்ணின்று உணர்த்திப் போந்த முதல்வன், குருவுமாய் வந்து, ஐம்புல வேடரின் வளர்ந்து நின் பெருந்தகைமையை அயர்ந்தனை என்உணர்த்த, ஆன்மா, அவ்வேடரை விட்டு நீங்கி, அன்னிய மின்மையால், அம்முதல்வன் கழலை அடையும் என்பது இதன் கருத்து. இதன்கண் ''அன்னிய மின்மையின் அம் முதல்வன் கழல் செலுமே'' என்று சொல்லாமல், ஆசிரியர் மெய்கண்ட தேவர், அம்முதல்வன் என்ன வேண்டிய சுட்டினிடத்தே "அரன்'' என்று அருளியுள்ளார். அதனால், அரன் என்பது அவன் என்னும் சுட்டு மாத்திரையாய் நிற்பது விளங்கும். ஆகவே, இவ்விடத்தே நம் முனிவர் பெருமான், "அரன் என்பது சுட்டுப் பெயர் மாத்திரையாய் நின்றது'' என்று உரைத்தருளினவர். அதனோடு நில்லாது இதற்கு மேற்கோளாக, சீவகசிந்தாமணியின் பதிகத்திலிருந்து,  "கற்பாடழித்த கனமாமணித் தூண் செய் தோளான்' என வருவதனை எடுத்துக்காட்டி, "கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான் என்புழிப் போல' என்று ஓதுகின்றார். இவ்வாறே, உண்ணின்று இறைவன் உணர்த்த உணரும் உயிர், அவ்விறைவனைக் காணாது என்றற்கு ஆசிரியர் மெய்கண்ட தேவர்,

காட்டிய பெண்னே தனைக்காணா, கண்னுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன் தான் உள்ளத்தில் காண்''

என்றோர் அழகிய வெண்பாவினை ஒன்பதாம் சூத்திரத்துள் முதல திகரணத்தில் ஓதியருளியுள்ளார். இதற்குப் பேருரை வகுக்கப்போந்த முனிவர் பெருமான், "காட்டிய" என்பது தன்வினைப் பொருள்பட நின்றது; ''வாணிக மொன்றும் தேற்றாய்... என்புழிப்போல' எனச் சீவக சிந்தாமணிச் சொற்றொடரொன்றை எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறே அவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, காஞ்சிப்புராணம் முதலிய தாம் எழுதி யருளிய உரையினும் பாட்டினும் மிகப் பலவிடங்களில் இச்சிந்தாமணியைப் பயன் கொண்டிருக்கின்றனர். அவர் மாணவராகிய கச்சியப்ப முனிவர் தாம் பாடியருளிய தணிகைப் புராணத்தில் இச்சிந்தாமணியின் சொல்லும் பொருளும் மிகுதியாக எடுத்தாண்டிருக்கின்றனர். நாட்டுப் படலம், நகரப் படலம், பிரமன் சிருட்டிபெறு படலம், சீபரிபூரண நாமப்படலம், களவுப் படலம் ஆகிய இவற்றுள் சீவக சிந்தாமணியின் சொற்பொருள்கள் செறிந்திருக்கின்றன. அவற்றை ஈண்டு எடுத்தோதலுறின், இவ்விரிவுரை வரம்பின்றிப் பெருகும்.

இவ்வண்ணம் இம்முனிவர் பெருமக்களே யன்றி, குமரகுருபர சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள் முதலிய பெருமக்களும் இக்காவியத்தை நன்கு ஓதிப் பயின்று நா நலம் சான்றிருக்கின்றனர். சுருங்கச் சொல்லின், 'ஆறு நாள் கூடியொரு கொக்குப்பட்டது; அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில், சாறுவைத்த பின் வேதப் பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவப், பேருமுனிவரும் ஏற்றுக்கொண்டார்'' எனத் திரிகூட ராசப்பக் கவிராயர் கூறியது போல, இச்சிந்தாமணியின் செந்தமிழ் நலத்தைச் செவ்வே நுகர்ந்து தேக்கெறியாத சைவ நன் மக்கள் இத்தென் தமிழ் நிலத்தில் இலரென்றே திட்பமாய்க் கூறலாம். இதுகாறும் கூறியவாற்றால், சிந்தாமணியும் சைவமும் என்ற இப்பொருள்பற்றிப் பேசுதற்குச் சைவராகிய நமக்கு நல்ல உரிமையுண்டு என்பதும், புறச்சமய நூல்களாயனும் சிலவற்றைப் படிப்பதால் சைவர் தம் சைவநெறிக் கருத்துக களை இனிது தெளிதல் கூடும் என்பதும், இச்சீவக சிந்தாமணி சீவகன் என்னும் ஏமாங்கத நாட்டு அரசகுமரன் வரலாறு கூறுவதென்பதும், இச்சிந்தாமணியை எழுதிய திருதக்க தேவர் காலத்தே சைவம் உயர்ந்தும், சமணம் சீர்குறைந்தும் இருந்தனவென்பதும், தேவர் சைவத் திருமுறைகளை நன்கு ஓதித் தெளியப் பயின்றவரென்பதும், அக்காலத்தே அவரது நோக்கம், சீர்குறைந்திருந்த தமது சமய நுண்பொருள்களைத் தமிழகத்தே பரப்ப வேண்டுமென்றிருந்த தென்பதும், இதற்கு இச்சிந்தாமணிக்கண் உள்ள முத்தியிலம்பகமே செய்யுட்டொகையாலும், கருத்தாலும் போதிய சான்று பகருமென்பதும், இவ்வுண்மையைப் பண்டைச் சைவச் சான்றோர் இக்குறிப்பை இனிதே அறிந்திருந்தும், இந்நூலின் தமிழ் நலத்தை நன்கு நுகர்ந்து மகிழ்ந்த சிறப்பால், இதனைப் புறக்கணிக்கவில்லை யென்பதும், அக்காலத்தே நுண்ணுணர் வுடையாரன்றிப் பிறர் தாமே அறிந்து கோடற்குரிய எளிய சமய நூல்கள் அத்துணை பயில வழங்காமையின், நாவரசர் முதலியோர் சமண சமய நூல்களைக் கற்கத் தொடங்கினர் என்பதும், சோழவேந்தன் இந்தச் சிந்தாமணியின் சுவையில் கருத்து ஈடுபட்டிருந்தமையின், அவன் கருத்தைமாற்றச் சேக்கிழார் பெருமான் முதலியோர் முயன்று திருத்தொண்டர் புராணத்தை எழுதியருளினர் என்பதும், சமண் சமய நூல்கள் சைவர் பரபக்க நூலாகக் கருதிக்கற்றற்கு ரென்பதும் தாம் சிந்தாமணி பாடிய காலத்தே மிக்க சிறப்புற்றிருந்தவை சைவத் திருமுறைகளே யாதலின், தேவர் இவற்றை நன்கு பயின்று அவற்றுட் காணப்பட்ட சொல்லும் சொற்றொடரும் பிறவும் தாம் பாடும் காவியத்தில் அமைத்துக் கொண்டனர் என்பதும், சில அரிய சொற்களைத் தாமே இனிது பொருள் விளங்க அமைத்துக் காட்டினரென்பதும், தேவாரம் திருவாசகம் என்ற இவற்றின் அரிய சொற்றொடர்களே மிகப் பல்கியிருக்கின்றன என்பதும், இவர் பாடிய சீவக சிந்தாமணியைச் சேக்கிழாரும் இனிது பயின்று தமது காவியத்தில் அமைத்துக் கொண்டுள்ளனர் என்பதும் அவருக்குப் பின்பு போந்த முனிபுங்கவர்களும் இச்சீவக சிந்தாமணியை மேற்கொண்டு, தாம் இயற்றிய பாட்டினும் உரையினும் எடுத்தாண்டிருக்கின்றனரென்பதும், மாதவச் சிவஞானமுனிவர், தாம் இயற்றிய சிவஞானப்போதப் பேருரையின் கண்ணும் இச்சீவக சிந்தாமணியை மேற் கொண்டுள்ளனர் என்பதும் பிறவுமாகும்.

பெருமக்களே, இறுதியாக ஒன்றுகூறி இச்சொற் பொழிவை முடிக்கின்றேன். இச்சீவக சிந்தாமணியின் தொடக்கத்தே ஏறக்குறைய நூறு பாட்டுகளை ஒரு புதிய யாப்பு வகையில் தேவர் தொடங்கி யிருக்கின்றார். கடவுள் வாழ்த்து முதலாகத் தொடங்கும் பாட்டு விருத்தக் கலித்துறையென அதன் உரைகாரரால் கூறப்படுகிறது. யாப்பியலில் இப்பகுதிக்கு எடுத்துக்காட்டி வழங்கியவர்களும் இச்சிந்தா மணியின் முதற் செய்யுளையே காட்டி யிருக்கின்றனர். இப்பாவினத்தை முதன் முதலாகத் தமிழுலகில் வழங்கியவர் திருஞானசம்பந்தப் பெருந்தகையாவர். "வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் திருப்பாசுரத்துள், வருவனவற்றுள்,

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குர்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இரறையே வந்து சார்மின்களே''

என்பது ஒன்று. இஃது அடிதோறும் ஐந்து சீர்பெற்று விருத்த வோசை பெற்று வந்தமையின் விருத்தம் கலித்துறை எனப்படுவதாயிற்று. இதனையே தேவர் மிகவும் விரும்பித் தாம் பாடிய இச்சீவக சிந்தாமணியிற் பெரிதும் பாடியுள்ளார். சீவக சிந்தாமணி பதிகத்துள் முதற் பாட்டு,

'மீனே றுயர்த்த கொடிவேந்தனை வென்ற பொற்பின்
தானே றனையானுளன் சீவக சாபி யென்பான்;
வானேற நீண்ட புகழான் சரிதம் இதன்னைத்
தேனூற நின்று தெருண்டடாரவை செப்ப லுற்றேன்''

என வருகின்றது. இவ்வாறு வருவன மிகப்பல என்று முன்பே கூறியுள்ளேன்.

இதனால், சீவகசிந்தாமணியை யாத்த திருத்தக்கதேவர். சீவகன் கதையைத் தம் சமய நூல்களிலிருந்து கொண்டாயினும், அதனைத் தமிழில் உரைக்குமிடத்து, அதற்குத் துணையாகச் சைவ நூல்களில் காணப்படும் சொல்லும், சொற்றொடரும், யாப்பு முறையும் என்ற இவற்றைப் பெரிதும் மேற்கொண்டனர் என்பது இனிது விளங்கும். இது குறித்தே அடியேன் "சீவக சிந்தாமணியும் சைவமும்” என்ற பொருள் பற்றிப் பேச முற்பட்டேன்.

இதுகாறும் யான் பேசிய இவ்வனைத்தையும் அமைதியுறக் கேட்டுச் சிறப்பித்த உங்கள் அனைவர்க்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, என்போன்றாரை இத்துறையில் இயக்கிப் பணிகொள்ளும் இச் சைவ சித்தாந்த சமாசத்திற்குப் பொதுவாகவும், சிறப்பாக இதன் தலைவர் அமைச்சர் முதலியோர்கட்கும் என் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு என் சொற்பொழிவை இம்மட்டில் நிறுத்திக் கொள்ளுகின்றேன்.

சித்தாந்தம் – 1942 ௵ - ஏப்ரல், மே, ஜுன் ௴


No comments:

Post a Comment