Saturday, May 9, 2020



ஊழ்.

ஊழ், இதுபால், முறை, உண்மை, தெய்வம், நியதி எனப் பல பொருள்படும் – இது
      விந்துவின்மாயையாகி மாயையினவ்வியத்தம்
      வந்திடும் விந்துத்தன்பால் வைகரியா திமாயை
முந்திடுமராகமா தி முக்குணமா திமூலந்
      தந்திடுஞ்சிவனவன்றன் சன்னி திதன்னிலன்றே."

என்றபடி, காலதத்துவத்திற்குப் பின் தோன்றிய நியதிப் பொருள். இந்நியதி ஓர் ஆன்மாசெய்த நல்வினை தீவினைகளாகிய இருவினைகளின் பயன்களைச் செய்த அவ்வான்மாவையே சென்றடையச்செய்து அவ்வப்பயன்களை அருட்சத்தியின் ஆணையின் வழிமுறையே ஊட்டுவிப்பதோர் சடப்பொருளாகும். அவ்வாறு பயன்களை ஊழ்ஊட்டுவிக்குங்காலத்து அதுசெய்த ஆன்மாவையே தேடிச்செல்லும் என்பதும், தேடிச்செல்வதுடன் செய்த வினையின் பயன்கள் குறையாமலும், மிகாமலும், முறைபிறழ்ந்து வாராமலும் இருக்கும் என்பதை,

பல்லாவுளுய்த்து விடினுங்குழக்கன்று
வல்லதாந்தாய் நாடிக்கோடலை
தொல்லைப்பழவினையு மன்னதகைத்தே
தற்செய்தகிழவனை நாடிக்கொளற்கு.''
சிறுகாபெருகா முறைபிறழ்ந்து வாரா 
உறுகாலத்தூற்றாகா வாமிடத்தேயாகும்
சிறுகாலைப்பட்ட பொறியுமதனால்
றுகாலத் தென்னைபரிவு.''
 
என்னும் பிறமதத்தவர்கள் செய்யுள்களே நிலை நிறுத்தும். ஆயின் இதனை ஒருசாரார்

    "ஊழிற்பெருவலியாவுள மற்றொன்று
    சூழினுந்தான் முந்துறும்.''

என்னும் பெருநாவலர் வாக்கை மேற்கொண்டு, ஊழேயாவற்றிற்கும் முதலாகும், இறைவன் என்பதும் அவன் ஆணையின் வழி ஊழ், விளையின் பயன்களை ஊட்டுவிப்பதென்பதும் வேண் டுவதில்லை யென்பர் - அன்றியும் அவர்,
"வாழ்பரனாலென்மறை நெறிஞானமதனாலென்
      கேள்விகளாலென்கிளர் மனுவாலென்கிளையாலென்
      வேள்விகளாலென் விண்ணவரா லென்விளைவெல்லாம்
      ஊழ்வினைதானே தருதலினூழே யிறையென்றான்.''
    என்றபடி இறைவன் மாத்திரமன்று. வேதநீதியாலாவது யாது, ஞானாதியோக நெறிகளாலாவது யாது, கேள்விகளாலாவதுயாது விஞ்ஞானாதி நீதிகளாலாவது யாது, வேதாந்தாதிகளா.லாவது யாது, தந்தைதாய் தமர்தாரம் மகவு எனும் சுற்றத்தாராலாவது யாது, தீர்த்தயாத்திரை முதலியவற்றாலாவது யாது, எல்லாம் வினைக்கீடாகையால் எல்லாவரவும் போக்கும் வினையின் பயனேயாகும் என்பர்,
     
இவையன்றியும், உலகோர் தமக்கொன்று நிகழுங்காலத்து என்விதி, என்கன்மம், என்று கூறலாலும், நன்மை தீமையாவற்றிற்குங் காரணமாயிருத்தலாலும், ஒன்று நாம் எண்ண அது மற்றொன்றாய் முடிதலாலும், கன்மமே பிரமம் என்பர் மேலும் –

      வினைப்பயனை வெல்வதற்கு வேதமுதலாம்
      அனைத்தாய நூலகத்துமில்லை - - நினைப்பதெனக்
      கண்ணுறுவதல்லாற் கவலைபடேல் நெஞ்சமே
      விண்ணுறு வார்க்கில்லைவிதி.''
     
என்றுபெரியார் கூறியிருத்தலால், ஊழேகர்த்தா, ஊழே சஞ்சித, ஆகாமிய, பராரத்தமாய் விரிந்து அநந்தபோகங்களைத் தந்து, போக்கியப் பொருள்களாய் நின்று, பின் தான் பக்குவப்பட்டுத் தன்னில்லயமாவதே முத்தியென்பர் - இவ்வூழ்வாதிகளின் கொள்கை யிவ்வாறு இருக்க, மற்றொருசாரார் ஊழே எல்லாமாயின்

      முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை
      இன்மை புகுத்திவிடும்."

தெய்வத்தானாகா தெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.''

என்ற புத்தி போதிப்பிற் கென் செய்வது. முயற்சி ஒன்றினாலேயே எதையும் பெறுதல் கூடும், ஊழ் என்பது ஒன்றுவேண்டாவென்பர். ஏனெனில் எச்சமயத்துத் தோன்றிய பெரியோரும் தாம்கொண்ட கொள்கை நிறைவேறும் வண்ணம் முயற்சியா திருந்ததில்லை. ஊழே எல்லாம் என்று இருந்திருப்பரேல், அருமகள் கூந்தலை யரிந்தும், அன்புடைமனைவியை யீந்தும், தந்தையைத் தடிந்தும், மைந்தனைக் கொன்றும், தலைதனை மோதியும், வயிற்றினைக்குத்தியும், முழங்கையைத்தேய்த்தும், ஊட்டியையரிந்தும், கண்ணினையிடந்தும் நின்றதென்னை என்பர். இவ்விருவாதிகளும் ஊழின் உண்மை கண்டிற்றிலர் ஆவர். எவ்வாறு எனின்விவகரிப்பாம்.
   
ஊழ் என்பதோர் சடப்பொருள். இது இறைவன் பரிக்ரகசத்தியாகிற அசுத்தமாயையின் பின் தோன்றிய நியதியே யன்றி வேரன்று. அன்றியும் ஊழ் என்பதின் பொருள் அளவையென்பதேயாகும். அளவையாகிய இச்சடப்பொருள் எவ்வாறு இறைவனாகும். ஆனால் இவ்வூழ் உண்டென்பதற்கு ஊழின்காரியத்தை நோக்கிக் காரணம் நித்தியம் எனக்கொள்ளப்படுதலால், மானதப்பிரத்தியட்சமும், புகையைக்கண்டு நெருப்பை அநுமித்தல்போல இதன்செய்கைகளைக் காணலால் அநுமானமும், நூல்கள் எல்லாம் ஊழ் என்பதொன் றுண்டு என்றுணர்த்தலால் ஆகமப்பிரமாணமும் ஆகமூன்று பிரமாணங்களும் கூறுதல் அமையும். மேலும்,
   
உருவப்பொருளும், அருவப்பொளும் நித்தியம் அல்லையாயினும், இவ்வூழிற்குக் காரணமாய அசுத்தமாயை இறைவனது சத்தியாகிய குண்டலியிடத்து லயித் திருத்தலால் நித்தியமும் ஆகும். பிரமாணங்களுக் குட்பட்டலும் நித்தியமானதும் ஆக ஊழ் இருக்கினும் ஊழ்வாதிகள் கூறுதல் போல் எதையும் தானே செய்ய இவ்வூழாலாகாது. என்னை? காலாதிகள் சிருட்டி, திதி, சங்காரமாகிய முத்தொழில்களை எவ்வாறு செய்கின்றனவோ அவ்வாறு சடப்பொருளாகிய ஊழும்செய்யும் எனின், அறியாது கூறினாய்; சடமாகிய காலமும் இறைவனது சத்தி சங்கற்பித்த வழி மாயையினிடமாக முத்தொழில்களுக்குள் காலவேற்றுமை செய்யமுடியும். அது எவ்வாறு எனின் ஒருவன் உட்கொண்ட உண்பன தின்பனவாகிய உணவாதிகளும், பேதியாதி ஒளஷதங்களும், உயிரோடு கூடிய உடலுக்கே புஷ்டியும், நோய் நீக்கமும் செய்யவல்லவேயன்றி உயிர் நீங்கிய உடலுக்கு ஆகாராதி புஷ்டியையும் ஒளஷதாதி நோய் நீக்கத்தையும் செய்யல் ஆகாது போல். அவ்விதமே சடமாகிய இவ்வூழும், மாயை பின் வழிநின்று, நிமித்தகாரணனாகிய இறைவனது, அருட்சத்தியின் ஆணையின்படி உயிர்களுக்குப் போகத்தைப் புசிப்பிக்கும். ஆனால் நீர் மேற்கூறிய உவமை ஜடப்பொருளுடன் உயிர்ப் பொருள் நின்று இயக்குவதொன்றாகும். ஊழோ சடப்பொருள், மாயையும்சடம். இருசடமும் ஒன்றாய்ச் சேர்ந்து எவ்வாறு ஒன்றைச்செய்யும் எனின், இரும்பின் முன்னே காந்தத்தை ஒருவன் காட்டப்புகின், எவ்வாறு இரும்பாகியசடமும் காந்தமாகிய சடமும், காட்டுவோனது சத்தியால் ஒன்றுபடுமோ அதுபோல் ஊழாகியசடமும், மாயையாகிய சடமும், இறைவனது ஆணையால் ஒன்று பட்டுக் காரியத்தைச் செய்யும். ஆதலால் முடிந்தபொருளாகக் கூறுவதென்னெனின் ஊழேமுதற் பொருள் என்பார்மதம் நிலைபெறாது. இறைவன் அருட்சத்தி யின் ஆணையால், ஊழ் ஆன்மாக்களுக்கு இருவினையின் பயன்களைப் புசிப்பிக்கும் ஓர் நியதியே என்பதாம்.

      'தெய்வத்தாலாகாதெனினும் முயற்சிதன்
      மெய்வருத்தக் கூலிதரும்.''
     
என்ற திருக்குறளாலேயே தெய்வத்தாலாவது யாவும் என்றும் முயற்சியாலாவது சிறுபான்மையும் என்றும் தெய்வத்தை நம்புதலும், முயற்சி செய்தலும் இரண்டும் பாழ்படாமையின் தெய்வம் நோக்கியிராது முயற்சியும் செய்யவேண்டும் என்பதும் பெற்றாம் ஏனெனின், சிற்றறிவுடையோராய நாம் நமக்கு எது வருவது என்று அறியோம். ஆதலாலும், முன்பிறப்பில் செய்த வினையின் பயன் இது என்று அறியாமையாலும் சின்னாட்பல்பிணிச் சிற்றறிவுடையோராய் நாம்

"அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி "
''பற்றித் தொடரும் இருவினைப் புண்ணியபாவமுமே''

என்றபடி முயற்சியும் ஊழும் பெரிதும் சம்பந்தம் உடையவை. சம்பந்தம் உடையவை யாயினும்,

    "என்செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனிச்சிவமே உன்செயலே யென்று உணரப்பெற்றேன்.''

    "அவனன்றி ஓரணுவும் அசையாது''       என்றபடி எல்லாம் அவன் செயலின் வண்ணம் நடக்கும் என்று துணிந்து, உலக அறிவும் நூலறிவுமாகிய இவற்றைத்தக்கோர் பாலுணர்ந்து அவர்சொல்லியவழி அறம்பொருள் இன்பமாய இம்மையின் பயனையும், அதனால் விளையும் மறுமையின் பயனையும் அடையப்பெரிதும் முயற்சி செய்யும் ஊழினை அடைய, எல்லாம் வல்லவனாய், இறைமைக்குணங்கள் யாவும் உடைய இறைவனாய், பழவினைக் கயிற்றில் பல்லுயிர்ப்பாவை அழகுற நடிக்கத் திருநடம்புரிவோனாய் உள்ள பசுபதியை முக்காலும் தொழுது, அவனடியார் ஓதிய தேவார திருவாசகங்களை ஓதி உணர்ந்து, பஞ்சாக்கரத்தையே மனனஞ்செய்து, பூதி உருத்திராக்கங்களையே பேணியணிந்து ஒழுகு வோமாகவும்.

                  கிஷ்ணாம்பேட்டை – குப்புச்சாமி

சித்தாந்தம் – 1913 ௵ - பிப்ரவரி ௴



No comments:

Post a Comment