Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
உன்னையறி உன் முடிவினை சிந்தை செய்.

ஈண்டுத்தமியேன் எடுத்துக்கொண்ட விஷயமானது ''உன்னையறி உன் முடிவினை சிந்தை செய்'' என்பதாம்'' உன்னையறி உன் முடி வினை சிந்தைசெய்'' என்னும் இது பாரமார்த்திக உணர்ச்சியென்பது ஒரு சிறிது மின்றி லௌகீகா வனுபவத்தில் ஈடுபட்டுள்ள தமியேன் போன்ற சாமானிய அறிவினையுடைய ஒருவனைக் குறித்து ஓர் ஞானாசாரியர் கூறிய உபதேசமொழிகள் போலும், இது ''உன்னையறி உன் முடிவினை சிந்தைசெய்'' என இரண்டுதொடர்களால் ஆயது. இவற்றுள் முன்னைய தாகிய “உன்னையறி" என்பதனை முதற்கண் எடுத்துப்'பேசி, அதன் பின் இரண்டாவ தனைக்குறித்து ஆராயத்துணிகின்றேன்.

உன்னையறி என்றதினால் உனக்கு வேறாய் உள்ள பிரபஞ்சப் பொருள் நீயல்ல என்பதும், பிரபஞ்சப் பொருள்களை எதிரிட்டு அறி பவன் நீ என்பதும் பெறப்படும், அஃதாவது பிரபஞ்சம் வேறு தான் வேறு என்னும் பகுத்தறிவு இன்றி பிரபஞ்சமேதானாய் விடயபோகங் களுள் அழுந்தி யிருப்பவனுக்கு தற் சொரூபத்தை அறிவித்து உண்மை நிலையைக்காட்டுதற் பொருட்டே இவ்வுபதேச வாக்கியம் எழுந்ததாதலின், அறியப்படுவது பிரபஞ்சம் எனவும் அறிவது

பிரபஞ்சத்திற்கு வேறாய் உள்ள மற்றொரு பொருள் அனவும் பெறப்படலாயிற்று. பிரபஞ்சத்திற்கு வேறாய் உள்ள மற்றொரு பொருள்யாது என்று ஆராயுங்கால் அதுவே நீ என ஆம். அந்த நீதான் எது? குனியமா, தேகமா, இந்திரியமா, அந்தக் காரணமா, சூக்குமமா, பிராணனா, விஞ் ஞானமா, சமூகமா இவற்றுள் வேறாய தொன்றா என ஆசங்கை நிக ழும், இவற்றுள் சூனியமே நீ என்னுங்கால் சூனியம் என்பது ஒன்று மில்லாத பாழ் எனப்பொருள்படும். ஒன்று மில்லாத பாழ் ஆகிய சூனியம் ஒருபொருள் ஆகாது. ஆனால் சூனிய ஆன்ம வாதிகள் சூனியமே ஆன்மா அல்லது நீ என்கிறார்கள். அவர்கள் அங்ஙனம் கூறு வது தேகம், இந்திரியம், கரணம் முதலியவற்றை இது ஆன்மாவல்ல இது ஆன்மாவல்ல என முறையே ஒவ்வொன்றாகக் கழித்து நோக்குங் கால் அத்தேகேந்திரியங்களுக்கு வேறாக ஒரு பொருள் தமக்குக் காண ப்படாமையினாலேயாம். அஃது எது போலும் எனில் ஓர் ஆற்றைக் கடந்து சென்றபத்து மனிதர்கள் தமது தொகையில் சந்தேக முற்றுத் தனித்தனியே ஒவ்வொருவரும் எண்ணுந் தம்மை நீக்கி எதிர் நிற்கும் ஒன்பது பேரையுமே கணக்கிட்டு ஒருவனைக்காண்கிலம் எனப் பிரலாபி த்து நிற்றலை ஒப்பதாகும். எனவே ஒன்பது பேர்களையும் எதிர்நிறுத்தி எண்ணுபவனாகிய ஒருபுருடன் பத்தாவது மனிதனாயிருத்தல்போல, சரீர இந்திரிய கரணங்களை இது ஆன்மாவல்ல இது ஆன்மாவல்ல என முறையே ஒவ்வொன்றாகக் கழித்து அறிந்து கொள்ளுகின்ற அறிவா கிய பொருள் எதுவோ அதுவே பிரபஞ்சத்துக்கு வேறு பொருளா கிய ஆன்மா என்பது பெற்றாம்.
இனி தேகமே ஆன்மா என்னுங்கால் தேகத்தை நான் தேகம், நான்கால், நான்கை, நான்கண் எனத்தற்கிழமைப் பொருள்பட வழங்கல் வேண்டும். அங்ஙனமின்றி எனது தேகம் எனது கால் என துகை எனது கண் எனப் பிறிதின்கிழமைப் பொருள்பட வழங்குதலாலும், உயிர் நீங்கிய தேகத்தினிடத்து யாதொரு நிகழ்ச்சியும் காண்கிலோம் ஆகலானும் தேகம் ஆன்மா அல்ல என்பது நிச்சயிக்கப்படுகிறது.

இனி இந்திரியமே ஆன்மா என்னுங்கால் இந்திரிய மென்பது ஒன்றாயிராமல் மெய், வாய், கண், மூக்குச் செவி என ஐவேறு வகைப் பட்டு இருத்தலானும், ஓர் இந்திரியம் அறிகின்ற விடயத்தை மற்றொரு இந்திரியம் அறியமாட்டாது ஆகையானும், ஓர் இந்திரியம் தனது விஷயத்தை அனுபவிக்கும் போது மற்ற இந்திரியங்கள் அறிவின்றிக் கிடத்தலானும், அவைகள் யாவும் தத்தம் இயல்பினைத் தெரிந்து கொள்ள மாட்டா வாகையானும் இந்திரியம் தான் அல்ல என்பது துணியப்படும்.

இனி அந்தக்கரணங்களை ஆன்மா என்னுங்கால், அவ்வந்தக் கர ணங்களும் ஒன்றாயிராமல் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என நான்குவேறு பட்டிருத்தலானும், அவை ஒவ்வொன்றும் தனித்தனி வேறு வேறு தொழில்களைச் செய்வதல்லாது ஒன்றின் தொழிலை மற்றொன்று செய்யமாட்டாது ஆகலானும், அவைதாம் நினைத்தல் சிந்தித்தல் முதலிய தொழில்களைச் செய்தும் நான் நினைத்தேன், சிந்தித் தேன் நிச்சயித்தேன் எனத்தத்தம் தொழிலை தாமே தெரிந்து கொள் ளமாட்டாவாதலானும் அவ்வந்தக் கரணங்களும் ஆன்மா அல்ல என்பது பெறப்படும்.

இனிப் பஞ்சேந்திரியங்களும் தேகமும் செயலின்றிக் கிடக்கும் கனவின்கண்ணே சூக்கும தேகத்திற்கு அனுபவம் காணப்படுதலால் அச்சூக்கும தேகமேதான் ஆன்மா என்னுமிடத்துச் சொப்பனத்தின் கண் நிகழும் அநுபவத்தைச் சாக்கிராவஸ்தையின் கண் மறைந்து போகாது உள்ளபடியே அறிதல் வேண்டும். அவ்வாறின்றிச் சொற் பனத்தில் அநுபவித்தது ஒன்றினைச் சாக்கிரத்தின்கண் உள்ளபடியே அறியாது மயங்கி அறிதலானும், யான் சொப்பனங்கண்டேன் கண்டிலேன் எனச் சாக்கிராவஸ்தையின் கண் மயங்கி அறியும் தன்மைத் தாகிய ஓர்பொருள் அச்சூக்கும் தேகத்திற்கு வேறாக அறியக்கிடக் கின்றமையாலும் அச்சூக்கும் தேகம் ஆன்மா அல்ல என்பது நன்கு விளங்கும்.

இனிப் பிராணவாயுவே தான் ஆன்மா என்னுமிடத்து ஏனைய கருவிகளெல்லாம் ஒடுங்கப்பெற்ற சுழுத்தி, துரியா அவஸ்தைகளின் கண் பிராணவாயு இயங்கி நிற்பவும் ஆண்டுச் சொப்பனாவஸ்தையிற் போல இன்பதுன்ப நுகர்ச்சிகளாகிய உண்டிவினைகள் நிகழக்காணப் படாமையாலும் துயில் நீங்கிய வழி நன்றாகத் தூங்கினேன் என்னும் உணர்ச்சி அப்பிராணவாயுக்கு வேறாகநிகழக் காண்கின்றனம், ஆகையானும் அப்பிராணனும் ஆன்மா அல்ல என்பது வெளியாகிறது.
இனி விஞ்ஞான மென்னும் பிரம்மமேதான் ஆன்மா எனின் துரியாதீத அவத்தையின்கண் சிறிதும் அறிவின்றிக் கிடந்து பின்பு கலை முதலிய கருவிகளோடு சேர்ந்தவழியே விஷயத்தைக் கிரமக்கிரமமாக ஒன்றொன்றாக அறிந்து வருவதல்லது எஞ்ஞான்றும் ஒரே பெற்றித்தாய் மறதியின்றி அறியும் தன்மை அறிவுக்கு இல்லையென்பது கண் கூடாம் ஆதலின் அப்பிரமும் ஆன்மா அன்று என்பது பெறப்படும்.

இனி, தேகேந்திரிய கரணங்கள் முதலிய எல்லாம் கூடிய சமுதா யமே அல்லது சமூகமே ஆன்மா என்னுமிடத்து, தேகேந்திரிய காணங்கள் செயல் இல்லாத மாயாகாரிய ஜடப்பொருளா யிருத்தலானும் அவற்றிற்குத் தனித்தனி வெவ் வேறுபெயர்கள் இருத்தலானும் அச்சமுதாயமும் ஆன்மா அன்று என்பது பெறப்படும்,

ஆகவே இத்தேகம் இந்திரியம் அந்தக்கரணம், சூக்குமம், பிராணன், விஞ்ஞானம், சமூகம் என்பனவற்றிற்கு வேறாய் இருந்து அத் தேகேந்திரிய காணாதிகளைத் தொழிற்படுத்தி இன்பதுன்ப அனுபவங் களை அறிகின்ற அறிவாகிய ஓர்பொருள் இச்சரீரத்தின்கண் உளது எனவும் அதுவேதான் ஆன்மா எனவும் தெள்ளிது புலப்படும்,

இதுகாறும் முதலாவதாகிய உன்னையறி என்னும் வாக்கியத்தைக் குறித்து ஒருவாறு சுருக்கமாய் ஆராயப்பட்டது. இனி இரண்டாவ தாகிய உன்முடிவினை சிந்தைசெய் என்பதைக் குறித்தும் சுருக்கமாக சில வசனங்கள் கூறி முடிக்கின்றேன்.

உன் முடிவினை சிந்தைசெய் என்பது உனது முடிவாகிய செயலை அதாவது உனது முக்கியமான உண்மைச் செயலை ஆராய்வாய் எனப் பொருள்படும். உன் முடிவினை சிந்தைசெய் என்னும் வாக்கிய ஆராய்ச் சியினால் தான் எனச் சொல்லப்படும் ஆன்மாவாகிய நீ இச்சரீரத்தின் கண்ணேயே இருப்பதாகச் சிந்திக்கின்றமையால் அப்பெற்றிய ஆன்மா வகிய நினக்கு இச்சரீரம் எக்காலத்து எதன்பொருட்டுக்கிடைத்தது எனவும் இச்சரீரம் உண்டாவதற்கு மூல காரணம் யாது எனவும், இச்சரீரம் யாரால் கொடுகப்பட்டது எனவும், இன்னோரன்ன விசாரங்கள் தாமே நிகழும்.

இவற்றை யாராயுங்கால் இது எக்காலத்துக் கிடைத்தது என்பது அளவைகளான் அறிந்துகொள்ளுதற்கு இயலாதாம் ஆயினும் நமது சித் தாந்த நூல்களின்படி பிரதமபாகாசிருஷ்டி ஆரம்பகாலத்திலேயே இச்சரீரம் ஆன்மாவுக்குப் பரமேசுரனால் கொடுக்கப்பட்டது என அறியலாம். இச்சரீரம் எதன் பொருட்டுப்பரமேசுரனால் கொடுக்கப்பட்டது, என ஆராயப்புகின் ஆன்மா இடையீடு இன்றி பற்றியிருக்கும் ஆணவ மல நீக்கத்தின் பொருட்டாகவே கொடுக்கப்பட்டது என்பது வெளியாம். இதனால் இச்சரீரத்தொடக்கு ஆன்மாவிற்கு ஏற்படுதற்குமுக் கியகாரணம் ஆணவமலமேயாம் என்பது வெளிப்படை, அஃதாவது குருடனாகிய ஓர் அந்தகனுக்கு உலகத்திற் சஞ்சரித்து உச்சீவித்தலின் பொருட்டுக் கண்ணுள்ளானொருவனிரங்கி ஓர்கோலைக் கொடுத்தல் போல அனாதிகேவல அந்தகாரத்தில் அறிவின்றி அழுந்திக்கிடக்கும் ஆன்மாவுக்கு ஆணவமல நீக்கத்திற்கு ஏதுவாகிய கர்மானுபவத்தின் பொருட்டு முதற்கடவுளாகிய பரமேசுவரன் பெருங்கருணையினால் கொடுத்த ஓர் அரிய கருவியே இச்சரீரமாம். ஆகவே ஆன்மாவிற்குக் கர்மத்தில் இச்சையுண்டாவதற்குக் காரணமும் ஆணவமலமேயாம் என்பது பெறப்படும். எப்படியெனின் சிறிய குழந்தைக்குப்பால் உண்ண வேண்டுமென்று பாலின் கண்ணே இச்சையை யுண்டாக்கியது யார்? அக்குழந்தையின் அன்னையா? அல்லது பாலா? என ஆராயுங்கால் தாயே இச்சையையுண்டாக்கினாள் எனின் தாய்கொடுத்த நேரங்களிலெல்லாம் குழந்தை பாலைக்குடித்தல் வேண்டும். பாலே குழந்தைக்கு இச்சையை உண்டாக்கிற்று எனில் எவ்வளவு பாலைக்கொடுத்தாலும் குழந்தை குடித்தல் வேண்டும். அவ்விரண்டும் இன்மையால் குழந்தைக்குப் பாலிலே. இச்சையைக் கொடுத்தது தாய்க்கும் பாலுக்கும் வேறாயுள்ள பசியாயினாற்போல, ஆன்மாவிற்கு கர்மத்திலே இச்சையைக் கொடுப்பது ஆணவமலமேயாம். ஆகவே குழந்தைக்குப் பசியுண்டாகியவழி அன்னையானவள் அப்பசியை அறிந்து பாலைப் பாலடையால் வார்த்துக் குழந்தைக்கு ஊட்டிப்பசியை மாற்றுதல் போல ஆணவமலச் சேர்க்கையினால் ஆன்மாவிற்கு கர்மத்தில் இச்சையுண்டாகிய வழியே பெருங்கருணைக்கடலாகிய பரமேசுரன் அதனை அறிந்து அக்கர்மானுபவத்தின் பொருட்டு அவ்வான்மாவின் இச்சைக்கு ஏற்ற யாதாமொரு சரீரத்தைக் கொடுத்துக் கர்மங்களையனுப விக்கச் செய்து ஆணவமல உபாதியைப்போக்கி அவனுக்குப் பேரின் பத்தை அளிப்பவர் ஆகின்றார். அவ்வாறு ஆணவமல நீக்கமெய்திப் பேரின்பாவனுபவப் பேற்றை அடைத்தற் பொருட்டுச் சிவபெருமானால் ஆன்மாக்கட்கு அளிக்கப்படுவனவாகிய தேசங்கள் பலவற்றினுள்ளும் இம்மானுடயாக்கை ஒன்றே பலவாற்றானும் சிறந்த உயர் வுடைத்தேகமாம் என்பது யாவரும் செவ்வனே அறியக்கிடப்பதொன்றாம். “எண்ணரிய பிறவி தனின் மானுடப்பிறவிதான் யாதினும் அரிது அரிதுகாண்'' எனப் பெரியோரும் கூறியுள்ளார். அத்தகைய இம்மானுடதேகமும் நீரிற்குமிழியைப் போல அநித்தியமாக இருத்த லால் இத்தேகம் உள்ள போதே இதனால் உண்டாகக் கூடிய உண்மைப்பயனை நாம் அடையப்பெறோமாயின் “இப்பிறவி தப்பினால் எப்பிற விவாய்க்குமோ யாதுவருமோ'' என்னும் ஆன்றோர் வாக்கின்படி மறு படியும் இம்மானுடத்தேகமே நமக்கு கிடைக்குமென்பதும் இவ்வாறாகிய அநுபவம் வரும் என்பதும் நிச்சயமின்றாம். ஆதலால் அத்து ணைச் சிறப்புவாய்ந்தமானுடத்தேகத்தைப் பெற்றுள்ள ஆன்மாக்களாகிய நாம் ஒவ்வொருவம் “நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந் தொ ன்றின வொன்றின சில செயிற்செய்க சென்றன சென்றன வாணாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று"

என்னும் ஆன்றோர் கட்டுறையைக் கடைப்பிடித்து காலந்தாழ்க் காது இம்மானுட தேகமும் விவேகமும் நன்னிலமையிலிருக்கும்போதே நமது உண்மைச் சொரூபத்தினையறிந்து நம் தலைவனாகிய சிவ பெருமானை அடைதற்குப் பிரயத்தினப்பட வேண்டியதும் நம்மால் இவ்வுலகத்திலே செய்யப்படும் ஒவ்வோர் செயல்களையும் அவ்வுண் மைப்பேற்றி சிமித்தம் நற்செயல்களாகவே யறிந்து செய்ய வேண்டியதும் நமக்கு இன்றியமையாத உண்மைச்சாதனங்களாம். இக்கருத்தினாலன்றோ அருணந்திசிலமும் "மானுடயாக்கைதானும் வகுத்தது மனவாக்காய - ஆனிடத்தைந்து மாடுமரன் பணிக்காகவன்றோ - வானி டத்தவரு மண்யேல்வந்தரன் றனைப் பூசிப்பர். ஊனெடுத்து ழலு மூம ரொன்றையு முணராரந்தோ'' என்று ஞானசித்தியிற் கூறியதும் என்க. இப்பொழுது நாம் சைவசித்தாந்த மகாசமாஜம் எனும் கழகத்தை யேற்படுத்திச் சைவ நேயர்களாகிய யாவரும் ஒருங்கே சேர்ந்து இத் துணைப் பிரசங்கஞ்செய்வதும், நமது உண்மையை யறிந்து பரிசுத்த மாகிய ஓர் உறுதிப்பயனைப் பெறும் பொருட்டாகவே யல்லது வேற ன்று. நாம் அருமையாகிய இம்மானுட தேகத்தைப் பெற்றிருந்தும் இதனால் அடையக்கூடிய ஆன்மலாபம் சிவபுண்ணியம் முதலிய உறு திப்பயன்களை ஓர் அணுத்துணையேனும் அடையப்பெறோமாயின் இம் மானுடதேகமும் விவேகமும் நமது கல்வி யறிவும் நமது ஆராய்ச்சி களும் நமது பிரசங்கமும் இச்சைவசித்தாந்த மகாசமாஜம் முதலிய கூட்டங்களும் மற்றைப் பிரயத்தனங்களும் ஆகிய இவை யெல்லாம் பிரயோஜன மற்றனவாய் முடியு மன்றோ?

ஆதலால் எவ்வாற்றாலும் எவ்விதத்தினாலும் நன்மையடைதற்கு ஏதுவாகிய உத்தம சன்மார்க்க உண்மைநெறிகளில் பயிலுதற்கு நாம் அவசியம் முயலுதல் வேண்டும் என்பதும் அங்ஙனம் முயலாது இம்மானுட தேகத்தைப் பாழாக்கி விடுவோமாயின் வேறு எக்காலத் தினும் எப்பிறவியினும் நம்மையறிந்து கொள்ளுதற்குச் சாதனமாகிய15 அவகாசம் நமக்குக் கிடைக்கமாட்டாதென்பதும் ஒருதலையாம். இக்க ருத்துப் பற்றியே நமது திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் "துறக்கப்படாத உடலைத்துறந்து வெந்தூதுவரோடு இறப்பன், இறந்தால் மேல் விசம்பு ஏறுவன், ஏறிவந்து பிறப்பன் பிறந்தால் பிறையணிவார் சடைப்பிஞ்ஞகன் பேர் மறப்பன் கொலோ என்று என் உள்ளங் கிடத்து மறுகிடுமே" எனத் திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் இதுவே உன்னையறி உன் முடிவினை சிந்தை செய்" என்னும் வாக்கியங்களின் முடிந்த கருத்தாகும்.

இது காறும் கூறியவாற்றால் நீ என்பது தேகேந்திரிய காணமு தலிய வற்றிற்கு வேறாய் உள்ள ஓர் சித்துப்பொருளாம் என்பதும், அதுவே தான் என்கின்ற ஆன்மா எனப்படும் என்பதும், அவ்வான் மாவே சரீரேந்திரிய காரணமுதலியவற்றைத் தொழிற்படுத்தி இன்ப துன்ப விடயங்களை அனுபவிக்கும் புருடனாவன் என்பதும், அப்புரு டனாகிய ஆன்மாவிற்கு ஆணவமல நீக்கத்தின் பொருட்டு இறைவனால் கொடுக்கப்படும் தேகங்களெல்லா வற்றுள்ளும் இம்மானுடதேகமே மிகச் சிறந்ததாம் என்பதும் அதுவே இறைவனது அருட்சன்னிதியை யணுகிப் பேரானந்தப் பேற்றை யடைதற்கு இன்றி யமையாத சாத னமாயுள்ளது என்பதும், இம்மானுட தேகம் நீர்க்குமிழியைப் போல அநித்தியமாம் என்பதும், மறுபடியும் இத்தேகம் கிடைக்குமென்பது லிச்சயமில்லை யாதலால் இத்தேகம் உள்ள போதே இதனால் அடையக் கூடிய பேரானந்தப் பேற்றைப் பெறுதற்கு முயலல் வேண்டும் என்ப தும் அவ்வாறு முயலாதவழி இத்தேகேந்திரிய கரண முதலாயின எல்லாம் பிரயோஜன மின்றாய் முடியும் என்பதும் பிறவும் விளங்கும்படி ஒருவாறு சங்கிரமமாக விளக்கினேன்.
வா - தி - கோவிந்தராஜ முதலியார்.

சித்தாந்தம் – 1915 ௵ - பிப்ரவரி ௴

No comments:

Post a Comment