Saturday, May 9, 2020



உள்ளம் கவர் கள்வன்
[V. K. வனசாட்சி, எம். ஏ.]

தலைப்பை நோக்கியவுடன் யார் அக்கள்வன் என்று அறியத் துடிப்பார்கள். ஆனால் சைவ சமயத்தில் ஆழ்ந்த அன்பர்கள் கள்வன் யார் என்பதையும், யார் உள்ளத்தைக் கவர்ந்தான் என்பதையும் நன்கு அறிவார்கள். இருப்பினும் அவன் யார்? யார் உள்ளத்தை எங்கு எப்பொழுது எப்படிக் கவந்தான்? என்பதை இவண் நோக்குவோம்.

சிவபாத விருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர் பிறந்தார். பெற்றோர் அவரை அன்புடன் சீராட்டிப் பாலூட்டி வளர்த்தனர். ஒரு நாள் தந்தையார் நீராடக் குளத்திற்குச் சென்றார். சம்பந்தர் தானும் தந்தையுடன் குளத்திற்குச் செல்ல வேண்டும் என்று அழுதார். தந்தை மகன் விருப்பத்திற்கு உடன்பட்டு அழைத்துச் சென்றார். தன் மைந்தனைக் குளக்கரையில் அமர்த்தித் தான் குளத் தில் சென்று நீராடினார். சிவபாதவிருதயர் நீராடி வரக் காலந்தாழ்க்கவே குழந்தை தந்தையைக் காணாமல் அழ ஆரம்பித்தது. குழந்தையின் அழுகுரல் தண்ணீரில் இறைவனையே நினைத்து நீராடும் தந்தையின் காதில் விழவில்லை. குழந்தையின் அழுகுரல் அம்மையப்பர் காதில் விழுந்தது. அவர் உமையை நோக்கிக் குழந்தைக்கு ஞானப்பாலை ஊட்டுமாறு பணித்தார். அம்மையார் பொற் கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு சிவனுடன் இடப வாகனத்தில் பிரம தீர்த்தக் குளக்கரையை அடைந்து அழுது நின்ற ஞான சம்பந்தருக்கு அப்பாலை ஊட்டி விட்டு மறைந்தருளினார். தந்தையார் நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக்கொண்டு கரையேறினர். பால் ஒழுகும் வாயுடன் நின்ற தன் பிள்ளையைக் கண்டார்; யாருடைய எச்சில் பாலை உண்டாய் என்று வெகுண்டார்.

தந்தையின் சீற்றத்தைக் கண்ட குழந்தை தம் உச்சியின் மேற் கை குவித்த விரலொன்றினால், தம் மெதிரே தோன்றிய தோணி புரத்து இறைவனைச் சுட்டிக் காட்டினார். தம் உள்ளத்துள்ளே பொழிந்தெழுந்த உயர்ஞானத் திருமொழியால், அருமறைப் பொருள்களாகிய உயர்ந்த உண்மைகளை எல்லாந் தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளுதற் பொருட்டு, அளவற்ற மந்திரங்கட்கு மூல மாகிய ஓங்காரத்தினைத் தமிழென்னும் பெயரின் முதல் நிலையாகிய தகர மெய்யுடன் இயைத்துத் தொடங்கிய எழுது மறையாகிய வளமார்ந்த செந்தமிழ்ப் பாடல்களால் உலக மக்களுக்கு மெய்ப் பொருளுணர்வு சிறக்க தாம் பாடும் திருப்பாடல்கள் அம்மையப்பரது திருச் செவி யிற் சென்று சாரும் தகுதி பெறுகற்கு இறைவரது இடப் பாகத் தமர்ந்த உமையம்மையரது தோடணிந்த திருச்செவி யைச் சிறப்பித்து. “தோடுடைய செவியன்" என்ற திருப்பாடலை முதலாகவுடைய திருப்பதிகத்தைப் பாடி ''என் உள்ளம் கவர் கள்வன் பிரமாபுரமேவிய பெம்மான் இவனே' எனத் தம் தந்தையார்க்கு அடையாளங்களுடன் குறிப்பிட்டருளினார்.

தேவாரப் பாடல்களின் தொகுப்புப் புத்தகத்தில் நாம் காணும் முதல் பாடல் சம்பந்தருடையது. அதில்காணும் முதல் பாடல் தோடுடைய செவியன். இப்பாடலை இவர் சீர்காழிப் பதியில் பாடினார். இப்பதிகத்தில் பதினொரு பாடல்கள் உள. தன் உள்ளம் கவர் கள்வனின் தோற்றத்தைப் பலவாறு தந்தைக்குக் கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறார். அவர் உள்ளத்தை மட்டும் அக்கள்வன் கவர்ந்தான். இவர் பாடலின் மூலம் அக்கள்வன், படிக்கும் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் கவர்ந்து விடுகிறான் 'சம்பந்தரைப் போலே நாம் நேரில் கண்டு அவன் பால் காதல் கொள்ளா விடினும், இவர் பாடலின் மூலம் அக்கள்வனின் தோற்றத்தை அகக் கண்ணால் கண்டு களிக்கவும், காதலிக்கவும் முடிகிறது. சிலர் நாயகி நாயக பாவத்தில் பாடியுள்ளார் என்று கூறி "உள்ளம் கவர்" என்ற தொடரைக் காட்டுவார்கள்.

முதல் ஏழு பாடல்களில் இயற்கையைப் பற்றிக் கூறுகிறார். எட்டாம் பாட்டில் இராவணன் கயிலாய மலையை எடுக்க முயன்று அதன் கீழ் அகப்பட்டு வருந்தித் தன் தவற்றினை உணர்ந்து இசைப் பாடலால் இறைவனைப் போற்றிப் பாட, இறைவன் அவனுக்கு அருள் புரிந்ததைக் கூறுகிறார். ஒன்பதாவது பாடலில் திருமாலும் பரமனும் இறைவனின் அடியையும் முடியையும் தேடி அலுத்துக் கடைசியில் திரு ஐந்து எழுத்தை ஓதி உய்ந்த செய்தியினைக் கூறுகிறார். பத்தாம் பாடலில் சமண பௌத்த மதங்கள் பழிதரத்தக்க மதங்கள் என்பதனைக் கூறுகிறார். பதிகப் பயன் கூறும் திருக்கடைக் காப்பினையும் பாடித் தம் கண்ணெதிரே விசும்பின் கண் விடைமீது தோன்றி யருளிய அம்மையப்பரை உள்ளம் கவர் கள்வனைத் தொழுது நின்றார்.

பாலடிசில் உண்ட மைந்தனைத் தந்தை வெகுண்டு கேட்க அதன் பயனாக சம்பந்தர் பாடிய பாட்டே உள்ளம் கவர் கள்வன் யார் என்பதைக் காட்டுகிறது, "தோடு டைய செவியன்' என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தின் பாடல் தோறும் சிவபெருமானை அங்க அடையாளங்களுடன் கூறி' எனது உள்ளம் கவர் கள்வன் -பிரமா புர மேவிய பெம்மான் இவனன்றே' என்று தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்.

முதற் பாடலில் தோடுடைய செவியைக் கூறுகிறார். தோடுடைய செவியை யுடையவர் யார்? அம்மை அன்றோ? குழந்தை தாயைத்தான் முதலில் காணும். தாய் தந்தை யைக் காட்ட, குழந்தை தந்தையை அறியும். இதுவே உல கத்தின் முறையும் நியதியும் ஆகும். அவ்வண்ணமே இறை வனை அடையும் பொழுதும் இறைவியை அடைந்த பின்பு தான் அடைதல் எளிதாகும். காரைக்கால் அம்மையார் இறைவனை நாடிச் செல்லும் பொழுது இறைவி கண்டு பின்பு இறைவனிடம் கூற அவர் அம்மையே வருக என அழைக்கிறார். அது போன்றே இங்கும் சம்பந்தருக்கு முதலில் காட்சி அளிப்பது தோடுடைய செவிதான். தோடு அணிந்த செவியையுடைய உமை அம்மையை இடப்பாகத் தில் கொண்டு உள்ளவன், தூய்மையான வெண்மதியைத் தலையில் சூடியவன், திருநீற்றைப் பூசிய மேனியை உடைய வன், இடப வாகனத்தில் ஏறி வந்தவனே என் உள்ளம் கவர்ந்த கள்வன் எனக் கூறுகிறார். பிரமன் ஏத்த அருள் செய்த சீர்காழித் தலத்தில் எழுந்தருளியுள்ள பெம்மான் இவனே என்று கூறித் தன் தந்தைக்குக் காட்டுகிறார். அடுத்து இறைவன் முதிர்ந்த ஆமை யோட்டையும், இள நாகத்தையும், பன்றிக் கொம்பையும் பூண்டுள்ள கோலத் தைக் காண்கிறார். இக்காட்சியுடன் தோன்றும் இறை வனே என் உள்ளம் கவர்ந்தவன் என்கிறார்.

இறைவனின் கருணையை நினைக்கிறார். உலக மக்கள் நன்மைக்காகக் கங்கையைத் தன் தலையில் தாங்கியதை நினைத்துப் பாடுகிறார். அவ்வாறு துன்பம் தீர்க்கும் இறை வனே பிரமாபுரத்தில் எழுந்தருளியுள்ள என் உள்ளம் விரும்பும் இறைவன் என்கிறார்.

இறைவனின் வீரத் தன்மையையும், எளிமையையும் நினைக்கிறார். அரக்கரை அழித்து மதில்களை அமித்தமையைக் கூறி இறைவனின் விரத்தைக் காட்டுகிறார். மண்டை ஓட்டை ஏந்திப் பிச்சை எடுக்கும் எளிமையினைக் காட்டுகிறார். இறைவனே உயிர்களிடம் வந்து இரந்து பாபத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் புண்ணியத்தை அருளும் திறத்தை இதன் மூலமாகக் காட்டுகிறார். இத்தகைய குணங்களையுடைய இறைவனே என் உள்ளம் கவர் கள்வனும் பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மானும் என்கிறார். இறைவன் துன்பத்தைக் கொடுப்பது போல் துன்பத்தைத் தீர்ப்பதை நினைக்கிறார். ஒரு உருவத்திலேயே பெண்மைக்கு இடம் தந்ததையும் நினைக்கிறார். இத்தகைய அருமைக் குணம் உடையவனே என் உள்ளம் கவர் கள்வன் என்று காட்டினார்.

மண்ணுலகில் வாழ்பவர் அறியாமல் பிழை செய்தாலும் பின் தன் தவறு உணர்ந்து வருந்தும்போது இறைவன் அருள் புரிவான் என்பதை இராவணன் கயிலை மலையை எடுத்ததன் மூலம் விளக்கி அத்தகைய இறைவனே பிரமா புரம் மேவிய இறைவன் என்று காட்டினார்.

அன்பினால் தொழும் அடியவர்களுக்கே இறைவனின் காட்சி எளிதில் கிடைக்கும். மனச் செருக்குடன் இருப்பவர்களுக்கு இறைவன் எளிதில் காட்சி தர மாட்டான் என்ற உயர்ந்த கருத்தை பிரமனும், திருமாலும் அடியையும் முடியையும் தேடிய வரலாற்றின் மூலம் கூறி, அன் பிற்கு எளிமையாகும் இறைவனே என் உள்ளத்தைக் கவர்ந்தவன் என்றார்.

சிவபெருமானே உண்மைக் கடவுள். பிற சமயங்கள் பழியை விளைவிப்பவை. எதைப் பற்றினும் இறுதியில் சைவத்தையே சாரும் என்று கூறி அத்தகைய இறைவனே என் உள்ளம் கவர்ந்தவன் என்றார்.

கடைசிப் பாட்டில் தமக்கு அருள் செய்யும் பொருட்டுச் சிவபெருமான் பிரம தீர்த்தக் கரையில் எழுந்தருளி வந்த எளிமைத்தன்மையினையும் அவனருளால் ஒரு நெறிய மனம் வைத்துணரும் சிவஞானத்தினையும் அதன் பயனாகத் திருநெறிய தமிழ் பாடும் ஆற்றலையும் தாம் பெற்று மகிழ்ந்த திறத்தினையும், ''அருநெறிய முனியகன் பொய்கையலர்மேய' எனவரும் திருக்கடைக்காப்புப் பாடலில் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இவனன்றே - என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் முடிக்கின்றார். இங்கு வரும் ஏகாரம், இவன் ஒருவனே தலைவன் என்றும், ஒரு தலைவனை அன்றிப் பிறிதொரு தலைவனை நினையாத தன்மையன் என்றும் காட்டுகின்றது.

தந்தை கேட்க அதன் பயனாகப் பத்துப் பாடல்களில் இறைவனின் தோற்றத்தையும் செயல்களையும் விரித்துக் கூறி இவனே என் உள்ளம் கவர்ந்த கள்வன், எனக்குப் பால் அளித்த இறைவன், பிரமாபுரம் மேவிய பெம்மான் என்று கூறியுள்ளார். சம்பந்தர் உள்ளத்தை மட்டும் கவர்ந்த கள்வன் இல்லை. அவன் படிப்பவர் ஒவ்வொருவர் உள்ளத்தையும் கவரும் கள்வன். முதற் பாட்டிலேயே உள்ளத்தைக் கவர்ந்து மற்றவற்றில் கவராமல் விட்டவன் அல்லன். முதற் பாட்டில் உள்ளத்தைக் கவர்ந்து. தேவாரம் முழுவதையும் படிக்கும்படியும் உள்ளத்தைக் கவர்ந்து ஊக்க மூட்டிய கள்வர் இச்சம்பந்தரே எனல் மிகையாகாது.

சித்தாந்தம் – 1964 ௵ டிசம்பர் ௴


No comments:

Post a Comment