Saturday, May 9, 2020



உலகமும் தலைவனும்.

      ஒருவனோடொருத்தி பொன்றென்றுரைத்திடு முலகமெல்லாம்
வருமுறைவந்து நின்று போவதுமாதலாலே
தருபவனொருவன் வேண்டுந்தான் முதலீறுமாகி
மருவிடுமனாகிமுத்த சித்துருமன்னிநின்றே.

1. இத்திருவிருத்தம், தமிழ்ப் பாஷையிலுள்ள சித்தாந்த சாத்திரம் பதிநான்கனுள், மிக விசேஷநூலாகிய சிவஞானசித்தியார் சுபட்சத்தின் கண்ணுள்ள முதற்சூத்திர முதற்றிருவிருத்தம். இத்திருவிருத்தமே, இன்று நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டவிஷயம். இவ்விருத்தம் உலகிற்கு இன்ன தன்மையை யுடைய தலைவன் வேண்டுமென்பதை விளக்க எழுந்தது, அதனை விளக்குதற்பொருட்டு, உலகமின்ன தென்பதையும், அதன்றன்மை யின்னதென்பதையும், அதற்கு ஓர் தலைவன் இன்ன காரணத்தால் வேண்டுமென்பதையும், அத்தலைவன் யாவன் என்பதையும், அவன் இன்ன தன்மையன் என்பதையும், அவன் உலகத்தோடு இன்ன சம்மந்தமுடையா னென்பதையும் இவ்விருத்தம் ஒருவாறு விபரித்து விளக்குவதாகும். இவ்விருத்தத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் எடுத்துக்கொண்ட'உலகமும் தலைவனும்' என்னும் விஷயத்தை ஒரு சிறிது ஆராய்ச்சி செய்வாம்.

      2. சில பொருள்கள் கூடியிருக்கப்பார்க்கிறோம். அவைகள் பல திறத்தனவாயிருந்தால் மட்டும், அவைகளில் தலையாயது எது' எனத்தெரிந்து கொள்ள முயலுவோம். அவைகள் யாவும் ஒரே திறத்தனவாயிருப்பில், அவற்புள் தலைமைப் பொருளைத் தெரிந்து கொள்ள முயலோம். இவ்வுண்மை அறிவில் பொருள்களாகிய ஜடப்பொருள் கட்குமட்டுமல்ல. உயிருடைப் பொருள்களுக்குமே, யிவ்வுண்மை பொருந்துவதாகும். மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்குமே பொருந்துவதாகும். பலமனிதர் கூடிய ஓர் சபைக்கூட்டத்திற் செல்லில், ஆண்டு பலதிறத்த உருவினரும். அருவினருமிருந்தாலன்றி, அவர்களுக்குள், தலைவன் ஆர் எனத்தெரிய நினையோம். பலவித உயிருடைப் பொருள்களாலும் உயிரில் பொருள்களாலுமாய தோர் தொகு தியாகிய உலகிற்குத்தலைவனுண்டா, என ஆராய்தற்கும் இதுவேதுணிபாம். இவ்வுலகம் பல விதபொருள்களால் ஆக்கப்பட்டிருந்தாலன்றி, அதற்கு ஓர் தலைவனுண்டா என்று, ஆராய்ச்சி யெழுதற்குக் காரணமேயில்லை. எனவே, உலகிற்குத் தலைவனுண்டாவென்று, ஆராயப்புகும் ஒருவன், முதல் முதல் ஆராய்ச்சிசெய்யவேண்டுவது, அவ்வுலகம், பலவேறு பொருள்களால் ஆக்கப்பட்டிருக்கின்றதா என்பதே. அதனையே, நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட திருவிருத்தம், முதற்கண் ஆராய்ச்சி செய்கின்றது.

       3. உலகம் பலவேறு பொருள்களால் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதை, நாம் நமது பிரத்தியட்ச பார்வையிலே தெரிகிறோம். இப்பிரத்தியட்ச பார்வையை மயக்கத்தோற்றம் என்பாருமுளர். ஒருவர் பார்வைக்கு விறோதமாய், மற்றொருவர் பார்வையிருந்தால் மட்டும், இவருள் யாரானு மொருவர் பார்வை, மயக்கப் பார்வையாயிருக்கலாம். அன்றி, எல்லார் பார்வையிலும் உலகம் ஒன்று போற் காணப்பட, அப்பார்வை மயக்கப்பார்வையாமாறில்லை. ஒருகால், உலகினை ஒரே பொருளாகக்காணுவாரிருப்பில், அவரும், அவ்வுலகினைப் பலபொருள்களாகக் காணுபவரும், வெவ்வேறு திறத்திணராய் முடிவரன்றோ. எனவே, உலகம் பலவேறு பொருள்களாலாக்கப்பட்டதாயே முடிந்து, நம்பிரத்தியட்சபார்வையே உண்மைப் பார்வையாய் முடிகிறது. நாமோ, இப்பூவுலகம் போன்ற பல உலகங்களையும், பல கிரகங்களையும், பார்க்கிறோம். அவற்றுள், பலவேறு பொருள் களிருக்கவும் பார்க்கிறோம் உதாரணமாக, நாம் வாழும் இவ்வுலகத்தில் உயிருடைப் பொருள்களையும், உயிரில் பொருள்களையும், பார்க்கிறேம் .'உயிரில் பொருள்களுள்ளும், பலவித பொருள்களைப் பார்க்கிறோம். உயிருடைப் பொருள்களுள்ளும், பலவித பொருள்களைப்பார்க்கிறோம். உயிரில் பொருள்கள், உருவினாலும், தன்மையினாலும், பல திறத்தனவாய்க் காணப்படுகின்றன. உயிருடைப் பொருள்களோ, அறிவினாலும் பலதிறத்தனவாய்க் காணப்படுகின்றன. இவ்வெல்லாப் பொருள்களையும், உரு, தன்மை, அறிவு, முதலிய பேதத்தினால், ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் மூவேறு வகுப்பிலடக்கலாம். எனவே, உலகம் பல என்பதையும், அவற்றுள் ஒவ்வொன்றும் பலவேறு பேதப்படக்கிடக்கின்ற தென்பதையும், உணர்த்து தற்கே நம்மாராய்ச்சித் திருவிருத்தம். ஒருவனோடொருத்தியொன்றென் றுரைத்திடு முலகமெல்லாம் என்று கூறியது.

      4. இது காறும் உலகம் பலவேறு பொருள்களாலாக்கப்பட்டிருப்பதாகக் காட்டினோம். இவ்வாறிருப்பதால் மாத்திரம், உலகற்குத்தலைவனுண்டென்பது பெறாது. ஓர் கூட்டத்தில், பல மனிதரிருக்கிறார்கள். என்றாலும், இவர்கள் மாட்டுச்செயல் நிகழ்ந்து, அச்செயலும், அக்கூட்டத்தாருள், ஒருவர் செயலுக்கு மற்றவர் செயல் கீழ்ப்பட்டு நிகழுமேல், அவ்வொருவர், மற்றவர்க்குத்தலை வனாதல் கூடும். அன்றி, அக்கூட்டத்தில், ஒருவர் மாட்டும் யாதுஞ்செயல் நிகழாதிருப்பில், அக்கூட்டத்திற்குத் தலைவனுண்டா வென்று விசாரித்தற்கேயிடமின்றாம். இது போலவே, ஓர் தேசத்திலுள்ள ஒருவர் மாட்டும், யாதுஞ்செயல் நிகழாவேல், அத்தேசத்திற்குத் தலைவனுண்டாவென்று விசாரித்தற்குமிடமின்றாம். உலத்திற்குத் தலைவனுண்டாவென்று விசாரித்ததற்கும், இதுவே முறையாம். உலகத்தில் நாமுளதாகக்கூறிய, பலவேறு பொருள்களில், ஏதாவது சில பொருள்கள் மாட்டு ஏதானுஞ், செயல் நிகழுமேல், அச்சில பொருள் கட்குத் தலைவனுண்டாவென்று ஆராய்ச்சிசெய்ய இடமுண்டு. என்பவே, நாம் இப்போது ஆராய்ச்சி செய்ய வேண்டியது, உலகத்திலுள்ள பொருள்களில், ஏதாவது பொருள்கள் மாட்டுச்செயல் நிகழ்கின்றதா; எவ்வெப்பொருள்கள் மாட்டுச்செயல் நிகழ்கின்றது; என்பவைகளே. அதனையே யடுத்து ஆராய்ச்சி செய்வாம்.

5. உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளும், எப்போதும் ஒரே நிலையிலில்லை, யென்பதை, நம்முடைய பிரத்தியட்ச பார்வையிற் காணலாம். இப்பிரத்தியட்சக் காட்சியும், உலகத்திற் பலவேறு பொருள்கள் உண்டெனக் காண்டல்போல், உண்மைக் காட்சியோயாம். நம்பிரத்தியட்ச பார்வையில், ஒவ்வொரு பொருளும், ஓர் காலத்துத்தோன்றுகின்றது. சிறிது காலம் நிற்கின்றது ஓர் காலத்து அழிவுமெய்துகின்றது, இவ்வாறு ஒவ்வொரு பொருளும், தனித்தனி தோன்றி நின்றழிவதோடு, ஒவ்வொரு கூட்டப் பொருள்களும் ஒருங்கு சேர்ந்து தோன்றி நின்றழிவதையும் பார்க்கிறோம். இத்தகைய பல்வேறு கூட்டப்பொருள்கள், ஒருங்கே தோன்றி நின்றழிதலுங் கூடும். இப்படியே எல்லா உலகங்களிலுமுள்ள, எல்லாப்பொருள்களும், ஒருங்கு சேர்ந்து தோன்றி நின்றழிதலுங் கூடும், இவ்விதத்தோற்ற நிலைகேடுகள், உயிரற்ற ஜடப்பொருள்கள் மாட்டு மாத்திரமன்றி, உயிர்களோடு கூடியதனுக்களுக்குமுண்டு. அவ்வுயிர் தோன்றி நின்று கெடவில்லையேனும், அவற்றோடு கூடிய தனுக்கள் தோன்றி நின்றழிகின்றன. தனித்தனியும் தோன்றி நின்றழிகின்றன. சேர்ந்துந் தோன்றி நின்றழிகின்றன. எத்தனையோ தேசங்கள், கடல்களால் மூடப்பட்டு, ஆண்டுள்ள ஜீவர்க்களோடும் பொருள்களோடும், மாண்டும் மறைந்தும், போனதாய் சரித்திரங்களால் தெரிந்துளோம். எனவே உலகப்பொருள்கள் யாவும் செயற்படுகின்றன, எனத்தெரிந்தோம். இனி இச்செயல்கள், எத்தன்மைத்தான் செயல்கள் என்பதையா ராய்வாம்.

      6. பொருட்கட்குச் செயல்களிருந்தால், அவற்றிற்குத் தலைவனுண்டென ஊகிக்கலாமென்றோம். பொருள் கட்குச் செயல்களிருப்பினும், அச்செயல்கள் அவற்றினியற்கையாயு மிருக்கலாம். ஆனால் ஒரு பொருளுக்கு ஒரு செயல் இயற்கையானால், அச்செயலே அப்பொருளின் கண், எக்காலத்தும் நிகழ வேண்டும். அஃதன்றிமாறுபட்ட செயல், அப்பொருளின் கண் எந்நாளும் நிகமாது. அதுபோலவே, உலகப்பொருள்களின் செயல்களும், அவற்றினியற்கையே யானால், அவ்வப்பொருள்களில், அவ்வச்செயல்களே, எக்காலத்தும் நிகழவேண்டும். தோன்றும் பொருள் தோன்றிக் கொண்டேயிருத்தல் வேண்டும். ஒடுங்கும் பொருள்கள் ஒடுங்கிக்கொண்டேயிருத்தல் வேண்டும். அவ்வாறன்றி ஒரே பொருள் ஒருகாலத்து தோன்றி, மற்றொரு காலத்து ஒடுங்கவாவது, அல்லது ஒருகாலத்து ஒடுங்கி மற்றொரு காலத்துத் தோன்றவாவது, கூடாது. ஆனால் உலகப்பொருள்களின் செயல்களோ, அத்தன்மைத்தல்ல. ஒரே பொருள் ஒரு காலத்துத் தோன்றுகின்றது; ஒரு காலத்து நிற்கின்றது; மற்றொரு காலத்து ஒடுங்குகின்றது. அதாவது, ஒரே பொருளிலே மாறுபட்ட செயல்கள் நிகழ்கின்றன. இத்தகைப் செயல்கள், ஓர் தலைவனையாற்றி நிகழாவென்பதையுணர்த்து தற்கே, நம்மாராய்ச்சித் திருவிருத்தம், பொதுவாக,
செயற்படு தலால்' என்று கூறாது, அச்செயல்கள் ஒன்றற்கொன்று மாறுபட்ட செயல்கள் என்பதை விவரித்து, ''வந்து நின்று போவதுமாதலாலே'', என்று விளக்கியது. நாமிதுகாறும் உலகப்பொருள், பலதிறத்தனவென்றோம், அவையாவும் செயற்படுமென்றோம். அச்செயல்களும், மாறுபட்ட செயல்களாமென்றோம். என்றாலும் இச்செயல்களை யுடைய பொருள்களுக்குத் தலைவன் வேண்டுமென்பது பெறாது மாறுபட்ட செயல்களுடையதாயிருத்தலே, உலகப்பொருள்களின் இயற்கை யென்னலாம். ஆதலால், அச்செயல்களின் தன்மை, தலைவனை அவசியம் வேண்டிநிற்குந்தன்மையாயிருந்தாலன்றி, உலகிற்குத் தலைவன் வேண்டுமென்பது பெறாது. எனவே, உலகப்பொருள்களின் மாறுபட்ட செயல்களில், தலைவனை வேண்டி நிற்குந்தன்மையுளதா வென்பதை யடுத்து ஆராய்ச்சி செய்வாம்.

7. ஒர் சபைக்கூட்டத்தில், பல மனிதர்கூடியிருக்கிறார்கள், ஒவ்வொருவர் மாட்டும் செயல் நிகழ்கின்து. ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். ஒருவர் செயற்கும், மற்றவர் செயல்கள் அடங்கி நிகழ்கின்றதென்பதில்லை. ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். ஒருவர் பேசியபின் மற்றொருவர் பேசுவதென்றும் முறையுமில்லை. இன்னவிஷயத்தை தான் இன்னார் பேசுவதென்றும் முறையுமில்லை. இவ்வளவு காலம் இன்னார் பேசலாமென்பதுமில்லை. அச்சபைக் கூட்டத்தில், பல திறத்தினரிருந்தாலும், அவர்கள் மாட்டு மாறுபட்ட செயல்கள் காணப்படினும், ஆண்டு நிகழும் செயல்களின் தோற்றம், நிலை இறுதிகட்கு யாதொருமுறையென்பதேயில்லை. இவற்றையெல்லாம் பார்த்ததும், இச்சபைக் கூட்டத்திற்குத் தலைவனில்லையெனத் தீர்மானமாய்த் துணிவோம். இதுவன்றி; இச்சபைக்கூட்டம் யாதேனும் முறையில் நிகழ்கின்றதாய் வைத்துக் கொள்வோம். இங்கே, ஒருவர் பேசிமுடிந்தபின்பே, மற்றொருவர் பேசுகிறார். ஒவ்வொருவரும், ஓர் விஷயவரம்பினின்றே, பேசுகிறார். தான் பேசும்போது, தனக்கு ஓர்காலவரையறை யிருப்பதாக எண்ணிப்பேசுகிறார். ஈண்டு நடைபெரும்செயல்களின் தோற்ற நிலை இறுதிகள் யாவும், ஒர் முறையின்படியே நடைபெருகின்றது, இவற்றைப் பார்த்ததும் இச்சபைக்குத் தலைவனுண்டேயெனத்துணிகிறோம்.

8. இதுபோன்ற உண்மையைத், தேசத்தலைமையிலுங் காணலாம், ஓர் தேசத்தில், சிலர்பால், உடைமைகள் புதிதாய்த்தோன்றுகின்றது. சிலர், தங்கள்பாலுள்ள உடைமைகளை யிழக்கிறார்கள். சிலர் தங்கள் பாலுள்ள உடைமைகளைச் சிலகாலம் அனுபவித்து வருகிறார்கள். இத்தகைய உடைமைகள், ஜனங்கள் பால் தோன்றுதற்கும், நிற்றற்கும், மாறற்கும், தேசத்தலைவன் சில சட்டதிட்டங்களைப் பிறப்பித்திருக்கிறான். இச்சட்ட திட்டங்களின்படியே, உடைமைகளுண்டாம்போது உண்டாகின்றன. நிற்கும்போது நிற்கின்றன. ஒழியும்போது ஒழிகின்றன. இச்சட்ட திட்டங்களின்றேல், ஒருவர் உடைமையை மற்றொருவன் எளிதிற் கைப்பற்றுவன். எவரும் தம்முடைமைகளைச் சரிவர அனுபவிக்கமுடியாது. இச்சட்டதிட்டங்கனின்படி, ஜனங்களை நடத்துதற்கு ஓர் தலைவன் அவசியம் வேண்டும். இத்தகைய தலைவனின்றேல், இச்சட்ட திட்டங்களின்படி, எவரும் நடவார். எனவே, ஓர் தேசத்திலுள்ள ஜனங்கள் பால், உடைமைகள் யாதொருமுறையுமின்றித் தோன்றி நின்றழியுமேல், அத்தேசத்திற்குத் தலைவனில்லை யென்றும்; அவைகள் யாதானு மோர் முறைப்படி தோன்றி நின்றழியுமேல், அத்தேசத்திற்குத் தலைவன் உண்டென்றும் துணிவோம். இவ்வாறே, உலகப்பொருள்களின் தோற்றநிலை கேடுகளுக்கும், ஓர் முறையுண்டு, எனத்தெரிந்து கொள்ளலாம். அது எங்கனமென்பதை யடுத்து ஆராய்வாம்.

9. உலகப்பொருள்களில், யாதானுமொன்றின் தோற்ற முதலியவற்றைக் கவனிப்போம். பூமியினின்று ஓர் விருக்ஷம் உண்டாகிறது. நம் சாதாரண பார்வையில் அவ்விருக்ஷ உடம்பு பூறாவும் பூமியினின்றே யுண்டாவதாகப்பார்க்கிறோம். அப்பால், அவ்விருக்ஷம், தானாய்ப்பட்டு விழுந்த பின்னரோ, அன்றி வெட்டிவீழ்த்தப்பட்ட பின்னரோ, பூமியிலே கிடந்து பூமிக்கேயிரையாகின்றது. அவற்றினின் றுண்டாகிய இலைகாய் முதலியவைகளும், ஜீவர்களாலுண்ணப்பட்டும், படாமலும், பூமியையே சேர்கின்றன. எனவே நம்சாதாரண பார்வையில், பூமியிலே தோன்றிய விருக்ஷம் பூமியிலே நின்று, பூமியிலே ஒடுங்குகின்றது. நமது நுட்பப்பார்வையிலும், இதுவே உண்மையெனத் தெரிவோம். ஓர் விருக்ஷம் வித்தினின்று கிளம்புகிறது, மண்ணினின்றும் ஜலத்தினின்றும் தீயினின்றும், காற்றினின்றும், ஆகாயத்தினின்றுமே ஒவ்வோர் விதப்பொருள்களைக் கிரகித்துக்கொண்டு ஓர் பெரிய விருக்ஷமாக வளர்கின்றது. அப்பால் அவ்விருக்ஷம் கெடும்போது, பேற்கூறிய பொருள்கள், அவ்விருக்ஷத்தினின்று பிரிந்து, முன் எவ்வெவற்றினின் றெல்லாம் வந்தனவோ, அவ்வவற்றோடு போய் கூடுகின்றன. மண்ணினின்று வந்தது மண்ணினோடு கூடும். ஜலத்தினின்று வந்தது, ஜலத்தோடுகூடும். அப்படியே மற்றப் பூதங்களினின்று வந்தவை அவற்றிலேகூடும். இந்தியாயத்தினால், விருக்ஷம் என்னும் - பொருள் யாண்டு நின்றெல்லாம் தோன்றிற்றோ, ஆண்டெல்லாமொடுங்கு மென்பது, எவ்வாற்றானும் உண்மையெனத் தெரிகிறோம். இவ்வுண்மையை, மற்றைய பொருள்கள் மாட்டுங்காட்டுங்காணலாம். இவ்வாறு ஒடுங்கித் தொன்று முறையையே தர்க்க நூலார் சத்காரியமுறை யென்பர், இதனையே, நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட திருவிருத்தம் “வருமுறை” என்றது இம்முறைப்படியே உலகப்பொருள்கள் யாவும், தனித்தனியாயும், ஒருங்கு சேர்ந்தும், தோன்றி நின்றழியும் சபைக்கூட்டமும், தேசக்கூட்டமும் ஒர்முறையில் தோன்றி நின்றழிதலால், அவற்றிற்குத் தலைவன் உண்டெனத் துணிந்தமைபோல்; இவ்வுலகமும் சதாகாரியமுறைப்படி தோன்றி நின்றழிதலால், அதற்கும் ஒர் தலைவன் உண்டெனத் துணிதற்கு இடமுண்டு. இக்கருத்தையே நமது ஆசாரிய சுவாமிகள்,

மூத்தவனா யுலகுக்கு முந்தினானே,
      முறைமையா லெல்லாம் படைக்கின்றானே
      ஏத்தவனா யேழுலகு மாயினானே''
       என்று அருளினார்கள். அதனையே நம்மாராய்ச்சி விருத்தம்
''வருமுறை வந்து நின்று போவது மாதலாலே,
       தருபவனொருவன் வேண்டும்.''              என்று கூறினது.

      10. உலகத்திற்குத் தலைவன் வேண்ெெமன்றாம். அத்தலைவன் ஒருவனோ, அன்றிப்பலரா என்பதும் சிறிது ஆராய்ச்சி வேண்டுவது. உலகிற்கு தலைவர் பலரென்று வைத்துக்கொள்வோம். இவர் பலவேறு முறையில், தொழிலியற்றுபவராயிருத்தல் வேண்டும். அன்றி ஒரே முறையில் தொழிலியற்றுபவராயிருத்தல் வேண்டும். இவர் தொழிலியற்று முறை பல்வே. றுவிதமாயிருப்பில், பல்வேறு தொழிலாளிகளாலியற்றப்படும் இரதம்போல் இவரால் தோற்றி நிறுத்தி யழிக்கப்படும் உலகமும், அதன் ஓர் பாகத்திற்கு மற்றோர்பாகம் பொருத்தக்குறைவாய் முடியும். அன்றியும், நாம் முன் உலகம் ஓர் முறையிலேயே தோன்றி நின்றழியுமென்று விளக்கிய உண்மையோடு ஒவ்வாதாயும் முடியும். இதுவன்றி, இப்பலதலைவர் தொழிலியற்றும் முறையும், ஒரே முறையாய் முடியில், நாம் உலகத்திற்குத் தலைவன் உண்டென முன்காட்டிய நியாயத்தினாலே, இப்பல தலைவர்க்கும் தலைவனுண்டெனப்பட்டு, உலகம் ஒரே தலைவனையுடைத்தென முடியும். இக்கருத்தினை யுட்கொண்டே நம்மாராய்ச்சத் திருவிருத்தம் -
"தருபவன் ஒருவன் வேண்டும்''        என விளக்கியது.

      11. இவ்வொரே தலைவன், ஜடப்பொருள்களிலொன்றா, மனிதராதி படிப்பூவுலக உயிர்களிலொன்றா, அன்றி இந்திராதி தேவர்களிலொருவரா என்பதே, நாம் அடுத்து ஆராயச்சி செய்யக் கிடப்பது, - இவ்வுலகத்திலுள்ள உயிரில் பொருள்களும், உயிருடைப்பொருள்களும், ஒரு காலத்தில் ஒரு சேர அழியும் தன்மைத்து என்று முன்னரே விளக்கினாம். எனவே, இவ்வுலகத்தை ஒருசேர அழிப்பவன், அதன்கண்ணடங்கிய பொருள்களில் ஒன்றாயிருத்தல் முடியாது. அஃதாவது இவ்வுலகத்தலைவன் அதின் கண்ணுள்ள உயிரில் பொருள்களுள் ஒருவனாகான், உயிருடைப் பொருள்களில் ஒருவனுமாகான். இனித் தேவர்களிலொருவனா கானோ எனில், தேவ உலகமும், ஒடுங்கிப்போகும் உலகமே. ஆதலால், அதனையும் மொக்குபவனே தலைவனாதல் வேண்டும். ஆனால், பிரமாதி மூவர்களிலொருவனாகானோ எனில், அவர்களும், தத்தங் காலவரையில், ஒடுங்குடவரேயா தலால், அவருள் ஒருவர் தலைவர் ஆதலும் முடியாது.

      நூறு கோடி பிரமர்கள் நொங்கினர்,
      ஆழகோடி நாராயண ரங்கனே,
      ஏ.று கங்கை மணலெண்ணி லிந்திரர்,
      ஈறில்லா தவன் ஈசனொருவனே.
      
என்று கூறியது தமிழ் வேதம். இவர்களையும் ஒடுக்குடவன் யாரோ, அவனே உலகத்தலைவனாவான். அவன் அழித்தற்றொழிலைத் தனக்கு விசேஷதொழிலாக வுடையவன். அவனே சகல. உலகங்களையும் அவற்றிலுள்ள சகல சராசரங்களையும் ஒரு சேர ஒடுக்குபவன். அவனையே நந்தமிழ் வேதத்தில்

''வான்கெட்டு மாருதமாய்ந்து அமனீர் மண்கெடினும்
      தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத்தன்மையன்''

இவரையெ சர்வசம்மாரத்தலைவர் என்று கூறுவர். இத்தலைவரன்றி ஏனைக்கடவுளர், உலகத்தின் தோற்றம் நிலையிரதிகளிலெதையேனும் செய்யினும், அவருள் யாரும், அத்தொழில் எதையும், தனக்கு விசேஷதொழிலாக உடையாராகார். அவர், நாம் கூறிய சர்வ சம்ஹாரத்தலைவரின் கீழடங்கி நின்று, அவாணையின்படி, அத்தோற்ற நிலை பிறுதித் தொழில்களில் ஓர் ஏக தேசத்தைச் செய்பவரேயன்றி வேறில்லை. இவரையெல்லாம் தோற்றி நிறுத்தி ஒடுங்குபவரும், நாம் கூறிவரும் தலைவரேயாவர்.

படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
      காப்போற் காக்கும் கடவுள், காப்பவை
      காப்போன் காப்பவை கருதாக் கருத்துடை கடவுள்.''

என்று விளக்கியது, நம் தமிழ்வேதம். இதுபற்றியே இத்தலைவர் ஏனை கடவுளர்க்கெல்லாம் தலைவரெனப்படுகிறார்.

செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கு மற்றை
      மூவர்கோனாய் நின்ற முதல்வன்''      என்று திருவாசகம் கூறியதும், இத்தலைவனையே. இத்தலைவன் எல்லா உலகங்களையும், ஒரேசேர ஒடுக்குபவன் மாத்திரமன்று. அவனையன்றி, மீள அவ்வுலகங்களைத் தோற்றுவித்தற்கு வேறு பொருளின்றாதலால் அவனெ, அவற்றையெல்லாம் மீளத் தோற்று விப்பவனுமாவான். இக்கருத்தினையே, நம்மாராய்ச்சித் திருவிருத்தம்,

தான் முதலினுமாரி மருவிடும்” என்று கூறினது.

12. இவ்வுலகத்தை ஒரு சேர ஒடுக்குபவனும், அதனை மீளத்தோற்றுவிப்பவனும், அதன் தலைவன் ஒருவனேயென்றோம். எனவே, உலகம் தோற்றுதற்கு முன்னும், அத்தலைவனிருத்தல் வேண்டும். அது ஒடுங்கிய பின்னும் அவனிருத்தல் வேண்டும். உலகம் உளதாம்போதும் அவன் உளன். இலதாம்போதும் அவன் உளன், உலகத்தோடு உடனிருப்பவனுமவனே. அதனின்று வேறானவனுமவனே. உலகத்தோடுடனிருக்கும் போது, அதனோடதுவதுவாய் நிற்பன். அவ்வாறதுவதுவாய் நிற்பதனாலேயே, உலகப்பொருள்களைப் பிரித்து ஆராயச்சி செய்யும் பூதசாஸ்த்திர ஆராய்ச்சிக்காரருக்கு, அவன் புலப்படுவதில்லை. இக்கருத்தி னையே, திருவாசகம், "பூதகள் தோறும் நின்றாயெனினல்லாம், போக்கிலன் வரவிலன்'' என்றும் ''கண்முதற் புலனாற் காட்சியுமில்லான்'' என்றும் கூறியது. அவன் உலசப்பொருள்கள் யாவற்றினோடும், அதுவதுவாய் நிற்றலையே நந்தமிழ் வேதம்    'மூவுலகுந் தானாய முதல்வன் தன்னை''  யென்றும்

''இறையவன்காண் ஏழுலகுமாயினான்காண்
      ஏழ்கடலுஞ் சூழ்மலையுமாயினான் காண்'' என்றும்,
"பாரானை மதியானைப் பகலானானைப்,
      பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
       நீரானைக் காற்றானைத் தீயானானை''

என்றும் விளக்கியது. இவ்வுண்மைக் கருத்தினையோராது, தலைவனே உலகமாய்ப் பரிணமித்து ஒடுங்குகின்றான், அவனே உலகிற்கு முதற்காரணன், என்று கூறி, அத்தலைவற்குப் பரிணமித்து ஒடுங்குதலாகிய விகாரத்தையும் ஏற்றவர். அவ்வித விவகாரத்துவம், அவனுக்கில்லை; அவன் என்றும் ஒரேவிதமான நிலை பேறுடையன் யென்பதை, நாம் முன்னேகூறிய திருவாசகம், "தான் கேட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்'' என்று விளக்கியது. இக்கருத்தினையே நம்மாராய்ச்சித் திருவிருத்தம் "தான் முதலீறுமாகி மருவிடும்'' என்பதெனொடு நில்லாது மன்னி நின்று''  என்றும் விளக்கியது.

13. அன்றியும், உலகில் அறிவுடைப்பொருள்களுமுள அறிவில் பொருள்களுமுள, என நாம் முன்னரே கூறினோம். நந்தலைவனோ, அறிவுடைப் பொருளென்பதை யாரும் ஒப்புவர். இவ்வறிவுடைத் தலைவனினின்றும் உலகின் கண்ணுள்ள அறிவில் பொருள்கள் ஒரு சிறிதும் உண்டாகா. இதனை உணர்த்து தற்கே, நம்மாராய்ச்சி திருவிருத்தம், நந்தலைவரைச் “சித்துரு''  என விளக்கியது. ஆனால், உலகிலுள்ள உயிருடைப்பொருள்கள், தலைவனினின் றுண்டாதல், எவ்வாற்றானும் கூடுமா, என்பதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நந்தலைவற்குப்போல், நமக்குமறிவுண்டு; நந்தலைவர் அறிவு பேரறிவினராயிருக்கலாம்; நம்மறிவு சிற்றறிவாயிருக்கலாம்; என்றாலும் பேரறிவினின்றும் சிற்றறிவு உண்டாகாதென்பதில்லை; ஓர் கொள்ளிப்பந்தம் சுழற்றப்படுமேல், அதின்கண்ணினின்றும் பல பொறிகள் கிளம்பி வருவதைப் பார்க்கிறோம்; அது போலவே, பேரறிவினாகிய நந்தலைவர் மாட்டினின்றும், சிற்றறிவினராகிய நாமுண்டானோமென்பதும், பொருத்த மேயாகுமென்று கூறி நந்தலைவரை கொள்ளிப்பந்தத்திற்கும், நம்மை அதன் கண்ணினின்றும் கிளம்பிய பொறிகட்கும். உவமை கூறுவர். இவர் மதியிருந்தவா றென்னே? கொள்ளிப்பந்தத்தினொளிக்கும், அதன் கண்ணினின்று கிளம்பிய பொறியினொளிக்கும், அளவினாலன்றி, வேறெவ்வாற்றானும் பேதமில்லை. நந்தலைவரறிவிற்கும், நம்மறிவிற்கு முள்ளபேதம், இது போலல்ல. நம்மறிவு, மலபந்தத்தால் அனாதி துவக்கிக் கட்டுண்டு கிடக்கும் பெத்த அறிவு. நந்தலைவரே, நம்மீது கொண்டுள்ள கருணையால், அம்மலத்தினை நீக்கி, நம்மறிவினை முத்த அறிவாக்குகின்றார். அவரது அறிவோ, அத்தகைத்தன்று. அது அநாதி துவக்கியே, முத்த அறிவு. என்றும் முத்த அறிவு. இவ்வறிவுடைத்தலைவன் கண்ணின்றும், பெத்த அறிவுடையுயிர்கள், எக்காலத்திலு முண்டாகா. இதனை யுணர்த்துதற்கே, நம்மாராய்ச்சி திருவிருத்தம், “சித்துரு'' என வாளா கூறாது, "அனாதி. முத்த சித்துரு'' என விசேஷித்துக் கூறியது. எனவே, நந்தலைவர், உலரிற்குக் கேவலம் நிமித்தகாரணரேயன்றி, எவ்வாற்றானும் முதற்காரணரே யென்பதையும், இத்திருவிருத்தம் விளக்குவதாய் முடிந்தது.

14. இதுகாறும் உலகம் பல திறத்தவான பொருள்களின் தொகுதியென்றும், அப்பல திறத்த பொருள்களும், என்றும் ஒரு படித்தாய் நில்லாது செயற்படுகின்றன என்றும்; அச்செயல் களும் ஒரேவிதமாயன்றி, மாறுபட்டவைகளேயென்றும், அம்மாறுபட்ட செயல்களும், சக்காரிய முறைப்படி நிகழ்கின்றனவென்றும், இக்காரணங்களினாலே, உலகிற்கு ஓர் தலைவன், அவசியம் வேண்டுமென்றும், அத்தலைவன் ஒருவனே யாதல் வேண்டுமென்றும், அவ்வொரு தலைவனும் சர்வ சம்மாரத்தலைவனாதல் வேண்டுமென்றும், அவனே உலகினை மீள உண்டாக்குபவனென்றும், அவன் யாதொரு விகாரமின்றி நிற்பனென்றும், அவன் உலகமாகப் பரிணமிக்க மாட்டானென்றும், அவனினின்றும் உலகிலுள்ள உயிருடைப் பொருள்களாவது, உயிரில்பொருள்களாவது தோன்றமாட்டாதென்றும், அவன் உலகிற்கு எவ்வாற்றாலும் முதற்காரணனல்லவென்றும், அவன் கேவல நிமித்த காரணனே யென்றும். ஆனால், உலகம் உளதாம் போது அவ்வுலகப்பொருள்களோடு, அத்தலைவன், அவ்வப்பொருள்களேயாய், அவற்றினோடெல்லாங் கலந்து நிறகின்றானென்றும், அவ்வுலகமிலதாம் போது, ''அநாதி முத்த சித்துரு " வாய் நிற்கின்றானென்றும், இன்னன பிறவும், நம்மாராய்ச்சித் திருவிருத்தத்தினின்றே விளக்கப்பட்டன. இதனையுற்ற நோக்கும்போது, " பாரிலுள்ள நூலெல்லாம் பார்த்தரிய சித்தியிலே யோர்விருத்தப் பாதிபோதும்'என்ற ஆன்றோர் வாக்கு, நம்மாராய்ச்சி நூலின் ஓர் குறித்த திருவிருத்தத்திற் கன்றி அந்நூலிலுள்ள எல்லா திருவிருத்தங்களுக்குமே பொருத்தமாம், என்று கூறுதல், ஒரு சிறிதும் உபசாரமாகாது. இத்துணையருமை பெருமை வாய்ந்துள்ள இந்நூலை, நமக்குத் திருவாய் மலர்ந்தருளிய, நமது பரமாசாரிய சுவாமிகளாகிய, அருணர்தி சிவத்தின் திருவடிகளை யென்றுந் துதித்துப் பேரானந்தப் பெருவாழ்வைப் பெறுவோமாக.
''பாதிவிருத்தத்தாலிப்பார் விருத்தமாகவுண்மை
      சாதித்தார் பொன்னடியைச் சாருநாளெந்நாளோ.''
                     Y. P. காந்திமதினாதப்பிள்ளை,

சித்தாந்தம் – 1914 ௵ - ஜனவரி / பிப்ரவரி ௴


No comments:

Post a Comment