Saturday, May 9, 2020



உருத்திராட்சவைபவம்

உருத்திராட்சசாபாலம்.

ருத்ராட்சாஜாதாஸ் ஸர்வா நுக்ரகார்த்தாய தேஷாம் நாமோச்சாரண்
மாத்ரேண தசகோப்ரதாநபலம் தர்சநஸ்பர்சநாப்யாம் த்விகுணபலம்.''

அனைவர்க்கும் அநுக்கிரகஞ் செய்யும் பொருட்டு உருத்திராட்சங்கள் உண்டாயின. அவற்றின் பெயரைச்சொன்ன மாத்திரத்தி லேயே பத்துக் கோதான பலனாம். அவற்றைக் காண்டல் தீண்டல்களுக்கு மேலும் மேலும் இரட்டிப்பாகுபலனாம்.

ஸ்காந்தபுராணம்.

விர்பூதிர்யஸ்ய பாலேநாங்கே ருத்ராட்சதாரணம்
நசம்போர்பவநே பூஜா ஸவிப்ரச் ச்வபசாதம்
காதந்மாம்ஸம் பிபந்மத்யம் ஸங்கச்சந்நந்த்யஜாமபி
பாதகேப்யோ விமுச்யேத ருத்ராட்சேஸியஸிஸ்திதே.

எவனுடைய கிருகத்தில் சிவபூஜையில்லையோ அந்த விப்பிரன் நாய் மாமிசத்தைத் தின்கிறவனிலும் கீழ்ப்பட்டோனாவன். மாமிசத்தையுண்பவனாயினும், மதுவைக்குடிப்பவனாயினும், நீசஸ்திரீயைப் புணர்பவனாயினும், அவனது தலையில் உருத்திராட்சமிருப்பின் பாவத்தினின்று விடுபடுவன்.

பராசரபுராணம்

''மகாதேவச்ச விஷ்ணுச்ச ப்ரஹ்மா தேஷாம் விபூதய:
தேவாச்சாந்யே ஸதா பக்த்யாகலு ருத்ராட்சதாரிண:
பாபிஷ்டாநாம் மநுஷ்யாணாம் ருத்ராட்சாணாஞ்சதாரணே
ச்ரத்தாநஜாய தேஸாக்ஷாத்வேத ஸித்தேவிமுக்திதே.”! !

மகாதேவன் (குணருத்திரன்,) விட்டுணு, பிரமன் மற்றைத்தேவர்கள் யாவரும் எஞ்ஞான்றும் உருத்திராக்கத்தைப் பத்தியுடன் தரிக்கின்றனர்.

பாவிகளான மனிதர்கட்கு, வேதத்தினால் சித்தித்ததும், முத்தியைக் கொடுப்பதுமான உருத்திராக்க தாரணத்தில் சிரத்தையுண்டா வதில்லை.



மாநவபுராணம்.
"ருத்ரர்ட்சம் தாயந்பாபம் குர்வந்நபிசுதஷ்கரம்!
ஸர்வம் தரதிபாப்மாம் ஜாபாலச்ருதிராஹஹி.!!

மிக்க கொடும்பாவத்தைச் செய்கிறவனேனும், உருத்திராக்கத் தையணிவோன் எல்லாப் பாவத்தையுங்கடந்து செல்வோனாவனென்று ஜாபாலச்சுருதி சொல்கிறதன்றோ.

இன்னும் பஸ்மஜாபாலம், பிருஹஜ்ஜாபாலம், ராமரஹஸ்யம் ருக்வேத அட்சமாலிகை, யஜுர் வேததட்சணாமூர்த்தி, ஸாமவேதருத் ராட்சஜாபாலயென இத்தொடக்கத்து உபநிஷதங்களும், ருக்வேதருத்ரநமகமும் உருத்திராட்சமகிமையை எடுத்துப்புகழ்கின்றன.

இங்ஙனமிருந்தும், சித்தாந்தத்தில் வல்லுநராகிய சிறப்புச்சைவரிற் பெரும்பாலோர் உருத்திராட்சம் தரிப்பதில்லை. சித்தாந்தம் கல்லாத பொதுச்சைவரிற் பெரும்பாலோர் தரித்து வருகின்றனர். தென் தேயத்தில் பாம்பபைச்சைவர்கள் எனச்சொல்லிக் கொள்வாரும், தேசிர்களும், அபிஷேகஸ்தர்களும், தம்பிரான்மார்களும் உருத்திராட்சமின்றியே சிவாலயத்திற்குள் வரக்காண்கின்றோம். சித்தாந்திகள் எனப்பெயர் பூண்டபலர் சமாஜங்களில் உருத்திராட்சமின்றியே உபந்நியாசம் செய்கின்றனர், புராணிகர்களுட்சிலர் உருத்திராட்சமின்றியே பிரசங்கங்கள் செய்து வருகின்றனர். சைவர்கள் பலர் பூசாகாலத்தில் மாத்திரந்தரித்து மற்றைய காலங்களில் தரியாதிருக்கின்றனர். விபூதியையும் உருத்திராட்சத்தையும் தரித்தவரே சைவராவரெனச் சாஸ்திரங்களனைத்தும் கூற, ஒன்றை நீக்கி மற்றொன்றை மாத்திரம் தரித்து உலவுபவர் சைவராவரா? உருத்திராட்சம் தேகத்தினின்றும் நீங்கக்கூடாதென்றே சிலர் உருத்திராட்ச கடுக்கன் பூணுகின்றனர். சிலசைவர் விபூதிமாத்திரந்தரித்து உருத்திராட்சந்தரிக்க மனங்கூசு கின்றனர். இவர் எவ்வகைச்சைவரோ? மஞ்சள் மாத்திரம் குளித்து மாங்கல்யந்தரிக்கக்கூசும் மாதரோடிவர் ஒப்பார் போலும். இம்மா தரை நாம்கண்டதில்லை. உருத்திராட்சம் தரிக்காவிடில் சைவராகாரோ எனச் சிலர் வினவுவர். விபூதி தரிக்காவிடில் சைவராகாரோ என அவரைவின வில் என்ன பதிலுரைப்பர். மஞ்சளையும் மாங்கலியத்தையுமிழந்த மாதர்களிடத்துக் கேள்வியேயில்லை. அங்ஙனமே விபூதியையும் உருத் திராட்சத்தையு மிழந்தவர்களிடத்தும் கேள்வியேயில்லை, ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுவாரிடத்திலேயே கேள்வி விளைகிறது.

"பூதி பெருமை புகலும்வே தாகமத்தில்
நாதன் மணியு நவின்றிருக்கப் - பேதித்தே
யொன்றைக்கைக் கொண்டுமற் றொன்றை விடுத்திடுதல்
நன்றாமோ சைவீர் நவில்''
என்றார் பிறரும். உருத்திராட்சம் தரிப்பது வெறும்பகட்டென்பர் சிலர், அங்ஙனமாயின் விபூதியும் பகட்டாகமுடியாதோ? இரண்டும் பகட்டே என்பாரேல், இங்ஙனம் கூறும் புறச்சமயர்முன் நமக்கு வார்த்தையில்லை. இத்தகையர் பால் விபூதி உருத்திராட்சமிரண்டும் இன்றியமையாச் சத்தியசாதனங்கள் என்று நாட்டவேண்டுவது நமக்கு வேறுசமயமுண்டு, தற்சமயம் நமது சோதரர்களாகிய சுத்தாத்துவித சித்தாந்த வைதிக சைவரிடத்திலேயே நமக்குச் சம்பிரதாய வழக்காகும். ஆகவே நமது சைவசாஸ்திரங்களிற் கட்டளையிட்டபடி விபூதி யுருத்திராட்சம் இரண்டையும் எக்காலத்தும் தரித்து வாழ்வதாவே இன்றியமையாத கடனெனக் கொள்ள வேண்டுவது சற்சைவர்கள் கடனாகும்.

சிவமகா புராணம்.

“விபூதிர்யஸ்யநோ பாலேகளே ருத்ராட்சதாரணம்
நஹிஸிவமயீவாணீ தந்த்யஜே தந்த்யஜம்யதா
சைவந்நாமததாகங்கா விபூர்திர்ய முநாததா
ருத்ராட்சா விதிஜாப்ரோக்தா ஸர்வபாபப்ரணாஸிநி.''

எவனுடைய வாயினில் சிவநாமங்களும், நெற்றியில் விபூதியும், கழுத்தில் உருத்திராட்சமும் ஆகிய இம்மூன்றும் விளங்குமோ அவனைப்பார்த்தால், கங்கை, யமுனை சரஸ்வதி இம்மூன்றின் சங்கமமான திரிவேணி ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். சகலபாபங்களும் போம். அவனை யிவ்வாறுமதியாமல் அவமதிப்போர் இப்பொழுதே பெரும்பாவமடைவர். விபூதியணியாத நெற்றியும், உருத்திராட்சதாணமில்லாதகழுத்தும், சிவநாமம் புகலாதவாயும் உடையவனைக் கண்டால் சண்டாளனைக் கண்டாற் போல் விலகிச் செல்ல வேண்டும். உருத்திராட்சமாலிகைதாங்கி நூறு மந்திரம் ஜபித்தால் ஆயிரம் ஜபித்த பலன் கிடைக்கும். சிவபெருமான், விஷ்ணு, சூரியன், சத்தி, கணபதி இவ்வைவர் மந்திரங்களை ஜபிப்பதற்கு உருத்திராட்சமே சிறந்தது. இதனால் சகல மந்திரங்களையும் ஜபிக்கலாம். முத்தி, புத்திர பாக்கியம்,.. ஐஸ்வரியம், வித்தை, கன்னிகை, கீர்த்தி முதலியவற்றை விரும்பினவர்கள் உருத்திராட்ச மணியைப் பரிசித்து ஜபித்தால் அவற்றைக் தடையின்றியடைவர். உருத்திராட்சத்தை விருப்பத்தோடாவது விருப்பமின்றியாவது அணிந்தாலும் பலனுண்டாம். உருத்திராட்ச மணியவேண்டுபவன் பொருள் கொடுத்து வாங்கவேண்டும். இனாமாகக் கொடுக்க வாங்கப்படாது. சிவமந்திரம் ஜபிக்கா தவனையும், உருத்திராட்சமணியா தவனையும் பரிசிக்காமல் தூரமாகப் போகவேண்டும். சர்வ விதைகளிலேயும் அவ்வம் முளைகளேயிருக்கின்றன வெனினும், உருத்திராக்கவிதையில் முக்தியாகிய முளை கிளம்புகிறது. உருத்திராட்ச மணிந்தவனப்பார்த்தால் பூதப்பிரேத பசாசசாகினிடாகினி முதலிய சகல கிரகங்களும், ஆபிசாராதிப் பிரயோகங்களும் அவனை நெருங்காது விலகியோடும்,. உருத்திராட்ச மாலிகையைப் பார்த்தால் சிவபெருமான் சந்தோஷிப்பர். ஸ்நானம் செய்யும் போது கழுத்திலுள்ள உருத்திராட்சத்தில் நீர் பட்டுத் தேகத்தில் சிந்தினால் கங்கையில் ஸ்நானம் செய்த பலனுண்டாகும். ஸ்நானம், தானம், ஜபம், ஓமம், அத்தியயனம், பிதுர்த்தர்ப்பணம், சிவபூஜை, சிரார்த்தம் முதலிய காரியங்களிலேயும் உருத்திராட்சம் தரித்துச் செய்தாலொழியப் பிரயோசனமில்லை.. உருத்திராட்சமின்றிச் சிவாலயத்திற் பிரவேசித்தால் ஒரு பிரயோசன முமுண்டாகாது.

ஆகவே சுத்தாத்துவித சித்தாந்தவைதிக சைவராவார். எக்காலமும் உருத்திராட்சாபரணம் பூண்டு வாழும் பாக்கியம் பெற்றவரேயாவர்,

மணவழகு.

சித்தாந்தம் – 1914 ௵ - ஜூலை ௴


No comments:

Post a Comment