Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
உயிர்.

உயிருண்மைக்குப் பிரமாணம்.

1. உயிரென்பது சூன்யமென்றாலென்னையெனில், அவ்வாறு இல்லை யென்கின்ற அறிவுடனே சொல்வதொன்றுளதாய் நிற்றலால், அதுசூனியமன்றென்க.

2. உடம்பே உயிரென்றாலென்னை யென்னில், உடம்பினிட த்தே நின்று, யானென்றும் எனதென்றுஞ் சொல்லப்படுஞ் செருக்கைப்பொருந்துதலால், உடம்பு உயிரன்று, உடம்பின் வேறாயுயிரென்பதொன் றுண்டென்க.

உடம்பின் வேறாயுயிருண்டென்பானேன்? இந்த உடம்பு தானே அறியுமென்றாலென்னையெனில், அவயவங்களினாலே யொன்றுங்குறை வின்றிப் பிணமாகக் கிடக்கும்போது அவ்வுடம்பிலே அறிவில்லை ஆதலால் உடம்பு உயிரன்றென்க.

பிணமாகக் கிடக்கும்போது இவ்வுடம்பினுள்ளே பிராணவாயு நீங்கினபடியால் அறிவு நிகழாதென்பாயாயின், நீயுயிரெனக் கொண்டவுடம்பிற்குக் காரணமாயிருக்கின்ற பூதங்களின் கூட்டங்களிலே ஒன்றாயினுங் குறைவின்றிக் கிடக்கு முறக்கத்தினும் பிராணவாயு நிகழ்க்திருந்தும் அறிவில்லை யாதலால், உடம்பு உயிரன்றென்க.

3. மெய், வாய், கண், மூக்கு, செவிகளினிட மாயிருக்கின்ற ஐம்பொறிகளே உயிரென்றாலென்னையெனில், இவைகள் ஞானேந்தி ரியமாதலின் ஞானமாத்திரையன்றி, ஞானங் கிரியை யிச்சையாகிய மூன்றையு முடைமையால், ஐம்பொறிகளுயிரல்ல வென்க.

பிணமாகுங்காலத்திற் கெடுவதாகிய ஐம்பொறிகளே இவ்வுடம்பினின்று நனவிலேயறியும் உறக்கத்திலே அறிதலின்றியொடுங்கிநிற்கு மென்றாலென்னையெனில், நனவிலே அவ்வைம்பொறிகளறிவதும் ஒவ்வொரு பொறியாக அறிவதன்றி அவைகளொருங்கே யறியமாட்டா வென்க. ஒன்றொன்றாக வறிவதே அவ்வைம்பொறிகளியல் பென்பாயாயின், அவ்வாறாயினும் அவ்வைம்பொறிகளிலே ஒரு பொறியறிந்ததை மற்றொரு பொறியறியமாட்டாது, ஆதலால் அவ்வைம் பொறிகளாலும் ஐம்புலன்களையு மறியத்தக்கதொன்றுண்டு அதுவே உயிரென்க.

4. மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் என்னு நான்காகிய அந்தக்கரணங்களே அறிவு முயிரென்றாலென்னையெனில், இவ்வந்தக் கரணங்களு முற்கூறிய ஐம்பொறிகளைப் போலவே ஒன்றனை யொன்றுணரமாட்டா ஆதலால் உயிரானது இவற்றின் வேறாகியானென தென்னுஞ் செருக்கு அதற்கேதுவாகிய * ஆணவமலத்துடனியைந்து நிற் குமாகலால், அவ்வந்தக் கரணங்களாலாகிய நான்கு தொழிலையும் அவற்றோடு கூடியறிந்து, அவற்றையடக்க வேண்டும் போது சொப்பன முதலிய அவத்தைகளிற் செலுத்தி உட்கருவியாக்கி, அவற்றையாக்க வேண்டும்போது சாக்கிராவத்தையிற் செலுத்திப் ‡ புறக்கருவிகளிற் போக்கி வேறு வேறு அவத்தையுற்று நிற்கும். ஆதலால் உயிர் அவ் வந்தக்காணங்களின் வேறென்க. இனி இவ்வந்தக்கரண நான்கும் ஒரு விஷயத்தை யறிதற்குக்கருவியாகப் பொருந்தி உயிரோடொற் றித்து நின்று நிகழ்வனவாம். இவைகள் கண்ணுக்குவிளக்குப் போல உயிர்க்குக் கருவியாய் வேறு நிற்பன வென்றறிந்து நீங்கிநின்று இவற்றைக்கொண்டறியுங் கருத்தாவாகிய உயிருண்மையை யுணர்ந்தவரே ஆன்ம சொரூபத்தையுணர்ந்தோராவர். இங்ஙனமறியுமறிவே பசு ஞானமென்க. இதனைத்தருவது சிவஞானம். அது பின்னர் வரும்.

* ஆணவமலம் இன்னது என்பது சிவஞானசித்தியாரிலிரண்டாஞ் சூத் திரத்தாற் காண்க.
உட்கருவி - சிவ - இரண்டாஞ்சூத்திரத்திற் காண்க,
புறக்கருவி - - சிவ - இரண்டாஞ்சூத்திரத்திற் காண்க,

இவ்வந்தக்கரணங்கள் நான்குடன் புருடதத்துவ மொன்று கூட்டி ஆகவைந்தினையும் ஆங்காரம், புத்தி, மனம், சித்தம், உள்ளம் என்றிம் முறையே வைத்து, இவற்றினைச் செலுத்தும் அக்கரங்கள் முறையே அகரமும், உகரமும், மகாமும், விந்துவும், நாதமு மென $ ஐந்தாகக்கூறி, இவ்வைந்தக்கரங்களையுஞ் செலுத்தும் அதி தேவதைகள் அயன், அரி, அரன், மகேசன், சதாசிவன் ஐவரெ னக்கூறி, இம்முத்திறத்தைந்துடன் ஆன்மா இயைந்தவழி அறிதற் பயனுறு மென்றும், இயையாதவழிச் சடம்போல அறிவில்லாததோடொக்குமென்றும், இவ்வியல் பெல்லாம் இருவகைச் சுவாசமுமடக்கிச் செய்யும் யோகப்பயிற்சி பிலினிது விளங்கு மென்றுங் கூறினர். சிவஞான சித்தியாரிற் காண்க.

உள்ளம் - புருடதத்துவம்,
$ இவ்வைந்தக்கரமுஞ் சமட்டியிற் பிரணவமாம்.

5. முற்கூறிய கருவி கரணங்கள் முதலிய அனைத்துங் கூடிய கூட்டமாகிய சமுதாயமே உயிர் என்றாலென்னையெனில், அவையெல்லா நீங்கிய நிலையாகிய துரியாதீதத்திலே உளதாதலால் சமுதாயம் உயிரன்றெனக. துரியாதீதத்திலே யுயிருண்டென்பது விழித்த பின்னர்ச் சுகமாகத் துயின்றேன் என அறிவு நிகழ்தல்பற்றித் தெளிந்துகொ ள்க. இவ்வாறன்றி முற்கூறிய கரணங்கள் அக்கரங்கள், அதிதெய்வங்களாகிய பலபொருட்கூட்டமே உயிர்வடிவமென்பாயாயின், ஆராய்வார்க்குக் கூட்டமென்றொரு பொருளில்லையாகி அப்பலபொருளே உண்மையாகத் தோன்றுதலால் அக்கூட்ட மென்பது உயிரன்றென்க.

கூடுதலாகிய அவை பதினைந்துமே உயிர் என்பாயாயின், அறிவோரெல்லார்க்கும் அப்பதினைந்தும் அறிபவனாகிய ஆன்மா வேறாகவும் அறியப்படும் பொருளாகிய அப்பதினைந்தும் வேறாகவும் விளங்குதலால் அவை உயிரன்றென்க.

6. சூக்குமவுடம்பே உயிரென்றாலென்னையெனில், அச்சூக் குமவுடம்பு கனவுடம் பெனக் கூறலாற், கனவின் மாத்திரமறிய வேண் டும். அவ்வா றன்றிக் கனவிலே அறிந்தவிடயத்தைச் சாக்கிரமாய நனவிலேயறிந்து நிற்பதாற் குக்குமவுடம்பு உயிரன்றென்க சூக்குமவுடம்பாவது மனாதி தன்மாத்திரைகளாம். (சிவ - இரண்டாஞ் சூத்திரத்திற் காண்க.)

7. பிராணவாயுவே உயிரென்றா லென்னையெனின், கருவிகளொடுங்கின விடத்தே பிராணவாயு. இயங்கி நிற்பதால் அப்போது அனுபவியாது, கருவிகளொடுங்காது விழித்தபோது இன்பத்துன்பங்களை யனுபவித்து நிற்றலாற், பிராணவாயு உயிரன்றென்க. பிராணவாயு அடங்குதலும் விடுதலுஞ்செய்தாலே அறிவு நிகழக் காண்பதனால், அப்பிராணவாயுவே முற்கூறிய ஐம்பொறியையுங் கொண்டறிவதாகியவுயிர் என்பது பொருந்தும். உடம்பிலே உறக்கத்தில் அப்பிராணவாயு இயங்கினும் அங்கே கருவிகளில்லாமையால் அறிவில்லையாகி அறியாதாயிற்று என்பாயாயின், அது பொருந்தாது, அறியப்படுங் கருவிகளையுடைய கர்த்தா அப்பிராணவாயுவானால் அப்பிராணவாயுவாகிய கர்த்தா இருக்கும் போது அக்கருவிகள் அக்கர்த்தாவைவிட்டு நீங்குதல்கூடா. ஆதலால், அக்கருவிகளையடக்குதலும் விடுதலுஞ்செய்து அப்பிராணவாயுவையுங் கொண்டு அறிவதாகிய வுயிர் வேறுண்டென்க.

8. பிரமமே உயிரென்றாலென்னையெனில், அறிந்தாங்கறித லின்றி ஐந்தவத்தைப் பட்டறிதலானும், அறிவிக்கவறிதலானும், பிரமமுயிரன்றென்க.

இனி ஆன்மவிலக்கணம்.

1. சீவான்மாக்களெல்லாம் பிரமப்பொருளின் பரிணாமமாய்த் தோன்றி, அறிவிச்சை செயல்களை யடைந்து தீயுஞ்சூடும் போலப் பேதா பேதமாகிய குணமணித் தன்மையுற்றுப் பல வேறுவகைப்பட்டு நிற்கு மென்றா லென்னையெனில், அவ்வாறாகிய சீவான்மாக்களுக்குப் பொறிகரண முதலிய கருவிகளைப் பொருத்தினாலன்றி அறியமாட்டாமைக்குக் காரணம் யாது? அதனால் அது பொருந்தாதென்க.

2. இனிக் குணகுணித் தன்மையின்றிக் கேவலம் அறிவு மாத்திரை யாய் நிற்றல் உயிரியல்பென்றா லென்னையெனில், உடலின் கண்ணே அறிவிச்சை செயல்கள் நிகழா, ஆதலாலது பொருந்தா தென்க. உயிரின் சந்நிதியிலே உடலின்கட் கரணங்கள் தொழிற்படுதல் பற்றி அறிவிச்சை செயல்கள் நிகழுமென்பாயாயின், உயிரின் சந்நிதியிலெப்பொழுதும் அறிவிச்சை செயல்கள் நிகழ வேண்டும். அங்ஙனமின்றிப் பிணத்தும் உறக்கத்தும் அவை நிகழ்தலில்லையாம். அதனாலது பொருந்தாதென்க. பிணத்தும் உறக்கத்துங் கரணமொடுங்கினமையால் அறிவிச்சை செயல்கள் நிகழ் தலில்லையென்பாயாயின், பிணத்தும் உறக்கத்தும் உயிரின் சந்நிதிக்குக் கேடில்லையே, அங்ஙனமாகவும் அவ்வறிவிச்சை செயல்கள் நிகழாமையால் உயிரின் சந்நிதிமாத்திரையால் அறிவிச்சை செயல்கள் நிகழும் என நீ கூறிய தொழிந்த தென்க. சந்நிதிதான் எதுபோல வென்ருல், வியாபகமாய் நிற்கப் பெறுதன்மாத்திரையே சந்நிதியன்று. காந்தமுன் இரும்பு போல உயிர்முன் உடம்பு தொழிற்படு தற்கேதுவாயதொரு குணவிசேடமே சந்நிதி எனக்கொண்டோமாகலின் மேற்கூறிய குற்றம் ஈண்டுப் பொருந்தாதென்பாயாயின், அங்ஙனமாயினும் ஒரு குணமுள்ளதாகிய காந்தம் இரும்பையிழுத்தலாகிய ஒரு தொழிலன்றி அகற்றலாகிய மாறுபட்ட தொழில் செய்ததில்லை ஆதலால் நினைத்தல் மறத்தல், ஓடல், இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய மாறுபட்டதொழில்களை ஆன்மாச் செய்யுமாறு எவ்விடத்து என மறுக்க. உயிர் உருவப்பொருளென்றா லென்னையெனில், இவ்வுடம்பினுள்ளே வேறொருவடிவங் காணவேண்டும். அங்ஙனமன்றி உருவப்பொருளாய் வருவது காட்சிப் புலனாய்ப் பரிணமித்து அழிவெய்தும் பூதத்தோடொன்றாதல் வேண்டும். உருவடிவாயிருப்பினுங் கட்புலனாகா தென்பாயாயின், நீ யுருவமெனக் கூறுதெலொழிந்து அருவமெனக் கூறுதலமையுமென்க.

பூதம்போலக் காட்சிப் புலனாதற்குரிய தூலவுருவாதலின்றிச் சூக்குமவுருவாய் நிற்பது உயிர் என்ற லெல்னையெனில், அஃது தூலவுருவைத் தோற்றுவிக்கின்ற சடமாகிய மனாதிகரணங்கள் தன் மாத்திரைகளானாக்கப்பட்ட புரியட்டகவுடம்பே ஆகலானும்; அப்புரியட்டகத்தினுள்ளே அதிசூக்கும வுருவாய் நிற்பது உயிர் என்பாயாயின், அது காலதத்துவமுதலாகப் பிருதுவிதத்துவ மீறாகவுள்ள பரவுடம்பே ஆகலானும், அவ்வுருவங் களனைத்தும் அசித்தாதலும் அசத்தாதலும் ஒரு தலையாகலானும் அவ்வியல் பில்லாத உயிர் உருவப்பொருளாமாறு யாண்டையதென்க.

இனி அருவுருவப்பொருள் உயிர் என்றாலென்னையெனில், அருவர் தானே உருவாவதில்லை, உருவந்தானே அருவாவதில்லை ஆகலானும், மறு தலைப்பட்ட இரண்டு தன்மை ஒரு பொருட்குண்டாவதில்லை. ஆகலானும், காட்டமும் அக்கினியும்போல அருவுருவப் பொருள் என்பாயாயின், நீ கூறிய அவ்விரண்டுந் தம்முள் வேறாகி உருவமாய்க் காணப்பட்டுண்மை யொழிந்துபோம். ஆதலின் ஈண்டுக்கூறிய உவமை பொருந்தாமையானும் அது பொருந்தாதென்க..

உயிர்க்கு வடிவம் அருவுருவம் என்றா லென்னையெனில், அது வெளிப்பட்டு நங்கண்ணிற்குப் புலப்படும் வடிவுளதாதல்வேண்டும். தலையுவாவில் அருவமாய் நின்றே பின் முறை முறையால் வளர்ந்து பூரணையிலே தூல வுருவாய் விளங்குதல் சந்திரனிடத்துக் காண்கின்றோம். அதுபோலவே உயிரும் அருவமாய் நின்றே கருவுட்பதிந்து முறை முறையால் வளர்ந்து இவ்வுடம்புருவமாய்த் தோன்றுமாற்றால் அருவுருவம் எனக்கூற அமையும் என்பாயாயின், சித்தாய் நித்தியமாய்ப் பந்தத்திற்பட்டு நீங்குவதாகிய வுயிர் அசித்தாய்ப் பூதகாரியமாய்ப் பந்தமாவதாகிய வுடம்புருவமா மாறுயான்டைய தென்க.

சடப்பொருள் சித்தாகாது சித்துப்பொருள் சடமாகாது ஆதலால், உயிர்தான் அறிவில்லாத சடம், அது பின்னர் மனத்தோடு சித்தாய் அறியு மென்பாயாயினும், அக்கொள்கையும் உயிர் சித்த சித்து என்பாயாயினும் அக்கொள்கையும், ஒன்றிலே மாறுபட்ட இரண்டு தன்மை யொருங்கு நில் லாமையாற் பொருந்து மாறில்லை. கருவிகளைப் பொருந்தாத சித்தே உயிர் என்பாயாயின், அக்கொள்கையும் அசித்தாகிய கருவிகளை யடைந்தன்றி யறிதல் கூடாமையால் பொருந்தாதென்க.

இனி உடம்பகத்திலே பரமாணு வளவிற்றாய் நிற்பது உயிர் என்பாயாயின், அது அணுவடிவாகிற் பல துவாரங்களிலே யொரு துவாரத்தா லோடிப்போவதாகும், அன்றி அவ்வுடம்பிற் பொருந்தக் கட்டுண்டற்கு முடம்படாது, பாரந்தாங்கிச் செல்லுதற்கு முடம்படாது, அழிவெய்துஞ் சடமாகிப் பூதபரமாணுக்களோ டொன்றாகும், அணுக்களுக்கு அவயவப் பகுப்புண்மையால் அவ்வணுவுருவ மழிவெய்துமென்க..

இனி உயிரானது உடம்பகத்துப் புன்னுனித் துளிபோல் ஏகதேசமாய் இதயத்தானத்தினிற்ப அவ்வுயிரினறிவு விளக்கின் குணமாகிய வொளி போல யாங்கணும் வியாபிக்கும் என்றாலென்னையெனில், உயிர் ஏகதேச மாயின் முன்னே உயிர் உருவம் எனக்கூறியதற்கு உரைத்த குற்றமெல் லாம் பொருந்தி யழிவெய்தும், குணங்குணியளவின்றி எவ்விடத்தும் வியாபித்தறிதல் செல்லாது. இன்னும் விளக்கினொளியானது விளக்கினது சூக்கும வடிவேயன்றிக் குணமன்று. ஆகலான் அஃதீண்டைக் குவமை யாகாது, உவமையாமெனவே கொள்வாயாயினும், விளக்கின் சுடர் தொடி னன்றிச் சுடாதாகையால், இருந்தவிடத்திலே யறிந்து மற்றுள்ளவிடத்துப் பரிசத்தானும் அறியமாட்டாது. உயிர் பரிசித் தவிடமெங்கும் அறிதலுளதாம். விளக்கு ஓரிடத்திருந்து மற்றுள்ள விடங்களையும் விளக்குதல் போல உயிரினறிவு ஐம்புலனிடத்து மொருங்கே நிகழவேண்டு மென்க.

இனி உடம்பளவிலே நிறைந்து நின்று அங்கே புணர்வது உயிர் என்றாலென்னையெனில், உறக்கமுறாது ஐம்பொறியினு மொருங்கே யறிவு நிகழ்தல் வேண்டும். பெரியவுடல் சிறியவுடல்களாகிய அவ்வவ்வுடம்பளவிற்குத் தக்க வறிவாதல் வேண்டும். உடம்பினுறுப்பினைக் குறைப்பக் கூடத்தானுங் குறைந்து பின் மாய்தல் வேண்டு மென்க.

இனி முதல்வன்போல் எங்கணும் வியாபியாய் நின்றறியும் இவ்வுயிர் என்றாலென்னையெனின், அவத்தைகளிற்றங்குதலும் போக்குவரவுகளுறுத லும், எங்ஙனங் கூடும். ஐம்புலனுமொருங்கே யறியாமையு மெங்கனீங் கூடும். இங்ஙனமெல்லாமாய் வியாபித்த லொழிந்தானாகி உடம்பினுளேக தேசமாய் நிற்றலும் எங்ஙனங்கூடும். இவற்றைக்கூறுவாயாக. எங்கணும் வியாபகமாய் நின்றறிவதாய சுத்தமாகிய உயிரினறிவை மாயாகாரியந் தடைசெய்து நிற்றலின் உறக்கமுதலியனவுற்று ஏகதேசப்படுவதாயிற்று எனப்பரியாயங் கூறுவாயாயின், அது பொருந்தாது உடலினகத்துப் புறக்கரண வகக்கரணங்களின் வழியால் அறிவு விளங்குவதாகவும் அஃது இன்ராய்ப் போதலானும், வீடுபெற்ற வழியும் மலமுறும் எனப்பட்டு முத்தி யென்பதில்லையாய் முடியுமாகலானும் என்க. வீடுபெற்றபின் உறாதென் பாயாயின், அநாதிநிலையோடு இதனிடை வேற்றுமையின்மையான், அநாதி பந்த முறுதலின்றி முத்தனாய் விளங்குதல் வேண்டுமென்க.

இதுவரையும் ஆணவமலத்துண்மைகொள்ளாத சமயிகள் தத்தமதத்துக் கேற்பக் கூறுமுயிரிலக்கணங்களும் அவை பொருந்தாமையுங் காட்டப்பட்டன. மற்றென்னையோ வுயிருக்கிலக்கணமாவ தெனின், பின்னர்க் கூறுமாற்றிந்து கொள்க. –

இவ்வுயிர், அசித்தாதலில்லாத வியாபகப்பொருள்போல வியாபகமா தலும், அதுபற்றி அதிசூக்கும சித்தாதலுமின்றி, அதுவதுவாய் வசிப்புண்ணும் வியாபகமாகு நெறியுடையதாய், அநாதியே பசுத்துவமெனப்படும் ஆணவமலத்தின் மறைப்புண்டு இச்சாஞானக்கிரியைகளை யுடையதாய்ப்பசு வெனப்படுந் தூலசித்தாகி நிற்குமென்றறிக. இதுவே உயிர்க்கு அநாதி நிலையாகிய தன்னுண்மை யெனக்கொள்க.

அங்ஙனம் பசுத்துவமாத்திரையாற் கேவலப்பட்டு நின்றஉயிர் அதன் பின் அசுத்தமாயையில் அனந்த தேவராற் கலக்குண்ட பாகமாகிய காரண சரீரத்தைப்பொருந்தி அறிவிச்சை செயல்கள் பொதுவகையாற் சமட்டிரூபமாய் விளங்கப்பெறும். அதன் பின் அம்மாயா தத்துவத்தினின்றுந் தோன்றுங் கலாதிகளாகிய கஞ்சுக சரீரத்தைப்பொருந்தி அவ்வறி விச்சை செயல்கள் வியட்டிரூபமாய்ப் பிரிந்து தோன்றிச் சிறப்புவகையால் விளங் கப்பெறும். அதன் பின் அந்தக் கரணமுதலியவற்றைத் தம்முளடக்கி நிற்கு முக்குணங்களாகிய குணசரீரத்தைப் பொருந்தி அறிவிச்சை செயல்கள் பின்னர்க் கூறப்படும் இருவகைச் சரீரங்களிடமாகவரும் விடயங்களின் வியாபரிக்கப் பெறுமென்றறிக.

இங்ஙனம் பரசரீரமூன்றையுமுறையா னெய்தியவுயிர் பின்னர்ச் சூக்கும தேகத்தைப்பொருந்தி எவ்விடத்திலும் போக்குவரவுகள் செய்து சூக்குமமாகிய இருவினைப்பயன்களை ஈட்டியு நுகர்ந்தும், பின்னர்த் தூலசரீரத்தைப்பொருந்தி எவ்விடத்திலும் போக்குவரவுகள் செய்து தூலரூபமாகிய இருவினைப்பயன்களை யீட்டியு நுகர்ந்தும், இவ்வாறு அதீதமுதலாகச் சாக்கிர மீனாயுள்ள ஐந்தவத்தைப்பட்டு நிற்கு மென்றறிக.
மேற்கூறிய  காரணசரீரமுதலிய அவ்வைந்தும் அவ்வாறு முதற்காரணமாகிய மாயையினின்றுந் தோன்றி ஆன்மாவுக்கு வடிவமாய், முறையே ஆனந்தமயகோசமும், விஞ்ஞான மய கோசமும், மனோமய கோசமும், பிராணமயகோசமும், அன்னமயகோசமும் ஆகிய ஐவகைப்பெயர்பெற்று, அன் னமயமுதலாகக்கொண்டு ஒன்றற் கொன்று குக்குமமாய் நிற்கக் கேவலத் திலொன் றுமின்றி ஆணவமலமாத்திரையாய் நின்ற ஆன்மா இவ்வைங்கோ சங்களில் அதுவதுவாய் வசிப்புண்டு ஏகதேசியாய் அவைகளிற் போக்கு வரவு செய்து நிற்குமெனவறிக, கேவலத்திலொன்று மின்றி நின்ற ஆன்மா மாயையிலங்ஙனங் கலக்குண்டபாகத்தை முதற்கட்பொருந்தி அறி விச்சை செயல்கள் பொதுவுகையால் அவ்வளவு விளங்கப் பெற்ற மாத்திரையே அம்மயக்கவறிவால் ஓரானந்த முண்டாகப் பெறுதலின், அஃதா னந்த மயகோச மெனப்பட்டது. ஏனையவுங்காரணக்குறியாமாறுய்த் துணர்ந்து கொள்க. ஆன்மா இத்தரையின் கீழ் மேலுங்கொள்ளி வட்ட மெனவுங் கறங்கெனவுநிமிடத்தின்கட் சுழலும்படி கொண்டு திரிதல் பற்றி இவ்வைங்கோசங்களை ஐந்து பறவையாகவும், அவற்று ளொரோவொன்றை ஐவகைப்படுத்து முகமுதலிய வுறுப்புக்களாவும் வேதத்துள்ளுருவகஞ் செய்துணர்த்தியவாறு காண்க என்பவர் சிவஞானசித்தியாருரையில்.

ஆன்மாவினுண்மையுணர்தற்கு இவ்வைங் கோசங்களை இங்ஙனம் பகுத்தறிதலு மொருசாதன மெனக்கொள்க.

இன்னும் ஆன்மாச் சார்ந்ததின் வண்ணமாய் வசித்திடவருமாற்றிற்குக் சருவஞானோத்திரமாகிய. ஆகமத்திலே அவ்வச்சார்புவிசேடம் பற்றிப் பூதான் மாமுதலறுவகைப்படுத்துத் தொகுத்தும் விரித்து மோதியவாறுய்த் துணர்க வென்பர். இதனை அத்துவிதவாக்கியத் தெளிவுரையிற் காண்க.

இனி இங்கனம் பந்திக்கப்பட்ட அன்ன மயகோசம், பிராணமய கோசம், மனோமயகோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்திலும் ஆன்மாவேற்றுமையின்றி நின்று செலுத்துமாறு யாங்கன மெனில், முறையே தேரைப் பாரிற்செலுத்துவோர் தன்மையும், மரப்பா வையினை யியக்குவோர் தன்மையும், தோற் பாவையினையாட்டுவோர் தன் மையும், பரகாயப்பிரவேசஞ் செயவோர் தன்மையும், வேதியர் வேடர் முதலிய பலவேடங்காட்டி ஆடுவோர் தன்மையும் ஒக்குமெனவறிக. இவை யைந்தும் முறையே ஒன்றற்கொன்று அந்தரங்கமாய் அவ்வைங்கோசங்களினும் ஆன்மா நின்று செய்யுமாற்றிற்குவமையாமாறு அறிவுடையார்பாற் றெரிந்துனர்க.

இனி என்மனை என்பதி என்று அபேதமாய் வழங்கிவந்தனவெல்லாம் உனக்குவேறாதல் கண்டாற்போல உனதன்றாகிய உடல் பொறி பிராணன் கரணங்களைத் தனித் தனியெனதென்றும், அங்ஙன முணர்ந்த பசவுணர்வை என்னுணர்வென்றும், அபேதமாகக் கூறிக்கொண்டு நீ அவைகளின் வேறாய் நிற்கின்ற முறைகாண்பாயாக. மனைமுதலிய புறப்பொருள்கள் என்னின் வேறாதல் கூடும், உடல் பொறிமுதலியவை என்னைவிட்டு நீங்கமாட்டா வென்பாயாயின் உன்னுடையனவாகி அபேதமாய் எனதென்று வழங்கப்பட்டு நகமயிர் முதலிய சில நீங்குதலுங் காணப்படுதலால், இதனானும் ஆன்மா அவற்றிற்கு வேறென்பதறிந்து கொள்க.

அற்றேல், உடல் பொறிமுதலியவற்றை எனதென்பது, தன்மனை முதலியவற்றை எனதென்றதுபோலன்றி இராகுவினது தலையென்றாற் போல் அபேதம்பற்றிக் கூறுங் கருத்தேயாகலின், உரைப்போர் குறிப்பொடு சார்த்திக்காணுங்கால் அவ்விருவகை வழக்கிற்குந் தம்முளொக்குமாறு யாங்ஙனமென்பாயாயின், ஆபரணம் ஆடைமாலை முதலிய புறப்பொருள்களையணிந்த போது என்னணியாமென்று அபேதம்பற்றிய கருத்தால் நினைத்திருந்த நீ நின்னாலணியப்பட்ட அப்புறப்பொருள்களாகிய அணிகலமுதலாயின நீங்கியபோது உனக்கு அந்நியமாய் நீயல்லவாயினாற் போல, உடல் பொறிமுதலிய அனைத்தும் நின்னின்று மயலாகு மாகலான், உன் னுண்மை யறிந்து நீ இவற்றை நீங்கிநின் றறிவாயாக,

இனி ஆன்மாவை என்னுடைய ஆன்மா வென்றபொழுது யான் வேறு ஆன்மாவேறன்றாகவும் எனதென்றல் யாங்ஙனமெனில், உயிரைவேறாகக் காணுங்கருத்தின்றி இராகுவினது தலையென்றாற்போல ஒருசாரார் கூறுஞ் சிறுபான்மை வழக்காதலின் அஃது அபேதம்பற்றிய வழக்கென வேயமையு மென்றறிக. விஞ்ஞான மயகோசம் ஆனந்த மயகோசங்கள் யானல்லேனாகிய முறைமையாதெனில், இவ்விருவகைக் கோசங்களை யெனதென்றல் ஏனைகோசங்கள் போல வேறாகக்காணுங் கருத்தால் எல்லாரானும் வழங்கப் படும் பெரும்பான்மை வழக்காதலின, அஃது அதுபோல அபேதம்பற்றிய வழக்னெவமையாமையின் அவ்விருவகைக் கோசங்களும் ஏனையவுடல் முத லியனபோலவுயிரின் வேறேயாமென்றறிக. புத்தியை மனமென்றும், மன த்தைப் புத்தியென்றும், சித்தத்தை ஆன்மாவென்றும், ஆன்மாவைச் சித்தமென்றும், காரணங்கட்கெல்லாம் பரமகரணமாகிய சிவபிரானை ஆன்மாவென்றும், ஆன்மாவைச் சிவபிரானென்றும் இங்ஙனம் ஒவ்வோரவ்தரங்களின் உபசாரமாகக் கூறப்படும். உள்ளவாறு நோக்குவார்க்கு என்ற னான் மாவென்னும் வழக்கில் ஆன் மாவென்றது தன்னோடியைபுடைய பிறி தொன் றின்மேல் ஆகுபெயராய் நிற்கும் ஆகலான், அவ்வழக்குப்பற்றி நின் கருத்து நிரம்புமாரில்லை யென்றறிக. ஏனை மூவகைக் கோசங்களையும் வேறா கக்கொண்டு விஞ்ஞான மயகோசம் ஆனந்தமய கோச மிரண்டும் முறையே சீவான் மாவும் பரமான்வுமாமென்பர் மதத்தை மறுத்தற்பொருட்டு அவற்றை வேறுவிதந் தோதியவாறென வறிக.

இனி ஆன்மாவின் வேறாகிய அவ்வைங்கோசங்களை ஆன்மா பொருந்தல் பற்றி ஆன்மா என உபநிடதங்களிற் கூறியதென்பர். அதுவும் விளக்'கிருக்கின்ற தகழியை விளக்றென்றாற்போலத் தானியாகுபெய ராதற்குரிய இயைபு பற்றியன்றிப் பிறிதில்லையாகலான், பொறி புலன் கரண முதலிய வெல்லாவற்றின் கண்ணும் அறியப்படும் பேதமாய்ப் பிரிதலின்றியறிவதாகிய ஆன்மா அறியப்படுமப்பொருள்கட்கு வேறென வறிக.

இன்னும், அன்ன மயகோச முதலிய நான்கினையும் ஒரோவொன்றாத விட்டுவிட்டு ஐந்தவத்தைப்பட்டு விழித்தபின் அவை கூடிநின் றறிவிக்கக் காணப்பட்ட கனவைச் சொல்லியுஞ் சுழுத்தியினைக் கருதியும்'அவைகட்கு வேறாயுண்டி வினைகளின்றிக் கிடந்துயிர்த்த துரிய துரியாதீ தங்களை உண்டி வினைக ளுறு தலாகிய மறுதலையின் வைத்தும் அங்ஙன மவத்தைப் பட்ட, வற்றை அறியா நிற்குமாகலால், இதனானுங் கண்டடிறியப்பட்ட வுயிர் அவற்றின் வேறெனத் தெளிக.

இனி ஆன்மா முதல்வன் போலச் சுத்தசித்தேயென்பாயாயில் மாயாகாரியங்களைப் பற்றி நின்றறிதல் வேண்டா, அவ்வாறன்றி அமைச்சரும் அரசும்போல அவற்றுடனின்று அம்மாயா கருவிகளைப்பற்றி அறிதலுண் மையால், அநாதியே ஆணவமலத்தின் மறைந்து அருவனாய் நிற்றல் பெறப்படுமென்றறிக.

இதுவரையும் பரம் தங்களை பரிகரித்து உயிர்க்கிலக்கணங் கூறியது. காண்க.

இனி ஆன்மா வெவ்வேறு அவத்தையணையுமியல்பு.

ஆன்மா மேற்கூறிய மாயா காரியங்களோடு அமைச்சரும் அரசும் போறலின், அமைச்சர் படைத்தலைவர் முதலிய பரிசனங்களோடு உலாப் போந்த அரசன் மீள மாளிகையுட்புகும் போது வாயில்கடோறும் அவரவர்க்கு விடைகொடுத்து நிறுத்திக் காவலும் வைத்துப் பின்னர் அந்தப்புரத்தின் கண்ணே தனியே செல்லுமாறு போல, உடம்பின் கண்முறையே அக் கருவிகளினீங்கிப் பிராணவாயுவைக் காவலாக நிறுத்தி 'ஐவகையவத்தையுறுமென்க.

ஆன்மா, அரசன் போல விட்டு விட்டுச் செல்லுதற்கண் இலாடத்தானத்திற் சாக்கிராவத்தையுறும் வழி முப்பத்தைந்து கருவிகளும், கண்டத் தானத்திற் சொப்பனாவத்தையுறும் வழி யிருபத்தைந்து கருவிகளும், இருதயத்தானத்திற் சுழுத்தியவத்தையுறும் வழி மூன்று கருவிகளும், நாபித்தானத்திற் றுரியாவத்தையுறும் வழி இரண்டு கருவிகளும், மூல தானத்திலே துரியாதீதாவத்தையுறும் வழி ஒரு கருவியுமாமென்க. இக்கருவிகளின் வகை'யைச் சிவஞானசித்தியாரிற் காண்க.

மேற்கூறிப்போந்த சாக்கிரமுதலிய அவத்தைகள் ஐந்துங் கீழ்நோக்கிச் சென்றொடுங்கு முறையும் மேனோக்கித் தோன்று முறைமையும் பற்றி இருவகைப்படும். அவற்றுளொன்றாகிய ஒடுங்கு முறையாகியது கன்மார்ச் சிப்புக்கேதுவாய்ப் பிறவிக்கு வித்தாம். மற்றொன்றாகிய தோன்று முறை யாகியது கன் மநுகர்ச்சிக் கேதுவாகலாற் பரம்பரையிற் பிறவியறுத்தற் குக் காரணமாகி யேற்படும், இனி இதயமுதற் றுவாதசாந்த மீறாகிய தான ங்களிற் புறக்கரண முட்கரணங்களைப் பற்றியும் பற்றாதும் பிரத்தியாகார முதல் ஐவகைப்பட்டு நிகழும் யோகாவத்தையும் அதுபோல ஒடுங்கியும் பின்னர்த் தோன்றியும் அவ்வாறே பயன் றருவ தன்றிப் பிறி தன்று. ஆதலால் இந்த யோகாவத்தை ஞானாவத்தை போலுமென மலையாதொழிக. இங்ஙனங்கூறிய மூன்று பேதமும் முறையே சகலத்திற்கேவலம், சகலத் திற்சகலம், சகலத்திற் சுத்தமென்பர்.

சாக்கிராதியவத்தையென மேற்கூறிப் போந்த ஐந்தனுள், முதலவத்தையாகிய சாக்கிரத்தை யடையப்பெறும் இலாடத்தானத்தின் கண்ணுஞ் சாக்கிரமுதல் ஐந்தவத்தையுளவாம், அவை கருவியான் விடயங்களை யறியுஞ் செய்கை தோறும் அதிநுணுக்கமாய் இடையீடின்றி நிகழுமாறு நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. இனி இவைகளன்றி ஞானத்தை யடைந்த வரும் பிறப்பு நீங்கி அருண்ஞானத்தால் வீடுபேறடைதற்கு அவ்விலாட தானத்திற் கேவலசகலங்கணீங்கிய சுத்தத்திலும் அவ்வாறே ஐவகை அவத்தையைக் கூடுவரென்க. இதனைச் சிவஞானசித்தியாரி லுண்மையதிகாரத் திற்காண்க.

மேற்கூறிப் போந்த சாக்கிராதியவத்தைகள் ஐந்தனுட் சாக்கிரத்திலே சுத்தவித்தை, மகேச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னுமைந்து கருவிகளும், கனவிலே மகேச்சுரமுதலாகிய நான்கு கருவிகளும், சுழுத்தியிலே சாதாக்கியமீறாகிய மூன்று கருவிகளும், துரியத்திலே சத்தியீறாகிய இரண்டு கருவிகளும், துரியாதீதத்திலே சிவதத்துவமாகிய ஒருகருவியுங் கலாதிகடொழிற்படு மிடந்தோறுங் கருவியான் விடயங்களை யறியுஞ் செய்கை தோறும் அக்கலாதிகளைச் செலுத்தி நிற்றலை நுண்ணுர்வானுணர்ந்து கொள்க.

இனி ஆன்மா அவ்வாறு நிகழுங்காரியாவத்தைகளையுறுதற்குக் காரணமாகக் கேவலஞ் சகலஞ்சுத்தமென மூன்றவத்தையடைவன். இவற்றுட் கேவலமாவது தன்னுடைய இச்சாஞானக்கிரியைகளினிகழ்ச்சி சிறிதுமின்றித் தான் மாத்திரையுளனாதலாம். பின்னர்த் தனுகரணாதியோடும் முதலவன் கூட்டக்கூடி அவையொருபுடை விளங்குமவதரத்திலே சகலனாம். பின்னர்ப் பஞ்சமலங்களு நீங்கிப் பிறவியொழிந்து சிவத்தோடு கூடி அவ்விச்சா ஞானக்கிரியைக ளெங்குமாய் வியாபித்து விளங்குமவதரத்திற் சுத்தமுடையனா மென்க.

மேற்கூறிய மூன்றவத்தை யுறுத்தற்குரிய ஆன்மா வரக் கடவனவாகிய காரியங்களுள் உம்பு முன்னில்லாதவனும், கலாதியறிவோடு முன்சேர்தலில்லாதவனும், * புத்தி குண மெட்டினையும் ஏனைப்போக்கிய காண்டக்கருவி களையும் முன்பொருந்தாதவனும், இச்சை அறிவு தொழிலிவை முன்னில்லாதவனும், தனக்கெனவொரு சுதந்திரமுன்னில்லாதவனும், போகத்தின் முன் கொள்கையில்லாதவனும், தோற்றக்கேடுகண் முன்னில்லாதவனும், ஏகதேசியா தன் முன்னில்லாதவனுமாகிக் கேவலாவத்தையில் ஆணவமலத் தோடு மாத்திரங்கூடிநிற்பன். இது தன்னுண்மை யெனப்படுங் கேவலத்தியல் கூறியவாறென்றறிக.

* புத்திகுணமெட்டாவன - தருமம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதருமம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம், என்பன

மேற்கூறிய கேவலத்தையைப் பொருந்திய ஆன்மா உருவினைக்கொண்டும், போககாண்டமாகிய கலாதியோடு செறிந்தும் போக்கியகாண்ட மாகிய புத்தியா தியைச்செறிந்தும், இச்சையுற்றும், நால்வகைவாக்குகளா னிகழுமறிவுற்றும், தொழில்களுற்றும், சத்தாதி விடயத்தில் விருப்பஞ் செய்தும், போக நுகர்ந்தும், தோற்றக்கேடுகளிற் புக்குழன்றும், ஏகதேசி யாகி, இப்பத்துக் காரியத்தையுமுடையனாய்ச், சகலாவத்தையிற் சீவித்து நிற்பன். இது தனுகரணாதியை முதல்வன் கொடுத்தபோது சகலனாமியல் புகூறியவாறென் றறிக, மேற்கூறிய கேவலத்தின் மறு தலையாய திச்சகல மென்க.|

பேற்கூறியபத்தினுள்ளே சத்தமா தியாம் விடயத்தில் விருப்பஞ்செய் தல் கழிதற்கேதுவாகிய இருவினையொப்பின் கண்ணே போகபோக்கியக் கருவிகளின் செறிவு கழிதற்கேதுவாகிய சிவசத்திநிபாதமுறுதலால், உருக்'கழிதற்கேதுவாகிய குருவருள்பெற்றும், எல்லாயோநியும் புக்குழலுதல் கழிதற்கேதுவாகிய ஞானசாதன மடைந்தும், சென்று திரிதலாகிய யேக தேசத்தன்மை கழிதற்கேதுவாகிய அநாதிமும்மல நீக்கியும், சத்தமாதியாம் விடயந் தனிலே நுகர்வது கழிதற்கேதுவாகிய பழையவா தனை நீக்கியும், பாசவறிவிச்சைசெயல்கள் கழிதற்கேதுவாகிய ஞானம் பெருக்கியும் முறையே கிடைப்ப அவற்றான் அக்காரியம் பத்து நீங்கப்பெற்றுச் சிவபிரான்றிருவருளைக் கூடுதல் சுத்தவாத்தையின் இலக்கண மென்க. இருவினையொப்புக்கு மூலமாகிய சிவபுண்ணியமுஞ், சத்திநிபாதமென்கின்ற அருள்பதிதற்கு மூலமாகிய மலபரிபாகமுஞ் சிவஞான சித்தியாரிற் காண்க.

இது சுத்தமுடையனாமியல்பு கூறியவாறென்றறிக. இது இலக்கியவிலக்கணங் கற்றவர்கள் எளிதினுணருமாறு சுப்பிரமணியக்கவிராயர் என்னும் பெயருடைய என்னுடைய நடுவுள்ள பிள்ளை யுதவியால் வரையப்பட்டது.

இங்னம் 
இராமசாமிக்கவிராயர்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஏப்ரல் / மே / ஜுன் ௴


No comments:

Post a Comment