Saturday, May 9, 2020



ஏழிசையாய் இசைப்பயனாய்*

[G. கலியாணம், M. A., Dip. Econ.]
[* உயர் திரு. விபுலாநந்த அடிகள் திரிசிராப்பள்ளி சைவ சித்தாந்த சபையில் 21 - March - 1942 - ல் செய்த சொற்பொழிவின் சாரம்.]

தமிழ் மூவகைப்படும். இயல், இசை, நாடகம் என்பன. நாடகம் என்பது தமிழ்ச்சொல் அன்றென்பர். கூத்து என்பது தமிழ்ச்சொல். கூத்து இருவகைத்து. இலாசியம், தாண்டவம் என்பவை. ஒன்று வீரமானது; மற்றொன்று பெண்ணீர்மை பெற்றுவருவது.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின் இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்குத் தமிழ்நாடு மிக்க கீழ்நிலை யடைந்திருந்தது. தமிழ் நாட்டு முடியுடை மூவேந்தரும் அழிந்தனர். பின்னர் ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றி னார்கள். நாட்டின் பேறு வேண்டி இசைப்பாடல்களைப் பாடினார்கள். வாகீசர் என்பதில் ‘வா' என்பது இசையையும் குறிக்கும். சுந்தரரின் தாயார் பெயர் இசைஞானியார். பரி பாடல் இசைத்தமிழ். தேவாரம் திருவாய்மொழி இவை இசை இலக்கியங்கள். பெரியோர்கள் தாம் கண்டு அனுபவித்து இன்ப - அருள் பெற்றதைப் பிறரும் அடைய எண்ணினார்கள். சொற்பொழிவுகள் ஆற்றவில்லை. நூல்கள் எழுதவில்லை. பாடல் தொண்டு, உழவாரத் தொண்டு இவைகள் செய்தார்கள். கோயில் திருத்தி திருப்பணி செய்தனர். சங்கம், சபை ஒன்றுமில்லை. வாயில் பாட்டும், கையில் உழவாரப் படையும் அப்பர் பெருமானிடம் உண்டு. 7000 தேவாரப் பாடல்களில் சிலவற்றையாவது சைவர்கள் மனதில் சிந்திக்க வேண்டும். அவைகளைப் படித்தோர் உள்ளத்தில் யாத்தோர் உணர்ச்சி தோன்றும். சுரம், சுருதி இவை இசையல்ல. இசையின் ஒரு பகுதிதான். அவை ஒரு கட்டிடம் போலத்தான். அதனுட்குடியிருப்பது போன்றதே இசை. பரத சாத்திரத்தில் ப, , த என்பவை பாவம், இராகம், தாளம் இவைகளைக் குறிக்கும்.'' என்பது ஒரு மெய்ப்பாடு. இராகம், தாளம் என்பவை இசையை வருவிக்க உதவி செய்வன. அன்பர்கள் உள்ளத்தில் அன்புகலந் தெழுவதே இசைப்பாடல். அந்தப் பாடல் பாடி, பல உறுப்புகளான் ஆண்டவன் புகழினைக் காணப் பயன்படுகின்றன. "இருள் சேர் இருவினையுஞ் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு' என்பது பொய்யாமொழி. உள்ள உணர்ச்சியைத் தூய்மைப் படுத்துவது இசை. இசைக்கு உருகுந்தன்மை உள்ளத்தில் தோன்றினால் மனிதன் வன் செயல் நீப்பான். ஆங்கில மகாகவி செகப்பிரியர், இசையில் லாதவன் வன் செயல்கண் படுவான் என்பார். தெய்வப் பாடல்களே அப்பருக்கு'நாமார்க்குங் குடியல்லோம்'என்ற உறுதிப்பாட்டை உண்டாக்கிற்று; வீரத்தை ஊட்டிற்று,

சோழர்கள் ஆதிக்கம் வடநாடுவரை சென்றது. அவர் கள் பர்மா முதலிய நாடுகளைப் பிடித்தனர். வெற்றிக்குத் தலைவன் இறைவனே யென்று அவனுக்குப் பல ஆலயங்கள் கண்டனர். அறிவு மார்க்கமாக மாத்திரம் இருந்த சமண பௌத்த சமயங்கள் அழிந்தன. உள்ள உணர்ச்சி பொங்கியஇசைகூடிய பாடல்களின் ஆற்றல் மீட்டும் நாடு நன்னிலையடையக் காரணமாக இருந்தன.

யாழ்ப்பாணர், மதங்க சூளாமணியார் இவ்விருவரும் சம்பந்தர் பின் சென்றனர். ஆலயப்பிரவேசம் இப்பொழுது பேசுவது புதிது என்று எண்ணவேண்டாம். திருநீலநக்கர் என்ற அந்தணப் பெரியார் வீட்டில் யாழ்ப்பாணர் தங்குவதற்காக முத்தீவளர்க்கும் இடத்தில் இடங்கொடுக்க, தீக்கடவுளும் இசைவது போன்று வலஞ் சுழித்தெழுந்ததாகச் சொல்லப் படுகிறது.

'பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்கநாதர், ''முத்தமிழ் விரகர், ''ஞானத்தின் திருவுருவை............. கானத்தின் எழுபிறப்பை' என்பன போன்ற கூற்றுக்களை நோக்கின் இசைப் பெருமை இனிது விளங்கும். சைவசமயம் தனியரசு புரிந்தகாலத்தில் இருந்தனர் சுந்தார் பெருமான். முடிபடை மன்னர் மூவரும் வணங்கினர். சேரமான் தோழரானார். அக்காலமே சைவமாகிய கோயில் பூர்த்தியான காலம். சுந்தரர் பாடிய திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் *ஏழிசையாய இசைப்பயனாய' என்று ஒருபாடல் தொடங்குகின்றது. அது தத்துவத்தைக் கொண்டது. அன்போடிசைந்தது இசை. அது பக்திக்கு ஓர் அங்கமாயது. நாரதர் யாழால் கண்ணனைப் பாடினார். ஆண்டவன் ஆகாச வடிவினன்; சொல்லின் வடிவினன்; இசை வடிவினன்; அன்பு வடிவினன். நாததத்துவத்திலிருந்து தோன்றியது இசையன்று. அன்பும் சேர்ந்தது. இசையின் உருவம், பொருள், தத்துவம் முதலியவற்றை ஆராயலாம். சம்பந்தர் - திருவீழிமிழலைத் தேவாரத்தில் 'பண்ணும் பதம் ஏழும்' என்று தொடங்கிப் பாடியுள்ள பாடல் கூர்ந்து நோக்கத்தக்கது. இசைவேறு, சொல்வேறு என்று இசையியக்கத்தோர் கூறுகின்றனர். ''உண்ணின்றதோர் சுவை'' என்பதால் சொல்லில்லையேல் இசைப்பயனில்லை யென்பது பெறப்படும்.

இசை ஏழு வகைப்படும். ஏழு சுரமாக அமைந்தது. அவை இயற்கையாக உண்டானவை. தாரம் என்பது முதலில் கண்டது. இப்பொழுது காந்தாரம் என்று வழங்குகின்றது. தாரத்தினின்றும் அம்மொழி உண்டாகி இருக்கவேண்டும். சட்ஜ பஞ்சமமாக உழை தோன்றிற்று. அது நிஷாதசுரம். யானையின் ஓசை. சாமகானத் தொடர்புள்ளது. தார நரம்புடன் உழை நரம்பு ஒத்திசைக்கும். உழைக்கு ஐந்தாவது நரம்பு குரல். பெண்களுக்கு இயல்பாக உண்டாவது. அதினின்றும் இளி தோன்றிற்று. அதற்குப் பட்டடை என்ற பெயரும் உண்டு. சட்ஜம் தான் இளிநரம்பு. அதன் பின்னர் துத்தம் உண்டாயிற்று. இக்காலத்தில் பஞ்சமம் என்கின்றனர். விளரி தோன்றிப்பின் கைக்கிளை தோன்றியது. இவ்வகையாக ஏழு நரம்புகள் தோன்றின. 12 சுரஸ்தானங்கள், 22 சுருதிகள் உண்டு. கிரேக்க, ஆங்கிலேய நாடுகளில் ஏழு இருந்திருக்கின்றன. திருத்தம் பெறாத மொழிகளில் 5, 6 உடன் நின்று விடுகின்றன.
ஆனாய நாயனார் புராணத்தில் பஞ்சாக்கரத்தை எழுத்தெழுத்தாகக் குழலில் பாடினார் என்பது தோன்றுகின்றது. சராசரங்களுக்கு உற்சாகமும் அமைதியும் உண்டாயின. இறைவன் சர்வசங்காரகாலத்தில் வீணைவாசிப்பான் என்று அப்பர் சொல்கிறார். இராவணன் இசைப் பெரியான். இறைவன் சாமகானப் பிரியர் என்று பாடினான்.

பாணபத்திரர் இசை அழகிய இசை. இறைவன் விறகு வெட்டியாக நின்று பாடியது முல்லைப்பண்ணின் திறமான சாதாரிப்பண். “விரைசார் மலரோ னறியா விகிர்தன்” என்று தொடக்கத்த திருவிளையாடற் பாட்டும், அதைத் தொடர்ந்த மற்ற இரு பாடல்களும் இன்பம் தருவனவாகும். பாணபத்திரருக்குத் தொண்டு செய்ய இறைவன் வந்தது இசைப் பெருமை என்று அரசன் கூறுகின்றான். "தன் போல் என்பால் அன்பன்' என்பது குறிக்க இறைவன் சேரமானுக்கு 'மதிமலி புரிசை -'' என்று தொடங்கும் அறிமுகக் கடிதம் எழுதி பாணபத்திரரை அனுப்புகிறான். பாணபத்திரர் இருக்க இறைவன் பொற்பலகை யிட்டது இசைப் பெருமையை உலகினர்க்கு உணர்த்தும் பொருட்டன்றோ! யாழைப் பலரும் தொழுது வாங்கும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தது. மாதவி கோவலனிடமிருந்து யாழைத் தொழுது வாங்கினாள் என்று சிலப்பதிகார ஆசிரியர் கூறுகிறார். உரோமாபுரி முதலிய பண்டை நகரங்களில் இசைக் கருவிகளைத் தெய்வமாகவும் வணங்கி வழிபட்டனர். உதயணன் கோடபதி யென்னும் யானைனய இசையால் அடக்கினான். நவரசங்கள் எல்லாம் ஏழிசைகளில் பொருந்தும். நம் நாட்டினர் இறைவனை இசை வடிவமாகக் கண்டனர். அதனாலேயே சுந்தரர் பெருமான் இறைவனை "ஏழிசையாய் இசைப் பயனாய்" என்று போற்றிப் புகழ்ந்திருக் கின்றார்.

சித்தாந்தம் – 1942 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment