Saturday, May 9, 2020



சிவமயம்
சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்


இவ்வியாசம்
மகிபாலன்பட்டி வித்துவான் ஶ்ரீமத்
மு. கதிரேசச்செட்டியாரவர்களால்



எழுதப்பெற்று,
பூவாளூர் சைவசித்தாந்தசபையின்
ஐந்தாம் ௵ பூர்த்திக்கொண்டாட்டசபையில்
(7-3-1915-ல்) வாசிக்கப்பெற்று



௸ பூவாளூர் சைவசித்தாந்த சங்கத்தின் பரிபாலகர்
தி. தா. தண்டாங்கூரை மிராஸ்தார் ஶ்ரீமாந்
கு. ஆதிநாரயணபிள்ளை அவர்களால்




மதுரை
விவேகபாநு அச்சியந்திரசாலையில்
பதிப்பிடப் பெற்றது.


1915
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்
சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்

(இது, பூவாளூர்ச் சைவ சித்தாந்த சங்கத்தின் ஐந்தாம் வருட நிறைவுக் கொண்டாட்ட காலமாகிய 7 - 3 - 15 - ல் சென்னைப் பிரஸிடென்வக் காலேஜ்
தமிழ்ப்பண்டிதர் மஹாமஹோபாத்தியாய ப்ருஹ்மஸ்ரீ வே. சாமிநாதையரவர்
கள் அக்கிராசனத்திற் கூடிய வித்துவான்களும் பிரபுக்களும் நிறைந்த மஹா சங்கத்தில் மகிபாலன் பட்டி வித்துவான் ஸ்ரீ மு. கதிரேசச் செட்டியாரவர்கவால் உபந்யாஸஞ் செய்யப்பெற்றது)

அறிவிற்சிறந்து விளங்கு மாட்சிமிக்க அக்கிராசனாதிபதியவர்களே!
      இவ்வவைக்கண் விளங்கும் அன்புமிக்க ஆன்றோர்களே!

      பெரியோர்களாகிய நுங்கள் அன்புரிமைசான்ற ஆணையைக் கடக்க வஞ் பொல்லும் வகையான் மேற்கொள்ள விரும்பியும், திருவருட்டுணை கொண்டும் இப்பொழுது செயக்கடவதாகிய என் கடமையை நிறைவேற்றத் துணிகின்றேன்.

யான் மேற்கொண்ட “சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்” என்னும் இவ்விஷயத்தை விரித்துக் கூறற்கு இடந்தருந் தேவாரத் திருப்பாசுரம் வருமாறு: -

நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
      றென் கடம்பைத் திருக்காக் கோயிலான்
      றன் கடன்னடி யேனையுந் தாங்குதல்
      என் கடன் பணி செய்து கிடப்பதே.

இப்பாசுரத்தின் அருளொலியும் பொருளுமே இவ்விஷயத்தை விளக்கற் குதவியாயின வென்பதை யிறுதியிற் கூறப்படுந்தொகை யுரைக்கண்முடித்துக் காட்டுவேன்.

பெரியோர்களே!
மறையாகமங்களானும், அவற்றின் முடிவு நூல்களானும் பொதுவாகவுஞ் சிறப்பாகவும் விளக்கப்பட்ட பதிப்பொருள் சிவபிரானே யென்பது அந்நூல்களைச் செவ்விதினாராயு நுண்ணறிஞர்க்கெல்லாம் ஒத்ததொன்றாம். இப்பதிப் பொருளைக் கடவுண் முதலிய பொதுப்பெயர்களான் வேதநெறியொழுகும் எல்லாச் சமயத்தார்
களும், சிவன் முதலிய சிறப்புப்பெயர்களாற் சமயாதீதமாகிய சைவ நெறிநிற்போருங் கூறுப. கடவுள் என்னும் சொற்குப் பொருள் கடந்தவரென்பதாம். எவற்றைக் கடந்தவரெனின், சுட்டியறியப் படுங்காரிய ரூபப்பிரபஞ்சத்தையும், அதனாற் றத்துவ தாத்துவிக ங்களையுங் கடந்தவரென்க. இப்பொருள் ஏனைய தேவர்களுக்கு உண்மையிற் பொருந்தாதென்பது, அன்னார் சிவாகமங்களுட் கூறப்படு முப்பத்தாறு தத்துவங்களுக் குட்பட்டவர்களாதலானும், பேராற்றலுடைய சிவபிரானியக்கத்தான் ஒவ்வோர திகாரங்களைப் பற்றி நிற்பவராகலானுமாம். மற்றைச்சமய நூல்கள் போலாது சைவ சமயத்திற்குறைவின்றிக் கூறப்படுந் தத்துவங்கள் முப்பத்தாறாம்.
அவற்றைக்கடந்து நிற்பவர் பரம்பொருளாகிய சிவபிரான் ஒருவரே யாவர். இம்முப்பத்தாறு தத்துவங்களு முப்பகுதியினவாம். அவற்றுள், தொடக்கப்பகுதியாகிய ஆன்மதத்துவ விரியுள் ஒவ்வொன்றே ஏனைய சமயக்கடவுளர்களின் நிலயமாகும். ஆதலிற் கடவுண் முதலிய சொற்களும் உண்மையிற் சிவபிரானையும் உபசாரத்தான் மற்றைத் தேவர்களையுங் கூறுவனவாம். இங்ஙனமே வடமொழிக்கட் கூறப்படும் பிரமசப்த முதலியவை உண்மையிற் சிவபிரானையும் உபசாரத்தாற் பிறதேவர்களையுங் குறிப்பிடும் பொருளுடைய வென்பது, சுவேதா சுவதரம், கேநம் முதலிய உபநிடதங்களானும், அவற்றை விரித்து விளக்கிய வாயுசங்கிதை முதலிய புராணங்களானும் நன்குணரலாம். இன்னும் இவ்விஷயமாக வேதாக மாந்தங்களை நிலைகண்டுணர்ந்த நீலகண்டவாசிரியர், அரதத்தாசாரியார், அப்பய தீக்ஷிதர் முதலிய சைவப்பெரியோர்கள் சிறிதும் ஐயமின்றி ஆராய்ந்துரைத்தருளிய அரிய வடநூல்களானுந் தெளியலாம். பிரபஞ்ச நிகழ்ச்சியினிமித்தம் ஒவ்வொரு தேவர்களையும் அதிட்டித்து நின்று சிவபிரான் ஒருவரே சிருட்டியாதி யருட்டொழில்களைப் புரிவர். அதனாலன்றே, என்று வாயுசங்கிதை கூறியாங்கு தொழில் திகாரநிலயராகிய முக்கிய தேவர்களின் பெயர்கள் ளெல்லாஞ் சிவபிரானுக்குப் பொருந்தின. சிவனென்னும் வாசகமோ "சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி யெம்மான்" என்னுந்தமிழ் வேதத்தான் எனை போர்க்குச் சொல்லாதென்பது போதரும். இதனாற் சிவபிரானுக்குள்ள முழுமுதன்மை வேறு தேவர்களுக்கின் றென்பது முணர்க. இங்கனமின்றி நித்தியமங்களார்த்த வாசகமாகிய இச்சிவசப்தத்தை பிறசமயத்தார் தஞ்சமய தெய்வங்களுக்குக் கூறிக்கொள்ளின், அஃது அந்வர்த்த நாமமாகப் பொருந்தாதென் பதுண்மை யெனினும், நம் சிவபிரான் மாட்டு அமைந்துகிடக்கும்    உயர் நலங்களே அன்னாரையவ்வாறு கூறச் செய்தன வென்றும், அதனாற் சைவ மக்களாகிய நம்மனோர்க்குப் பெருமையே யென்றும் நினைத்து மகிழ்வேமாக. இத்துணையும் ஒருவாறு சுருக்கியுரைத்த சிவபரத்துவ விஷயம் தனியான ஒரிய உபந்யாசமாக விளக்கவேண்டியதொன்றாகலின், இதனை நிறுத்தி மேல் இப்பெருமான் கருணைத்திறத்தைச் சிறிது கூறுவேன்.

(1) கருணையினிலக்கணம்.
கருணை, தயை, இரக்கம், அருள் என்பன ஒரு பொருட்சொற்கள். இது: - பரமபதியாகிய சிவபிரானுக்குரிய குணங்கள் எட்டனுள் முக்கியமான தொன்றாகும். இதுவே, அப்பெருமானிடத்து அலுப்த சக்தி, அல்லது போருளுடைமை யென்று சொல்லப்படும். இக்கருணைக் குணத்தின் இலக்கணமாவது, ஒருவர் தமக்குரியாரை
நோக்கி இவர் எமது தந்தையார்; இவர் எமது தாயார்; இவர்கள் எம் உடன் பிறப்பாளர்; இவர்கள் எம் உறவினர்; இவள் எமது மனைக் கிழத்தி; இவர்கள் எம்புதல்வர்கள் என்றின்னோரன்ன தொடர்பு பற்றி மேற்கொள்ளும் அன்பு போலாது எல்லாவுயிர்கண் மாட்டும் இயல்பாக நிகழ்கின்ற அருளே யாகும். இவ்வுயர்குணம் நம்மனோர்க்கு ஒருசிறிது வாய்க்குமாயின், அது தொடர்பு பற்றியெழும் அன்பின் முதிர்ச்சியா னுண்டாயதென் றறிதல் வேண்டும். இது கருதியே "அருளென் னுமன்பீன் குழவி” யென்றார் திருவள்ளுவ தேவரும். இவ்விடத்துத் திருத்தொண்டர் புராணத் திருப்பாட்டினியைபு ஒன்றனைப் புலப்படுத்தி மகிழாமலிருக்கக் கூடவில்லையாதலின், அதனையுஞ் சிறிதுகாட்டுத லவசியமாகின்றது. திருஞான சம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் சீகாழியில் திருத்தோணியப்பரையும், அம்மையாரையுந் தரிசிப்பான் செல்லுங்கால் அவ்விருவர்களும் ஒருங்குக் கூடிச்செல்லுந் திப்பிய காட்சியை நாலாசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள், தம்மனத்தின்கண், தியானமுகமாக எழுதிப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்தின் புற்று, அம்மகிழ்ச்சி யின்பங்களை நம்மனோருஞ் சிறிது பெற்றுய்யுமாறு, தாந்துய்க்கும் இன்பம் பொங்கி வெளிப்படுதல் போல ஓரருமைப் பாசுரத்தை யருளியிருக்கின்றார்கள். அப்பாசுரத்தின் கருத்து, அந்நாயன்மார்க ளிருவர்களது ஒன்றுபட்ட தோற்றத்துக்கு ஒப்புக் கூறுவதேயாகும்.
அது வருமாறு: -
"அருட்பெருகு தனிக்கடறு முலகுக் கெல்லா மன்புசெறிகடலுமா மெனவு மோங்கும், பொருட்சமய முதற்சைவ நெறிகான் பெற்ற புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவன முய்ய, இருட்கடுவுண் டவரருளு முலக மெல்லா மீன்றாடன் றிருவருளு மெனவுங் கூடித், தெருட்கலை ஞா னக்கன்று மரசுஞ் சென்று செஞ்சடைவானவர் கோயில் சேர்ந்தாரன்றே'' என்பதே.
இதன்கட் கூறப்பட்ட வுவமைகளையன்றி வேறு எத்துணை நீண்டு நினைப்பினும் "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங்காலை" யென்னும் உவமவிலக்கணத்துக்கு மாறுபாடின்றி யீண்டுக்கூறத்தக்கது யாதுளது? என்னே இவ்வுவமைகளின் அருமைநயங்கள்! இங்ஙனங் கூறுதலன்றே ஆன்ற அருட்கவிகளினியற்கை. இப்பாசுரத்தினரும் பொருள்களை முற்றக்கூறினீண்டு விரியுமாதலின், இயைபுடைய முதலடியின் பொருளை மாத்திரஞ் சுருக்கிக் கூறுவேன். இதனிறுதி யடியில் "தெருட்கலை ஞானக்கன்று மாசும்'' என்று கூறுவதால் நிரனிரையாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனங்கொள்
ளுங்கால் அருட்பெருகு தனிக்கடல் திருஞானசம்பந்த சுவாமிகளும், அன்பு செறிகடல் திருநாவுக்கரசு சுவாமிகளுமாவார். இவ்விருவரிடத்தும் அருள் அன்பு என்னும் இருகுணங்களுமுளவெனினும் அவற்றாலாம் பயனை நோக்கி விசேடமாக ஆராயுங்கால் அப்பர் சுவாமிகள், சிவபிரானும், சிவனடியார்களுமே தமக்குரியவர்களாகக் கொண்டு அன்பு செய்தமையானும், தாதமார்க்கத்தில் வெளிப்பட நின்று ஒழுகியமையானும், அம்மார்க்க ஒழுக்கத்துக்குத் தலைவன் ஒருவனை மேற்கொண்டு அன்பு செய்தலே முக்கியமாதலானும், அவர்களி
டத்துள்ள அருட் குணத்தினும் அன்பேயார்வக்கும் வெளிப்படக்
காணப்படலாள், அவர்களையன் புக்கடலென்றும், திருஞானசம்பந்தசுவாமிகளிடத்து இவ் அன்புளதெனினும் அவர்கள் சற்புத்திரமார்க்கத்தில் வெளிப்பட ஒழுகியமை யானும், இறைவன் குணம் அருளேயாதலானும், சுவாமிகளிடத்து எல்லாவுயிர்கண் மேலும் இயல்பாக எழுங்கருணையே மேலிட்டிருந்தமையானும், திருப்பெருமணநல்லூரில், தந் திருமணக் கோலத்தைத் தரிசிக்க வந்திருந்த பக்கு
வாபக்குவர்களாகிய வெல்லோர்க்கும் அக்கணத்திலேயே ஸம்ஸ்கார பூர்வகமாகக் கொள்ளை கொள்ள வீடுதவிக் கூற்றைப்பிடர் பிடித்துத் தள்ளித்தம் அருட்குணப்பயனைக் காட்டியமையானும் அவர்களை யருட்கடலென்றுந் திருவாய் மலர்ந்தருளினார் ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள்.
ஈண்டு இன்புறத்தக்க தோரியைபென்னையெனின்; அன்பினாலருளுண்டாவது பற்றி அன்பு அப்பனும், அருள் பிள்ளையுமாகும். அம்முறையே அன்புக்கடலாகிய நாவரையரை அப்பரெனவும், அருட்கடலாகிய சம்பந்தரைப் பிள்ளையாரெனவும் பெரியார் பாராட்டி வழங்குதலேயாம். அந்நாயன்மார்பாற்கருணையின்மைக்குச் சரித
ங்காட்டிப் பேசுவாருஞ் சிலருளராலோவெனின்; அன்னார் கூற்று சிவபிரான் கருணையைப் பாகுபாடுசெய்து கூறுங்காற் சொல்லப்படுஞ் சங்கோத்தரங்களாற் சிறிதும் பொருந்தாமையுணரலாம். இவ்வளவிற் கருணையின் இலக்கணம் ஒருவாறு சுருக்கிக் கூறப்பட்டது.
(2) சிவபிரானே கருணையை முழுதும் ஆளுதற்குரியர்
இனி, இக்கருணையை முற்றும் ஆளுதற்குரியர் சிவபிரான் ஒருவரே யாவரென்பதைப்பற்றிக் கூறுவேன். "அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம், புல்லார் புரளவிடல்" என்னுந் திருக்குறளால், அருள் உயர்ந்தோர் தம்மிற் றாழ்ந்தோரிடத்தும், அன்பு தாழ்ந்தோர் தம்மின் உயர்ந்தோரிடத்தும் செய்யுங் குணங்களாமென்பது வெளியாம். இச்சிறப்பிலக்கணப்படி எல்லாவுலகத்துமுள்ள எல்லாவுயிர்களிடத்தும் ஒருங்கே கருணை செய்தல் எல்லாம் வல்ல சிவபிரான் ஒருவர்க்கே கூடுமன்றிப் பிறதேவர்களுக்கின்றாம். வேறு தேவர்களு மக்களுட் சிறந்தார் சிலரும் இவ்வருட் குணத்தையுடையராய்க் காட்டிய சரிதங்களுமுளவே யெனின்; அம்மக்கடேவர்கள் யாவருக்கும், ஒவ்வோரமயங்களிற் றம்மிற்றாழ்ந் தாரிடத்துக் கருணை நிகழுமாயினும், தமக்கெல்லாமுயர்ந்தாராகிய சிவபிரான் ஒருவரிருத்தலான், அவரிடத்து அன்பேயன்றி அருள் செய்தற்கியை பின்மை
யானும், சிவபிரான் எவராலும் விலக்குதற்கொண்ணாத பாற்கடற்கண் எழுந்த விடத்தைப் பானஞ் செய்து யாவர்க்கும் தாந்தலைவரேன்பதையும், யாவரிடத்துங் கருணை செய்யத் தக்கவரென்பதை யுங்காட்டினமையானும் கருணையின் முழுவிலக்கணமும் ஏனையோரிடத்தன்றிச் சிவபிரான் பக்கலிருப்பதையுணரலாம்.
''இவ்வருட்குணத்தின் பகுதியாகிய கண்ணோட்டத்தைப் பற்றியெழுந்த "பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டுபவர்" என்னுந்திருக்குறளிலும் சிவபிரான் விடமுண்டசரிதங் குறிப்பிடத்தக்கதொன்றாம். சிபி, ததீசி முதலியோர் சரிதக் குறிப்புக்களைச் சில குறள்களிற் கண்டு உரைக்கட்காட்டிய ஆசிரியர் பரிமேலழகர் இதனையுமீண்டுக் காட்டியிருப்பின் மிக நன்றாகும். இறைவனுக்கு எல்லாஞ் செய்யும் ஆற்றல் இயற்கையென்றொழிந்தார் போலும். சிவபிரான்றலைமையும், அவர் கருணைத் திறமும் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள், தாம் அநுபவித்துத் திருவாய் மலர்ந்தருளிய திருவாக்குக்களிற் பாக்கக் காணலாம். "தன்மைபிறராலறியாத தலைவா” என்பது தலைமை பற்றியதாகும். தலைவர்களை யுலகத்தலைவரெனவுங் கடவுட்டலைவ ரெனவும் இருவகையாகக் கொள்ளலாம்.
இவ்விருவர்களுக்குமுள்ள பேதத்தை நம் சுவாமிகள் யாவரும் வியந்கின்புறுமாறு மிக அழகுபெறக்கூறியிருக்கின்றார்கள். எங்ஙனமெனின்; உலகக்கலைவர்களாகிய அரசர் முதலியோரை யுலகத்துள்ள மற்றையோரெல்லாம் நன்கு தெரிவர்; அத்தலைவர்களின் குணஞ்செயல்களையும் வரையறுத்துணர்வர். அத்தலைவர்கள், பிறரெல்லாரையும் அறியார்; அன்னார்குணஞ்செயல்களையு நன்கு தெரியார். கடவுட்டலைவராகிய சிவபிரானோவெனின்; பிறரெல்லாரையும் அன்னார்குணஞ்செயல்களையும்'' அவனன்றி யோரணுவுமசையா" தென்றபடி யுயிர்க்குயிராய் நின்று நன்குணர்வர். பிறர்க்கு அப்பெருமான் பெற்றியுணரவரிதாகும். இப்பொருணலங்களையே நமது சுவாமிகள், மேற்காட்டியபடியும், "பெற்றிபிறர்க்கரிய பெம்மான்" எனவும் அருளிச் செய்வாராயினர். "குறைவிலா நிறைவே" யென்பது, அப்பெருமான் கருணையைப்பற்றியதாகும். சிவபிரான், தங்கருணையைப்பிறரெத்துணை பள்ளிக்கொண்டாலும் குறைவின்றி நிரம்பியிருப்பரென்பதாம். இவ்விருவிஷயத்தையும் " தெள்ளிப்பிறராற் றெரிவரியான்றன்கருணை, யள்ளக் குறையாவரன் " என்பதனானும் நன்குணரலாம். இதனால், தங்கருணையைக் கொள்ளாவிட்டாற்குறைவரேயன்றிக் கொள்ளக்குறையாரென்பதும் வெளியாதல் உய்த்துணர்க. எவ்வுயிர்க்கும் இரங்கி, அவற்றிற்குவரும் இடையூற்றையொழித்து இன்பளித்தல் சிவபிரான் ஒருவர்க்கே கூடுமென்பதும், மற்றையோர்க்கி
யன்றவரை கருணை செய்தலே கூடுமென்பதும் ஆன்றோர் துணிபாகும் இதுகருதியே அருளைப்பற்றித் திருமூல தேவர் கூறுமிடத்து
"ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதம்
கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள
நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத்
தீர முடைமை யருளி னியல்பே"

என்று மற்றையோர்க்கியன்றவாறு "முடியாதெனி னீரமுடைமையருளினியல்பே" எனக்கட்டளையிட்டருளினார்.
சிவபிரானுக்கு முடியாத தொன்றின்மையின், அவரே கருணையை முழுவிலக்கணத்துடன் ஆளுந்தகுதியினரென்பது வெள்ளிடைமலை யெனவுணரத் தக்கதொன்றாம். இன்னும் இவ்வுண்மையை பலிவொஷா தா என்னுமந்திரமும் வலியுறுத்தும். சகல தேவர் மக்கண் முதலிய யாவர்க்கும் எவற்றுக்கும் ஈயுந்தாதா சிவபிரானே யாவரென்பது, எஜுர் வேதத்துள்ள சமகமந்திரங்கள், திருமால் பிரமன் முதலிய தேவர்களை அன்னத்தோடு சேர்த்து ஈயப்படும் பொருளாகக் கூறினமையானும், சிவபிரானை யங்ஙனங் கூறாமையானு நன்குணரலாம். யாவருந் தம்பா விரக்கத் தாம் வேண்டியார் வேண்டியாங்கீயும் பெருங் கொடையாளியாதலின், இப்பெருமானே, கருணையென்னும் உயர்குணத்தின் முழுப்பாகத்தையும் உடையாரென்பது தேற்றமாம்.
(3) சிவபிரான் கருணையின் சிறப்பு.
இனி, நம் பெருமானுக்குரிய எண்வகைக் குணங்களுட் கருணையும் ஒன்றெனினும், இக்குணமே, நாமெல்லாம் வழிபட்டுதற்குரிய திருமேனியை இறைவன் கோடற்குரியதாக விருத்தலின் மிகச்சிறந்ததாகும். சிவபிரான் உண்மைச் சொரூப விலக்கணம் "செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்'' என்றபடிசச் சிதாநந்தப் பிழம்பேயாகும். இந்நிலை மலபத்தர்களாகிய ஆன்மாக்
களுணரவரியதாகலின், அவ்வான்மாக்களின் பொருட்டு இறைவன் அருவம், உருவம், அருவுருவம் என்னு மூவகைத் திருமேனியுமுடையராய் வெளிப்பட்டருளுவர். இதுவே தடத்த நிலையெனப்படும். இத்திருமேனிகள் கருணையாற் கொண்டனவேயாம். இவ்விருவகை நிலையும் இறைவனுக்குரிய வென்பதையும், கருணையே வடிவ மென்பதையும், "கற்பனை கடந்த சோதி கருணையே வடிவமாகி" யெனவும், " செப்பிய மூன்று நந்தங், கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு தானே'' எனவும் போந்த திருவாக்குக்க ளானறிக. ஈண்டு இக்கருணையே தமது வாமபாகம் பிரியாதுடனுறைந்து விளங்கும் உமாதேவியாகிய சிவசக்தியாகும். இஃது "அருளது சக்தி யாகு மரன்றனக்கு'' என்பதனானறிக. தமக்கமைந்த எண்வகைக் குணங்களுள், இவ்வருட் குணமே நம்பிரானுக்குரிய
பராசக்தியாக வமையுமாயின், இதன் மாட்சியை எவ்வாறு பேசுவேன்! நம் பெருமானது இப்பேரருள்வெளிக்கண்ணே, எல்லா அண்டங்களும், அவற்றினுட்பொருள்களுந்தோன்றி நிலைபெறுவன வாம். இவ்வாருள் வெளிக்கண் எல்லாவுயிரும் நிலை பெற்றிருந்தும்'' வெள்ளத்து ணாவற்றி யாங்குன்னருள் பெற்றுத் துன்பத்தின்றும் விள்ளக்கில் லேனை'' என்ற திருவாக்கின்படி நாம் நம் வினைப்பகுதியான் அக்கருணையினாற் பெறவேண்டிய பயனைப் பெறாது மாழ்கு
கின்றோம். இக்குற்ற நம்மதே பன்றி யக்கருணா நிதியின் பாலதன்று. தாழ்ந்த நிலம் மேட்டு நிலமென்னும் வேறுபாடு கருதாது மேகம் நிரந்தரமாகப் பெய்தும், அந்நீரை மேட்டு நிலமேற்காது ஒதுக்கத்தாழ்வுநிலம் ஏற்குமா போல, சிவபிரான் பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடலாகவிருந்தும், நந்தீயவினையாகியவணை குறுக்கி
ட்டுக் கிடத்தலான், அக்கருணைப் பிரவாகம் நம்பாற் செல்லாது உண்மை யன்பர் கூட்டமாகிய நற்றடத்திற் சென்று நிறைகின்றது. சிவபிரான் ஆன்மாக்களும்தற் பொருட்டுத் தங்கருணையமுதத்தை மிகவலிந்து எத்துணையோ உபாயங்களாலும், ஊட்டுகின்றார். இவ்வுண்மைபை சுவா நு பூதியானுணர்ந்த போன்பாளராகிய ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் கட்டளையிட்டருளிய பின்வரும் திருவாசகத் திருப்பாசுரத்தானு முணரலாம்.
அதுவருமாறு; -
''வழங்குகின் றாய்க்குன் னருளா ரமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன் விக்கி னேன்வினை யேனென் விதியின்மையாற்
றழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளா
யழுங்குகின் றேனுடை யாயடி யேனுன் னடைக்கலமே''
என்பதே.
இதன் அருமைப் பொருளையுஞ் சிறிது கூறி மேற் சொல்வேன்.
வழங்குகின்றாய்க்கு என்புழி, குவ்வுருபு பொருட்டுப் பொருளதாம்.
"என்னையாண்டாய்க்கு " என்று பிறாண்டுஞ் சுவாமிகள் இதனை வெ
ளிப்படக் கூறுவர். ஆகவே, வழங்குகின்ற நின்பொருட்டு நின்
அருளாகியவாரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் என்
பதே யத்தொடரின் பொருளாம். ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்
தம்மைச் சிவபிரான் மிகவலிந்து அடிமை கொண்டாரென்பதை
"கல்லை மென் கனியாக்கும் விச்சை கொண்டென்னை தின்கறு கன்ப
னாக்கினை" யெனவும், "ஈர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெரு
மாளே" யெனவும், "கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை,
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனை " யெனவும், " இனையனா
னென் றுன்னை யறிவித்தென்னை யாட்கொண் டெம்பிரானானாய்க்கு "
எனவும் போந்த திருவாக்குக்களானுணர்க. அவ்வாறு அடிமை
கொண்டு தங்கருணை யமுதத்தை யெவ்வா ராட்டினாரெனின்; ஒன்
றுமறியாக் குழவிப் பருவத்து மகவைத் தாய் அச்சமுறுத்தியுணவூ
ட்டுமா போலும், கல்லூரிக்கட்சென்று கல்வியின் மாட்சியுணராது
கற்றற்கு மலைவுறும் சிறாரை யாசிரியன் அடித்துத் துன்புறுத்திக்
கல்வியைப் புகட்டுமா போலும் ஊட்டினாரென்க.
இவ்வுண்மையையே நம் சுவாமிகள் "அடித்தடித்து வக்காரமுன்றீற்றிய வற்புதமறியேனே" என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். ஆதலின், "சர்க்கரை வழங்குதல்'என்பது போலச் சிறிதும் வருந்துதலின்றி மகிழ்ச்சிமிக்கு இடையீடின்றிப் பெய்தல் கருதிக், கொடுத்தல் தருதல் முதலிய சொற்களை விடுத்து வழங்குதற்
சொல்லாற்றொடுத்து, அவ்வாறு கருணையமுதத்தைப் பெய்து உண்ணுக உண்ணுகவென்று அடித்தடித்து வற்புறுத்துகின்ற நின்பொருட்டு அஞ்சியென்பார் வழங்குகின்றாய்க்கு எனவும் தன்னையுண்டாரைச் சிற்றின் புறுத்துந் தேவரமுதம் போலாது சிவபிரானருளமுதம் பேரின்புறுத்த வல்லதாகலின் உன்னரு ளாரமுதத்தையெனவும், இயற்கையாக வுண்டலின்றித் துன்புறுத்து நின்பொருட்டுமிக விரைந்துண்ணுகின்றேனென்பார் வாரிக்கொண்டு விழுங்குகின்றே
னெனவும், அங்ஙனம் விரைந்து விழுங்குதலான் "விக்கினேனெனவும், வேண்டாத வுணவையுண்டற்குத் தொடங்கு முன்னர்க் கண்டவளவிலேயே விக்கலுண்டாமாகலின், முறையே நிகழ்காலமுமிறந்த காலமுந் தோன்ற விழுங்குகின்றேன் விக்கினேனெனவும் அவ்வாறு விக்குதற்குக் காரண நீயல்லை; வினைவயப்பட்டுழலும் எனது விதியேயென்பார் வினையேனென் விதியின்மையால் எனவும், யான் வேண்டாதிருப்பவும், என்னைத் துன்புறுத்தி யூட்டினையாதலின், அதனாலுண்டான விக்கலை யொழித்தற்குத் தண்ணீர் தந்து பிழைப்பித்தல் வேண்டுமென்பார் " தண்ணீர் பருகத்தந்துய்யக் கொள்
ளாயெனவும், அவ்வமுதம் நின்னருளமுத மாதலின், அதனையுண்ணு தற்குரிய அதிகார சிவத்துவம் வேண்டுமென்பார் தண்ணியநீர்மை - சிவக்துவம் என்னும் பொருள் பொதுளத் தண்ணீரெனவும் அத்தண்ணீரும் அவ்வமுதம் போல் விக்கன் முதலிய சலனங்களைத் தருகலின்றி யெற்குகந்த இனிமைச் சுவையுடனிருத்தல் வேண்டுமென்பார்.'' தழங்கருந் தேனன்ன தண்ணீரெனவும், அது பெறாமையின் மிக வருந்துகின்றே னென்பார் அழங்குகின்றேனெனவும், சிவபிரான் சேதனப் பொருள்க ளெல்லாம் தமக்கு அடிமையாகத் தாம் ஆண்டான் எனவும், அசேதனப்பொருள்களெல்லாம் உடைமையாகத் தாம் உடையானெனவுங் கூறப்படுவராதலின், இந்நான்கு சொற்களைக் கொண்டு விளக்குதற்குரிய விஷயம் முன்னிலை தன்மையாகிய இருசொற்களினமைய உடையா யடியே னெனவும், யான் சேதனனாயிருந்துஞ் சிறிதும் அன்பிலனாதலின், என்னையாளுதல்
பற்றிவரும் ஆண்டானென்பதினும், அசேதனப் பொருள்களைப்பற்றிய உடையானென்பது நினக்குப் பெருமையாதலின் அதனையே விளிப்பலென்பார் உடையாயெனவும், ஆண்டானென்ப துண்மை யெனினும் என்னை நோக்கியவ்வாறு கூறற்கு நாணமுடையேனாத" லின் அப்பொருள் பிறரறிய வென்னையே கூறிக்கொள்வலென்பார் அடியேனெனவும் நின்றனக்குரிமையுடைய பொருளினும், அடைக்கலப்பொருளைக் காத்தல் நின்பெருந்தன்மைக்கு இயன்றதென்பார் உன்னடைக்கலமே யெனவுந் திருவாய் மலர்ந்தருளினார் சுவாமிகள். நண்பர்களே! இவ்வரிய நுண்பொருளை நினையுங் காற் றிருவாசகமாட்சி சிந்தித்தற்கெவ்வாறு ஒல்லும்? இவ்வருமை நூலுக்கு உரை வரை வேனென்று முற்பட்டார் சிலர் இதன் நுண்பொருணலங்களைப் பிறரறியக் கூடாவாறு செய்தமை பெரிதும் வருந்தத் தக்க தே.
இன்னும் நம் இறைவன் அன்பர்களை யாட்கொள்ள மேற்கொண்ட செயல்களென்னத் தொலையா. அவர் தம் அன்பர்களுக்கு எவ்வளவு எளிய நிலையிலுள்ளாரென்பது அச்செயல்களானறியலாம். நம் மணிவாசகர் பொருட்டு மண் சுமந்தார். ''மண்முதற் சிவமீறாகிய முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தவன் என்று என்னைக் கூறுவார்; யானோ என் உண்மையன்பர் பொருட்டுக்கீழ்க்கண்ட பிருதிவி தத்துவத்தை அம்முப்பத்தாறினுமேல் நிற்கும் என்சிரமேலேற்றுங் கடப்பாடுடையேன்." என்று அவர் தாம் அடியார்க் கெளியராம் நிலைமையை நன்கு புலப்படுத்தினர் போலும். என்னே அவர் பெருங்கருணை மாட்சி! நினையுங்காலுள்ள முருகுகின்றதே!
(4) அக்கருணையின் வகை.

இனி, அப்பெருமான் கருணைத் திறம் இருவகைப்படும். அவை அறக்கருணை மறக்கருணை யென்பனவாம். ஒரு தந்தைக்குரிய இருவர் மக்களுள், ஒருவன், "தந்தை சொன்மிக்க மந்திரமில்லை''  என்றபடி செவ்விய நன்னெறிக்கண் ஒழுகுகின்றான். அவனுகுத் தந்தை வேண்டுவன தந்து இன்புறுத்துகின்றான். மற்றொருவன் தந்தையுரை கடந்து தீயநெறிக்கட் செல்லுங்கா லவனைத் தந்தையடித்துத் துன் புறுத்தி நன்னெறிக்கட் செலுத்துகின்றான். இவ்விருவர் மக்களிடத்துச் செய்யுமிவ் விருசெயலும் அன்புபற்றியனவேயாகும். இங்ஙனமே நம் பரமபதியின் செயலுமாம். தம்மிடத்து அன்புபூண்டு ஒழுகும் அடியார்களை யவருவப்பன செய்து இன்புறுத்துவர். அன்பின்றி யிருப்போரை பொறுத்து நன்னெறிக்கட் செல்லுமாறு அருள் பாலிப்பர்.

இவ்விரு செயற்கும் அவ்வான்மாக்க ளிடத்துத் தாம் வைத்த கருணையே காரணமாகும். இவற்றுண் முன்னையது அறக்கருணை யெனவும், பின்னையது மறக்கருணை யெனவுங் கூறப்படும். நம்சமய நூல்களையும் உலகியலையும் அறியார் சிலர் ''யாவர்க்கும் ஒப்பவிருத்தலன்றே கடவுளியல், அவ்வாறின்றிச்சிலர்க்கு இதஞ்செய்தலும், சிலர்க்கு அகிதஞ்செய்தலும் என்னை?"  யென்பர். இவ்வுலக பரிபாலனஞ் செய்யும் அரசியலை நோக்கினும் இவ்வுண்மை மிக வெளிதிலறியத் தக்கதொன்றாம். இதுகருதியே திருவள்ளுவ தேவரும் "அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார், மறத்திற்கு மஃதே துணை'' என்று கூறினர். இத்திருக்குறளுக்கு மறத்தை நீக்குதற்கும் என்று ஆசிரியர் பரிமேழலகர் உரை கூறினர். இதனினுஞ் செவ்வையாக அறத்தைச் செய்தற்கு அன்பு துணையாதலால் போல ஏனை மறத்தைச் செய்தற்கும் அன்பு துணையாம் என்று கொண்டு இவ்விரண்டனுட் பின்னதையன்பு பற்றிய மறமெனக் கோடல் சிறப்புடைத் தென்பதுணர்க. இங்ஙனமே நாயன்மார்கள் செயலுமாம், நம்வைதிக சைவசமய நெறியையழிப்ப முற்பட்ட சமணர்கள் பாண்டியவரசனால் ஒருக்கப்பட்டுக் கழுவேறுங்கால், அதனை விலக்காமையால் திருஞானசம்பந்த சுவாமிகள் கருணையிலரென்பர் ஒருசிலர். அன்னார், “ஒருகுடி நலம்பெற ஒருவனையும், ஒரூர் நலம் பெற ஒரு குடியையும், ஒரு தேயநலம்பெற ஓரூரையுங் கெடுத்துக் காத்தலறமாமென்று அறநூல் கூறுதலையு முணர்ந்திலர்; ''பொறையெனப்படுவ தாடவர் தமக்குப்பூணெனப் புகலினும் பொருந்தார், முறையறப்புரிந்தா லக்கணத்தவர்த முடித்தலை துணிப்பதே முழுப்பூண்'' என்னு நீதியையு முணர்ந்திலர். இன்னும்பல பிரபல நியாயங்களுளவெனினும், அவையீண்டு வேண்டற் பாலனவல்ல வாதலின், விரித்திலன். ஆகவே, சிவபிரான் செயல்கள்  ''எக்கிரமத் தினாலு மிறைசெய லருளே யென்றும்'' என்றாங்குக் கருணை காரண மாகவுள்ளனவேயாம்.

(5) அக்கருணையாலான்மாவெய்தும் பயன்.

இனி, அப்பெருமான் கருணையானுண்டாம் பயனைச்சிறிது கூறுவல். ஆன்மாக்களநாதி கேவலத்தி லாணவமலத்தாற் பிணிப்புண்டு இருட்டறையிற் கிடக்கின்ற கண்ணிலாக்குழவிபோல் நினைவு செயலற்றுக் கிடக்குங்கால் விவிதசக்திகளையுடைய அவ்வாணவமலத்தைக் கழுவுதற்பொருட்டுக் கன்மமல மாயாமலங்களை யவ்வவற்றிற் கேற்பப்பயனுறச்செய்து, சிறிது அறிவெழக்கண்டு, படைத்தன் முதலிய ஐந்தொழில்களையும் புரிந்து, இறுதியிற்றந் திருவடி யின்பத்தை பதற்குக்காரணம், தம் அளவிலாப் பெருங்கருணையேயாகும். இவ்வுண் மையை,

அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட்
டருளி வழிந்திளைப் பாறி மறைந்திட்
டருளான வானந்தத் தாரமு தூட்டி
யருளாலென் னந்தி யகம்புகந் தானே."

என்னுந் திருமந்திரமும் வலியுறுத்துவதாம். இனி அப்பெருமானைக் காண்டற்கும் அவர்கருணையே கண்ணாதல் வேண்டும். கேநோபநிட தத்தில் 'இந்திரன் இயக்க வடிவத்துடன் வந்தபரம்பொருளாகிய சிவபிரானை ஆங்குத் தோன்றிய உமாதேவியாராகிய அருட்சக்தி கரட்ட லாற் றெளிந்தான்” என்று கேட்கப்படுதலானும், "மெய்யருளாந் தாயுடன் சென்று பின்றாதையைக்கூடி'' யென்று பட்டினத்தடிகள் அருளினமையானும், ''அவனருளாலே யவன்றாள் வணங்கி" எனவும்,   "அவனருளே கண்ணாகக்காணினல்லான்'' எனவும் போந்த திருவாக்குக்களானும் இவ்வுண்மை நன்குபுலனாம். “ஆங்கவனருளாற் பத்தி நன்குண்டாம்” என்றபடி இறைவனையடைதற்கு மிக முக்கியமான பத்தியும் அவனருள் வழியுண்டாமெனின்; வேறிதன்பயனை யெவ்வாறுரைப்பேன்! அப்பெருமான் பரங்கருணையின் பயனாகமுடிவில் நாம் பெறத்தக்க பொருள் அப்பெருமானேயாகும். இதனினுஞ் சிறந்தபயன் யாதுளது? சிவநேசர்களே! இவ்வுலகத்தும் அவ்வுலகத்தும் விரைவிற் றோன்றியழிதன்மாலையவாகிய சிற்றின்பந்தரும் பொருள்களைப் போலாவது நித்தியானந்தவுருவமாகிய அவ்விறைவனையே தருமாட்சிமிக்க அக்கருணையைப் பெறுதற்குரிய செயலையன்றி வேறுயாம் செயக்கிடப்பதுயா துளது? ஸ்ரீ மணிவாசகனாரும் "தந்ததுன் றன்னைக் கொண்ட தென் றன்னைச் சங்கரா யார்கொலோ சதுரர், அந்தமொன் றில்லா வானந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன் றென்பால்'' என்று இப்பேரானந்தப் பெருஞ்செல்வப் பேறு அவர் கருணையினாற் பெற்றதம் அநுபவவுண்மையை நம்மனோரும் உய்யவெளிப்படுத்தியருளினார்கள்.

இத்திருவாக்கில் ஒரு பண்டமாற்றுச்செய்தியை நாம் அறிகின் றோம். அஃதாவது, எல்லாவறிவும் எல்லாவாற்றலும் நிறைந்த மலகிதராகிய சிவபிரான் தம்மைக் கொடுத்துச் சிற்றறிவுஞ் சிறுதொழி லுமுடைய சீவனை யதற்குமா ற்றாகக் கொள்ளுகின்றாரென்பதே. அப் பெருமானைப்பெற்றமையாற் சீவன் எய்திய பயன் அளப்பிலாவானந் தம். இச்சீவனால் அவ்விறைவன் பெற்றது யாதுமின்று. என்னே யவர்கருணை த்திறம்! மனத்தானினைத்தற்கும் வாயாற் பேசற்கும் அளவுபடுவ தின்றாகலின், இம்மட்டிற் சிவபிரான் கருணை யென் னும் பகுதியை நிறுத்தி மேற்சீவர்களின் கடமையைப்பற்றிச் சிறிது கூறுவேன்.

(6) சீவர்களின் றன்மை.

ஆன்மா எப்பொருளைச் சார்ந்ததோ அப்பொருளின் வண்ணமாந்தன்மையுடைய தென்பது வேதாகம சித்தாந்தம், வெளி, இருளோடு கூடுங்காலிருளாகவும், ஒளியோடு கூடுங்கால் ஒளியாகவும் ஆதல் போலவும், ஒருபளிங்கு, செந்நிறத்தைச் சார்ந்துழிச் செம்மையாககவும், கருநிறத்தைச் சார்ந்துழிக்கருமையாகவும் தோன்றுதல் போலவும், ஆன்மா, மலவிருளிற் சலந்துழி அதன் மயமாகவும், சிவவிளக்கத்திற் பொருந்துழிச் சிவமயமாகவும் விளங்கும். அவ்வப்பொருளைச் சாருங்காற் பிரிப்பின்றியத்து விதமாகவே சம்பந்த முற்றுக் கலந்திருக்கும். மலத்தோடு சம்பந்தமுற்றுழியங்கிலையும் அத்துவிதநிலை யாமோவெனின், அதுவும், ஒன்றென்றவது வேறென்றாவது கூறப்படாமையின் அத்துவிதமேயாம். இதனை "ஆணவத்தோடத்து விதமான படி மெய்ஞ்ஞானத், தாணுவினோடத்து விதஞ்சாருநாளெந் நாளோ" என்னுந்தாயுமானார் திருவாக்கும் வலியுறுத்தும், ஆகவே தனக்கெனவொரு சுதந்தரமுமின்றிச் சார்ச்சிப்பொருள்களின்றன்மையே தன்றன்மையாகக் கோடல் ஆன்மாவினிலக்கணங்களுண் முக்கியமானதொன்றாம். இன்னும் இச்சீவன் சகசமலமாகிய ஆணவத்தாற் பிணிப்புண்டு அதனீக்கத்தின் பொருட்டு இறைவனாற்றப்பட்ட மாயா மலகன்மமலங்களின் காரியங்களாகிய தநுகரண புவன போகங்களைப் பெற்று மாறிமாறிப் பிறக்குமியல்புடையதாம். மனம் புத்தியங்காரஞ் சித்தமென்னும் அந்தக் கரணங்களாகிய கருவிகளாற் பொறிகளின் வாயிலாகப்புலங்களை நுகர்ந்து அதனால் மீண்டும் மீண்டும் வந்தேறுகின்ற கன்மங்களையுடைத்தாம். இன்பந்தருவனவற்றில் விருப்பும், துன்பந்தருவன வற்றில் வெறுப்புமுடையதாகும். இன்னும் இவ்வான்மாவினிலக்கணம், வகை விரிகளாற் பல திறப்படும். அவை விரிந்த சைவ நூல்களிற் காண்க.

(7) கடமையின் றன்மை.

இனி, டமையாவது இனனதெனச் சிறிது கூறுவேன். இவ்வுலகத்து அறிவுள்ள ஒவ்வொருவரும், நாம் செய்யவேண்டியவை யிவை யிவை யென நூன் முகமாகவும், பெரியார் முகமாகவுமுணர்ந்து பிபதிப் பிரயோசனத்தைப் பற்றிச் சிந்தியாமன் மேற்கொள்ளுங் காரியங்களுள் இன்றியமையாது செய்யத்தக்கவையெவையோ அவவை கடமையெனப்படும். நன் மாணாக்கனொருவன் ஆசிரியனொறுத்தல் கருதி வெறுப்புறாது அவனாணை வழி நின்று கற்றுவருதலும் இக்கடமையேயாகும். போர்வீரனொருவன் போர் முனையிற் சென்றவுடன் தனக்கு வரும் வெற்றி கருதி முற்படலும், தோல்வி கருதிப் பிற்படலுஞ் செய்யாது நிலை நின்று பொருதலும் அவன் கடமையாகும். அற நூல்களில் நித்தியகருமாநுட்டானங்களைப் பற்றிக்கூறி, அவற்றைச் செய்தலால் வரும் பயனையும் விரித்துப்பின், இப்பயன்களையாராய்ந்தறிந்தே செய்தல வேண்டுமென்று எவரும் கருதல் கூடாதெனவும், பிரதிதினமுஞ் செய்யவேண்டிய கன்மங்களைப் பயன் விசாரியாதே செய்து தீரவேண்டுமெனவும், அங்கனஞ் செய்தல் ஒவ்வொருவனுக்குக் கடமையா மெனவுங் கூறுதலு மீண்டுக் கருதற்பாலது, அறிவுவலிபடைத்தார் பயனை விசாரித்தன் மிக நன்றே. அஃதியலா தாயின், விசாரித்தறியும் வரை கன்மங்களைச் செய்யாதொழிதல் தவறென்பதே யீண்டுத் துணியற் பாலது. பயன், விசாரித்தலின்றிச் செய்யினும் செய்தாரைச் சார்தலொருதலை. வரையாது கொடுக்கும் வள்ளன்மையுடையோர், இவற்கு இன்னது செய்தல் வேண்டும், இதற்கின்னது செய்தல் வேண்டும் என்னும் நிய தியின்றி நேர்ந்த நேர்ந்தபடி கொடுத்ததற்குக் காரணம் அவருள்ளத்திற் பதிந்து கிடக்குங் கொடைக் கடமையேயாகும். இது நோக்கியே, அவர் கொடைமடம் பட்டோரென்று கூறப்படுவர். முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும் வேண்டா தன வாகவும், அப்பொருள்களினியற்கைத் தளர் நிலையைக் கண்டவுடன் மனநெகிழ்ந்து இரக்கமுற்று அவற்றிற்குப் பேரிடையூறுவந்ததாகக் கருதிப் பாரி முதலியோர் இயைபில்லாத் தேரும் போர்வையுமீந்தனரே. இவ்வகை பயன் குறித்ததாமா? அவர் தமக்கு இயற்கையினமைந்து கிடக்குந் தண்ணளியோடு கூடிய கொடைக்கடமையேயன்றி வேறென் சொல்வது? முல்லைக்கொடி, படர்கொம்பின்றி த்தளருமேல், தன் ஏவலாளரைக் கொண்டு தக்கதொருகொழு கொம்பை நிறுத்தல் கூடாதா? அக்கொழு கொம்பினும் இத்தேரினாலக்கொடிக்குக் கிடைத்தவிசேட நலம் யாதுளது? அங்ஙனமாகவும் தேரையீந்ததற்குக் காரணம் பாரிவள்ளல் தேரேறி வருங்காற்கொடியின்றளர் நிலையைக் கண்டதும் தனது இயற்கைத் தண்ணளியால் இன்னது செயற்பாலதென்றுணரும் அத்துணையுந் தாழ்க்கமனமின்றி அக்கணமே தேரைநிறுவினர் என்பதே, இதனானன்றே, "கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை" என்று நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவவள்ளலின் கொடைத்திறத்தைப் பாராட்டியருளினார்கள். நம் மக்களொவ்வொருவம் தந்தேயம், மொழி, சமயமுதலியவற்றைப் பேண முற்படலும் தத்தங்கடமையாகும். இக்கடமை யுலகியற் கடமை சமயக்கடமை யென இருவகைப்படும் அவற்றுளீண்டுக் கூறப்பட்டன சில வுலகியற் கடமைகளாம். இன்னும் இதுசம்பந்தமாகக் கூறப்புகின் மிகவிரியுமாதலின், எடுத்துக்கொண்ட விடயத்திற் கியையுமாறு நம் சமயக் கடவுளாகிய சிவபிரான்மாட்டு நாம் செய்ய வேண்டியவைகளை யீங்குக்கூறுவேன்.

(8) சிவபிரானிடத்துச் செய்ய வேண்டிய கடமைகள்.

சைவர்களாகிய நாமெல்லாம் நம்சமயக்கடவுளாகிய சிவபிரானை யுண்மையன்போடு வழிபடுதல் வேண்டும். அங்ஙனம் வழிபடுங்கால் தெய்வங்களைப்பழித்தல் கூடாது. நந்தெய்வத்தையே போற்று வேமாக. ஆயின், ஒருசாரார். எல்லாத்தெய்வங்களும் ஒன்றேயாதலின், அத்தெய்வங்க ளெல்ல வற்றையும் சமமாகக்கருதியன்பு செய்தல் வேண்டுமென்பார். அன்னார் கூற்று மரபு பிழைபட்ட தொன்றாதலின், பொருந்தாமை காட்டுதும். ஒவ்வொரு சமயத்தாருந் தத்தஞ் சமயக்கடவுளைச் சிறப்பு வகையானும் பிறசமயக்கடவுளைப் பொதுவகையானும் அன்பு செய்யலாமன்றிச் சமநிலையாக்கோடல் பக்தியின் இலக்கணமன்றாம். தெய்வங்களெல்லாம் உண்மைநிலையில் முடிவில் ஒன்றே யெனினும் அவ்வுண்மை தத்துவஞானிகளுக்கன்றி மற்றையோர்க் குணர்வரிதாம். சாமாந்யர்கள் அந்நிலையைப்பற்றிப் பேசல் பேச்சளவேயன்றி யநுபவவளவிற் கோடலரிது. எவ்விஷயமும் அநு'பவத்தினன்றிப் பேச்சளவினொழிதல் பயனின்றாம். இன்ன இன்ன வொழுக்கங்கள் உத்தமமென்று பேசிவிட்டு அவற்றைக்கடைப் பிடிக்காவிடின், அப்பேச்சாற் பயனென்னை? “சொல்லுதல்யார்க்கு வெளிய வரியவாம், சொல்லிய வண்ணஞ் செயல்'' என்பதும் ஈண்டுகருதற் பாலது. சிறப்பென்பது ஒரிடத்தன்றிப் பலவிடத்துஞ் சேறலாகாது. பல்லிடத்துஞ்சேறல் சாமாநியபக்தியேயாகும். ஒரு பெண்'மகள் தன்னைக்கைப்பிடித்த காதலனிடத்துச் செய்யும் அன்புக்கும் தன் சோதரர் சுற்றத்தாரிடத்துச் செய்யும் அன்புக்கும் பேதமுண்டன்றோ? முன்னையது விசேடவன்பும் பின்னையது சாமாநிய வன்புமாம். விசேடவன்பை வேறோரிடத்துச் செய்யின், வியபிசரித்தற் குற்றம் வருதலோடு விசேடவிலக்கணமும் பிழைபடும். சாமாநியவன்பை யுரியசோதரரிடத்துப்போன் மற்றையோரிடத்துஞ் செய்யலாம். இதனால் வருங்குற்றம் யாதுமின்றாம், அவ்வாறே நமது சமயக்கடவுளிடத்துச் செய்யும் பக்தி விசேஷமும், ஏனைத்தேவர்களிடத்துச் செய்யும் பக்தி சாமாநியமுமாம், ஆனால் அப்பெண்மகள் தன்னுயிர்க் காதலனைப்பாராட்டி யேனைச்சோதரர் முதலியோரையு மிகழாது உபசரித்தல் போல நாமும் நம் சமயத் தெய்வத்தைப் பாராட்டுதலோடு மற்றைத் தேவர்களையு மிகழாது அவரவர்க் கேற்றவாறு உபசரித்துப் போற்றுதல் கடனாம். இவ்வாறு தத்தஞ்சமயத் தெய்வங்களிடத்து வைக்கும் விசேட வன்பே நல்லின் பந்துய்ப் பித்தற்குரியதாகும்.
இங்ஙனமின்றி யெல்லாஞ் சமஞ்சமமென்று கூறுவார் ஒன்றினு நிலைபெறாது தமக்குரிய ஆன்மலாபத்தை முடிவிலிழந்தவரே யாவர். சமயசாத்திர விசாரத்தால் தத்துவ நிலை யதிகா ரநிலை முதலிய தாரதம்மியங்களைக் கண்டுகூறல் அவரவர் அன்புநிலைப்படுதற்குப் போக மாதலானும், முன்னைய சமயாசாரியர்களெல்லாரும் அங்ஙனங்கூறிப் போந்தமையானும், அது நிந்தையாகாது. நிந்தையாவது துரபிமானத்தால் உள்ளதை யில்லதாகவும், இல்லதையுள்ள தாகவுங் கூறிப்பழித் தலேயாம். "உள்ளேன் பிறதெய்வமுன்னை யல்லாதெங்களுத்தமனே'', “கற்றறியேன் கலைஞானங் கசிந்துருகேனாயிடினு, மற்றறியேன் பிற தெய்வம்," என்னுந்திருவாக்குக்கள் நிந்தையின்றி விசேடவன் பினிலக்கணத்தை வெளிப்படுத்துதலுணர்க. ஆகவே, நாம் நம்பதியாகிய கிவபிரானிடத்து விசேடபக்தியாகிய உண்மையன்பு செய்தல் கட மையாம். இதரதெய்வங்களையும் உரியவாறு போற்றுதலைப்பற்றி விலக் கின்மையு முணர்தல்வேண்டும். அஃது அவரவர் மனநிலைக்கேற்ப மேற்கொள்ளத் தக்கதொன்றாம்.

இனி, சைவர்களாகிய நாம் நம் இறைவனை முறைப்படி வழி படுவதற்கு இன்றியமையாது மேற்கொள்ளத் தக்கது தீக்ஷையே பாகும், தீக்ஷையில்வழிப் பஞ்சாக்ஷர மகாமந்திர முதலியவற்றைச் செபித்தற்குக் கூடாமையானும், சரியை முதலிய நால்வகை நெறி யொழுக்கம் பெறப்படாமையானும் அஃது இன்றியமையாததொன் றேயாம், தீக்ஷையாவது, ஆன்மாக்களிடத்துள்ள சிவசக்தியைவெளிப்பட வொட்டாது தடையாக மறைத்து நிற்கும் மலசக்தியைக் கெடுத்துச் சிவத்துவத்தைக் கொடுப்பதாகிய சிவசக்திக்கிரியை யாகும். இதனை,

யயாநுக்ர தஹரூபிண்யாயக்தேக்ரதிநிரோதிகா
மலல்யக்ஷயதேயக்தில்லா தீட்சாயாம்பவீக்கிர்யா
நீட்சைவமோசயே தீவாயாந்வதத்வம் தத்தாயணோ

எனவரும் பௌஷ்கராகமத்தானுமுணர்க. இன்னும் இத்தீக்ஷையினாலேயே மோக்ஷ முதலிய வெல்லா நலன்களுஞ் சித்திக்கு மென்னு முண்மையை வாயு சங்கிதை முதலிய புராணங்களானும், விரித்துக் கூறுஞ் சிவாகமங்களானு முணர்க. இத்தீக்ஷை பலதிறப்படும். அவற்றின் விளக்க விசேடங்களை யெல்லாம் ஆகமங்களுட்டெளிவாகவுணரலாம். சமய தீக்ஷை பெற்று இறைவன் உருவத் திருமேனியைப் புறத்தொழின் மாத்திரையான் வழிபடுதலாகிய சரியையும், விசேட தீக்ஷை பெற்று அருவுருவத் திருமேனியை புறத்தொழிலகத் தொழிலிரண்டானும் வழிபடுதலாகிய கிரியையும், அருவத்திருமேனியை நோக்கியகத்தொழின் மாத்திரையான் வழிபடுதலாகிய யோகமும், நிருவாணதீக்ஷை பெற்று இம்மூன்றனையுங் கடந்த சச்சிதானந்தப் பிழம்பாகிய இறைவன் சொரூபத்தை வழிபடுதலாகிய ஞானநிலையும் ஆகிய இந்நால்வகை மார்க்கங்களுள், தந்தகுதிக்கேற்பவியன்ற தொன்றையநுட்டித்து வருதல் ஒவ்வோரான்மாக்களுக்கு முரியகடமையாகும். அறநூல்களிற் கூறப்பட்ட ஜீவதயை, கொல்லாமை புலாலுண்ணாமை, கட்காம நீத்தன் முதலிய வுயர்ந்த ஒழுக்கங்களெல்லாம் ஈண்டுக்கூறிய சைவ நெறிக்கணடங்குமாதலின், வேறாக விரித்திலன். வைதிக குலத்திற் பிறந்தாருள்ளுஞ் சிலநவீன அறிவுடையோர், கிரிகைகள் கேவல மௌட்டியர்களுக்கேயன்றி யறிவுடையார்க்கில்லை யெனவும். அறிவுடையார் உண்மையுணர்ந்து அந்தக்கர ணங்களை மாத்திரந்திருத்திக் கோடல் போதிய தெனவுங் கூறி நித்திய கன்மங்களைப் பொருட்படுத்தாது காலத்தை வறிதேகழிக்கின்றனர், அவரெல்லாம், கன்மா நுட்டானங்களாலன்றிச் சித்தசத்தி யுண்டாகாதென்று அநுபவஞானிகளாகிய நம்பண்டையோர் கூறியவாறே யொழுகிய வுண்றமயை யொரு சிறிது முணர்ந்திலர். கீதையிற் கண்ணபிரான், தத்துவ ஞானியுங்கன்மத்தைவிடல் தவறெனவும், மேற்கோடலின்றியமையாத தொன்றெனவுந் தடை விடைகளா லருச்சுனற் குபதேசித்ததையு முணர்ந்திலர். உண்மை ஞானி யொரு வர் எல்லாப்பதங்களையும் ஒருவிச்சுத்த ஞானப்பிரகாசத் தியைந்திரு - க்குங்காற் கன்மங்க ளலரைத் தாக்கா மற்றாமே யொழியும். அந்நிலை யைப் பற்றி யீண்டுச் சங்கித்தலியை பின்று கன்மந்தானே யொழி யப் பெற்றவொரு மகாஞானியை நோக்கி யொருவன் அடிகாள், தேவரீர் சத்தியோபாசனை செய்யா திருத்தலென்னை? என்று வினா வினானாக, அவர்,

ம்ருதாமோஹமயீமா தாஜர்தோபோத மயஸ்ஸுதா 
ஸுதகத்வய ஸம்ப்ராப்தௌகதி மஸம்த்யா முபாஸ்மஹோ

(இதன் மொழி பெயர்ப்பு)

அஞ்ஞானத் தாய்மரண மானா ளஃதொன்றோ
மெய்ஞானக் கான்முளையு மேவினான் - இஞ்ஞாலர்
தன்னின் மரண சனனவிரு சூதகத்தேன்
உன்னலெங்கன் சந்திசெய லோர்.''

என்று விடை கூறினார். அஃதாவது :''அஞ்ஞான வுருவமாகிய தாயிறந்தாள், அறிவுருவமாகிய குழந்தை பிறந்தது; இவ்விரு வகை யாசௌசத்தையு முடையனாயிருக்குங்கால் எவ்வாறு யான் சந்தியோபாசனை செய்வல்" என்பதாம், ஆதலிற் கண்ணப்பர் முதலிய முறுகிய அன்புடையார் செயலை விதியாகக்கொண்டு அத்தகுதியில்லாத நாமும் மாம்ஸ நிவேதனத்தை யிறைவனுக்குச் செய்தல் பொருந்துமா? அவர் இறைவன் கண்ணிற் புண்ணீர் வார்தல் கண்டு வருந்தியதற்கு மாற்றாகத் தங்கண்ணைப் பறித்து வைத்து மகிழ்ந்தாரன்றே; அத்துணிவு நமக்கும் வரினன்றே அலர் செயலை நாமுங் கோடலமையும்?

அன்பர்களே!

இக்குதர்க்க நெறியை யொழித்து நமக்கு இறைவன் அருளிய வேதாகமங்களில் விதிக்கப்பட்ட செயல்களை யியன்ற வரை விடாது செய்மின்கள்; புலாலுண்ணன் முதலியவற்றிற்கு முதிர்ந்த அன்புடைச் சிவச்செயலாளராகிய அடியார்களை யுதாரணங்காட்டிப் புரை படாதீர்கள்; சமயாசாரமாகிய நித்தியகன்மங்களை விடாது செய்ய முந்துமின்; ஒவ்வொரொழுக்கங்களையுஞ் சொல்லளவிற் சுருக்கியுஞ் செயலளவிற் பெருக்கியுங் காட்டுமின்கள்; நம் சமயக்கடவுளைச் சிவலிங்காதி திருமேனிகளிடத்தும், சிவனடியாரிடத்து மிருப்பதாகக் கண்டு விசேட அன்பைச் செய்மின்கள்; பிற சமயங்களும் இறைவ னருளிருந்தவாறு ஆன்ம பக்குவ நோக்கி வெளிப்பட்டன வென்னு முண்மையுணர்ந்து அவற்றை யிகழ்மின்கள்; இளமைப்பருவம் காமா திகளை யாபவித்தற்கென்றே கருதிக்கழிக்காது நம் பெருமானை வழி பட்டுய்தற்கு மிகவேற்றதொரு பருவ மென்றெண்ணுமின்கள்; ஆலய வழிபாட்டையும் விக்கிரகாரா தனத்தையும் இயன்றவரை யிடைவிடாது செய்ய விரும்புமின்கள்; உரியகருவி நூல்களையும், அவற்றின் பயனாகச் சமய நூல்களையும் நடுநிலையுடன் ஆராய்மின்கள்; தாங்கொ ண்டதே பொருளெனக் கடைப்பிடியாது தம்மினுந்தாழ்வார் வாயுண் மை வருமாயின் அதனை மகிழ்ந்தேற்றுக் கொண்மின்கள்; நூல்களிற் கண்டவற்றை யொழுக்கத்திற் காட்டற்கன்றிக் காலம் விளைத்தற்குப் யோகமென் றெண்ணாதீர்கள்; நம் சமயத்தையும், பாஷையையும் பிறசமயத்தார்க்கும் பிறபாஷையாளர்க்கும் வருத்தமுண்டாமாறின்றிப் பேணமுற்படுமின்கள்; பிறர் நம்சமயம் பாஷைகளை யறியாமையான் இகழின் அவர்மனம் வருந்தாது விஷயங்களுக்கு மாத்திரந்தக்கவாறு மறுமொழி தந்து அவரைத் திருத்துமின்கள்; பின்னுந்திருந்தாராயின் அவரறியாமைக் கிரங்கியஃதொழிய நங்கடவுளை வேண்டுமின்கள்; சிவபிரான், விரும்பிக் கருனை பாலித்தற்குரியதாக ஜீவதயையென்னுந் திவ்யாமிர்தத்தை முதலில் நும் நெஞ்சக்கலத்திற் கொண்மின்கள்; நண்பர்களே! இனையெல்லாம் சீவர்களாகிய நங்கடமைகளேயாம். இத்துணைக் கடமைகளுண் மிகமுக்கியமான கடமையொன்று சிவபிரானை நோக்கச்சீவர்களுக்குண்டு. அதனையும் ஈண்டுக்கூறுவேன்.

(9) ஒரின்றியமையாக்கடமை.

அஃதாவது, இறைவனை நோக்க ஆன்மா ஒருவித சுதந்தரமுமின்றிப் பரதந்திரனாதலின், ஆணவமலத்தாற் பிணிப்புண்டு கிடக்கும் பெத்தகாலத்தும், தநுகரணங்களைப் பெற்றுச் சிறிது அறிவு விளக்க மூற்று உபாசனாதிகளைச் செய்யு மத்தியகாலத்தும், மலசக்தியறவே யொழியப்பெற்றுச் சிவத்துவமெய்திப் பேரின்ப நுகரும் முக்திகாலத்தும் தன்பாலிடைவிடாதமைந்து கிடக்கும் அடிமைத் தன்மையேயாம். அடிமையாவது "கண்ட விவையல்லேனா னென்றகன்று காணக் கழிபரமு நானல்லேனெனக் கருதிக்கசிந்த, தொண்டு' என்றபடி காணப்படும் பாசகாரினப் பொருள்களும் மேலாகிய பதிப்பொருளும் யானல்லேனென்று கருதியவழி முன்போல முனைத்தலின்றி யோங்குணர்வி னுள்ளடங்கி நிற்றலாம். இவ்வடிமையின் முக்கிய விலக்கணமாகக் கருதவேண்டியது. ஆண்டானாகிய சிவபிரான், ஒப்பாருமிக் காருமின்றி யாவர்க்குமேலாந் கலைவரெனவும் அடிமையாகிய யான், என்னின் ஒப்பானதுங் கீழானதுமாகிய பொருளொன்றுமின்றி யானே மிகக்கீழானவனெனவும் உள்ளவாறுணர்ந் தொழுகலேயாம் இதுகருதியே, 'யாவர்க்குமேலா மளவிலாச் சீருடையான், யாவர்க் குங் கீழா மடியேனை' என்றார் ஸ்ரீ மணிவாசகப் பெருமானும். நம் சமயக்கொள்கை பலவற்றுண் மிகமுக்கியமானது மிதுவேயாம். அதனாலன்றே, "தாழ்வெனுந் தன்மையோடு சைவமாஞ்சமயஞ்சாரு. மூழ் பெறலரிது” என்று கூறும் சிவஞானசித்தியும்? இத்தொண்டு, தாதமார்க்கம், சற்புத்தியமார்க்கம், சன்மார்க்கமாகிய நால்வகை யொழுக் கத்தினும் ஆன்மாவைவிட்டு நீங்காதகொன்றாம். "எவ்விடத்து மிறை யடியை'' யெனவும், "தொழும் பாகுமங்கு எனவுங் கூறியபடி முக்தியினும் இவ்வான்மா அடிமையே யாமெனின், வேறிதன் மாட்சியை யெங்ஙனங்கூறுவேன்! உள்ளவாறு ஓரான்மா இறைவலுக்கு யான் என்றும் அடிமையே யென்றுணர்ந்து முனைப்பின்று யொழுகுமாயின் முக்தி யின்பமாகிய பயனைச் சிவபிரான் தாமேதருவர். முக்தியை விரும்புதலும் அடிமை யிலக்கணத்துக்குக் குற்றமாமென்றால், வேறு பிரதிப் பிரயோசனங் கருதல் கூடாதென்பதைப் பற்றிக் கூறுவன் மிகையே. முக்தியென்பது எல்லாவற்றையும் விடுதலன்றே? அவ்வேண்டாமையை வேண்டலவசியமென்று நூல்கள் கூறவும், அதனை விரும்புதலுங் குற்றமென்ப தெங்ஙனம் பொருந்துமெனின்; ஆன்மா தன்கடமை யின்னதென்றறிந்து மேற்கொள்ளின், இறைவனுந் தன் கடமையைச் செய்வன் என்பது தேற்றமன்றே? அஃதுணர்ந்தும், சிறி துஞ் சுதந்தரமில்லாத இவன் எற்கு இன்னது வேண்டுமென்று விரும் புதலுந் தவறேயாம். இவ்வுண்மையை, "மண்மேல் யாக்கை விடுமா றும் வந்துன்கழற்கே புகுமாறும், அண்ணாவெண்ணக் கடவேனோ வடி மைசால வழகுடைத்தே” என்னுந் திருவாக்கானு முணர்க. அஃதா வது, யான் அடிமையென்றுணர்ந்த பின் நின்னை வழிபடுதலே யன்றி யிவ்வுடல் கழியுமாற்றையு நின்றிருவடிப் பேறுபெறும் வழியையும், யான் எண்ணுதற்குரியனோ; அங்கனம் எண்ணுவேனாயின் என் அடிமையிருந்தவாறு மிக வழகிது என்பதாம். ''சார்புணர்ந்து சார்பு கெட வெபழுகின்” என்றபடி தாதமார்க்க முதன் மூன்று மார்க்கத் தினுமொழுகுவோர் முக்தியின்பத்தில் விருப்புற்று மேன்மேற் செல்லுவர். நான்காவதாகிய சன்மார்க்கத் தொழுகுவோர் அவ்விருப்பமுமின்றித் தங்கடனிது வெனவுணர்ந்து சிறிதுமுனைத்தலின்றி யடங்கி நிற்பின் சிவபிரான், தங்கடனாகிய பேரின்பளித்தலை விரைந்து செய்வர்.

ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகளும் இவ்வுண்மை யடிமையாரைக் கூறுங்கால்,

"கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்"

என்று பாராட்டி யிருக்கின்றனர். இப்பாசுரத்தின் அருமையை யென்னென்பேன்! இத்திருத் தொண்டின் மாட்சியைப் பற்றித் தனியே யொரு வியாசமெழுதி வெளிப்படுத்தக் கருதியுளேனாதலி னீண்டு விரித்திலன். முடிவாகக் கூறுமிடத்து இவ்வடிமையே ஆன்மா பயன் குறியாது மேற்கொள்ள வேண்டுவதொன்றென்பது இவ்வா ராய்ச்சியால் விளக்கமாம்.

(10) இதன் பயன்.

இனி, இவ்வின்றியமையாக் கடமையாகிய அடிமையின் பயனை ப்பற்றிச் சிறிது கூறுவேன். இதன் பயன் வீட்டின்பமேயென்பது முன்னர்ப் பெறப்பட்டதாயினும், இடைக்கணுண்டாம்பயன்களுமுள. ஆன்மா, எல்லாம் அவன் செயலேயன்றித் தன் செயலன்றென்றுணர்ந்து அருள் வழிநிற்பின், அதனாற் செய்யப்படுங் கன்மங்கள் அதனைச்சாரா. கன்மங்கள் பெத்தகாலத்து நான் செய்கின்றேனென்று கருதுவதால் ஆன்மாவைத்தாக்கும். முக்திகாலத்து யான் எனதென் னுமொருவகைப்பற்றுமின்றி யெல்லாமவன் செயலேயென்றுணர்ந்து அருள்வழி நிற்றலால் அக்காலத்துச் செய்யப்படுங்கன் மங்கள் அவ் வான்மாவைத்தாக்கா. பிராரத்த வினைய நுபவித்தே தீரவேண்டு மெனினும், அஃது உடலழாய்க் கழியுமன்றி யுயிர்க்கு இன்பதுன்பங்களைச் செய்யாதென்பதாம். இவ்வுண்மையை,

நாமல்ல விந்திரிய நம்வழி யினல்லவழி;
நாமல்ல நாமுமரனுடைமை - யாமென்னின்,
எத்தனுவினின்று மிமைபணியார்க் கில்லை
வினை, முற்செய்வினை யுந்தருவான்முன்''

என்னுமெய்கண்டார் திருவாக்கானுணர்க. இதனால் எல்லாம் அவன் செயலென்றிருத்தன் மிக நலமென்று போதரலான், தாம் செய்யுந் தீவினைகளுக்கும் இதனையே பிரமாணமாகக் காட்ட முற்பட லாமாலெனில்; நன்று நன்று! எப்பொருளையுஞ் சிவமயமாகக் கண்டு தானொரு முதலென்பதின்றியவனே தானேயாகிய வந்நிலையினிற்கும் முக்தனுக்கும், கண்ட பொருளெலாமின்பஞ்செய்வனவென்றும், அவை யெனக்கெனக்கென்றும், யானே நுகருமுதலென்றுங் கருதி மலவாய்ப் பட்டுழலும் பெத்தனுக்கும் எத்துணை வேறுபாடுள தென்பதையுற்று நோக்குவார்க்கு உண்மை புலனாம். இதனால் முடிவுவரை பெரும் பயனைச் செய்வது, இத்திருத்தொண்டேயென்று அதன் மாட்சியுணர்ந்து அவ்வொழுக்கத்தை மேற்கொள்ளுதலே நங்கடமையாமென்பதும், விதி விலக்கைக் கடந்து நிற்றல் நம்மனோர்க்குப் பொருந்தா தென் பதும் விளக்கமாம்.

என் அன்புள்ள சகோதரர்களே!

இத்திருத்தொண்டை யியன்றவரை செய்தலே சீவர்களின் முக்கியகடமை யென்றுணர்ந்து நம்பெருமானிடத்து எஞ்ஞான்றும் அன்புபணிபூண்டு ஒழுகு மின்கள்; பயன் செய்வது அவர் கடமை யென்பதை நிச்சயமாக நம்புமின்கள்; திருத்தொண்டு புரிவார் யாவரும் நம் உரிமைத்தமரென்பதையுள்ள வாறுணர்மின்கள்; சிவபிரானாகிய பரமபிதாவினது பேரானந்தப் பெருஞ்செல்வத்தைப் பெருதற்குரிய மக்கள் நாமே யென்றுணர்ந்து பெற்று இன்புறு மின்கள்; என் புன் சொற்களிற் பொதுளிய பிழைகளை யென்னறிவின் சிறுமை கருதிப்பொறுத்துக் கொண்மின்கள்.


மு. கதிரேசன்,
மகிபாலன்பட்டி.

சித்தாந்தம் – 1915 ௵ - ஆகஸ்டு / செப்டம்பர் / அக்டோபர் ௴


No comments:

Post a Comment