Saturday, May 9, 2020



ஞானத்திறம்

[ந. ரா. முருகவேள்]
முன்னுரை:

"சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் "

எனவரும் பெரிய புராணத் திருப்பாடலைச் சிவநேயச் செல்வர்கள் அனைவரும் பெரும்பாலும் அறிந்திருப்பர். பெரிய புராணத்தின்கண் பேரொளி வீசிச் சுடர்ந்து திகழும் சிறந்துயர்ந்த செய்யுள் மணிகள் பலவற்றுள் இஃதொன்று ஆகும். சீர்காழியில் பிரமதீர்த்தக் கரையில் திருத்தோணிச் சிகாம் பார்த்து அம்மே அப்பா'என அழைத்து அழுத பொழுது, யாவருக்கும் தந்தை தாய் என இலங்கும் சிவ பெருமானும் தேவியாரும் எருந்தருளி, எண்ணரிய சிவ ஞானத் தின்னமுதம் குழைத்து ஊட்டியருளிய நிலையில், ஆளுடைய பிள்ளையார் அகில தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும் தாவில் தனிச் சிவஞான சம்பந் தர் ஆயினார் என்னும் செய்தியினை விளக்குவது, இச் சிறந்த செய்யுள்.

அறிஞர்களின் சொற்போர்:

இச் செய்யுளின் பொருள் பற்றி இற்றைக்கு 60 அல் லது 70 ஆண்டுகட்கு முன்னர் அறிஞர்களிடையே மிகப்வடை பெரியதொரு சொற்போர் நிகழ்ந்தது. யாழ்ப்பாணம் வட கோவைச் சபாபதி நாவலர், சைவ சித்தாந்த சண்டமாரு தம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகர், காசிவாசி செந்தில் நாத ஐயர், மகாவித்துவான் மதுரைச் சபாபதி முதலியார் போன்ற பேரறிஞர்கள் பலர் அச் சொற்போரின் கண் ஒரு வரை ஒருவர் இகலி நின்றனர். ஞானபேதத் தெளிவு, ஞான பேதத் துணிவு, ஞான சூடாமணி, ஞான பேதவிளக் கச் சூறாவளி, ஞானபேத விளக்க மறுப்பு என்பன போன்ற பற்பல நூல்கள், இப்பெரிய புராணச் செய்யுளின் பொருளை ஆராயும் நோக்கத்துடன் எழுதப்பட்டு வெளிவந்துலாவின. இங்ஙனம் பேரறிஞர்கள் பலரின் ஆராய்ச்சிக்கு அடிப்படை யாக அமைந்த இச்செய்யுளின் பொருளை, நாமும் இயன்ற வாற்றால் உணர்ந்துகொள்ளுதல், நம்மனோர்க்கு மிகவும் நலம் பயப்பதாகும்.

செய்யுட் பொருள்:

சிவபெருமானது திருவடியையே சிந்திக்கின்ற அருட் செல்வம் பெருகுதற்குக் காரணம் ஆகிய நல்ல ஞானத்தையும், பிறவிக்குக் காரணம் ஆகிய மலமாயா கன்மங்களை அறவே ஒழிக்கின்ற பணி நிற்றலால் எய்தும் உயர்ந்த ஞானத்தையும், ஒப்பு இல்லாத முழு நிறைவான கலைஞானத்தையும், தேவரும் முனிவரும் கூட உணர்தற்கரிய உண்மைஞானத்தையும், முதன்மையான தவப்பேற்றினையுடைய ஆளுடைய பிள்ளையார், தமக்கு அம்மையப்பர் ஞானப்பால் ஊட்டியருளிய அந்நிலையிலேயே உணரப்பெற்றார் என்பது, மேற்குறித்த பெரிய புராணச் செய்யுளின் பொருள். 'நவில்தொறும் நூல் நயம் போலும்' என ஆசிரியர் திருவள்ளுவர் குறிப்பிட்டதற்கேற்ப, இச் செய்யுளை நுணுகி யுணருந்தொறும் இனிய பல சிறந்த கருத்துக்கள் தோன்றுதல் காணலாம்.

இச் செய்யுள் நாற்சீர்களான் இயன்ற கலி விருத்தம். 'நாடிய சாத்திநிபாதம் நாலு பாதம்' என்றபடி, மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரம் என நால்வகைப்படும் சத்திநி பாதத்துள், ஆளுடைய பிள்ளையார் மேலான ஞானநிலையினை எய்துதற்குரியவராக நாலாம் சத்திநிபாதம் முற்றிய நிலையிற் சிறந்து திகழ்ந்தார் என்பதனைக் குறிப்பிக்க, ஆசிரியர் சேக்கிழார் பெருமான் இச்செய்யுளை நாற்சீர்களான் அமைத் தருளிய அருமைப்பாடு அறிந்து மகிழ்தற்குரியது.

சிவனடியே சிந்திக்கும் ஞானம்:

1. வீடுபேற்றின்பம் எய்துதற்குரிய தவாலம் மிக் குடையவராய்ப் பிறந்த மெய்யடியார்கட்கு, அப்பிறப்பில் 'தெய்வம் என்பதோர் சித்தம்' உண்டாதலும், அத்தெய்வமும் ஏனையோர் அல்லர் சிவபெருமானே எனத் தெளிதலும் ஆகிய ஞானம் ஒருதலையாக நிகழும். ஆளுடைய பிள்ளையாருக்கு அத்தகைய ஞானம் நிகழ்ந்ததனால் விளைந்த சிந்தனையைச் 'சிவனடியே சிந்திக்கும்' எனவும்; அச்சிந்தனையால் தொட்டனைத் தூறும் மணற்கேணி போல மேன்மேலும் சிறந்த பலநலங்கள் வளர்ந்து பெருகுதலின் "திருப் பெருகு' எனவும்; தான் என்னும் முனைப்புச் சற்றும் இன்றிச் சிவனருளே துணையாகக்கொண்டு ஒன்றி நின்று சிந்தித்தலின் அவ்வுணர்வினைச் சிவஞானம்' எனவும் ஆசிரியர் கூறியருளினார்.

'சிவனடியே' என்பதில் ஏகாரம் பிரிநிலை. நம்மனோர் போல அஞ்ஞானம் விளைக்கும் பிறபொருள்களைச் சிந்திக்காமல், ஞானம் விளைக்கும் சிவபிரான் திருவடியினையே ஆளுடைய பிள்ளையார் சிந்திக்கப் பெற்றார் என்பது கருத்து. நற்பொருள்களைச் சிந்திக்கப் பெறுதலே ஒரு சிறந்த பேறு ஆதலின், சிந்தித்தலையே திரு என்றார். "சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க வந்திடும் அவ் ஒளிபோல மருவி, அரன் உளத்தே வரவர வந்திடுவன்' (சித்தியார் : 301) என்றாற்போல, இனிது சிந்திப்பார் உணர்வின்கண் சிவம் படிப்படியே வந்து அமர்ந்து விளங்கித் திகழ்தலின் அச்சிந்தனையுணர்வு  'சிவஞானம்'  எனப்பட்டது. பிற் கூறப் பெறும் ஞானங்களும் சிவஞானமே யாதலின், ஈண்டுச் சிவ ஞானம் என்பதனை'நல்ல ஞானம்'எனக் கொள்ளுதலும் அமையும்.'சிவம்' நன்மை எனப் பொருள்படும்,




பாங்கினில் ஓங்கிய ஞானம்:

2. மேற்குறித்த சிந்தனைக்குப் பின்னே நிகழ்வதாகலானும், பவத்தினை ஒழித்தற்கு இன்றியமையாததாகலானும், இறைபணியின் நிற்றலையுணர்த்தும் ஞானத்தைப் 'பவமதனை அற மாற்றும் ஞானம்' எனவும்; அது யாகம் முதலிய கன்மப்பயன் போல அனுபவமாத்திரத்தால் அழிந்தொழியும் இன்பம்போல் அன்றி அழியாத வீடுபேற்றின்பத்தைத் தவறாது அளிக்கவல்ல தன்மையதாதலின் 'பாங்கி னில் ஓங்கிய ஞானம்' எனவும் கூறினார்.
"தானம் யாகம் தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள் சாந்திவிரத கன்ம யோகங்கள் சரித்தோர், ஈனமிலாச் சுவர்க்கம் பெற்று இமைப்பளவின் மீள்வர்; ஈசன் யோகக் கிரியா சரியையினில் நின்றோர் ஊன மிலா முத்தி பதம் பெறுவர்''
என்பது சிவஞான சித்தியார்.

பவம் பிறவி. அஃது ஈண்டுப் பிறவிக்குக் காரணமான ஆணவம் மாயை கன்மம் என்னும் மலங்களை யுணர்த்தியது. ஆகுபெயர். 'அற மாற்றல்' வேர் அறுத்தல். 'மதனுடை நோன்றாள்' என்பழி மதன் அறியாமையைக் குறிக்குமாக லின், 'பவமதனை' என்பதற்குப் பிறவிக்குக் காரணமான அறியாமையை எனவும் பொருள் கூறுவர். பாங்கு முறைமை, உரிமை, பணிசெய்தல். சிந்தனைக்குப் பின் நிகழும் முறைமைத் தாகலின் பணிசெய்தலைப் 'பாங்கு' என்றார். சிந்தித்தலால் நிகழும் தொடர்பினும் பணிசெய்தலாற் பெறும் தொடர்பு உரிமை மிக்கதாதல் பற்றிப் 'பாங்கு' என்றார் எனினும் அமையும். 'பாங்கு' உரிமையும் பணி செய்தலும் குறித்தலை 'ஆங்கவர்க்கே பாங்காவோம் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்' எனவரும் திருமொழியால உணரலாம். 'பாங்கினில்' என்புழி இல் ஏதுப் பொருண்மை குறித்து வந்தது. கல்வியிற் பெரியன் கம்பன் 'என்புழிப் போல. ஞானம் ஓங்கியஞானம் ஆதற்குப் பணி காரணமாயிற்று. 'காக்கையிற்கரிது களம்பழம்' என்புழிப் போல 'இல்' உறழ்பொருளில் வந்த ஐந்தனுருபு எனக்கொண்டு, பிறவியை அறமாற்றுதலில் சிந்தனையைக் காட்டிலும் பணிசெய்தல் சிறந்தது எனக் கொள்ளினும் அமையும். பணிசெய்த லாற்பவம் அறும் என்பதனை 'இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினையின்றே' எனவரும் சிவஞான போத நூற்பாவால் உணரலாம். தலங்கள் தோறும் சென்று திருப் பதிகம் பாடுதல் ஆளுடைய பிள்ளையார் செய்த அரும்பணி யாகும். திருப்பதிகம் பாடும் திருத்தொண்டின் தெளித லுணர்வே ஈண்டுப் 'பாங்கினில் ஓங்கிய ஞானம்' எனச் சிறப்பிக்கப்பட்டது.

உவமையிலாக் கலைஞானம்:

3. எண்ணிறந்த வேதாகமங்களையும் ஏனைய பல கலை களையும் ஓதி உணர்தல் கானேயாவர்க்கும் அரிதாகவும், ஓதாமலே எக்கலையினையும் முற்ற உணர்ந்ததுடன்,

பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே"
என்றதற்கேற்ப, வேதாகமங்களின் சாரங்களையெல்லாம் ஒருங்கு தொகுத்துத் தம்பணியாகிய திருப்பதிகங்களில் அமைத்துப் பாடும் ஆற்றலும் ஆளுடைய பிள்ளையார்க்கு வாய்த்தமையின் 'உவமையிலாக் கலைஞானம்' என விதந்து ஓதப்பட்டது. 'உவமையிலா' என்ற அடைமொழி கலைஞானத்தையன்றி, அதனை ஓதாதேயுணர்ந்து கை வந்த பிள்ளையாரின் இணையற்ற தன்மையினைச் சிறப்பித்து நின்றது. ஏனைக்கலை ஞானங்களிலும் மேம்பட்ட தத்துவஞா னத்தை 'உவமையிலாக் கலைஞானம்' என்றார் எனினும் பொருந்தும்.

ஆளுடைய பிள்ளையார் ‘பண்டை நற்றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டர்' ஆகிய சாமுசித்தர் ஆவர். ஆதலின் அவர் முன்பு செய்தவத்தின் ஈட்டம் மிக்குடையவராகப் பிறங்கி ஒளிர்ந்தனர். எனவே முற்பிறப்புக்களிலேயே அவர் கலைஞானங்களெல்லாம் கை வரப் பெற்றிருந்தார். செவ்வி முதிர்ந்த தாமரையின் நாளரும்புகளை ஞாயிறானது அலர்த்துங்கால், முன்னாள் அலர்த்தப்பட்டு இரவிற் குவிந்திருந்த மலர்களும், அவற்றினிடையே தாமே விரிந்து மலரும். அதுபோல 'பிரளயா கலருக்கு முன்னுணர்த்தும் தான் குருவாய் முன்'  எனப்படும் சிவபெருமான், காற்றோளும் முக்கண்ணும் கறை மிடறும் முதலியன அமைந்த தனது இயற்கை வடிவினையே குருவடிவாகக் காட்டி முன்னே நின்று அருளிய போது, ஆளுடைய பிள்ளையார் அறிவின்கண் ஏனைய ஞானங்களோடு கலைஞானமும் இடையே போந்து இயல்பாக விரிந்து மலர்ந்தது. இக்குறிப்பினை நம்மனோர் உய்த்துணர்ந்து கொள்ளுமாறு வைப்பு முறையால் விளக்குதற் பொருட்டே, கலைஞானம் தொடக்க நிலைக்கு உரியதாகவும், அதனை முதலிற் கூறாமல் ஆசிரியர் சேக்கிழார் இடையிற் கூறியருளி னார். இனி ஆளுடைய பிள்ளையார் இந்த ஞானங்களையெல்லாம் சாதன வழியால் ஒன்றன்பின் ஒன்றாகப்படி முறையே எய்தாமல், ஒரு காலத்து ஓரிடத்திற்றானே ஒருங்கெய்தினர் என்னும் பெரு வியப்பிற்குரிய செய்தியின் பெற்றியுணர்த்து தற்கே, ஆசிரியர் இங்கனம் ஞானத் திறங்களை மாற்றிக் கூறி யருளினர் எனினுமாம்.

உணர்வரிய மெய்ஞ்ஞானம்:

4. ஆளுடைய பிள்ளையார் பெற்றுப் பிறங்கிய மெய்ஞ் ஞானம், தேவர் முனிவர்களாலும் இற்றென எண்ணி யுணர் தற்கும் அரிய சிறப்புடைய தாகலின், அதனைஉணர்வரிய மெய்ஞ்ஞானம்' என விதந்து ஓதினார். "அகில தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருள் ஆகும் தாவில் தனிச் சிவஞானம்" என இம் மெய்ஞ்ஞானத்தினை, ஆசிரியர் சிறந்தெடுத்துக் குறிப்பிட்டிருத்தலும் ஈண்டுக் கருதியுணரற் பாலது. அனுபூதி ஞானத்திற் சுட்டுணர்வு கெட்டொழிதலின் அதுபற்றி 'உணர்வரிய' என்னும் அடை மொழி புணர்த் தோதினார் எனலுமாம்.

இனி மெய் என்பது சிவசத்து ஆகிய இறைவனைக் குறிப்பதாகக் கொண்டு, 'உணர்வரிய' என்பதனை இறைவனுக்கு அடைமொழி யாக்கலும் ஒன்று. "உணர்வரிப் மெய்" என்பது 'பசுஞான பாசஞானங்களான் அதியயபடாத கடவுள்' எனப் பொருள்படும். ''ஊனக்கண் பாசம் உணராப் பதி" என்னும் சிவஞான போதமும், "பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்" என்னும் சிவஞான சித்தியாரும், “பாசமா ஞானத்தாலும் படர் பசு ஞானத்தாலும் ஈசனை யுணர ஒண்ணாது" என வரும் சிவப்பிரகாசமும் இப்பொருளை வலியுறுத்தும்.

"உணர்ந்தார்க்கு உணர்வரியோன்'' என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார் (8) செய்யுளில், 'ஒருகால் தன்னை உணர்ந்தார்க்குப் பின் உணர்தற்குக் கருவியாகிய சித்த விருத்தியும் ஒடுங்குதலின் மீட்டு உணர்தற்கு அரியவன்'  எனவும், 'தவத்தானும் தியானத்தானும் எல்லாப் பொருள் களையும் உணர்ந்தவர்க்கும் உணர்வரியவன்' எனவும் பேராசிரியர் செய்திருக்கும் விளக்கமும் ஈண்டு அறிந்தின் புறுதற்குரியது.

இங்ஙனம் உயிர்களெல்லாம் எண்ணிறந்த பல பிறவிகளாற் படிமுறையே எய்துதற்குரிய இவ்வகை ஞானங்களை யெல்லாம், இடையீடின்றி ஆளுடைய பிள்ளையார் ஒருங்கே பெற்றனராதலின் அந்நிலையில் எனவும்; இவற்றைப் பெறுதற்குரிய எண்ணில் பெருந்தவங்கள் செய்து பிறந்தமையின் தவமுதல்வர் எனவும் ஆசிரியர் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்தனர்.

ஞானத்தின் வகைகள்:    

இத்துணை நுண்பொருள்கள் பல செறிந்த இச் செய்யுளிற் குறிப்பிடப் பெற்ற ஞானம், எத்தனை வகைத்து? எனத் துணிதலிலேயே போறிஞர்கள் பலர், ஒருவரோடு ஒருவர் மாறுபட்டு நின்றனர். சபாபதி நாவலர் முதலிய சிலர், ஞானம் பரம் அபரம் என இருவகைப்படும் என்றனர்.

''மருவிவரும் உயர்ஞானம் இரண்டாம். மாறா
மலம் அகல அகலாத மன்னு போதத்
திருவருள் ஒன்று; ஒன்றதனைத் தெளிய ஓதும்
சிவாகமம் என்றுல கறியச் செப்பும் நூலே”

எனவரும் சிவப்பிரகாசச் செய்யுள் (10) அவர்களுக்கு மேற் கோள் ஆயிற்று. சோமசுந்தர நாயகர் முதலிய சிலர் கேட்டல்சிந்தித்தல் தெளிதல் நிட்டை என ஞானம் நான்கு வகைப் பட்டு நிற்கும் என்றனர்.

கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்””

எனவரும் சித்தியார் செய்யுள் (276) இவர்களுக்கு மேற் கோளாகப் பயன்பட்டது.

ஞானம் இருவகைத்து என்போர் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகுசிவஞனம் (ஆகிய) உவமையிலாக் கலைஞானம்' எனவும், 'பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் (ஆகிய) மெய்ஞ்ஞானம்' எனவும் ஏற்றபெற்றி இயைத்துப் பொருள் கொள்வர்

ஞானம் நால்வகைத்து என்போர், உவமையிலாக் கலை ஞானம் (கேட்டல்), சிவனடியே சிந்திக்கும் ஞானம் (சிந்தித் தல்), பாங்கினில் ஓங்கிய ஞானம் (தெளிதல்), உணர்வரிய மெய்ஞ்ஞானம் (நிட்டை) எனக் கொள்ளுவர். இனிக் கலை ஞானம் (ஆகமம்) சிவனடியே சிந்திக்கும் ஞானம் (அனுமா னம்), ஓங்கிய ஞானம் (அனுபவம்), உணர்வரிய மெய்ஞ் ஞானம் (அனுபவா தீதம்) எனவும் இதனை அவர்கள் விளக் குவர். மேலும் சிவஞான போதத்தில் 8 ஆம் சூத்திரம் கேட்டலையும், 9 ஆம் சூத்திரம் சிந்தித்தலையும், 10 ஆம் சூத்திரம் தெளிதலையும், 11 ஆம் சூத்திரம் நிட்டையினையும் உணர்த்துகின்றன என்பதும் இவர்கள் கருத்து.''

இந்த ஞானங்களுக்கு விஷயம் ஆகும் சிவமாகிய ஞேயப் பொருள் மனனம் ஆகிய இரண்டாவது ஞானத்தில் தானே வெளிப்படலால் அதனை முன் வைத்துக் கூறினார்; ஞேயமாகிய சிவம் அகந்யமாய்த் தோன்றும் இடமாகிய ஞா துருவை விளக்கலால் 'பாங்கினில் ஓங்கிய' என்று நிதித்தியாஸனத்தை அதன் பின் வைத்தருளினார்; ஞாதா வாகிய தன்பக்கல் நிகழும் ஞேயமாகிய சிவத்தை ஞானத் தால் அறியக் கூடாமையால், அந்த ஞானபீடம் ஆகிய சிர வணத்தை அதன் பின்னே அமைத்தருளினார்; இவை திரிபுடியாக விளங்கலால், திரிபுடியதீதத்தைக் காட்டுவதெனச்வ சமாதியை முடிவாகச் சாதித்தருளினார்'' எனச் சோம சுந்தரநாயகர் அவர்கள் தரும் விளக்கமும் ஈண்டு நாம் அறிந்து இன்புறத் தக்க தொன்றாகும்.

முடிவுரை

இங்ஙனம் ஞானத் திறம் பற்றிய ஆராய்ச்சியின்கண் மாறுபட்டு நின்ற போறிஞர்களின் வழக்கீட்டில், மரத்தினது பராரையினின்று கவடுகோடு கொம்புவளார் முதலியன பலவும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டெழுந்து நிற்றல் போல, இடையிடையே வேறு பல பொருள்களும் இயை புறுத்தப்பட்டு விராய் வந்தன. ஆதலின் அவர் தம் வழக்கீடும் முடிவு பேறு இன்றியே விரிந்து சென்றது. எனினும், ஒரு வகையிற் பின்வருமாறு நாம் இது பற்றி முடிவுக்கு வருதல் இழுக்கு ஆகாது.

பிறவிப்பயனை இம்மை மறுமை என இரண்டாயும், இம்மை உம்மை அம்மை என மூன்றாயும், அறம் பொருள் இன்பம் வீடு என நான்காயும் குறிப்பிடுகின்றோம்.
முத்தியைப் பதமுத்தி பரமுத்தி என இரண்டாயும், சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என நான்காயும் கூறுகின்றோம். இறைவனின் தொழில்களை ஆக்கல் காத்தல் அழித்தல் மறைத்தல அருளல் என ஐந்தாயும், ஆக்கல் காத்தல் அழித்தல் என மூன்றாயும், பந்தம் வீடு என இரண்டாயும் வழங்குகின்றோம். அதுபோல, ஞானமும் அவத்தை பற்றிப் பரஞானம் அபர ஞானம் என இரண்டும், கருவியும் விடயமும் பற்றிப் பாச ஞானம் பசுஞானம் பதிஞானம் என மூன்றும்,முயற்சி பற்றிக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை என நான்கும் ஆகும் எனக் கொள்ளுதல் பொருந்தும் எனலாம்.

"தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி                                  - நாலடியார்  

சித்தாந்தம் – 1962 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment